நயாகரா + குற்றாலம் = வேண்டாத கனவு

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘எலே! வா.. உட்கார். என்னைத் தெரியுதா ? ‘ என்றவரைப் பார்க்கிறேன். என் நினைவுச் சுமைகளில் அவர் இருக்கிறார். சட்டென்று முடிச்சை அவிழ்த்து அவரை விடுவிக்க இயலவில்லை.

எதிரே இருந்த இருக்கைகளில் ஒன்றில் மைதிலியை அமரச் செய்துவிட்டு, அவளை அணைத்தவாறு உட்காருகிறேன். மைதிலியின் உடலில், நடுக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை. மழையில் நனைந்த புறாவாக அவளது உடல். அவளிடம் மிச்சமிருந்த அச்ச அதிர்வுகள் இப்போது என்னிடமும் மெள்ளப் பரவுகின்றன. கால்கைளை நீட்டி, பயணக் களைப்புக்கு இதமாக தரையிற் பதிய வைக்க முயன்றேன். சுற்றிலும் இமைக்க மறந்து, குத்திட்ட பார்வையுடன் விச்ராந்தியாய் முகங்கள்.

கேள்வி எழுப்பிய பெரியவரின் ஞாபகம் வர, மைதிலியின் துவண்ட கரத்தை எடுத்து என் மடியிலிட்டுக்கொண்டு, அவளது தலையை என் மார்பில் இறக்கிக்கொண்டு, அவரை நிமிர்ந்து பார்க்கிறேன்.

‘என்ன கேட்டாங்க ? உங்களைத் தெரியுமான்னா ?.. இல்லை ஞாபகம் இல்லை ‘ இது என்னோட பதில். எனக்குத் தேவையின்றி நாக்குழறுகிறது. இந்தப் பதில் அவரைச் சென்று அடைகிறதா என்பதில் எனக்குச் சந்தேகம்.

அந்த மனிதர் சிரிக்கிறார். இதுவரை நான் பார்த்திராத அல்லது கேட்டிராத சிரிப்பு. ஈறு தெரியச் சிரிக்கும் ஒரு சிம்பன்சியின் சிரிப்பு. எனக்கு எரிச்சலோடு கூடிய பயம். இந்தப் பயம், மைதிலியின் நிலமையை இன்னும் மோசமாக்கிவிடுமோ ? என்றும் பயம். அதனை உண்மையாக்கும் வகையில் என்னிடமிருந்து விடுபட்டு, தேய்ந்த குரலில்

‘வேண்டாங்க.. எனக்குப் பயமாயிருக்குது.. இங்கிருந்து போயிடலாம்.. ‘ என்கிறாள்.

மறுபடியும் பெரியவரிடமிருந்து நாங்கள் விரும்பாத, சூழ்நிலைக்கு, பொருத்தமில்லாத சிரிப்பு. அந்தச் சிரிப்பு, எங்கள் வீட்டில்- கூடத்தில் செல்லரித்த சட்டங்களுக்கு இடையில், அழுக்கடைந்த ஒற்றை மின்சார பல்பின் ஒட்டடை வெளிச்சத்தில், சந்தணமாலையுடன் ஈறு தெரியச் சிரிக்கும் கறுப்பு வெள்ளை நிழற்படமொன்றின் சிரிப்பு. அந்தப் படத்துக்குச் சொந்தக்காரர், என்னோட பிறப்பிற்கு முன்னரே, நாற்பது வயசிலேயே இறந்ததாகச் சொல்லப்பட்ட என்னோட தாத்தா. அவர் இன்றைக்கு, இத்தனை காலத்திற்குப் பிறகும் நரையின்றி, பற்கள் சேதமின்றி, தங்க நிற பிரேமிட்ட கண்ணாடியில் கண்களை ஒளித்து மடிப்புக் கலையாத அங்கவஸ்த்திரத்துடன் முழுசாக எதிரே நிற்கிறார்.

சற்றுத் தள்ளி உட்கார்ந்திருப்பது ? .. அடடே.. என்னோட பாட்டி. நான் அமெரிக்காவிற்கு சென்றிருந்த மறு வருடம் இறந்து போனவள். அவள் விரும்பிக் கட்டும் மயிற்கண் திருபுவனம் சேலையில், பாம்படம் சுமக்கும் காதுகளுடன் கவனத்தை எங்கேயோ வைத்து உட்கார்ந்திருக்கிறாள். சற்றுத் தள்ளி எங்க அம்மாவோட அப்பா, தென்காசித் தாத்தா. அங்கேயிருந்த முகங்கள் இப்போது வரிசையாக ஞாபகத்திற்கு வந்தன.

