நினைவுகளின் தடத்தில் – (23)

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

வெங்கட் சாமிநாதன்


உடையாளூருக்கு வந்தது ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கியது போலத்தான். அப்பா அம்மாவோடு, தம்பி தங்கைகளோடு சேர்ந்து வாழ்வது என்பது என் பதினைந்தாவது வயதில் தான் முதன் முறையாக நிகழ்கிறது. எல்லோரும், தம்பி தங்கைகளும் தான், என்னைப் புதியவனாகப் பார்க்காமல் வெகு அன்புடன் ‘அண்ணா’ என்று அழைக்க அதைக்கேட்க வெகு சுகமாக இருந்தது. பெரிய வீடு. நாட்டு ஓடு போட்ட வீடு. மண்தளத்தில் சாணிபோட்டு மெழுகிய கூடம், தாழ்வாரம். எட்டிப் பார்த்தால் கை நீட்டினால் தொட்டுவிடலாம் போல நீர் மேலெழுந்து நிரம்பியிருக்கும் கிணறு. உடையாளுரின் ஒரு திசையில் இரண்டு ·பர்லாங் நடந்தால் ஒரு ஆறு. அதற்கு நேர் திசையில் அரை மைல் தூரம் நடந்தால் இன்னொரு ஆறு. ஆற்றின் அக்கரையில் சந்திரசேகரபுரம் என்னும் ஒரு பெரிய கிராமம். நிலக்கோட்டையின் கோடைகால தண்ணீர் பஞ்சத்தில் வாழ்ந்த எனக்கு இதெல்லாம் மிக சந்தோஷத்தைக் கொடுத்தது. ஒவ்வொரு வீட்டின் பின்னாலும் பெரிய கொல்லை. தென்னையும் புளியமரங்களும் நிறைந்த கொல்லை.

உடையாளூரே ஒரு மேடிட்ட தளத்தில் தான் இருந்தது. ஊருக்குள் நுழையும் போதே மாட்டு வண்டி மேட்டில் ஏறித்தான் ஊருக்குள் நுழைய முடியும். சுற்று வட்டாரத்தில் எந்த கிராமமும் அப்படி ஒரு மேட்டில் இருப்பதாக நான் காணவில்லை. உடையாளூரில் மொத்தம் இருந்ததே நான்கு தெருக்கள் தான். ஒவ்வொரு தெருவிலும் சுமார் இருபது வீடுகள் இருக்கலாம். எங்கள் தெருவில் வீடுகள் ஒரு சாரியிலேதான் இருந்தன. ‘ப’ வடிவில் மூன்று தெருக்கள். ‘ப’வின் நடுவில் குறுக்கே ஒரு கோடிட்ட மாதிரி நான்காவது தெரு. அந்த நடுத்தெருவில் தான் ஒரு பெருமாள் கோவில் இருந்தது. அந்தக் கோவிலை நான் பார்த்திருக்கிறேனே தவிர அங்கு ஏதும் உற்சவங்கள் நடந்ததாக எனக்கு நினைவில் இல்லை. அந்தக் கோவில் பற்றி யாரும் பேசிக் கூட எனக்கு நினைவில் இல்லை. உடையாளூரில் மிகவும் கொண்டாடப்பட்ட கோவில்கள் ஊருக்கு ஒரு எல்லையில் வெளியே இருந்த சிவன் கோவிலும் அதன் மறு எல்லையில் இருந்த செல்வ மாகாளி அம்மன் கோவிலும் தான். சிவன் கோவில் மிகப் பழமையான கோவில். 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில். கோவிலைச் சுற்றி வரும்போது, சுற்றிலும் கோவில் சுவர்களில் கல்வெட்டுக்கள் காணும். அந்தக் கோவிலுக்கு எதிரே இரண்டு குளங்கள். ஒன்று மனிதர்கள் குளிப்பதற்கும் மற்றது மாடுகளைக் குளிப்பாட்டுவதற்கும் என இருந்தன. நான் அங்கு படித்தக் கொண்டிருந்த 47-48, 48-49 வருடங்களில் நீர் நிரம்பிருந்த அந்தக் குளங்கள் சில வருடங்களுக்கு முன் நான் போயிருந்த போது முற்றிலுமாக வற்றியிருந்தது மட்டுமல்லாமல், குளங்கள் இரண்டும் இருந்த சுவடு கூட அழிந்து வந்து போயிருந்தன.

ஊரின் மறு கோடியில் இருக்கும் செல்வமாகாளி அம்மன் கோவில் தான் சிவன் கோவிலை விட பிரசித்தமானது. பங்குனி உத்திரத்தின் போது திருவிழா நடக்கும். பின் வருடங்களில் எங்கள் குடும்பம் உடையாளூரை விட்டு நீங்கி என் தம்பி வேலை பார்க்கும் இடத்திற்கு ஏற்ப ஊர், வீடு மாற்றிக்கொண்டிருந்த காலத்திலும், அப்பா எங்கு இருந்தாலும், பங்குனி மாத செல்வமாகாளி கோயில் திருவிழாவுக்கு உடையாளூருக்கு வந்துவிடுவாராம். அவர் மாத்திரமல்ல, ஊரில் உள்ளவர்கள் யாருமே எந்த வெளியூரிலிருந்தாலும் செல்வமாகாளி அம்மன் கோயில் உத்சவத்துக்கு ஊருக்குத் திரும்பி வந்துவிடுவார்களாம். உற்சவம் அந்த ஊருக்கு பெரிய உற்சவம் தான். காவடி எடுத்தல், தீ மிதித்தல் எல்லாம் உண்டு. ஊரில் எல்லாருடைய வீட்டிலும் ஒரு குழந்தைக்குப் பெயர் அம்மனின் பெயராகத் தான் இருக்கும். என் தங்கை ஒருத்தியின் பெயரும் கூட செல்லம்மாள் தான்.

எங்கள் குடும்பங்களில் சுவாமி மலைக்குச் சென்று குழந்தைக்கு முடி இறக்குவது என்பது ஒரு கட்டாயம். இரண்டாவது கட்டாயம் உடையாளூர் செல்வமாகாளி அம்மன் கோயில் சென்று அங்கும் முடி இறக்கவேண்டும். மூன்றாவது என் அம்மா வேண்டிக் கொள்வது திருப்பதி சென்று மூன்றாவது முடி இறக்குவது. தில்லியிலிருந்து ஒவ்வொரு வருடமும் என் பையன் கணேசனுக்கு முடி இறக்குவது என்று வேண்டிக்கொண்டது மூன்று ஸ்தலங்களில் ஆனதால் மூன்று முறை விடுமுறையில் வரவேண்டியிருந்தது. எங்கள் ஊர்க்காரர் மற்றவர்களுக்கு செல்வமாகாளி அம்மன் கோயில் ஒரு ·பர்லாங் தூரத்தில். சுவாமிமலை மூன்று மைல் தூரத்தில். எங்களுக்கு இஷ்ட தெய்வங்கள் நிறைய. இந்த குடும்ப பழக்கம் என் பேத்தி விஷயத்திலும் தொடர்கிறது. என் பேத்திக்கு முடியிறக்க மூன்று வருடங்களுக்கு முன் சென்ற போது, செல்வமாகாளி அம்மன் கோயிலில் சில தெய்வங்களுக்கு சுருட்டும் சாராயமும் கூட படைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.

உடையாளூரும் செல்வமாகாளி அம்மனும் சுற்று வட்டார கிராமங்கள் ஊர்களில் கூட பிரசித்தம் பெற்றிருந்தது பின்னர் தான் எனக்குத் தெரிய வந்தது. சிவன் கோயில் கல்வெட்டு பற்றிச் சொன்னேன். அக் கல்வெட்டில் உடையாளூரின் பெயர் வேறாகத் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. அக்கல்வெட்டின் ஒரு பகுதியை, சுமார் இருபது இருபத்தைந்து வரிகள் அச்சிட்டு கண்ணாடி போட்டு வைத்திருந்ததை நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். பின்னர் ஊரின் பெயர் சோழர் காலத்தில் என்னவாக இருந்தது என்று மறந்ததை நினைவு படுத்திக்கொள்ள ஒரு முறை அதைக் கோவிலில் தேடியபோது அது இருக்கவில்லை. புராதன சின்னங்கள் மாத்திரம் இல்லை, அச்சின்னங்களின் பதிவுகள் கூட மறைந்து போய்க்கொண்டிருக்கின்றன. இந்நாட்களில் இவற்றிற்கு மதிப்பு ஏதும் இருப்பதில்லை. ஊரில் இருந்த இரண்டு பெரிய குளங்களே சுவடற்று மறைந்து விட்ட பிறகு, இவற்றிற்கு கிராமத்தில் அன்றாடத் தேவை உண்டு, புராதன சின்னங்களுக்கு என்ன பொருளார்த்த தேவை? – இருப்பினும், ….. நாம் தான் எதையும் பகுத்தறிந்து ஆராய்ந்து செயல்படுபவர்களாயிற்றே!

உ.வே.சாமிநாத அய்யர் எழுத்துக்களில் உடையாளூர் பற்றி பிரஸ்தாபங்கள் உண்டு. அவற்றில் ஒன்று தான் எனக்கு இப்போது கிடைத்துள்ளது. உ.வே.சாவுக்கு இரண்டு தலைமுறை முந்தியவரும், அக்காலத்திய புகழ் பெற்ற சங்கீத வித்வானும், சாகித்ய கர்த்தாவுமான கனம் கிருஷ்ணய்யரின் வாழ்க்கை பற்றி தான் அறிந்த குறிப்புகளையும் தான் சேர்த்து வைத்திருந்த கீர்த் தனங்களையும் சேர்த்து ஒரு சிறிய புத்தகம் எழுதியுள்ளார் உ.வே.சா அதில் கனம் கிருஷ்ணய்யர் தன் ஸ்தல யாத்திரையின் போது உடையாளூருக்கும் செல்கிறார். அது பற்றி அவர் எழுதியுள்ளதை அவர் வார்த்தைகளிலேயே சொல்ல லாமே.

“அப்போது அந்தக் கிராம தேவதையாகிய செல்வமாகாளி யென்னும் தெய்வத்துக்கு உத்சவமாதலின் அந்தத் தேவதை திருவீதியில் வந்தது; அக்காலத்தில் அக்கிராமத்தாருடைய விருப்பத்திற்கிணங்கிக் கல்யாணி ராகத்தில் “வல்லமையுன் வல்லமையே” என ஒரு கீர்த்த்னத்தை இவர் பாடினார். அது வருமாறு

ராகம் – கல்யாணி: தாளம் – ஆதி

பல்லவி

வல்லமையுன் வல்லமையே
சொல்ல எவர்க்குந் தரமா? (வல்லமையுன்)

அனுபல்லவி

எல்லாம் உன் செயலே வேறில்லை
பூபதிராஜபுரந்தனில் வாழும்
செல்ல மாகாளி அம்மையே தேவி பரஞ்சோதி (வல்லமையுன்)

இவ்வளவு போதும் இப்போதைய தேவைக்கு. பின் உ.வே. சா ஒரு அடிக்குறிப்பு தருகிறார். “பூபதி ராஜபுரம் என்பது உடையாளூரில் உள்ள ஒரு பகுதி. தமாஷாகத்தான் இருக்கிறது. உழக்குக்குள் கிழக்கும் மேற்குமா, என்பது ஒரு கேலி வழக்கு. உடையாளூரே நான்கே தெருக்களும் சுமார் 80-100 வீடுகளே கொண்ட ஒரு சிறிய கிராமம். அதனுள் பூபதி ராஜபுரம் ஒரு பகுதி. கனம் கிருஷ்ணய்யர், தியாகப்ரம்மம் வாழ்ந்த காலத்தவர். அவருடன் பழக்கமுள்ளவர். அந்த காலத்தில் உடையாளூரும் பூபதி ராஜ புரமும் இருந்த கோலம் அப்படித்தானோ என்னவோ.

இதேபோல இன்னொரு பக்கத்து கிராமமும் சரித்திரப் பிரசித்தி பெற்றது. நான் தினம் பள்ளி செல்வதற்காக கும்பகோணம் போகும் வழியில் எங்கள் ஊர் ஆற்றைத் தாண்டியதும் அதன் மறு கரையில் கொஞ்ச தூரத்தில் உள்ளது நாதன்கோயில் என்னும் இன்னொரு கிராமம். எங்கள் வழியில் வலது பக்கம் திரும்பினால் நாதன் கோயில் கோபுரமும் சன்னதி தெருவும் தெரியும். அது மிக அழகான காட்சி. அந்த நாதன் கோயில் ஒரு பழங்கால போர் நிகழ்ந்த இடம். நந்தி வர்மன் என்ற பல்லவ அரசனுடன் சம்பந்தப்படுவது. எனக்கு இப்போது சரியாக ஞாபகமில்லை. ஒன்பதாம் நூற்றாண்டில் மூன்றாம் நந்திவர்மன் என்ற பல்லவன் அவன் காலத்திய பாண்டிய மன்னனை போரில் வென்று தன் ராஜ்யத்தை விஸ்தரித்திருந்தான். பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்குமான துவந்த யுத்தம் ஆக்கிரமிப்பு, ராஜ விஸ்தரிப்பு என்பது அவன் தந்தை தந்தி வர்மன் காலத்திலிருந்து தொடர்வது. கடைசியாக ஸ்ரிமார ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய மன்னன் இந்த நாதன் கோயில் அருகில் தான் மூன்றாம் நந்தி வர்மனோடு மறுபடியும் போரிட்டு தான் இழந்த நாட்டைத் திரும்பப் பெற்றான் என்பது சரித்திரம். இந்த யுத்தம் நடந்தது கி.பி.859-ல். இந்த மூன்றாம் நந்தி வர்மனோடு சம்பந்தப்பட்டது தான், அவன் புகழ் பாடுவது தான் நந்திக் கலம்பகம். உடையாளூரின் பெருமை பேச அல்ல நான் கொஞ்சம் ஊரை விட்டு தள்ளி நடக்க ஆரம்பித்தது. அந்த சுற்று வட்டாரமே எனக்கு கொஞ்சம் பெருமை பேச வாய்ப்பளித்தால் நான் என்ன செய்ய! அந்த சுற்று வட்டாரத்தில் தான், ஆடு துறை, பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம் என உ.வே. சாமிநாதய்யரும் அவர் தம் ஆசான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் நடமாடி உ.வே.சா எழுதிய வாழ்க்கைக் குறிப்புகளில் இடம் பெரும் இடங்கள்.

உடையாளூரிலிருந்து கும்பகோணத்துக்குப் போக அந்நாட்களில் வலங்கைமான் என்னும் மூன்று மைல் தூரத்தில் இருக்கும் ஊர் சென்றுதான் பஸ் பிடித்துப் போகவேண்டும். அந்த வலங்கைமான் ஒரு சிறப்புப் பெற்ற ஊர். வி.எஸ். சீனிவாச சாஸ்திரிகள் (ரைட் ஆனரபிள் என்று அந்நாடகளில் அறியப்பட்டவர், silver tongued orator என்ற புகழ் பெற்றவர், கோபால கிருஷ்ண கோகலேயின் Servants of India Society யை அவருக்குப் பின் நிர்வகித்தவர் பிறந்த, ஆரம்பப்பள்ளி படித்த ஊர். இன்னம் சொல்லப்போனால், என் அப்பா வழித் தாத்தா வலங்கைமானைச் சேர்ந்தவர் தான். அவர் காலத்தில் தான் உடையாளூருக்குக் குடி பெயர்ந்ததும். உடையாளூரில் எங்களைக் குறிப்பிடுபவர்கள் வலங்கைமானையும் சேர்த்துத் தான் அடையாளம் காட்டுவார்கள். வலங்கைமான் சாஸ்திரிகள் வீடு என்று. அந்த அடையாளத்தை எங்களுக்குக் கொடுத்தவர் எங்கள் தாத்தா சுந்தரேச சாஸ்திரிகள்.அவர் புகைப்படம் உடையாளூர் வீட்டில் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். பின் எப்போது அது எங்கு காணாமற் போயிற்றோ தெரியாது.

அந்நாட்களில் அனேகமாக எந்தச் சிறிய தேவைக்கும் நாங்கள் வலங்கைமானுக்குத் தான் போக வேண்டிருந்தது. உடையாளூரில் ஒரு சின்ன மருத்துவ மனை கூட கிடையாது. நான் படிக்கச் சென்ற 1947-ல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம் வளர்ந்திருந்தது. மாமாவுடன் நிலக்கோட்டைக்கு ஆறாவது படிக்கப் போவதற்கு 5-ம் வகுப்பு டி.சி. பெற்றது அந்த திண்ணைப் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரிடம் தான். ஊரில் ஒரு படித்த வாலிப வயதினர் தான் தபால் கார்டு கவர்கள் வாங்கி வைத்துக்கொண்டு தேவையானவர்களுக்குக் கொடுப்பார். அங்கீகரிக்கப்பட்ட தபால் நிலையம் 1947-ல் கூட இருக்கவில்லை. தபால் பட்டுவாடா செய்ய ஒருவர் வலங்கிமானிலிருந்து வருவார். அவர் தான் தபால்கள் கொடுப்பார். எடுத்தும் செல்வார். பகல் 11 மணி வாக்கில் வருவார். ஆக பெரிய தேவைகளுக்கு கும்பகோணமும், மற்ற சிறிய தேவைகளுக்கு வலங்கைமானுக்கும் போக வேண்டியிருக்கும். யாரும் தெருவில் பனியனும் தோளில் ஒரு துண்டுமாக நடக்கக் காட்சி யளித்தால், ஒவ்வொரு வீட்டிலும் திண்ணையில் உட்கார்ந்திருப்பவர்கள் கேட்கும் கேள்வி, “ஏண்டா பிச்சை, கும்மோணமா?” தான். பனியனும் துண்டும் அணிந்த பிச்சையோ, கிச்சாவோ, கட்டாயம் யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கட்டாயம் வாங்கி வருவார். இந்த பரஸ்பர சகாய உணர்வு உடையாளூரில் எல்லோருக்கும் இருந்தது. இத்தோடு மட்டுமல்ல. “ஏண்டா, காமாட்சி ஜோஸ்யர் தெருவுக்கு ஒரு நடை போய்ட்டு வந்துடேன்” என்று சொல்லி அங்கு சீனுவைப் பார்த்து என்ன செய்தி சொல்ல வேண்டுமோ அதையும் பிச்சா கட்டாயம் கேட்டுக்கொண்டு போகவேண்டும். பிச்சாவுக்கு அதில் தயக்கம் இராது.

வெங்கட் சாமிநாதன்/30.6.08

Series Navigation