புழுக்கம்.

This entry is part [part not set] of 31 in the series 20030525_Issue

மா. சிவஞானம்.


சோழமுத்து வாத்தியாருக்கு லேசான தலைவலி. தலைவலி முருகனைப் பத்திதான். சோழமுத்து வாத்தியார் தமிழ் போதிப்பவர். மத்த வாத்தியாருங்களவிட வித்தியாசமானவர். பையங்க மேல அக்கரை கொஞ்சம் அதிகம். பார்க்கறதுக்கு பயமுறுத்துபவரப் போலதான் இருப்பாரு. அவரு முகத்திலுள்ள மீசை அப்படி. பெரிய மீசை. எந்நேரமும் முறுக்கிக்கிட்டே இருப்பாரு. முட்டைக் கண்கள். ஆனா வாஞ்சையான மனுசன். எப்பவும் கதர் சட்டை, வேட்டியில வெள்ளவெளேர்னு வருவார். ஊர்ல அவருக்குத் தனி மரியாதை. நெஞ்ச நிமித்திக்கிட்டுத்தான் நடப்பார். நடக்கும்போது அடிக்கடி ரெண்டு பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கிட்டே நடப்பார். அப்படிப் போகும்போது கண்ணில் படுவோருக்குத் தலையாட்டி ஒரு சிரிப்பு சிரித்திடுவார்.

அவர் கண்ணில பட்ட முருகனைக் கூப்பிட்டார்,

‘முருகா, இங்க வாடா ‘

அவன் தோள்மேல கையப் போட்டு அணைச்சுக்கிட்டாரு.

‘சாப்பிட்டியா ‘

‘ம்.. ‘

‘என்னடா, ஏதும் விளையாடலியா ? ‘

‘……………….. ‘

‘என்ன கொஞ்ச நாளா, சொணங்கிப் போயிருக்க, என்னாச்சு ஒனக்கு ? ‘

முருகன் எட்டாவது வகுப்பில படிக்கிறான். பொடியன். அழகாயிருப்பான். படிப்பில கெட்டிக்காரப் பையன். அதனால சரியான முந்திரிக் கொட்டை. ‘யாருக்குத் தெரியும் ? ‘ன்னு கேக்கறதுக்கு முன்னாடியே, ‘நான் சார், நான் சார் ‘ன்னு கை ஒசந்திடும்.

திடார்னு வந்த மாவட்டக் கல்வி அலுவலர், சோழமுத்து வாத்தியாரு பாடம் எடுத்துக்கிட்டிருந்தப்ப வகுப்பில நுழைஞ்சார். சோழமுத்து வாத்தியாரு அவருக்கு வணக்கம் சொல்லிட்டு, எல்லா பையன்களையும், ‘வணக்கம் ஐயா ‘ன்னு சொல்ல வச்சிட்டு, ஓரமா ஒதுங்கிட்டாரு. ஆங்கிலம், கணிதம், அறிவியல் ன்னு கேள்வி மேலக் கேள்விகளக் கேட்டாரு, மாவட்டக் கல்வி அலுவலர். எல்லாக் கேள்விகளுக்கும் கையை ஓங்கி, ‘நான் சார், நான் சார் ‘ ன்னுக் கத்தினான் முருகன். ‘சும்மா இருடா முந்திரிக் கொட்டை ‘ ன்னு சொன்னார் மாவட்டக் கல்வி அலுவலர். பெரும்பாலானக் கேள்விகளுக்குக் கடைசியில் முருகந்தான் பதில் சொன்னான். ‘முந்திரிக் கொட்டை, நீ ஒருத்தந்தாண்டா, சபாஷ் ‘ ன்னு சொல்லிட்டுப் போனார் கல்வி அலுவலர்.

முருகனுக்கு சோழமுத்து வாத்தியார ரொம்பப் பிடிக்கும். அவர் நடத்துற பாடத்தை அப்பவே பிடிச்சிக்குவான். ஒரு நாள் தலைமை ஆசிரியர், சோழமுத்து வாத்தியாரப் பார்த்துச் சொன்னார்,

‘ரொம்ப ஆச்சர்யங்க, சோழமுத்து, அதுவும் இந்தப் பட்டிக்காட்டுல. அதான் சார், அந்த முருகன் பையன். அவன் அவங்கப்பாவக் கூப்பிடறதப் பாக்கனும். வாங்க அப்பா, போங்க அப்பான்னு அவ்வளவு சுத்தமா. எல்லாம் உங்க பாதிப்பாத்தான் இருக்கும்போல… ‘