‘ எலே ! என்னடா சொல்றா ? எங்கிட்டுப் போக போறாளாம் ? முடியுமாடா அது ? ‘ மறுபடியும் தாத்தாவேதான். பதிலை வைத்துக்கொண்டு கேள்வியைக் கேட்கிறார்.

பதில் தெளிவாகத்தான் இருக்குது. எனக்கும், மைதிலிக்கும் எப்படியாவது புறப்பட்ட இடத்திற்கே போயாகவேண்டும். அதுதான் எப்படி ? இது ஆசையல்ல நிராசை. தாத்தா சொல்லவந்தது எனக்குப் புரிந்தது. மைதிலிக்கும் புரிஞ்சிருக்கும். உங்களுக்கும் புரிஞ்சிருக்கும்னுதான் நினைக்கிறேன். நீங்க நினைப்பது சரி. ஆமாம், நானும் மைதிலியும் இறந்திருந்தோம்.

சற்றுமுன்னர்தான் அது நடந்திருந்தது.

அமெரிக்காவிலிருந்து ஆழ்வார்குறிச்சிக்கு வந்து இரண்டு நாட்கள் கூட ஆகலை. விமானப் பயணக் களைப்பு முழுவதுமா எங்கக்கிட்டருந்து விலகிக்கல. ஒரேமகன் ஜெகன், ஐந்து வயசாகுது. இந்திய வெய்யிலில் துவண்டு கிடக்கிறான். இவ்வளவையும் ஒதுக்கிவிட்டு, குற்றாலத்திற்கு போகணும்னு மைதிலி அடம் பிடிக்கிறாள்.

காரை எடுத்துக் கொண்டு குற்றாலத்தை அடைந்து, ஃபால்ஸ்க்கு சற்றுத் தள்ளிக் காரை நிறுத்திவிட்டு, கூட்டத்தைப் பார்த்துப் பயந்து, கூட்டம் கொஞ்சம் குறையட்டுமே என்று நினைத்து, பக்கத்திலிருந்த முனிசிபல் பார்க்கில் கார்ப்பெட்டை விரித்து, கொஞ்சம் பசியாறலாம் என்று கொண்டுவந்ததைப் பிரித்து உட்காரும்வரை மைதிலி அமைதியாகத்தானிருந்தாள்.

அதற்குப்பிறகுதான் விபரீதம் ஆரம்பித்தது.

எங்கள் கையிலிருந்த பிரெட்டைப் பார்த்துவிட்டு, திபு திபு வென்று குரங்குகள் சேர்ந்துவிட, அவற்றை நான் துரத்துகிறேன். ‘கூடாது ‘ என்று அடம்பிடித்த ஜெகனை சமாதானப் படுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தால், வழக்கம்போல மைதிலி ஃபால்ஸை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறாள்.

பிறகு எல்லாமே வேக வேகமாக நடந்தேறியது. சீயக்காய், சோப் உடல்களில் இடிபட்டு, ஒதுங்கி, விழுந்து சிதறிய தண்ணீரில் நனைய ஆசைப்பட்டு, கிடு கிடுவென்று இறங்கியவள், ஒரு பாறையில் இடறி தடுமாறியதும், அவைளைக் குறிவைத்து நான் குதித்ததும், நடந்து முடிந்த விபத்தின் சுருக்கம்.

மைதிலையைக் கைப்பிடித்து, ஐந்து வருடம் ஆகுது. சரியாச் சொல்லணுமின்னா ஐந்து வருடம், நான்குமாதம், இரண்டுவாரம் நான்கு நாட்கள்.

நான்- அசோகன் இந்திய மக்களின் வரிப்பணத்தில் படித்து அமெரிக்க மக்களுக்குச் சேவை செய்து கூலிவாங்கும் நடுத்தர வர்க்க இந்தியன். கிரீன் கார்டு கிடைத்த கையோடு சென்னை வந்து இறங்கியவனை, மைதிலியின் அப்பாதான் அதிக விலை கொடுத்து வாங்கியிருந்தார்.

எனக்குத் திருமணமான நாளிலிருந்து இரண்டு விஷயங்களுக்குப் பயந்தேன். ஒன்று மைதிலி. மற்றொன்று நீர்வீழ்ச்சி. புதுமணத் தம்பதிகளாய் நியுயார்க்கில் வந்து இறங்கிய முதல் நாளே, நயாகரா பக்கம் என்று கேள்விப்பட்டு என்னைத் துளைக்க ஆரம்பித்துவிட்டாள்.

எங்கள் தேன்நிலவிற்கும் நயாகராதான் சரியான சாய்ஸ் என்று தோன்றவே மைதிலியை அழைத்துச் சென்றேன். பிடித்தது சனி. அதற்குப் பிறகு எதற்கெடுத்தாலும் நயாகராதான். வீக்-எண்ட் வந்தாலோ அல்லது நண்பர்களே ‘டு சேர்ந்து ஒரு ஜாலி ட்ரிப் ஏற்பாடு செய்தாலோ, அவளது சாய்ஸ் நயாகரா.. நயாகரா…

மைதிலிக்கு, நயாகராவை அமெரிக்கப் பக்கமிருந்து மட்டும் பார்த்தால் போதாது, கனடா பக்கம் டோரண்டோவிற்குச் சென்று பார்க்கணும். ரெயின்போ பிரிட்ஜுல மணிகணக்குல.. இருட்டிய பிறகும் நிண்ணுக்கிட்டு, வண்ண விளக்குகள்ல நயாகரா ஜொலிப்பதைக் கைதட்டிச் ரசிக்கணும். ஆரம்பத்துல, ஏதோகுற்றாலம் பக்கத்துல இருந்தவன்னு நினைச்சு, மைதிலி என்கிற புது மனைவியின் ஆசையை ஆர்வத்துல நிறைவேற்றி வைத்தேன்.

போகப்போக நீர்வீழ்ச்சின்னாலும், மைதிலின்னாலும் எனக்கு ஒருவித பயம். இருவருக்குமே பிரம்மிப்பூட்டும் அழகு, உறையவைக்கும் குளிர்ச்சி, நெருங்கினால் முகங்காட்டக் கூடிய ஆபத்து எனப் பொதுவாக இருக்க, நான் உடைந்திருந்தேன்.

ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என அமெரிக்க டாக்டர்களிலிருந்து, ஆழ்வார்க் குறிச்சி உறவுகள் வரை அனைவரும் பரிந்துரைக்க, மைதிலியின் சம்மதத்தின் பேரில் ஒரு ஜூனியர் அசோகனைக் கொண்டுவந்ததுதான் மிச்சம். ஆனால் மைதிலி என்ற வேதாளம் பழையபடி முருங்கை மரத்தில் ஏறத்தான் செய்தது. நண்பர்கள் யோசனையின்பேரில் அவளைக் கொஞ்ச நாள் ஆழ்வார்க்குறிச்சியில் விட்டுவிட்டு அமெரிக்கா திரும்பலாம் என்று நினத்து இந்தியா வந்தபோதுதான் விதி வேறுவிதமாக தீீர்மானித்திருந்தது.

‘பொறவு, என்ன யோசனை ? ‘ மீண்டும் என்னைக் கலைத்தவர் எதிரே இருந்த என் தாத்தா.

‘ஆமாம். எங்களால புறப்பட்ட இடத்துக்குப் போக முடியாது. எங்கள் உடல்களுக்கு கடந்த ஒரு மணி நேரத்தில என்ன வேண்டுமானா ‘லும் நேர்ந்திருக்கலாம் ‘ கசப்போடு உண்மையை ஒத்துக் கொண்டேன்.

‘ஆனால் நீங்க விரும்பினா விரும்பின இடத்துக்குப் போகலாம், தூர இருந்து வேடிக்கை பார்க்கலாம். பூமியில் உயிர்கள் படுகின்ற அவஸ்தகளை, செய்கின்ற சர்க்கஸ் விளைய ‘ட்டுக்களைத் தள்ளி நின்று ரசிக்கலாம், ஏற்பாடு செய்யவா ? ‘

‘முடியுமா ? ‘ ஆவலோடு கேட்டேன். முதன்முறையாக என் தாத்தாவிடம் மரியாதை ஏற்பட்டது. ‘எனக்காக அல்ல. இவளுக்காக. எங்கள் குழந்தையை மறுபடியும் பார்க்கணும். அவனை அப்படியே பார்க்கில் விட்டுவிட்டு நாங்கள் ஓடிவந்துட்டோம். விபத்திற்குப் பிறகு, இவள் ரொம்பவே மாறிட்டா. இங்கே வரும் வரை குழந்தை ஞாபகம்ந்தான். கடவுளே! அவனை மறுபடியும் பார்க்கிற சந்தர்ப்பம் எங்களுக்குக் கிடைக்குமான்னு துடிச்சிக்கிட்டிருக்கோம் ‘

‘இம்பிட்டுதானே ? அதுக்கென்ன விசாரம். எலே! உங்களை நான் அழைச்சுப் போறேன். ‘

பெரியவரின் வார்த்தைகள், என்னைவிட மைதிலியை அதிகமாகக உற்சாகப் படுத்தியிருக்கவேண்டும். விருட்டென்று எழுந்துகொண்டாள்

நான், பெரியவர்,மைதிலி என மூவரும் குற்றாலத்தில்,ஜெகனை விட்டுச் சென்ற பார்க்கை அடைந்தபோது எங்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ஜெகன் குரங்குகளுக்கு வாழைப்பழ விநியோகம் நடத்திக் கொண்டிருக்கிறான். அவனைப் பார்த்தவுடன் ஓடிய மைதிலியை தடுக்க வேண்டியதாயிற்று. மைதிலி வாயடைத்துப் போனாள். துக்கத்தை மறந்து ரசித்தோம்.

காலையில் கார்ப்பெட்டை விரிப்பதற்குமுன் எங்களைக் குரங்குகள் திடு திடு வென்று சூழ்ந்ததும், நான் அவற்றைத் துரத்தியதும், அதனைத் தொடர்ந்த ஜெகனின் கேள்விகளும் ஞாபகத்திற்கு வந்தன.

‘டாட், அதுகளை துரத்தாதே, நாமெல்லாம் ஒரு காலத்துல குரங்குகள்ன்னு நீதானே சொல்லியிருக்கிற.. அதுகளுக்கு பசியோ என்னவோ ? கொஞ்சம் பனானா கொடுப்போமா ? ‘

‘ ஓ.கே. நீயே கொடு. ஆனா இப்போ வேண்டாம். கொடுக்க ஆரம்பிச்சா, அதுக லேசுல போகாதுங்க. நாம சாப்பிட்ட பிறகு கடைசியாக் கொடுக்கலாம். ‘

‘இல்லை டாட்.. ஒண்ணே ஒண்ணு ‘

‘ஜெகன் சொன்னா கேக்கணும். இந்தப் பிடிவாதம் வேண்டாங்கிறது. டாட் சொல்றன்னா காரணம் இருக்கும் ‘

என்னோட பதில் அவனுக்குப் பிடிக்கலைங்கறதை முகம் காட்டியது. அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள்ல ஜெகனை நாங்கள் இழந்துட்டமா ? இல்லை ஜெகன் எங்களை இழந்துட்டானாங்கற குழப்பத்துல கலங்கி நிற்கிறோம்.

மைதிலி என்ன நினைத்தாளோ ? ‘, ‘அசோக்..! ஜெகனோட வாழைப்பழ விள்ளல்களுக்கு மனசு ஏங்குது ‘, கண்களைத் துடைத்துக் கொண்டு கேட்ட, அவள் வேண்டுதலை, மெல்லத் தாத்தாவிடம் சமர்ப்பிக்கிறேன்.

தாத்தா சிரிக்கிறார். அடுத்த நிமிடம், குரங்குகளோடு குரங்குகளாய் மூவரும் கலந்து, எங்கள் முறை வாழைபழத்திற்க்காக ஆவலோ ‘டு ஜெகன்முன்னே விதியை எண்ணிக் காத்திருக்கிறோம்..

‘அசோக் எழுந்திருங்க. மணி ஒன்பதாகப்போகுது. ‘ திடுக்கிட்டு எழுந்தேன். எதிரே குளித்துவிட்டு ஈரத் தலையில் டர்க்கி டவலைச் சுற்றிக்கொண்டு, புஷ்பமாய் மைதிலி. கவனம் அவள்மீதில்லை. கண்ட கனவிலிருந்தது. வியர்வையில் உடல், முழுக்க நனைந்திருந்தது.

‘எங்கே இருக்கிறேன் ? ‘

‘திடார்னு என்னசந்தேகம்.. ஆழ்வார்க்குறிச்சியிலதான். என்ன ஆச்சு உங்களுக்கு ? இப்படி நனைஞ்சிருக்கீங்க ?.

‘மோசமான கனவு. குத்தாலம் போற புரோகிராமை கான்சல் பண்ணிடுவோம் ‘

‘நாளைக்கு நடக்கிறதைப் பத்தி இன்றைக்கு என்ன பேச்சு ? ஜெகன்கூட எழுந்தாச்சு. வெந்நீர் எடுத்து வச்சிருக்குது. எழுந்து முதல்ல குளிங்க. சாஸ்திரி வந்து அரைமணி நேரமாகுது ‘

எதற்கு ?

‘அதுகூட மறந்து போச்சா ? இன்றைக்கு உங்க தாத்தாவுக்குத் திதி ‘.

‘எந்தத் தாத்தாவுக்கு ?

‘உங்க தாத்தாவுக்குத்தான். கூடத்துல சந்தண மாலையோட எந்த நேரமும் ஈறு தெரிய சிரிச்சுக்கிட்டு இருக்காரே அந்த தாத்தாவுக்கு. ‘

*$*$*

குறிப்பு: இச்சிறுகதை ‘கனவு மெய்ப்பட வேண்டும் ‘ என்கின்ற சிறுகதைத் தொகுப்பில் அடங்கிய ஒன்று.

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா