லா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 1 – அம்பாளின் தொப்புள்கொடி

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

எஸ். ஷங்கரநாராயணன்



எனக்குப் பின்னால் இரு ஆச்சர்யமான அடையாளங்கள் எப்படியோ ஒட்டிக்கொண்டன. ஒன்று கணையாழி எழுத்தாளன் என்பது.

நான் கணையாழியில் குறைவாகவே எழுதியிருக்கிறேன். எழுத வந்த சூட்டோடு பெருஞ்சுற்றிதழ்களில் பவனி வந்து கொண்டிருந்த போதுகளில், நண்பர்களின் ஆலோசனை மற்றும் வேண்டுகோளின் பேரில், சரியான முடிவுதானா என்ற சம்சயத்துடன், எனக்கு ஓர் இலக்கிய முத்திரை கிடைக்க வேண்டும் என அவர்கள் எதிர்ப்பார்ப்பின்படி, கணையாழியில் முதல் கதை ‘மறதி’ எழுதினேன். திலீப்குமார் பார்வையில் அது பாராட்டுப் பெற்றது. இலக்கியச் சிந்தனை அமைப்பின் ‘சிறந்த மாதக்கதை’ எனப் பரிசு பெற்றது. அந்தக் கதையைப் படித்து இயக்குநர் பாலசந்தர் என்னிடம் நட்பு கொண்டார். நட்புகள். கொண்டார்கள்… தான் தயாரித்த ஒரு குமுதம் இதழில் சிறப்புச் சிறுகதை வாய்ப்பும் தந்தார் சிகரம். சிநேகிதர்கள் வாழ்க. கணையாழிக்கு நன்றி.

அடுத்த அடையாளம் நான் லா.ச.ரா.வின் அபிமானப் பிள்ளை என்பது.

என்னைப் பார்க்கிற நிறையப் பேர் லா.ச.ரா.வின் உடல்நலம் பற்றி என்னிடம் தவறாமல் விசாரிப்பார்கள். ”ஏன்? அவர் உடம்புக்கு என்ன?” – என்பேன் மெய்யான கவலையுடன். என் வசிப்பிடத்துக்குப் பக்கத்தில், ஐந்தாறு பஸ்தரிப்புகள் கிட்டத்தில் அவர் இருந்தார் என்றாலும், ஏனோ தொடர்ந்து அவருடன் உரையாடல் உறவாடல் என நான் அமைத்துக் கொள்ளவில்லை. நகர வாழ்வின் சூழல் பரபரப்புகள் என்று அப்படிச் சொல்லிவிட முடியவில்லை. வாய்ப்புகள் அமைய நான் காத்திருந்தேன். வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும், கொண்டிருக்க முடியும் என்பது முக்கியம்.

வாய்ப்புகள் அமைகையில் நாங்கள் சந்தித்தோம்.

எந்த ஓர் ஆரம்பத் தமிழ் எழுத்தாளனையும் போலவே, மலர்மன்னன் கூட ‘திண்ணை’ கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் அல்லவா? – லா.ச.ரா.வும் ஜானகிராமனும் முதல் பரிச்சயஜோரில் திக்குமுக்காட்டி விட்டார்கள் என்னை. என் வாழ்க்கைச் சூழலும் அவர்கள் எழுதிக்காட்டிய சூழலுக்கு ஒத்துப் போவதாய் உவப்பாய் இருந்தது. அந்த வயதின் துறுதுறுப்பு. பெண்கள் சுவாரஸ்யமானவர்களாய் கவனப்பட்டார்கள். பக்கத்து வீட்டுப் பெண்களுக்கு என்னை சைட் அடிப்பதைத் தவிர வேறு முக்கியமான வேலை இருக்க முடியாது, என ஒரு நம்பிக்கை. எனக்கு இப்படி யோசிப்பதைத் தவிர வேறு முக்கிய வேலை இல்லாதிருந்தது.

பெண்பாத்திரங்களை நகையில் நகாசு செய்கிறாப்போல ஜா.வும், ரா.வும் ஜாஜ்வல்யப்படுத்திக் கொண்டாடினார்கள். புளிபோட்டுத் தேய்த்த பூஜைவிளக்குகள். தேவதைத்தனமாய்ப் பெண்களை வரித்து பூமிக்கு இறக்கினார் ஜா. ஆ வூம்பார் பெண்களைப் பத்தி. கடைசியில் அந்தப் பெண், இதுக்கா இவ்வளவு பதட்டம் பரவசம்?-னு ஒரு வரி. முற்றும்! (தவம். மோகமுள்.) நம்மளைப் பகடையாடுவதில் ஜா.வுக்கு ஒரு உற்சாகம் போலிருந்தது.

விவரந் தெரிந்த பின் இவர்களிடமே நாம் அதே கேள்வியைக் கேட்கிறோம். இதுக்கா இவ்வளவு பதட்டம், பரவசம்?

என்றால், பூமியில் இருந்து பெண்களை தேவதைத் தளத்துக்கு உயர்த்த ஆவேசப்பட்டார் ரா. எல்லாரும் குலக் கொழுந்துகள். குடும்பத்தின் ஆணிவேர். மோசமாய் ஆணைப் பேசலாம், பெண்ணை? மூச்! ஆம்பிளைகளுக்கு, அம்பிகளுக்கு இப்படி தெய்விக அம்சம்லாம் கிடையவே கிடையாது. லேடிஸ் ஸ்பெஷல் பஸ் போல, லா.ச.ரா. கதைகள் மகளிர் மட்டும், என்று தோணிய பருவம். ஆண் பாத்திரங்கள் பெண்களை வியப்பதற்கே வந்தார்கள். பெண்ணில் தினுசுகள் அதிகம். அழகு அல்ல, அழகு ஊடோடிய உள்நிமிர்வு, முறுக்கம், செருக்கு. கொண்டைமயில் அசைவுகள். மன்னிகள் அம்மாவுக்கு அடுத்த ஸ்தானம். பாட்டிகளுக்கு தனி ஸ்தானம். நாற்காலி. கூட்டுக் குடும்பம். நிறைந்து வழியும் வீடுகள். நிறைய யோசித்து குறையப் பேசும் பாத்திரங்கள். பேச்சில் ஒரு பளீர். ஒரு சுளீர். ஒரு குபீர். ஒரு பகீர். ஒரு என்னென்னவோ.

பாத்திரங்கள் பேசினாலும் சரி. கதையாய் லா.ச. ரா. பேசினாலும் சரி. உணர்ச்சித் தெறிப்பு. ரத்த விண்விண். நெற்றி நரம்புகளில் இருந்து பீய்ச்சிடும் மின்னல். பேசுமுன் தன்வசமிழந்தாற் போன்ற ஆவேசம். நாக்கு நெருப்பை வாரிக் கொட்டியது. வாயா அது அக்னிகுண்டம், பேச மாட்டாள் என நினைத்த பெண் பேசி, பேசுவான் என நினைத்த ஆணை ஊமையாக்கி விடுகிறாள். சூட்சுமமும் உட்கனலுமான பெண் பாத்திரங்கள். வஜ்ரம் பாய்ந்த மனம். வைர உறுதி மனம். எந்த பூகம்பத்துக்கும் தாக்குப் பிடிக்கிற dont care அம்மணிகள். துணி அழுக்குப் போக தண்ணீரில் முக்கி இறுக்கிப் பிழிகிறாப் போல. ஆணாயினும் பெண்ணாயினும் ஒரு வீம்பில் வீழ்ந்துபடுதல். அதை மீறவொண்ணாத் தவிப்பு. தகிப்பு. திகைப்பு. மனச்சிக்கல். வாழ்க்கையை இருட்டிக் குழப்பிக் கொள்ளுதல். அதுசார்பான தத்துவார்த்த வியாக்கியானத் தேடல். தன்னிலை தெளிய அல்ல, தன்னை விளங்கிக் கொள்ள. விசாரணை அல்ல, சமாதானம்.

லா.ச.ரா. காட்டுவது யதார்த்த வாழ்க்கை அல்ல. அதில் அன்பு, வன்மம் எல்லாமே அதிதம். அதிகம். தாக்குப் பிடிக்க முடியாது. அவர்பாணியில் – ரெண்டுநாய் ஒன்றோடொன்று கட்டிக் குலாவி ஈஷி உருண்டு புரள்கிறதினுசில், எப்ப விளையாட்டு எப்படி சண்டைக்குதறலாக மாறுமோ அறிய முடியாது. அதிதத்தின் விளைவு அது. அபரிமிதமான அழகு வாழ்க்கைக்குச் சத்ரு என்பார்கள், அதுபோல. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே?

லா.ச.ரா. என்ற பாற்கடலில் அமுதமும் உண்டு, நஞ்சும் உண்டு.

வாழ்க்கை படிப்பினை தருகிறதாய் இருந்தது. வலி. ரணம். வக்கிர உக்கிரம். உக்கிர வக்கிரம் என்றும் சொல்க. யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம். இதிகாச புராண ஒப்பு நோக்கல்கள். கதை முடிகையில் மழை சோ என்று கொட்டி ஓய்ந்தாப்போல ஆசுவாசம். லா.ச.ரா. எனும் வசன மரத்தடியில் மழை விட்டபின்னும் தலையில் ஒரு சொட். அவரது ஜிலுஜிலு உவமைக் கச்சிதங்கள். தொண்டைக்குள் வழுக்கி உள்ளிறங்கும் திருநெல்வேலி அல்வா. லால்குடி அல்வா பற்றித் தெரியாது எனக்கு.

விளக்குச் சுடரின் சடசடப்பிலிருந்து, கெளளி நாக்கைச் சப்புக்கொட்டுவதிலிருந்து, தென்னையோலை காற்றுக்குச் சரிந்து விழுவதிலிருந்து எல்லாமே சங்கேதங்கள். சமிக்ஞைகள். இயற்கையின் பாஷை. சகுனங்கள். குறியீட்டுப் பிரயோகங்கள் தமிழுக்கு அப்போது புதுசு. லா.ச. ரா. புத்தம் புதியவர்.

கால காலத்துக்கும் ஒரு இளைஞர்படை தூக்கம் இழந்துகொண்டே வரும் எழுத்துக்கள் ரெண்டு பேருடையதும். இவர்கள் எழுத்தாளர்களின் எழுத்தாளர்கள்.

வாசகனின் எழுத்தாளர்கள் என்றால், தமிழ்வாணன், கல்கி, ஜெகசிற்பியன், சாண்டில்யன் என ஒரு டஜன் தேறும். புத்தகத்தை எடுத்ததுதான் தெரியும். மூடும்போது படித்து முடித்தாகி விடும். கொட்டாவி விடக்கூட நேரம் இல்லை. இதில் தமிழ்வாணன் ஆவிக் கதை எழுதுவார். சாண்டில்யன் படித்தபின் எங்களூர் பெண்களின் ஸ்தனங்கள் இன்னுங் கொஞ்சம் பெரிசாய் இருந்திருக்கலாம் எனத் தோணிய பருவம். எதுவுந் தெரியாமல் எல்லாந் தெரிந்த பாவனையில் வளைய வந்த பருவம். பெற்றவர்களை விட அறிவாளியான பிரமைகள். புதிய கண்ணோட்டத்தில் வாழ வேண்டிய வாழ்க்கை கண்ணில் பட்டாப் போல அலட்டல்.

மணிக்கொடி காலம் என்கிறார்கள். புதுமைப்பித்தன், பி.எஸ். ராமையா, தி.ஜ.ர., மெளனி, கு.ப.ராஜகோபாலன், எம்.வி.வெங்கட்ராம், சி.சு. செல்லப்பா, ந. பிச்சமூர்த்தி, க.நா.சு., சிதம்பரசுப்ரமணியன்… (காலரீதியான வரிசை எனக் கொள்ளற்க) இதில் இவர் பாணி தனித்து இயங்கியது. லா.ச.ரா. பாணி. இது முக்கியம். அம்மாகோண்டு லா.ச.ரா. மணிக்கொடி அல்ல, அவருக்கு அது ‘தாயின் மணிக்கொடி.’

லெளகிக அழுத்தம் சார்ந்த கதைகள் என அலட்சியப் படுத்த முடியாத எழுத்து. லெளகிகம் சாராமல் அன்றைக்கு எழுத முடியாது. கதைக்கான களத்தில் குடும்ப அம்சங்கள் உக்கிரப் பட்டிருந்தன. ஆம்பிளைகள் பெரும்பாலும் குடுமி வைத்திருந்தார்கள். விவரச் செறிவு மிகுந்த கதைகள் கிடையா. கலெக்டர், டாக்டர் என்று வந்தாலும் எல்லாரும் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, குடும்பம், காதல், என்று சுழன்று வந்தார்கள். அவர்கள் இயங்குதளத்தின் தனித்தன்மை அடையாளம் பெறாது. கால மோஸ்தர் அப்படி. வீட்டு வாசல்பக்கம் கழிவறை வைத்துக் கட்டிய வீட்டை அன்றைக்குப் பார்க்க முடியுமா? இன்றைக்கு சின்னச் சின்ன மனைகளில் கட்டத்தான் செய்கிறார்கள்! இது இந்தக்காலம். நிறையப் பெரியவர்கள் சென்னையில் வாழ முகஞ்சுளிக்கிறார்கள்.

லா.ச.ரா. தலைமுடியை, சுருள் சுருளாய் மோதிரக் குவியல், என்பார். குண்டாய் ஒரு பெண் குழந்தை. கஷ்கு முஷ்கு குண்டச்சி, என்பார். புல்வெளியில் கால் சரசரக்க நடக்கும்போது முஷிமுஷி மோஷிமோஷி என்று என்னமாவது உளற வேண்டும் போலிருந்தது, என்றார்… கதை நடுவே பளீரென்று வெயில் வந்தாப் போலிருக்கும்.

1981 அல்லது 1982. சென்னை தர்மப்பிரகாஷ் திருமண மண்டபத்தில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எழுத்தாளர்களைச் சந்திக்க ஓர் ஏற்பாடு. செய்தவர் அன்றைய அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமன். காலம் ரொம்ப மோசமாயிடுத்து. சினிமா, கதைன்னு கலைவடிவங்களில் செக்ஸ், வன்முறை ஜாஸ்தியாடுத்து, நீங்கள்லாம் சமுதாயப் பொறுப்போட எழுதணும், என்றெல்லாம் பேசி, எனக்கு ஒரு ஆப்பிள் தந்தார் ஸ்வாமிகள்.

அந்தக் காலத்தில் நான் கடவுள் சார்ந்த நம்பிக்கைகளை எள்ளிநகையாடுகிற திமிருடன் திரிந்து கொண்டிருந்தேன். காளைப் பருவம். ஐயா நான் இப்ப எழுத்தாளன். கொம்புசீவிய காளை. யாமார்க்கும் குடியல்லேம், சிவனையஞ்சோம், என எழுதுவது. தூணிலும் இல்லை, துரும்பிலும் இல்லை, மனிதன் பிறந்தபின் கடவுள் பிறந்தார், சிலைகள் அறியுமோ கற்பூர வாசனை? – என்றெல்லாம் எழுதுவதில் ஓர் உற்சாகம். ஒரே வரியில் பாரதி எழுதிய சிறுகதையை அடிக்கடி சொல்லி சந்தோஷப்படுவேன்.

கடவுள் கேட்டார் – பக்தா இதுதான் பூலோகமா?

பக்தனுக்கு மேலோகத்தை யார் காட்டித் தந்தார்களோ? அதை விடுங்கள். நல்ல கதை, அல்லவா?

ஆனால் திறமை கண்டவிடத்து மனசுத்தமாய் வியந்து பாராட்டுவேன். நிறைய சக எழுத்தாளர்களுக்கு அப்பவே, சபாஷ் மாப்ளே, என்று சொல்லி பரிசுப் பணம் அனுப்புவேன். பிற்பாடு தமிழின் சிறந்த கதை என மாதாமாதம் தேர்வு செய்து நானும், எழுத்தாளர் ஏ.ஏ.ஹெச்.கே. கோரியும் 1997-முதல், மூணாண்டுகள் வரை, ரூ 500/- பரிசும், ஆண்டின் சிறந்த கதைக்கு ரூ 5000/- பரிசும் வழங்கி வந்தோம். துட்டுச் செலவு கோரி! இடையில் தன்னைப்போல தேர் நிலைக்கு வந்துவிட்டது. Back to square zero. ஷார்ட்-சர்க்கியூட் ஆனாப் போல. ஸாரி மிஸ்டர் கோரி!

அந்த வயசு அப்படி. எதுக்கும் தடாலடி, மேலடி அடிக்கிற, பாம்பை மிதிக்கிற பருவம். கன்றுக்குட்டிப் பருவம். கற்றுக்குட்டி எனவும் சொல்லலாம் சிலர். வாடிய பயிரைக் கண்டபோதே வாடினேன்… ஒரு சொம்பு தண்ணியூத்தப்டாதா? ଭ தினவு செழித்த தோள்கள். சீருடையான் என்று ஓர் எழுத்தாளர். முற்போக்கு வளாகத்தில் பதவியில் கூட அப்போது இருந்தார். இப்போதும் இருக்கலாம். அவரது ‘கடை’ நாவல் மதுரைப் பல்கலைக்கழகத்தில் பாடநூலானது. சீர் உடையான் என்றால் செல்வந்தன் என்று பொருள். என் திமிர் பாருங்கள், ”ஐயா உங்களை யூனிஃபார்மில் எதிர்பார்த்தேன்! முற்போக்கு எழுத்தாளர் ஆச்சே!” என்றேன். அந்த வயசில் அடக்க முடியாத நாக்குடன் நடமாடியிருக்கிறேன்! மன்னிக்க திருவுடையார்!

பூந்தமல்லி நெடுஞ்சாலை. ஸ்வாமிகளைப் பார்த்துவிட்டு திரும்பி வரும் வழியில் ஆகா! லா. ச.ரா. அவருக்கும் ஸ்வாமிகள் ஆப்பிள் எடுத்து வைத்திருக்கலாம்.

வெள்ளைப் புருவம். வெளுத்த வெள்ளாடை. ஜிப்பாவும். வேஷ்டியும். சிங்கத்தின் பிடரிச் சிலிர்ப்புடன் நரைத்த தலை. கைகூப்பி வணங்கி அவர் காலில் விழுந்தேன். நடுத்தெருதான். இருந்தால் என்ன? எத்தனையோ பேருக்கு ஸ்வாமிஜி ஆதர்சம். எனக்கு இதோ, லா.ச. ரா!

எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதி ଭ காமதகனம். லா.ச.ரா.வுக்கு பிற்பாடு சமர்ப்பணம் செய்தேன். ‘எனக்குள் விதையாய் விழுந்து விருட்சமாய் விளைந்த லா.ச.ராவுக்கு சமர்ப்பணம்’. நாலு வி!

பாற்கடல், என தன்வரலாற்றுத் தொடர் லா.ச.ரா. எழுதுகிறார். முதல் அத்தியாயத்திலேயே இதுபற்றிய குறிப்பு. ‘அந்த இளைஞன் என் காலில் விழுந்தான். அவனுக்கும் இது பெருமைதானே?’ (பாற்கடல் – வெளியீடு வானதி. ஆறாம் பக்கம்.) முகத்தில் எத்து பட்டாற் போலிருந்தது அந்தக் கணம். இதில் என் பெருமை என நான் நினைத்தே பார்க்கவில்லை. தவிரவும் அது ஸ்டண்ட் அல்ல, மனசாற நிகழ்த்தியது அது. தன் நெஞ்சறிவது பொய்யற்க. இப்போது நெஞ்சத்தால் பொய்யாது ஒழுகினேன். பொய்ப்பின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்பார் வள்ளுவர். பொய்யாதது சுட்டுவிட்டது.

லா.ச.ரா. பாணியில் – ரெண்டு நாய்கள் கட்டிக் குலாவி ஈஷி உரசிக் கொள்ளுகையில் எது விளையாட்டு, எது சண்டை என்று பிரித்தறிய முடியாது.

சுய பிம்பத்தைக் கூடவே வைத்திருந்து சதா ஆராதித்து வந்தார் லா.ச. ரா.

தமிழில் ஒரு பிரபல எழுத்தாளர். காலங் காலமாக column, முதல்பக்கம், கடைசிப்பக்கம் என்று வாசித்ததையும் காதில் விழுந்ததையும் எழுதி வருகிற நபர். ஒருமுறை அவர் லா.ச.ரா.வைப் பற்றி எதோ பாராட்டி எழுத, தொலைபேசியில் கூப்பிட்டு, இன்னும் கொஞ்சம் பாராட்டப்டாதா?, என்று கேட்டதாகச் செவிவழிக் கதை உண்டு.

நானும், ரமேஷ் வைத்யாவும் – தற்போது இவன் ஆனந்த விகடன் குழுமத்தில் பத்திரிகையாளன் – லா.ச.ரா. வீட்டுக்கு அம்பத்தூருக்குப் போகிறோம். உள்ளே நுழையுமுன் அவனிடம் நான். ”லா.ச.ரா. ஒண்ணு தான் எழுதியதை வாசிப்பார். அல்லது பிறர் தன்னைப்பற்றி எழுதியதை வாசிப்பார்…” உள்ளே நுழைய தன் புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தவர் எழுந்து வந்து வரவேற்கிறார். ”நான்” என்ற புத்தகம்.

மனசொட்டிப் பேசுகிறார் லா.ச.ரா. குடும்பத்தில் மூதாதையரிடம் அவர் கொண்ட பிரமிக்கத்தக்க மரியாதை. கடவுள் உருவங்கள் போல அவர்கள் எல்லாரும் சதா இவருக்கு வழிகாட்டிக் கொண்டு, மேலும் வழிகாட்டக் காத்துக் கொண்டு. வாழ்க்கை சில நம்பிக்கைகள்தாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் நம்பிக்கை. ஒவ்வொரு விதமான நம்பிக்கை.

சொந்தக்காரன்னாலே பழமொழி இருக்கு. பங்காளி வீட்ல தீப்பிடிச்சா காலைக் கட்டிக்கிட்டு அழுதானாம். அவுத்துவிட்டா அவன் போயி தீயை அணைச்சிருவானே, என்கிற நல்லெண்ணம்.

நம்பிக்கைகள் வாழ்க.

அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. (அம்மா இறந்துபோய் எத்தனை காலமாயிற்றோ.) இப்போது கண் கலங்குகிறது. நாங்கள் குழந்தைகள். பயம்மா இருக்கு. அப்ப பாட்டி விளக்கேத்தி வெச்சாள். நமஸ்காரம் பண்ணினாள். கண்மூடிப் பிரார்த்தனை பண்ணினாள். சடசடன்னது குத்துவிளக்குச் சுடர். ”அம்பாள் பேசிட்டா. அம்மா பத்திரமா உடம்புதேறி ஆஸ்பத்திரிலேர்ந்து திரும்பி வருவாடா, ராமாமிர்தம்”ଭனா பாட்டி.

அப்டியே திரும்பி வந்தாள் அம்மா. பெரியவா ஆசிர்வாதம். நம்பிக்கை. அது பெரிய பலம்டா சங்கர்.

அது வாஸ்தவமாய் இருக்கலாம் லா.ச.ரா. நீல்லாம் எங்க உருப்படப் போறேங்கற தினுசில் ஆசிர்வதிக்கிற அப்பாக்களும் லோகத்தில் உண்டே ஐயா.

விடைபெற்றுக் கிளம்புகிறோம். பெரிய வளாகத்தில் நடுவே அவரது வீடு. வெளியே நெடிய மரங்கள், பூச்செடிகள். காம்பவுண்டுச் சுவர். கதவைச் சார்த்துமுன் ஒரு காற்று. இரும்புக் கதவு சர்ரென்று கையுருவி விரியத் திறந்தது. ”அம்பாள் பேசறாளாடா?” என்கிறேன் ரமேஷிடம். திமிர் பிடித்த ஷ ஒழிக!

எனது முதல் சிறுகதைத் தொகுதி ‘அட்சரேகை தீர்க்கரேகை’ ஐந்திணைப் பதிப்பகத்தில் வெளியானது. ஆழ்வார்பேட்டை ரஷ்ய கலாச்சார மையத்தில் அதை வெளியிடுகிறோம். ரஷ்ய கலாச்சார மையத்துக்குப் போய்விட்டு சிவப்பு என்ற வார்த்தை பேசாமல் வந்த ஒரே கோஷ்டி நாங்களாகத்தான் இருப்போம். புத்தக வெளியீட்டுக்குப் பேச்சாளர் என்றால், மதுரைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் சு. வேங்கடராமன். என் முதல் நாவல் ‘மானுடசங்கமம்’ – அச்சில் இரண்டாவதாக வெளியானது… அதை முதுகலைப் பட்டப்படிப்புக்கு நவீன இலக்கியப் பயில்நூலாக அவர் தேர்வு செய்து கெளரவித்திருந்தார். எத்தனை இளம் வயதில் எத்தனை பெரிய வாய்ப்பு…

வெளியீட்டு விழாவுக்குத் தலைமை – க.நா.சு. சிறப்புரை – லா.ச.ரா.

தீபாவளிக்கு மத்தாப்பு கொளுத்தும் குழந்தைபோல, லா.ச.ரா அன்று நிகழ்த்திய வர்ணஜால உரை மறக்க முடியாதது. விழாவுக்கு கோடைக்கானல் அன்னை தெரேசா பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் தேவதத்தா உட்பட வெளியூரில் இருந்தெல்லாம் பிரமுகர்கள் வந்திருந்தார்கள். டாக்டர் தேவதத்தா ”லா.ச.ரா.வுக்காக வந்தேன்!” என்றார்.

எனக்காக வந்ததாக நினைத்திருந்தேன்.

லா.ச.ரா.வுக்கு எக்காலமும் பெரும் வாசகர் கூட்டம் உண்டு.

என் விழாவுக்கு சிறப்புரை வழங்கியதாலோ என்னமோ என்னை இலக்கிய வட்டத்தில் லா.ச.ரா.வுடன் பிணைத்துப் பேச ஆரம்பித்திருந்தார்கள்.

தொ ட ர் கி றே ன்


storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்