இப்படி தலைமை ஆசிரியர் சொன்னதிலிருந்து சோழமுத்து வாத்தியார் மீசையை முறுக்குவது இன்னும் அதிகமாயிட்டது. வகுப்பில பாடத்துக்கு வெளியே நிறைய விசயங்கள சொல்றது வழக்கமாயிட்டது. முருகன் பயல் மேல் அக்கரையுங்கூடிப் போயிட்டது. பையன்களுக்கு சோழமுத்து வாத்தியாரோட இந்த மாற்றம் நிறைய சந்தோசத்தக் கொடுத்தது. ரொம்ப ஆர்வமா அவரோட வகுப்பில கவனிக்க ஆரம்பிச்சாங்க. நிறைய கதைகளைக் கேக்கும் வாய்ப்புக் கிடைச்சது. பசங்க சந்தோசத்தையும் ஆர்வத்தையும் பார்த்து சோழமுத்து வாத்தியாருக்கு ரெட்டைச் சந்தோசம். அதே சந்தோசத்தில சோழமுத்து வாத்தியாரு பாடத்திலுள்ள கம்பராமாயணச் செய்யுளை சுவாரசியமா விளக்கிச் சொல்லிக்கிட்டிருந்தாரு. செய்யுள விட்டு வெளியே போயி இராமாயனக் கதையச் சொல்ல ஆரம்பிச்சிட்டாரு. கடேய்சியில பசங்களப் பார்த்துக் கேட்டார், ‘ இவ்வளவு அருமையானக் காவியத்த எழுதன கம்பரை உங்களுக்குப் பிடிச்சிருக்கா ? ‘ன்னு கேட்டார்.

எல்லோரும் ஒரே குரலில், ‘ ரொம்பப் பிடிச்சிருக்கு ஐயா ‘ ன்னு கத்தினாங்க. கொஞ்ச நாளா முருகனை நோட்டம் விட்டிட்டிருந்த சோழமுத்து வாத்தியாரு அவனையே பார்த்திக்கிட்டிருந்தாரு. எப்பவும் சுறுசுறுப்பா துரு துருன்னு பதில் சொல்ல முந்திவர பையன் முடங்கிக் கெடக்கறதைப் பார்த்ததும் அவரால தாங்க முடியல. எல்லாப் பசங்களும் உற்சாகத்தோடக் கத்தும்போது அவன் மட்டும் உம்முன்னுதான் இருந்தான். அவனத் தனியாக் கேட்டாரு சோழமுத்து வாத்தியாரு,

‘ஏண்டா முருகா, உனக்குக் கம்பர பிடிச்சிருக்கா, இல்லயா, எதையாவது சொல்லு பாப்பம் ‘

உம்முன்னுதான் இருந்தான். ஆனா, ‘ எனக்குக் கம்பனப் பிடிக்கல. ஏன்னா, அவன் ராமனப் பத்தித்தான எழுதியிருக்கான் ‘ னு தனக்குள்ளே முனகிக்கிட்டான்.

‘சரி, விட்டுப் பிடிப்பம் ‘ன்னு சோழமுத்து வாத்தியாரு அன்னிக்கி அத விட்டுட்டார்.

அடுத்த ரெண்டு நாள் கழிச்சு, வகுப்பில மகாபாரதக் கதைச் சொல்லிக்கிட்டிருந்தாரு சோழமுத்து வாத்தியாரு. கதை ரொம்ப நல்லா போய்க்கிட்டிருந்தப்ப முருகனுக்குப் பக்கத்தில் உக்காந்திருந்த பொடியன் எழுந்து, ‘ பீமனுக்கு எவ்வளோ பலம் ? ‘ன்னு கேட்டுவச்சி, சோழமுத்து வாத்தியாரு அந்த பொடியனப் பாக்கும்போது முருகனப் பாத்ததும் அவனோட உம்மனாமூஞ்சி விசயம் ஞாபகத்துக்கு வந்திடுச்சி. ‘இரு, இரு, நீ எங்க போயிடப் போற, இந்த பொடியனுக்குப் பதில் சொல்லிட்டு உனக்கு வலைவீசறேன் ‘ன்னு நெனச்சிக்கிட்டு சோழமுத்து வாத்தியார் சொன்னார்,

‘ஒரு தெய்வமுன்னே நின்று எதிர்ப்பினும் – நின்று சீறியடிக்கும் திறலன் ‘ ன்னு சொல்லிட்டு விளக்கமாவும் சொன்னார். பிறகு மீசையை முறுக்கிக்கிட்டேக் கேட்டார்,

‘இப்ப பஞ்ச பாண்டவர்ல யாரை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமுன்னு கேட்பேன். யாரை, எதுக்குப் பிடிக்குதுன்னு நீங்க சொல்லனும். டே முருகா, எந்திரு, உனக்கு பீமனப் பிடிக்குமா ? ‘

முருகன் எந்திரிச்சி நின்னு சொன்னான், ‘எனக்கு பீமன பிடிக்கல ‘

‘ஏண்டா பிடிக்கல, காரணத்தச் சொல்லு ‘

பதில் பேசாம தலையக் கவிழ்த்து நின்னான். ஆனா, ‘ ஏன்னா, ஆதிமூலந்தானே பீமன் வேசம் கட்டறது ‘ன்னு தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

சோழமுத்து வாத்தியாருக்கு ஒருவிதத்தில சந்தோசந்தான், ஒரு படி தாண்டி ஒரு பதிலையாவது சொன்னானே, அடுத்த வலையில அவன முழுசாப்பிடிச்சிடலாமுன்னு ஒரு நம்பிக்கை வந்திடுச்சி.

இன்னொரு நாள், வகுப்பில பேச்சு தேவாரத்தப் பத்தி வந்தது. ஆதிமூலம், பரமசிவன், உமாபதியின் புராணக் கதைகளை பையன்கள் மெய்மறந்து கேக்கறபடிச் சொன்னார். சிவனோட எல்லா பேருங்களயும் எல்லாமே ஒரே ஒருத்தரோட பேர் அப்படின்னெல்லாம் விளக்கிச் சொல்லிக்கிட்டிருந்தாரு. முருகன் நெனப்பு போன வகுப்பில சொன்ன மகாபாரதத்தில போயிடுச்சு. ஊர்ல வருஷா வருஷம் மகாபாரதக் கூத்து நடக்கும். திரெளபதியம்மன் கோயில் மைதானத்து மேடையிலதான் நடக்கும். மொட்டையன் வாத்தியார் குழுதான் நடத்தும். அவரு பக்கத்து ஊருதான். ஆனா இந்த வட்டாரத்திலேயே அவர அடிச்சிக்க ஆளு இல்ல. அவரு பாஞ்சாலியா வருவாரு. எட்டுக்கட்டையில பாடுவாரு. கூத்து பாக்கிற பொம்பலிங்க கண்களெல்லாம் தண்ணி வரும். பாரதம் பதினெட்டு நாளும் நடக்கும். ஒவ்வொரு நாளும் கூத்து பாத்திட்டு பொடியனுங்க அதே மாதிரி ஆடிப் பாப்பாங்க. பெரியவங்க பாத்து கேலி பண்ணுவாங்க. ஆதிமூலந்தான் பீமன் வேசங்கட்டுவார். முருகனுக்கு ரொம்பப் பிடிக்கும். பதினெட்டாவது நாள் மண்ணுல துரியோதணன தரை மேல செஞ்சிடுவாங்க. நெசமா துரியோதணன் வேசங்கட்டினவர வெறியில நெசமாலுமே கொன்னுடுவாங்கன்னு இந்த ஏற்பாடு. ஆக்ரோசமா வருவாரு ஆதிமூலம். கண்ணன் தன் தொடையத் தட்டிக்கினே சொல்வாரு, ‘மச்சினா உன்ன மெச்சினேன் ‘ன்னு. ஆதிமூலம் வெறியோட வந்து மண்ணு துரியோதணன் தொடையில தண்டாயுதத்தால ஒரே போடு போடுவார். ஆதிமூலம் ரொம்பப் பிரபலம். பையன்களுக்கெல்லாம் ஹீரோ.

இந்த வருசம் பாரதம் கூத்து அப்பவே தேர்தலும் இருந்தது. மூனு நாள் கழிச்சி தேர்தல் முடிவ ஒவ்வொரு அரைமணிக்கும் செய்தியில அறிவிச்சிட்டிருந்தாங்க. முருகனோட அப்பாவும், ஆதிமூலமும் இன்னும் நெறைய பேரும் காங்கிரஸ் காரங்க. காந்தி வளர்த்தது காங்கிரஸ்ன்னு பெருமையா பேசிக்குவாங்க. முருகன் வீட்லதான் ரேடியோ இருந்திச்சி. எல்லாரும் ராத்திரி முழுக்க வக்காந்து தேர்தல் முடிவ கேட்டுக்கிட்டிருந்தாங்க. முருகனோட அம்மா எல்லாருக்கும் காப்பி வச்சு கொடுத்தாங்க. ஆதிமூலம் சூடா இருந்த காப்பிய உஸ் உஸ்ஸுன்னு வாயால ஊதி சப்புக் கொட்டி குடிச்சிக்கிட்டிருந்தாரு. அவரோட பையன் ராமனும் முருகனும் காப்பி குடிச்சிக்கிட்டே வெளையாடிக்கிட்டிருந்தாங்க.

அடுத்த நாள் காலைல தேர்தல் முடிவ சொல்ற ஆர்வத்தில, ‘ டே ராமா, தேர்தல் முடிவு என்னாச்சி தெரியுமா ? ‘ன்னு கத்திக்கிட்டே அவங்க வீட்டுக்குப் போனான்.

சோழமுத்து வாத்தியார் அதட்டிக் கேட்டார்,

‘ ஏண்டா முருகா, எந்த உலகத்தில இருக்க. ஆதிமூலம் னா எந்த சாமியோட பேர், பதில் சொல்லு பார்ப்பம் ‘

வெடுக்குன்னு எழுந்து வெடித்தான் முருகன், கண்ணு ரெண்டுலயும் மாலை மாலையாத் தண்ணி,

‘எனக்கு ஆதிமூலத்தைப் பிடிக்கல சார். ‘ஏண்டா கழுத மாதிரி இப்படி நேரா வர. நீ யெல்லாம் எங்க வீட்டில நுழையக் கூடாது. வெளியவே நில்லு. ராமன வரச் சொல்றன் ‘ன்னு சொன்னார் சார். ‘

09, ஏப்ரல், 2003.

கோலாலம்பூர்.

msgnanam@tm.net.my

Series Navigation

மா. சிவஞானம்,

மா. சிவஞானம்,