இராமன் அவதரித்த நாட்டில் …

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

ஜோதிர்லதா கிரிஜா


(முன் குறிப்பு – பாப்ரி மசூதி இடிக்கப்படுவதற்கு முன்னர் எழுதியது)

ஆறுமுகம் திக் திக்கென்று அடித்துக்கொண்டிருந்த நெஞ்சுடன் நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தார். காந்தி பிறந்த நாட்டில்தான் இப்படியெல்லாம் நடக்கிறதா என்று அவ்வப்போது தமக்குள் திகிலும் வேதனையும் அடைந்தவராய், அவர் மனத்துள் புலம்பிக்கொண்டிருந்தார். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் கலந்துகொண்டு நான்கு ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவர் என்பதால் நாட்டின் நடப்பில் ஏனைய சாதாரண மக்களுக்கு இருக்கக்கூடிய அக்கறையையும் ஆர்வத்தையும் காட்டிலும் அதிக அளவில் அவ்வுணர்ச்சிகளை மிக இயல்பான முறையில் அவர் கொண்டிருந்ததில் வியப்பில்லைதானே ?

ரத யாத்திரை பற்றிய செய்திகள் அவருள் சொல்லொணா எரிச்சலையும் அருவருப்பையும் கிளர்த்தின. கிடப்பதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணையில் வை எனும் கதையாய், நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் பூதாகாரமாய்த் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் அவல நிலையில் ராம ஜென்ம பூமிப் பிரச்சினையும் ராமருக்குக் கோவில் கட்டுவதும் தானா முக்கியமாய்ப் போய்விட்டன என்று அவர் ஆவேசமுற்றார். அன்பு, கருணை, அளவுகடந்த சகிப்புத்தன்மை, பெருந்தன்மை, விட்டுக்கொடுத்தல், கடமையுணர்வு, சமாதான உணர்வு போன்ற மனிதாபிமானத் தன்மைகளை மனிதனாய்ப் பிறக்கும் ஒருவன் எந்த அளவுக்கு அதிகப் பட்சமாய்க் கொள்ள முடியுமோ அந்த அளவுக்குக் கொண்டிருந்த ராமனைக் காரணமாக வைத்தா இவர்கள் இந்த அட்டூழியங்களைச் செய்கிறார்கள் என்பதைத்தான் அவரால் பொறுத்துக்கொள்ள முடியாது போயிற்று. ‘இவன்களுக்கெல்லாம் ராமனையும் தெரியாது, இந்து மதத்தையும் தெரியாது ‘ என்று ஆவேசத்துடன் முனகினார்.

‘என்ன தாத்தா! யாரைத் திட்றீங்க ? ‘ என்றபடி கல்லூரியில் படிக்கும் அவர் பேரன் தசரதன் சிரித்தாவாறு அவரெதிரில் வந்து நின்று கேட்டான். பெரியவர் தலை உயர்த்திப் பேரனைப் பார்த்து விட்டு, ‘என்ன அக்கப்போர் பண்ணிட்டிருக்காங்க, பாரு, இந்த அரசியல் தலைவருங்க! தான் பொறந்த இடத்துல – அங்குலம் பிசகாம அதே இடத்துலதான் – தனக்குக் கோவில் வேணும்னு இந்தத் தலைவருங்க கிட்ட வந்து ராமர் இப்ப அழுதாரா என்ன ? ‘ என்று கேட்டுவிட்டு, வெறுப்புடன் நாளிதழைத் தரையில் போட்டார்.

‘அரசியல்ல மதத்தைக் கலந்தா, கலவரம் தான் மிஞ்சும்கிற அற்ப ஞானம் கூட இல்லாதவங்கல்லாம் நம்மை இன்னைக்கு ஆண்டுட்டு இருக்காங்க. அவங்கள்ல சிலர் ராமரை வம்புக்கு இழுக்குறதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! ‘ என்று அவர் ஆத்திரத்துடன் கூறியதும் தசரதன் சிரித்தான்.

‘காந்தி, காந்தின்னு ஒவ்வொரு நாளும் அவரைப் பத்தி ஏதாவது சொல்லிப் புலம்புவீங்களே, அந்த காந்திதானே அரசியல்ல மதத்தைக் கலந்தாரு ? ‘

ஆறுமுகத்துக்குத் தாங்கமுடியாத சினம் வந்துவிட்டது. சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தவர் நிமிர்ந்து அமர்ந்தார். ‘என்னடா, வெவரம் புரியாம பேசறே ? காந்தி மதம்னு சொன்னப்ப இவங்க மாதிரி குறுகின அர்த்தத்துல சொல்லல்லேடா! மனுஷங்க மதாபிமானத்தோட வாழணும்கிறது அவரோட குறிக்கோள்தான். நான் மறுக்கல்லே. ஆனா, அவர் சொன்ன மதாபிமானம்கிறது என்ன ? அது மனிதாபிமானம்! மதாபிமானம்கிற சொல்லுக்கும் மனிதாபிமானம்கிற சொல்லுக்கும் இடையில இருக்கிற வித்தியாசம் ‘னி ‘ ங்கிற அந்த ரெண்டாவது எழுத்து மட்டும் தாண்டா. மதாபிமானம்னா, மத்த மதக்காரங்களோட சண்டை போடணும்கிறதா அர்த்தம் கிடையாது. அப்படிச் சண்டை போடுறவங்க மதம்கிறதைத் தப்பாப் புரிஞ்சுண்ட மடையங்க. வெறியனுங்க. அவங்கவங்க தங்களோட மதத்தில சொல்லியிருக்கிறபடி உண்மையா வாழ்ந்தா, மனுஷங்களுக்குள்ள சண்டையே வராதுடா. ‘

‘நான் ஒத்துக்க மட்டேன். தாத்தா. ‘நான் இந்த மதத்தைச் சேர்ந்தவன் ‘ கிற சொந்த உணர்ச்சி எப்ப ஒரு மனுஷன் மனசில இருக்குதோ அப்பவே அவன் மத்த மதக்காரங்களுக்குக் கெடுதி பண்ண ஆரம்பிச்சுட்றான்… ‘

‘மதம்கிறதைத் தப்பாப் புரிஞ்சுண்ட முட்டாளுங்க பண்ற வேலைடா அது! ‘

‘சில மதங்களே மத்த மதக்காரங்கள்லாம் பாவிகள்னு சொல்லுதே, தாத்தா!சில மதங்க கத்தியை சிம்பலா வச்சிருக்குதுங்க! ‘

‘எல்லாமே அறிவுகெட்ட மனுஷங்க பண்ற அசட்டுத்தனம்டா! அதைப்பத்தி யெல்லாம் பேச உக்காந்தா நாலு மணி நேரம் ஆகும். அதை இன்னொரு நாள் சாவகாசமாவச்சுக்கலாம். .நீ இப்ப காலேஜுக்குக் கெளம்பிட்டிருக்கே… ‘

‘ஏதோ சொல்லி, நழுவுங்க…அதுசரி, காந்தி, காந்தின்றீங்க ? ஆனா அந்த காந்தியே ஒரு குறுகின மதத்துக்குள்ளதானே, தாத்தா, தன்னைத் திணிச்சுக்கிட்டாரு ? ‘

‘இந்து மதம் குறுகின மதம் இல்லேடா. அது பெருந்தன்மைகள் நிறைந்த மதம். அதனாலதாண்டா நான் வருத்தப்பட்றேன். ஒரு நல்ல மதத்தைத் தப்பா இந்த அரசியல் வாதிகள் கையாள்றாாங்களேன்னு… ‘

‘அதாவது நான் சொல்ல வந்தது என்னன்னா, தாத்தா, இந்து மதம்கிற ஒரு குறிப்பிட்ட மதத்துக்குள்ளே காந்தி தன்னைக் குறுக்கிக்கிட்டாருன்னுதான் சொல்ல வந்தேன். ‘குறுகின ‘ ங்கிற வார்த்தை முன்னாடி வந்திடிச்சு… ‘

‘இப்ப நீ சொல்றதும் தப்புத்தாண்டா. காந்தி கடவுள் நம்பிக்கை உள்ளவரு. கடவுள் நம்பிக்கைக்கும் மத நம்பிக்கைக்கும் அதிக வித்தியாசம் கிடையாது. மதத்தை நம்பாமலே கடவுளை ஏற்க முடியும். ஆனா, அப்படி ஒரு பக்குவம் சாதாரண மனுஷங்களுக்கு இல்லே. வர்றதும் கஷ்டம். அதனாலதான், மதம்கிற அமைப்பு ஏற்பட்டிச்சு. இந்து மதத்தை நிறையப் பேரு கேலி பண்றது, அதிலே இருக்கிற சில கோட்பாடுகளைத் தாக்குறது இதை யெல்லாம் பார்த்ததும், காந்திக்கே ஒரு கால கட்டத்துல இந்து மதம் ஒரு மோசமான மதமோங்கிற அவநம்பிக்கை வந்திச்சு. அதுக்காக அவரு என்ன செய்தாரு, தெரியுமா ? ‘ – இப்படி ஒரு கேள்வியைப் பேரனை நோக்கி வீசிவிட்டு, ‘இதெல்லாம் உனக்குத் தெரியாம இருக்கே ‘ என்பது போல் ஆறுமுகம் அவனை ஒரு பார்வை பார்த்தார்.

‘சொல்லுங்க. ‘

‘இந்து மதம் கேலி பன்னக்கூடிய மதமா யிருந்தா அதிலேர்ந்து விலகி மதம் மாறிடலாம்கிற முடிவோட உலகத்துல இருக்கிற முக்கியமான சில மத நூல்களை யெல்லாம் படிச்சாரு. படிச்சுட்டு என்ன முடிவுக்கு வந்தாரு, தெரிய்மா ? ‘

‘இந்துவாவே இருக்கிறதுன்னுதானே ? ‘

‘ஆமா. அதுக்கான காரணங்கள் என்னன்னு சொல்றாரு, தெரியுமா ? பிற மதங்களை நிந்திக்காததோட, எல்லா மதங்களையும் அங்கீகரிக்கிற மதம் இந்து மதம்கிறாரு. வலுக்கட்டாயமா யாரையும் மதம் மாத்தாத மதமும் அதுதான். கட்டாயப் படுத்தாத சாதாரண மதப் பிரசாரத்துல கூட இந்து மதம் ஈடுபட்றதில்லே. நம்ம வேதத்துல என்ன சொல்லியிருக்குன்னு தெரியுமா ? ‘இன்னும் உலகத்துல எத்தனையோ மதங்கள் தோன்றும். ஆனா, எல்லா மதங்களும் கடவுளை யடைகிற – மனிதனை மேம்படுத்துற – மார்க்கங்களே. அதனால மதச் சண்டைகள் கூடாது ‘ ன்னு சொல்லியிருக்கு. அது மட்டுமா ? இஸ்லாம்கிற மதம் தோன்றப் போறதைப் பத்தின சுலோகமே நம்ம ரிக்வேதத்துல இருக்காம்டா. நபிகள் நாயகத்தோட பேரு கூட அதுல இருக்காம்! ஒட்டகத்துல, மொட்டைத்தலையோட வருவாருன்னு அவரைப் பத்தின விவரக் குறிப்புக்கூட அதுல இருக்காம்! இதை பத்தி எனக்கு எதுவும் தெரியாது… ஆனா, நம்ம முரசொலி அடியார் நீரோட்டம்கிற நாளிதழ்ல அந்த சம்ஸ்கிருத சுலோகத்தை எடுத்து எழுதி, அதுக்கு அர்த்தமும் சொல்லி இருக்காரு… ‘

தசரதனுக்கு வியப்பு ஏற்பட்டது: ‘நெஜம்மாவா! ‘

‘பின்ன நானென்ன பொய்யா சொல்றேன் ? … எதுக்கு இதையெல்லாம் சொல்றேன்னா, காந்தி எல்லா மத நூல்களையும் படிச்சுட்டு என்ன முடிவுக்கு வந்தாரு, தெரியுமா ? உலகத்துல இருக்கிற மதங்கள்லேயே ரொம்பவும் சகிப்புத்தன்மை நிறைஞ்ச மதம் இந்து மதம் தான்கிறாரு.. பிற மதங்களைப் பெரிய அளவில மதிக்கிற மதமும் அதுதான். மத்த மதங்கள்லே இருக்கிற நல்லதுகளை ஏத்துத் தன்னுடையதாக்கிக்கிற மகத்தான குணமும் அதுக்கு உண்டு. இந்த நாட்டில இத்தனை கிறிஸ்துவ மக்களும் முஸ்லிம் மக்களும் இருக்காங்கங்கிறதும், இந்த அந்நிய மதங்கள் இங்கே வளர அனுமதிக்கப்பட்டதுமே இந்து மதத்தினுடைய சகிப்புக்கு ஒரு ஆதாரம். .. இந்தச் சிறப்புகளாலதான் ஒரு இந்துவாவே இருந்துட்றதுன்னு காந்தி தீர்மானிச்சாரு. ‘

தசரதன் சிரித்தான். ‘தாத்தா! இதை யெல்லாம் காதுல பூச்சுத்திக்கிட்டிருக்கிறவங்க கிட்ட போய்ச் சொல்லுங்க, இந்து மத நூல்கள்லே உயர்வான விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கலாம். ஆனா, இந்துக்கள் அதன்படி நடக்கிறதில்லைங்கிறதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். ‘

‘அதையே தாண்டா நானும் சொல்றேன்! இந்து மத நூல்கள்லே சொல்லியிருக்கிறபடி நடக்கிறதுங்கிறது மசூதியை இடிக்காம, கொஞ்சம் தள்ளி ராமர் கோவிலைக்கட்டுறதுதான்! ‘

‘ஓ! நீங்க அப்படி வர்றீங்களா ? நான் அதைச் சொல்லல்லே, தாத்தா. இந்தநாட்டில மத்த மதங்கள் தழைச்சதுக்குக் காரணம் தீண்டாமைங்கிற மோசமான வழக்கம் இந்துக்கள் கிட்ட இருந்ததுதான். இப்பவும் இருக்கிறதுதான். ‘

‘நான் அப்படியே நீ சொல்றதை ஒத்துக்கறேண்டா. ஆனா நூத்துக்கு நூறு இல்லே. … ஏன்னா, இந்துக்கள் கிட்ட ஆயிரம் தப்புகள் இருந்தாலும், மத்த மதக்காரங்க இங்கே வந்து பிரசாரம் பண்றதை ஏத்துக்கணும்னுட்டு ஒண்ணுமில்லே. அவங்க மனசு வெச்சிருந்தா, இந்த நாட்டிலே வேற எந்த மதமும் வளராம பண்ணியிருக்க முடியும். .. ஆனா, பண்ணல்லே. அதுதான் அவங்களோட சிறப்பு. இன்னொண்ணும் சொல்லட்டுமா ?.. உனக்குக் காலேஜுக்கு லேட் ஆகல்லையே ? ‘

‘இல்லே, தாத்தா. இன்னும் கொஞ்ச நேரம் இருக்கு. சொல்லுங்க. ‘

‘காந்தி தன்னை இந்துன்னு சொல்லிண்டதுக்குக் காரணமே மத்த எல்லா மதக்காரங்களுக்கும் பிற மதங்களை மதிக்கிற இந்த இந்துமதக் குணம் வந்தா, பல்வேறு மதக்காரங்க இந்தா நாட்டில சண்டை இல்லாம வாழ முடியுமேங்கிறதுக்காகத்தான். மனிதனுடைய இறுதி லட்சியம் அல்லது ‘எய்ம் ‘ எதுவா யிருக்கணும், தெரியுமா ? ‘

‘சொல்லுங்க. ‘

‘போரைத் தவிர்த்து, மனுஷங்க குறுகின எல்லைகளுக்குள்ளே அடைபடாம அன்பா வாழணும்கிறதுதான்! மனுஷனோட மிகப் பெரிய குறிக்கோள் இதுவாத்தான் இருக்கமுடியும். இந்தக் குறிக்கோளை மனுஷன் அடையறதுக்காக ஆண்டவன் தேர்ந்தெடுத்திருக்கிற பூமிதான் இந்த நம்மோட ராம ஜென்ம பூமி. அதனாலதான் இந்த நாட்டில இத்தனை மொழிகள் பேசற மக்கள் வாழறாங்க. இத்தனை மதக்காரங்க வாழறாங்க. மாகாணத்துக்கு மாகாணம் – ஏன் ? மாவட்டத்துக்கு மாவட்டம் – கலாசாரங்களும் பழக்க வழக்கங்களும் வித்தியாசப்பட்ற நாடு நம்ம நாடு. இத்தனை வித்தியாசங்கள் இருந்தாலும், பிறரை மதிக்கவும், அந்த வித்தியாசங்களுக்கு முக்கியத்துவம் தராம, அன்போட வாழ மனுஷங்க முயற்சி பண்ணணும்கிறதுக்காகவும் கடவுள் இந்த ராமஜென்மபூமியைப் படைச்சிருக்காருன்னுதாம்ப்பா எனக்குத் தோணுது. இப்படிப்பட்ட இந்தப் புண்ணிய பூமியில சில குறுகின புத்தியுள்ள அரசியல்வாதிகள் இந்து மதம் என்ன சொல்லுதுங்கிறதைச் சரியாப் புரிஞ்சுக்காம – அல்லது புரிஞ்சாலும் தங்களோட அரசியல் நோக்கங்களுக்காக – மதம்கிற பேரால மக்களுக்குள்ளே பேதங்களை உண்டாக்கிட்டிருக்காங்க. மத உணர்வு மக்களுக்கு இருந்தா தப்பில்லே. ஆனா, மத வெறி உதவாது. அது ஒரு போதை மருந்து மாதிரி. மனுஷனுக்கு வெறி வந்துட்டா, தலை கால் புரியாது. நியாய அநியாயம் எடுபடாது.. ‘

‘ரொம்ப கரெக்ட், தாத்தா, நீங்க சொல்றது. அதனாலதான் என்னை மாதிரி இளைஞர்கள் மதமே வேண்டாம்கிறோம்… ‘

‘அப்படி நினைக்கிறதுதான் தப்பு. இப்ப பாரு. ரஷ்யாவிலேயே சர்ச்சுகளைத் தொறந்து விட்டுட்டாங்க… ரெண்டாவது – மதங்களை அழிக்கவே முடியாது. ஆனா, மனுஷங்க மனசில காலப்போக்கில அன்பையும் சகிப்புத்தன்மையையும் ஏற்படுத்த முடியும். ‘

தசரதன் வாய்விட்டுச் சிரித்தான். ‘ என்ன, தாத்தா, பேசுறீங்க ? எத்தினியோ பெரிய பெரிய மகான்களெல்லாம் பொறந்து மனுஷங்களுக்கு வாய் வலிக்க உபதேசம் பண்ணியும் – உயிர்த் தியாகம் பண்ணியும் – மனுஷங்க திருந்தவே இல்லே. நீங்க சொல்றது சாத்தியமா ? ‘

‘அப்படிச் சொல்லாதேடா. இத்தனை மகான்கள் அவதரிச்சு மக்களுக்கு நல்லது சொன்னதுனாலதான் நாம இந்த மட்டுமாவது இருக்கோம். ஏதோ அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லைங்கிறாப்போல கொஞ்சப் பேராவது நல்லவங்களா யிருக்கோம். அவங்கல்லாம் பொறக்கல்லேன்னா, இப்ப இருக்கிறதைவிட இன்னும் அதிக மோசாமா யிருப்போம்… ‘

‘நீங்க சொல்றதுலேயும் ஒரு பாய்ன்ட் இருக்கு, தாத்தா ‘

‘இப்ப பாரு. சதாம் ஹுசேனோட பேச்சுவார்த்தை நடத்திப் போரைத் தவிர்க்க அமெரிக்கா முயற்சி பண்ணிச்சு. ஒரு ஐநூறு ஆயிரம் வருஷத்துக்கு முந்தின்னா, பேசிப் பார்ப்போம்கிற என்ணமே அவங்களுக்கு வந்திருக்காது. இதுலேர்ந்து என்ன தெரியுது ? மனுஷங்களோட கெட்ட குணங்கள் மார்ற்துக்கு ரொம்பக் காலம் பிடிக்கும்னு. அவ்வளவுதானே ஒழிய, மாறவே மாறாதுன்னு சொல்ல முடியாது. அப்படி அவநம்பிக்கைப் படவும் கூடாது. இப்ப பாரு. சதிங்கிற உடன்கட்டை ஏறுற பழக்கத்தி நிறுத்துறதுக்கு பல வருஷங்கள் ஆகியிருக்கு. அப்படியும் அதனோட மிச்சம் மீதி ராஜஸ்தான்லே இன்னமும் இருக்கு. நான் என்ன சொல்ல வர்றேன்னா, மனமாற்றம்கிறது -மனுஷங்க மிகப் பெரிய எண்ணிக்கையில, நல்ல முறையில, மாறுறதுங்கிறது – ந்ிகழப் பல நூறு வருஷங்கள் ஆகும். இந்த முயற்சியில் ஈடுபட்டவங்கதான் காந்தி மாதிரியான ஆளுங்க…இப்ப இருக்கிற அரசியல்வாதிங்க சுய ஆதாயங்களுக்காக மதவெறியை ரெண்டுங்கெட்டான் மக்களிடத்தில தூண்டிவிட்டுப் பதவியைப் பிடிக்கப் பாக்க்றாங்க. இந்த நாடு முழுக்க ராம ஜென்ம பூமிதானே ? ரெண்டாவது – ராமர் கடவுள்னே வச்சுக்கிட்டாலும் – கடவுள் எல்லா இடத்துலேயும் இருக்காரு தானே ? தூணிலேயும் இருக்கார், துரும்பிலாயும் இருக்கர்னுதானே இந்து மதம் சொல்லுது ? அப்படி இருக்கிறப்ப, மசூதியை இடிச்சுட்டு அந்த இடத்துலதான் ராமர் கோவிலைக் கட்டணும்னு சொல்றது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்! ‘

‘கரெக்ட், தாத்தா, நீங்க சொல்றது… அப்ப நான் வரட்டுமா ?… ‘ என்று தசரதன் கல்லூரிக்குப் புறப்பட்டுப் போனான்…

அதன் பின் நாளிதழைப் புரட்டத்தொடங்கிய ஆறுமுகம் அன்று மாலை ராமஜென்மபூமி பற்றிய பொதுக்கூட்டம் இருப்பதாக அதில் வெளியாகியிருந்த செய்தியிலிருந்து அறிந்தார். போவதென்று முடிவு செய்தார்.

………

சிக்கந்தராபாத்தின் அந்த ‘பஸ்தி ‘ யில் தமிழர்கள் மிக அதிகமாக வாழ்ந்தார்கள். கட்டட வேலைகளுக்காகப் பல காலம் முன்பு அங்குக் குடியேறியவர்கள். தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மும்மொழிகளையும் அநேகமாக ஐதராபாத் – சிக்கந்தராபாத் இரட்டை நகரத்து மக்கள் அறிந்திருந்தனர். அறியாதவர்கள் கூடப் பேச்சைப் புரிந்துகொள்ளுகிற அளவுக்கு அம்மூன்று மொழிகளிலும் அறிவு பெற்றிருந்தனர். தமிழர்கள் அதிகமாக வாழும் அந்த ‘பஸ்தி ‘ யின் ஒரு குடிசைக் குடியிருப்பின் ஒரு குடிசையில் சுல்தானா அன்றைக்கான சமையலில் ஈடுபட்டிருந்தாள். பக்கத்துக் குடிசையைச் சேர்ந்த இருசம்மா உடம்புக்கு முடியாமல் படுத்துக்கொண்டிருந்தாள். அவள் கணவன் வெளியே சாப்பிட்டுக்கொள்ளுவதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டான். இருசம்மாவுக்குப் புழுங்கல் அரிசிக் கஞ்சி வைத்துச் சற்று நேரத்தில் கொண்டு வந்து தருவதாக சுல்தானா சொல்லியிருந்தாள். சமையல் முடிவதற்கு நேரமாகும் போல் தோன்ற, பக்கத்துக் குடிசைக்குப் போய், ‘இருசம்மா! கஞ்சி எடுத்தாரட்டா ? ‘ என்று வினவினாள்.

‘சமையலை முடிச்சுட்டுப் பண்ணித்தாரேன்னு சொன்னியே, சுல்தானா ? அதுக்குள்ள முடிச்சுட்டியா ? ‘

‘இல்லே, இருசம்மா. உனக்கு இப்பவே வேணும்னா சூடா பண்ணி எடுத்தாறேன். இல்லே, கொஞ்சம் நேரமானா பரவாயில்லேன்னா கொஞ்சம் கழிச்சு எடுத்தாறேன். ‘

‘குடிக்கணும் போல இல்லே. ஆனாலும் வயித்தைக் காயப் போடக்கூடாதுன்னு டாக்டரு சொன்னாரு. இப்பவும் எனக்குப் பசியில்லே. இன்னும் கொஞ்சம் கழிச்சுப் பசிக்கும்னு தோணவும் இல்லே. அதனாலே நீ எப்ப வேணாக் கொணாந்து குடு ‘

‘அப்ப, இன்னும் ஒரு கால் மணியில கொண்டாறேன். உம் மகன் எங்கே ? ‘

‘அவனும் அவங்கப்பா கூட வெளியில போயிட்டான் ஓட்டல்ல சாப்பிட… ‘

‘இப்ப போனது போவட்டும். ராத்திரிக்கு ரெண்டு பேருக்கும் நான் சாப்பாடு கொணாந்து தர்றேன்… ‘

‘உனக்கெதுக்கு செரமம் ? ‘

‘அதெல்லாம் ஒரு செரமமும் இல்லே. நான் காயலா விழுந்தப்போ ஒரு வாரத்துக்கு நீ எனக்குக் கஞ்சி ஊத்தல்லையா ? ‘

‘ …ஒண்ணு கேக்க மறந்துட்டேன்… சோமாஜிகுடாவில ஒரே கலாட்டாவாமே, சுல்தானா ? உந்தம்பி அங்கதானே இருக்கான் ? ‘

‘ஆமா. என்ன கலாட்டாவாம் ? ‘

‘என்னது நீ ? உனக்கு ஒண்ணுமே தெரியாதா ? என்னமோ இந்து-முஸ்லிம் கலாட்டாவாமே ? ஐதராபாத்துலதான் ரொம்ப கலாட்டாவாம். இங்கேயும் பரவுறதுக்கு எம்புட்டு நேரமாவும் ? ஜாக்கிரதையா இருக்கணும்… ‘

அப்போது குடிசைக்கதவைத் திறந்துகொண்டு இருசம்மாவின் அண்ணன் சங்கிலி வந்தான்: ‘என்னக்கா, படுத்திருக்கே ? உடம்பு சரியில்லையா ? ‘ என்றவன் அருகே சுல்தானாவைப் பார்த்ததும், ‘சலாம், தங்கச்சி! ‘ என்று புன்னகை செய்தான்.

‘நமஸ்தே, சங்கிலித் தம்பி! ‘ என்றாள் சுல்தானா. இருவரும் எப்போதுமே அப்படித்தான். அவள் மொழியில் இவனும், இவள் மொழியில் அவனும் முகமன் கூறிக்கொள்ளுவார்

கள்.

‘அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் சொல்றதுக்காக வந்தேன். ரெண்டு நகரத்துலேயும் இந்து-முஸ்லிம் கலாட்டா பரவிட்டிருக்கு. எப்ப என்ன ஆகும்னு சொல்ல முடியாது. பத்திரமா வீட்டுக்குள்ளாறவே இருங்க எல்லாரும். ஒத்தரை ஒத்தரு பாதுகாக்கப் பாருங்க. ..இன்னும் அரை மணியில இந்த பஸ்தியிலேயும் கலவரம் நடக்கும்னு சொல்றாங்க..ஜாக்கிரதை!… ‘

‘ஏந்தான் இப்பிடி மனுசங்க புத்திகெட்டுப் போய் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிறாங்களோ, தெரியல்லே. மனுசாளுக்கு ரெண்டு வேளைச் சோறு, இருக்க இடம், மானத்தை மறைக்கத் துணி இதெல்லாம் கிடைக்கச் செய்யிறதுக்கு என்ன செய்யணுமோ அதைச் செய்யிறதுக்கு எந்தப் போராட்டமும் இல்லே. இப்ப ராமர் பாப்ரி மஸ்ஜிதை இடிச்சு அந்த இடத்துல தனக்குக் கோவில் கட்டுங்கன்னா சொல்றாரு ? மடையனுங்க… ‘ என்றாள் இருசம்மா.

இருசம்மாவின் பெரும்போக்கால் பாதிக்கப்பட்ட சுல்தானா, ‘ எங்க ஆளுங்கதானாகட்டும், விட்டுக் குடுத்தா என்னவாம் ? எத்தினி கோவிலுங்களை இடிச்சு நாசம் பண்ணியிருக்காங்க! வேற மதக்காரங்களா யிருந்தா இவங்களைச் சும்மா விட்டிருப்பாங்களா ? ‘ எத்தினியோ இந்துக் கோவிலுங்களை நாம அன்னைக்கி இடிச்சோம். இன்னைக்கி ஏதோ இவங்க ராமர் பொறந்த எடம்னு கேக்கறாங்க, விட்டுக் குடுப்போம்; அதே நேரத்துல, ‘வேற மஸ்ஜிதுகளை இடிக்கத் தொடங்கிடாதீங்க, இது ஏதோ ராமர் பொறந்த எடம்குறீங்க, அதனால விட்டுக் குடுக்குறோம் ‘ னு சொல்லி அனுசரிக்கிற கொணத்தைக் காணலியே! ‘ என்றுஅங்கலாய்த்தாள்.

‘நீயும் நானும் தேர்தல்லியா நிக்கப் போறோம் ? அதான் விட்டுக் குடுத்துப் பேசுறோம்! அவங்க அப்பிடி இல்லியே! ‘ என்று இருசம்மா சிரித்தாள்.

சிரித்தபடி அவர்களின் பேச்சைக் கேட்ட சங்கிலி, ‘ரெண்டு பக்கத்து அரசியல் தலைவருங்களுமே சரியில்லே, தங்கச்சி. பாப்ரி மஸ்ஜிதை இடிச்சுட்டு ராமருக்குக் கோவில் கட்டணும்கிறவங்களையும் சரி, இதை ஒரு மதக் கலவரமாக்கி முஸ்லிம் நாடுகளுக்கு விசுவாசம் காட்டி – குறிப்பா பாகிஸ்தானுக்கு விசுவாசம் காட்டி, ஏதோ அதுதான் தங்களோடதாயகம்குற மாதிரி – அடாவடியாப் பேசுற முஸ்லிம் அரசியல்வாதிகளையும் சரி. பயங்கரமாத்தண்டிக்கணும். அப்பதான் இந்த நாடு உருப்படும்!… ‘ என்றான்.

‘நீ வேற! ஒருத்தனைப் பிடிச்சு உள்ளே தள்ளினா இன்னொரு வாரிசு இருக்கானே! அவன் வேலையை இவன் செய்வான். நீ எத்தினி பேரைப் பிடிச்சு செயில்ல போடுவே ? மனுசங்க மனசு மாறணும்ப்பா! அதான் வேணும். நீ என்ன சொல்றே ? ‘ என்று இருசம்மா சுல்தானாவைப் பார்த்துக் கேட்க, ‘நீ சொல்றது ரொம்ப சரி, இருசம்மா… அப்ப நான் வாறேன், ‘ என்று சுல்தானா விடை பெற்றாள்.

ஒரு மணி நேரங்கழித்து அவள் கஞ்சியுடன் வந்தாள். இருசம்மா கஞ்சியை வாங்கிக் குடிக்கத் தொடங்கிய கணத்தில் வெளியே திபு திபுவென்று நெருங்கிக் கொண்டிருந்த காலடியோசைகள் கேட்டன. சன்னல் வழியாக வெளியே பார்த்த சுல்தானா, ‘ஐயோ!உங்க ஆளுங்க வர்றாங்க. ஒரு நூறு பேரு இருப்பாங்க போல. கையில சூலமெல்லாம் வச்சிருக்குறாங்க! ‘ அன்று அஞ்சி நடுங்க, இருசம்மா சடக்கென்று பாயிலிருந்து எழுந்தாள்.

‘வீடு வீடா நுழைவாங்க. ரொம்ப நாளுக்கு முந்தி ரஸாக்கருங்க வந்து அப்படித்தான் நிஜாம் காலத்துல செய்வாங்களாம். எங்கம்மா சொல்லுவாங்க… அதே மாதிரி இப்ப இந்தக் குடிசைக் குள்ளேயும் வருவாங்க… இங்க வா, சுல்தானா. உன்னோட தலை முக்காட்டைக் கீழே இறக்கு முதல்ல… ‘ என்றவள் அவள் அதைச் செய்யுமுன் தானே அதை இறக்கிவிட்டுவிட்டு, ‘இப்ப நீ இதையும் செஞ்சுதான் ஆகணும். வேற வழியே இல்லே…இந்தா.இதை நெத்தியிலே வச்சுக்க, ‘ என்று கூறி சாமி மாடத்திலிருந்து குங்குமச் சிமிழை எடுத்துக்குங்குமத்தைக் குழைத்து, சுல்தானாவின் நெற்றியில் இருபத்தைந்து காசு அளவுக்குப் பெரிதாய் ஒரு பொட்டை வைத்துவிட்டாள். புடைவைத் தலைப்பையும் இடையச் சுற்றிச் செருகிவிட்டாள்.

பின்னர் இருவரும் படபடக்கும் நெஞ்சுகளும் நடுநடுங்கும் அவயவங்களுமாக இந்து வெறியர்களுக்குக் காத்திருக்கலானார்கள். …

சூலங்கள், கம்புகள், கத்திகள் ஆகியவற்றுடன் சற்றைக்கெல்லாம் வந்த வெறியர்கள் குடிசைக் கதவை ஒரே அசைப்பில் தள்ளித் திறந்து இரண்டு பெண்களையும் நோட்டம் விட்ட பிறகு வெளியேறினார்கள். அவர்கள் போனதும், சுல்தானா உடைந்து போய் இருசம்மாவின் தோளில் முகம் புதைத்து அழத் தொடங்கினாள்….

………

பொதுக் கூட்டம் சரியாக ஆறரை மணிக்குத் தொடங்கியது. ஆறுமுகம் கூட்டத்தில் சாய்ந்துகொள்ள வசதியாக ஒரு கம்பு நடப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டார். முதலில் பேசியவர் இந்தியா இந்துக்களின் நாடு என்பதைப் பெரிதும் வலியுறுத்திப்பேசினார். ஒண்ட வந்தவர்களும், படை எடுத்து, வெண்று, ஆண்டு, பின் தோற்றவர்களும் அடங்கிப் போய்விட வேண்டும் என்றார். பேச்சின் இடையே, கூட்டத்திலிருந்து ஒரு முஸ்லிம் பெரியவர் எழுந்து தமக்குப் பேச வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வினயமாக வேண்டிக் கொண்டார். சிறுபான்மையினரின் பிரதிநிதியாக அவர் என்ன பேசிவிடப்போகிறார் – பேசினாலும் அங்கே குழுமியுள்ள மக்களில் பெரும்பான்மையினர் இந்துக்களாக இருந்த நிலையில் அவர் அப்படி என்னதான் அடாவடித்தனமாகப் பேசிவிட முடியும் – பேசினாலும் தப்ப முடியுமா என்றெல்லாம் கணப் பொழுதுக்குள் எண்ணிய பேச்சாளர் அதற்குச் சம்மதித்தார்.

அவர் எண்ணங்களைப் படித்துவிட்டவர் போல், அந்த முஸ்லிம் பெரியவர், ‘நீங்க சொல்லப் போறதை இங்கே வந்திருக்கிற முஸ்லிம் மக்களும் பொறுமையாக் கேக்கப் போற மாதிரி – கேட்டுக்கிட்டு இருக்கிற மாதிரி – நான் பேசறப்ப நீங்களும் கேக்கணும். எதையுமே பேசித்தான் தீக்கணும். கல்லெடுத்து அடிக்கிறதும், கத்தியால குத்துறதும் காந்தி நாட்டில சரியா இருக்காது, ‘ என்று அவர் சொல்ல, இந்துக்களும் இணைந்து கைதட்டினார்கள்.

இந்துப்பேச்சாளர் தமது பேச்சைத் தொடர்ந்தார்: ‘ ராமர் கோவிலை இடிச்சு அந்த இடத்துல மஸ்ஜித் கட்டினாங்கங்கிறது சரித்திர உண்மை. இதுக்கு ஆதாரங்கள் நிறைய இருக்குதுன்றாங்க. இந்துக் கோவில்களை முஸ்லிம்கள் நிறைய இடிச்சிருக்காங்க. ஆனா இந்துக்களாகிய நாங்க அப்படிப் பண்ணினதே இல்லே. மெஜாரிட்டி கத்தி ஏந்தினா மைனாரிட்டியால தாக்குப் பிடிக்க முடியுமா ? ஆனா, நாங்க அது மாதிரி செய்ததே இல்லே. நாங்க தாக்கப்பட்டா மட்டுமே திருப்பித் தாக்குவோமே தவிர, நாங்களாப் போயி மதத்தின் பேரால யாரையும் தாக்கினதாச் சரித்திரமே கிடையாது. எதுக்குச் சொல்றேன்னா, இவங்க கோவிலை இடிச்ச இடத்துல நாங்க திருப்பி எங்க கோவிலைக் கட்டுறதுதான் முறை. அதுதான் நியாயம். நியாயமாப் பாக்கப் போனா இவங்களாகவே விட்டுக் குடுக்கணும். செய்தா எந்த வம்பும் இல்லே. ஆனா, மாட்டேன்கிறாங்க. அதனாலதான் தகராறே. இல்லாட்டி எதுக்குத் தகராறு வரப்போகுது ? இந்துக்கள் எந்த வம்புக்கும் தாங்களாப் போகவே மாட்டாங்க… ‘ – இந்தக் கட்டத்தில், முஸ்லிம் பெரியவர் குறுக்கிட்டார்.

‘நீங்க சொல்ற சரித்திரம் உண்மையாகவே இருக்கட்டும். ஆனா, சரித்திரம்கிறது நடந்தது நடந்ததுதான். அதை மாத்தி எழுத முடியாதுங்க. இந்தியா இந்துக்களோட நாடுன்றீங்க. இந்துக்கள் பெரும்பான்மையா இருக்கிறதுனாலதானே அப்படிச் சொல்றீங்க ? அப்ப ? முஸ்லிம்கள் பெருவாரியா இந்தியாவில வசிக்கிற மாகாணங்கள், மாவட்டங்கள் உண்டு. அதுகளையெல்லாம் குட்டி குட்டிப் பாகிஸ்தான் மாதிரியான தனி முஸ்லிம் நாடாக்கணும்னு நாங்க கேக்குறதுக்கு நீங்களே இல்லே வழி வகுக்குறீங்க ? பிறகு சீக்கியர்கள் கேப்பாங்க. கேட்டுட்டு இருக்காங்க ஏற்கெனவே. இல்லீங்களா ? அப்புறம் அஸ்ஸாம்காரன் கேக்குறான். ஆந்திரா தெலுங்கு தேசம், தெலுங்குத் தல்லி (தாய்) ன்னெல்லாம் சொல்லிக்கிட்டிருக்கு. தமிழ்நாட்டில தனி நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டதா அரசியல்வாதிகள் சொன்னாலும் வேறு சிலர் தக்க சமயத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் காத்துக்கிட் டிருக்காங்க. இந்தியா உடைஞ்சுடும்… இது சரியா இருக்குமா ? அதனால இந்தியா இந்துக்களின் ராஜ்யம்கிற பேச்சை விடுங்க. இந்தியா சகல மதக்காரங்களும் இணைஞ்சு வாழ அல்லாஹ் அல்லது உங்கள் ஈஸ்வர் படைச்ச நாடு ‘

அவரது கூற்றின் நியாயத்தை உணர்ந்தவர்கள் போல் கூட்டத்தினர் அமைதியாக இருந்தார்கள் ஆறுமுகம் மெல்ல எழுந்து மேடையருகே சென்று நின்றார்.

அப்போது மற்றொரு முஸ்லிம் பெரியவர் தாமும் பேசவேண்டும் என்று கூற, அவருக்கு உடனே வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் ஒலிபெருக்கி யருகே அழைக்கப்பட்டு வந்து நின்று பேசலானார்.

‘இந்துக்கள் கிட்டே யிருந்து முஸ்லிம்களுக்கு ஒருபோதும் நியாயம் கிடைக்காதுங்கிறதாலதான் பாகிஸ்தான் பிரிஞ்சிச்சு. பாகிஸ்தான் தான் எங்கள் தாயகம்னு நினைக்கிறது தப்புன்னு நினைக்கிற முஸ்லிம்களைக்கூட இந்துக்களுடைய வெறித்தனமான பேச்சு அப்படி நினைக்க வைக்குது…. ‘ – கூட்டத்தில் ஓர் அமைதிக்குலைவும் சலசலப்பும் ஏற்பட்டு, சிலர் எழுந்தனர். ஆறுமுகம், ‘ஒரு நிமிஷம் ‘ என்பது போல் ஒற்றை விரல் காட்டிவிட்டுத் தாமும் மேடையில் ஏறினார்.

‘நடந்தது நடந்து போச்சுன்னு விட்றணும். பழசையே திருப்பித் திருப்பிச் சொல்லி மதவெறியைத் தூண்டி விட்டுட்டு இருக்கீங்களே! ‘ என்று முஸ்லிம் பேச்சாளர் தொடர்ந்ததும் சலசலப்பு அதிகரித்தது.

அதைக் கண்டு சற்றும் பயப்படாமல், முஸ்லிம் பெரியவர் தொடர்ந்தார்: ‘அதனாலதான் எங்களில் பலருக்குப் பாகிஸ்தான் மேல தேசபக்தி இருக்கு. அப்படி இருந்தா, அது இந்தியாவுடைய தப்பு! ‘

ஆறுமுகத்துக்குப் படபடவென்று வந்துவிட்டது. ஏற்கெனவே பேசிக்கொண்டிருந்த இந்துப் பேச்சாளரின் மீசை துடித்துக்கொண்டிருந்தது. அவர் காரமாக ஏதோ சொல்ல முயல, ஆறுமுகம் மறுபடியும் ஒற்றை விரல் காட்டிவிட்டு ஒலிபெருக்கியை முஸ்லிம் பெரியவரிடமிருந்து தம் பக்கமிழுத்துக்கொண்டார்.

‘பெரியவங்களே! தாய்மார்களே! எல்லாரும் தயவு செய்து அமைதியா உக்காருங்க. இப்ப நமக்கெல்லாம் ஒண்ணு புரிஞ்சு போயிருக்கணும். பாப்ரி மஸ்ஜிதை இடிச்சுட்டு அந்த இடத்துலதான் ராமர் கோவில் கட்டணும்னு பிடிவாதம் பிடிக்கிறவங்களுக்கும் தேசபக்தி இல்லே; தங்கள் பல கடந்த காலத் தவறுகளுக்காகப் பச்சாத்தாபமோ – மற்ற முஸ்லிம் நாடுகள்லே இந்துக்களுக்கும் மத்த மதக்காரங்களுக்கும் மறுக்கப்பட்ற சலுகைகளை இந்துக்கள் பெருவாரியா இருக்கிற நாட்டில முஸ்லிம்ககளாகிய தங்களுக்குக் குடுத்து வச்சிருக்காங்களே ங்கிற நன்றியோ – மதம்கிற பேரால இந்துக்களுக்கு இல்லாத சலுகைகள் மைனாரிட்டியான தங்களுக்கு இருக்குதே, அதுக்காக நாம விட்டுக்குடுத்தா என்னங்கிற மனப்பக்குவமோ – முஸ்லிம் தலைவருங்க கிட்டவும் இல்லே. ஆக மொத்தம், சுருக்கமாச் சொல்லப் போனா, இந்துத் தலைவர்களுக்கும் சரி, முஸ்லிம் தலைவர்களுக்கும் சரி, மக்களை முன்னுக்குக் கொண்டுவரணும், அவங்க வறுமையைப் போக்கணும், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கணும், அவங்க அறியாமையைப் போக்கணும் அப்படின்றதுக்காக உழைக்கணும்கிற எண்ணமே இல்லே. மத உணர்வு இருக்கட்டும். யாரும் வேணாம்கல்லே. அந்த மத உணர்வில இந்துத் தலைவருங்க இந்துக்களுக்காகவும், முஸ்லிம் தலைவருங்க முஸ்லிம் மக்களுக்காகவும், அதே மாதிரி மத்த எல்லா மதத் தலைவருங்களுமே அவங்கவங்க மதத்து ஆளுங்களுக்காகவும் பாடுபட்டா, இந்த நாட்டில இருக்கிற எல்லா மதத்து மக்களும் உயர்வு அடைவாங்க. தன்னோட மதக்காரங்களுக்காக மட்டுந்தான் ஒருத்தன் பாடு படணும்கிறதா நான் சொல்றதை அர்த்தம்பண்ணிக்காதீங்க.அது உயர்ந்த குணமும் இல்லே. ஆனா, பிற மதத்துக்காரங்களுக்குஉழைக்கிற பரந்த மனப்பான்மை இல்லாட்டியும், குறஞ்ச பட்சம் அவங்கவங்க மதத்தைச் சேர்ந்தவங்களுக்காக வேண்டியாவது உழைக்கணும்கிறதுக்காகச் சொல்றேன். மத வித்தியாசமெல்லாம் பார்க்காம நம்ம மக்கள்னு ஒட்டுமொத்தமா நினைச்சுப் பாடுபட்டா ரொம்பப் பெரிய காரியந்தான். அதை யெல்லாம் விட்டாங்க. என்னமோ கோவில், மசூதின்னுக்கிட்டுக் கிடக்கி றாங்க! இது மாதிரியான மதவெறி பிடிச்ச அரசியல் வாதிகள் வலையிலே நாம விழவே கூடாது. பொதுவாப் பார்த்தா, பொது மக்கள் நல்லவங்கதான் – இந்துக்களும் சரி, முஸ்லிம் களும் சரி. இவங்களைக் கெடுத்துக் குட்டிச் சுவராக் குறதெல்லாம் இந்த அரசியல்வாதிங்க தான். பொது மக்களுக்கு வெறியேத்தி உசுப்பி விட்டுட்டு அவனவன் தலை மறைவாயிடுவான். தலைவருங்கல்லாம் தங்களோட பாதுகாப்பான பங்களாக்களுக்குள்ள பதுங்கிப்பாங்க – ஏ.கே ஃபார்ட்டி செவென் பாதுகாப்போட! கடைசியிலே ரத்தம் சிந்துறது நாமதான்…. இப்ப நாம செய்ய வேண்டியது என்னன்னா, மைனாரிட்டியா யிருந்தாலும், முஸ்லிம் நாட்டில் கூட கிடைக்காத சில சலுகைகள் இந்துக்கள் பெருவாரியான எண்ணிக்கையில உள்ள இந்தியாவில நாம அனுபவிச்சுட்டு இருக்குறோம்கிற நெனப்பே இல்லாம குறுகின புத்தியோட பேசுற முஸ்லிம் அரசியல்வாதிகளையும் சரி, பாப்ரி மஸ்ஜிதை இடிச்சுட்டு அந்த இடத்திலதான் ராமர் கோவிலைக் கட்டணும்னு சொல்ற இந்து அரசியவாதிகளையும் சரி, பொது மக்கள் அப்பப்ப, அந்தந்த இடத்தில, தர்ம அடி அடிக்கணும். நான் காந்தி வழியில வந்தவந்தான். ஆனா, சில நேரங்களிலே கம்பும் கழியும் எடுத்துக்கத்தான் வேணும்னு தோணுது. பொது மக்கள் முட்டாளு ங்க இல்லைன்றதை அரசியல்வாதிகளுக்கு நாம புரியவைக்கணும்ங்க. அப்பதான் ஒரு தரத்துக்கு ஒம்பது தரம் யோசனை பண்ணிட்டு அரசியல்வாதிங்க வாயைத் தொறப்பாங்க… ‘

‘யாரிந்தப் பெரியவரு ? இந்த்ப் போடு போட்றாரு ? இந்து அரசியல்வாதிகளையும் முஸ்லிம் அரசியல்வாதிகளையும் தர்ம அடி அடிக்கணும்குறாரே! ‘ என்று இரு தரப்பிலும் இருந்த அரசியல், மத வெறியர்கள் கொதித்து எழுந்தனர். விளக்குகள் யாராலோ அணைக்கப்பட்டன.

முஸ்லிம் வெறியர்களும் இந்து வெறியர்களும் ஒருசேர ஆறுமுகத்தின் மீது பாய்ந்து அடிக்கத்தொடங்கினார்கள். மங்கலான வெளிச்சத்தில் தாம் இருதரப்பினாராலும் தாக்கப்பட்டது புரிய, ஆறுமுகத்தின் இதழ்க்கடையில் இரத்தக்கசிவுடன் புன்னகையும் தோன்றியது.

‘ஏதோ, என்னை அடிச்சுக் கொல்றதுலயாவது இந்துக்களும் முஸ்லிம்களும் ஒண்ணு சேந்தீங்களேப்பா! அந்த மட்டும் நான் பாக்கியசாலிதான்!… ‘ என்று சொல்லிக்கொண்டே ஆறுமுகம் நினைவிழந்தார்.

நினைவிழந்த பெரியவரை இந்து மத வெறியர்களிடமிருந்தும், முஸ்லிம் மத வெறியர்களிடமிருந்தும் காப்பற்ற, மதவெறி இல்லாத இந்துக்களும், மதவெறி இல்லாத முஸ்லிம்களும் கூட்டத்திலிருந்து எழுந்து மேடை நோக்கி ஓடினார்கள்.

– இதயம் பேசுகிறது வார இதழ்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா