The Elephants Rally-யா னை க ளி ன் ஊ ர் வ ல ம்

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


—-

இதை ஒத்துக் கொள்வதில் எனக்குத் தயக்கமோ வெட்கமோ இல்லை. ஆம். நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாய் இருந்தேன்.

மனிதன் பிறந்தபின் கடவுள் பிறந்தார் –

துாணிலும் இல்லை, துரும்பிலும் இல்லை –

யாமார்க்கும் குடியல்லேம் சிவனை அஞ்சோம் –

சிலைகள் அறியுமோ கற்பூர வாசனை –

என்றெல்லாம் நான் எழுதிக் கொண்டிருந்தேன். கடவுள் சார்ந்த மூட நம்பிக்கைகளுக்கு, சடங்குகளை வேதங்களாக எண்ணி, மையம் விலகிப் போனவர்களை… பயத்தில் கூர் மழுங்கிப் போனவர்களையிட்டு இப்போதும் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. பாவம் அவர்கள். ஏற்கனவே வெற்றியால் புறக்கணிக்கப் பட்டவர்கள். பேதலித்தவர்கள். சாவுபயம் கண்ட பூச்சிகளைப் போலப் பூவுலகில் அவர்கள் தள்ளாடி, பிடிகிடைக்கத் தவித்து, எங்காவது எதிலாவது ஒன்றிக்கொள்ள ஊன்றிக்கொள்ள முயல்கிறார்கள். அவர்கள் பாவம். அவர்களை விட்டு விடுவோம்.

எழுத்தாளன் என்பதே ஒரு சுகமான அனுபவம்தான். தன்னெஞ்சறிவதைப் பொய்யாதவன் அவன். காலக் குளிகைகள் அவன் கனவுகளை, சிந்தனை வளாகங்களை, அதன் எல்லைகளை, அதன் துருவங்களைப் புதுப்பித்து விடலாம். மாற்றி விடவும் கூடும். பாதி வழங்கலும், பாதி காத்திருத்தலுமானவன் அவன். காத்திருந்து, கிடைத்ததைப் பகிர உள்-ஆவேசம் கொண்டவன். சம்பவ விருட்சங்கள் காற்றில் ஆடுகையில் அவனில் விழும் நிழல்கள், பிம்பங்கள் ஆச்சரியமானவை. சாமான்ய மக்களுக்கு அந்த அழகியல் நுண்மாண் நுழைபுலம் வாய்க்கிறதில்லை. ஆனாலென்ன ? நான் – இதோ நிற்கிறேன். இருக்கிறேன்… யான் பெற்ற இன்பம் வையகமே பெறுக.

விருட்சங்கள்தாமா ?… என்றால் இல்லை. தலைகாட்டும் சிறு புல்லும் புல்லின் காலடி நிழலும் நிழலடி எறும்பும்… அவன் கண்ணில் தப்பாது. புள்ளியில் இருந்து பிரபஞ்சம் வரை அவன் கண் ஏரால் ஆழ உழுகிறான்.

இதில் பதிவு கண்டவற்றை – புதையல் எடுத்தவற்றை – ஒளிவு மறைவு இன்றி, ஆகப் பெருஞ் சுதந்திரத்துடன் அவன் உலகுக்கு அறிவிக்க முன்வருகிறான். அவன் கலைஞன். தான் முன்பொரு முறை கூறிய கருத்துகளுக்கு இது முரணாய் இருந்தாலும் அவன் – ஆம், அவன் பொய் சொல்வதற்கில்லை. அவனால் அது முடியாது. கலைக்குப் பொய் அழகுதான். எப்போது ? புரை தீர்ந்த நன்மை அதன் பயன் எனில் மட்டுமே பொய் அழகு.

மனம்… அதன் விசித்திரங்கள். இடம் பொருள் ஏவல் என்கிறார்கள். அதைப்போலவே உடலின் தட்ப வெப்ப நிலை, ஆரோக்கியம், சுற்றுச் சூழல், தகவல்கள் பரிமாறுகிற எதிர்-நபரின் தன்மை, அவன் மனநிலை… இப்படி ஒவ்வொரு கருத்துக்கும் எதிர்வினை சூழலுக்கு சூழல் மாறவே செய்கிறது. நமது கிரகிக்கும் திறனும் அவ்வாறே பல்வேறு சூழல்களில் பல்வேறு வீர்ய அலகுகளில் செயல்படுகிறது. இந்நிலையில் தனக்கே தன் கருத்து மாறுபடுதல் இயல்பே. அது ஒரளவு நல்லம்சமுமே அல்லவா ?

நமது மனவெளியில் காலம் போடுகிறது கோலம். கோலங்கள். அழித்து அழித்துப் போடவல்லது அது.

ஆம். நான் கடவுள் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவனான பிரமைகளுடன் இருந்தேன். இயற்கையின் பிரம்மாண்டமான முடிச்சுகளை அவிழ்க்க திறனில்லாதவன், அட – திராணியில்லாதவன்… அவன் மரணத் தறுவாயில் பிடித்துக் கொள்ளத் தவிக்கும் கிளையே கடவுள். இப்படியான வியாக்கியானத்தை அவர்கள் – அந்த சுயநம்பிக்கை யில்லாத சோம்பேறிகள் உருவாக்கி யிருந்தார்கள்.

ஆகா பகவான் ஸ்ரீ அரவிந்தர் சொல்கிறார் பாருங்கள். புத்தகம் /மனிதச் சக்கரம்/. முதல் பகுதி – Man is Nature ‘s laboratory – எதிர்பார்க்கவேயில்லை நான். தித்தித்துத் திகட்டியது அந்த வார்த்தை என்னுள். இடம் அளித்துப் பாருங்கள். புரிந்து கொள்ளவும் அறிந்து கொள்வதுமாக மன வாசல் விரியத் திறந்து வைத்திருங்கள். உணருங்கள்… உருவாகுங்கள். அற்புதங்கள் செய்வீர்கள். செய்து கொள்ள புதுப்புது வளாகங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். புதிர்களைப் போடவல்லது காலம். சக்தி மிக்கது இயற்கை. காத்திருந்தால் மெளனமாய் அவை உன் காதோடு பகிர்ந்து கொள்கிறது அநேக ரகசியங்கள்.

காத்திருத்தல் என்றால் வாளாவிருத்தல் அல்ல. சோம்பேறி மடத்தில் சுகமாய்ப் படுத்து கொட்டாவி விடுதல் அல்ல. தயாராய் இரு. தன் முனைப்புடன் இரு. எதிர்பார்த்திரு. தனித்திரு. விழித்தும் இரு. பெறும் ஆவேசத்துடன் பசித்திரு. காலியாய் இரு. திரை மேலேற்றிய காலியான நாடக மேடையாய் இரு. மெளனக் குமிழி உடைபட்டுத் தெறிக்கிற அந்தச் சிறு விநாடியில் வானவில் மிளிரும். அடடா வண்ணக் கொந்தளிப்பு. நிசப்த குதுாகலம். வண்ணச் சிதறல் அல்ல. இப்படி அழகாய் வளைவாய் யார் கோடு போட முடியும் அந்த வான வளாகத்தில். மனிதனால் கூடுமோ. இயற்கை என்றாலே பிரமிப்புதான். பிரம்மாண்டம்தான். ஆனந்தம்தான்… இழந்து விடாதே நண்பா. காத்திரு. விழித்திரு. குமிழிக்குள் வானம். வானத்தில் வானவில். தரிசனக் காட்சி. இயற்கையால் கூடும்.

காத்திருத்தல். உனக்கான தருணங்களை அடையாளங் கண்டு கொண்டாக வேண்டும் நீ. அதற்கு – வெள்ளைத்தாள் போல, காத்திருக்க வேண்டும். காகித மனசு வெண்பலகை. காலம் எழுதும் கவிதைகளை. முடியுமா ? மனதை வெள்ளைத் தாள் போல, வகுப்பறைப் பலகை போல வைத்திருக்க, இயற்கையின் விடைகளைச் சுமக்க மனதை வைத்திருக்கக் கூடுமா நம்மால் ?

மனசைக் கட்டமைக்க வேண்டியிருக்கிறது. சகல வழிகளிலும் அதை நாம் கட்டாயம் கட்டமைக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் ?

உடலின் ஆரோக்கிய அம்சத்தை கவனங் கொள்ளாமல் முடியாது. சித்திரம் வரைய உடலே ஊடகம் அல்லவா ? தேக ஆராக்கிய மேம்பாட்டுக்கு என ஸ்ரீ அன்னை முறைப்படுத்தி வலியுறுத்துகிற உடற்பயிற்சிகள். சிறார்ப் பருவத்தில் இருந்தே கட்டாயம் நெறிப்படுத்த வேண்டியவை அவை என்கிறாள் ஸ்ரீ அன்னை. தமது பிற்பிராயங்களில் கூட ஸ்ரீ அன்னை டென்னிஸ் விளையாடும் படங்கள் எத்தனை உற்சாகம் அளிக்கின்றன நமக்கு.

தேகப் பயிற்சிகள் உணவுக் கட்டுப்பாடுகள் என ஒவ்வொரு வாழ்வம்சத்திலும் ஸ்ரீ அன்னை காட்டும் வழிமுறைகள் வியக்க வைக்கின்றன. மனக் கட்டுப்பாட்டின் எளிய ஆரம்பம் உணவுக் கட்டுப்பாடு. பெரிய வெற்றிகளை நோக்கி நடக்கையில் முதல் அடி – அதன் தீர்மான நிதானம்… மிக முக்கியம்.

சம்பிரதாயங்களை மீண்டும் ஒர் அர்த்த வியூகத்தோடு அறிமுகப் படுத்த ஸ்ரீ அன்னை காட்டும் கவனம். அர்த்தம் உதிர்ந்த சடங்குகள் கரும்புச் சக்கைகள். அளவு சிறிய சட்டைகள் அவை. வீசி எறிக வெளியே… என்கிறாள் ஸ்ரீ அன்னை. எறிந்து விட்டேன் ஸ்ரீ அன்னையே. என்னை ஏற்றுக்கொள்.

உடற் கட்டுமானம். பிறகு மனசினால் ஓர் மேலதிகப் புரிதலான வாழ்வும் அதற்கான தன் முனைப்பும். விசாரியுங்கள். காரணங்கள்பூர்வமானது உலகு… என்கிறார்கள் ஸ்ரீ அன்னையும் பகவான் ஸ்ரீ அரவிந்தரும். எந்த நவீன விஞ்ஞானக் கருத்தையும் அவர்கள் புறக்கணிக்கிறதே இல்லை. உயிர்களின் பரிணாம வளர்ச்சியை மனதில் கொண்டு அடுத்த கட்டம் நோக்கி மனிதனைத் துரிதப் படுத்துவதே ஸ்ரீ அரவிந்தரின் முனைப்பாக இருக்கிறதைக் காண முடிகிறது…

முற்போக்குவாதிகள் லெளகிக உலகம், என பொருள்வாதம் எழுப்பி மானுடம் வெல்லும் என அறைகூவல் விடுக்கிறார்கள்.

உணர்வுகளின் கதகதப்பு அற்ற தத்துவச் சக்கை. பொருள்முதல்வாதம் ஒரு தத்துவம். ஆன்மிகம் ஓர் அனுபவம்… இன்னொரு வகையில் பார்த்தால், என்னில் இருந்து கிளம்பி உலக ஒருமைக்கு வழி காணுதல்… என முற்போக்கு வாதம் அமைகிறதை அறிய முடியும். ஆனால் தனி மனிதனை அது கணக்கில் கொள்வதே இல்லை. மானுடம் வெல்லும் என அது சித்தாந்தம் பேசுகிறது. உலகில் சிறு துகளே மனிதன். காத்திரு. உனக்குள் நிறையட்டும் பிரபஞ்சம். நெஞ்சு விரித்து மூச்செடு. மனிதனுள்ளே காணக் கிடைக்கும் அந்த பொது வளாகங்கள், யாவர்க்குமான ஒளி, தீட்சண்யம் அதை ஒவ்வொருவனுமாய் அனபவிக்கட்டும்.

உனது உடல். அதுவே இயற்கையின் விளையாட்டுத் திடல்… என்று வேறொரு இடத்தில் ஒரு கவிதையில் ஸ்ரீ அரவிந்தர் கூறுவார். (The Golden Light – My earth is now Thy playfield and Thy seat.) காத்திரு. அனுமதி. வானம் திறக்கும். எட்டு திசையும் நமக்கு எட்டும் திசையே. வாய்ப்புகளை அறிய மனக் குவிப்பு தேவை.

மனங் குவிந்த கவனம் என்பது தியானம். கண்மூடிப் பழக்கப் படுத்துதல் மனதை. கட்டுப் படுத்துதல். அதில் ஒரு விசேஷம் உண்டு ஐயன்மீர். கண்மூடிக் கிடந்தால் வேண்டும் வளாகம் மனதைச் செலுத்த கவனங் குவியும் அல்லவா ? எனது அனுபவம் ஒன்றைச் சொல்லுவேன் – வீட்டில் கதை அல்லது ஏதும் எழுத்து மும்முரத்தில் மனதைச் செலுத்துகையில், குழந்தைகளோ மனைவியோ குடும்பத்தாரோ… எற்படுத்தும் சில சப்தங்களும் நமது கவன எல்லைக்குள் தேங்காய் விடல் போடுகின்றன. சிதறித் தெறிப்பது நமது சிந்தனைகளே. சட்டென மூர்க்கம் கொள்கிறது மனம்… எங்களது அண்ணாநகர் தியான மையத்தில் ஸ்ரீ அன்னை முன்னே அமர்ந்திருக்கிறேன். கண்மூடி மெளனத்தின் குளிர்ச்சியை அனுபவிக்க தாகத்துடன் காத்திருக்கிறேன். வீதியில் யாரோ சிறுவன் கிரிக்கெட் விளையாடுகிறான் போல. சட்டென அந்தப் பந்து நேரே மாடி ஜன்னலில் மோதி விழுகிறது. அதிர்கிறது ஜன்னல். ஆச்சரியம். அந்த அதிர்வில் மனம் கோபப்படவில்லையே… இயற்கையின் சிறு ஒலிகளைப் போல, எங்கோபோல அதை மனம் ஏற்றுக் கொள்கிறதே. தன்னை விடுவித்துக் கொள்ளுதல் என்ற உணர்வுநிலை எப்படி வந்தது என்னுள் ? பிரச்னைகளைத் தன் சார்ந்தவையாக அலுப்புடன் கவலையுடன் அணுகாமல் விடுவித்துக் கொள்கிற சக்தியைத் திரட்டித் தருகிறது மெளனம். பழக்கித் தருகிறது தியானம்.

எனில் மனம் அத்தனை சுலபமாய்க் கட்டுப்பட்டு விடுமா என்ன ? கேவலம் புதுச் செருப்பு. சந்நிதி முன்னே பிரார்த்தனை செய்கையில், ஆண்டவனை மறக்கடித்து விடுகிறது அது – மனம் வாசலில் விட்ட செருப்பையே பிராகாரம் சுற்றி வருகிறது.

மனம் குவிய அப்போது அந்தச் செருப்பு காரணம் ஆகி விடுகிறது.

நல்லெண்ணங்கள் நிறைய மனசில் ஸ்ரீ அன்னையை நினைத்துக் கொள்வாயா நண்பனே ? ஸ்ரீ அன்னையின் முன்னே அமர்வாயா ஐயா ? ஸ்ரீ அன்னையைப் பணிகிற உச்சாடனங்களும், சிறு சுலோகங்களும், ஸ்ரீ அன்னையின் இசையெடுப்புகளும் கூட நமக்கு வழங்கப் படுகின்றன. இவையெல்லாம் பயிற்சி தருகின்றன நமக்கு. மனசை ஒழுங்குபடுத்த, அமைதிப் படுத்த அவை வழிகோலுமாக. ஆற்றுப்படுத்துமாக.

பிரச்னைகளைப் பழிக்கக் கூடாது. அதனை அடுத்து வருவது அதைப்போல இராது. ஆகவே புன்னகை செய்க… என் வாக்கல்ல இது. வள்ளுவர் வாக்கு. பிர்சனைகளை உணராமல் வெற்றியை உணர்வது எப்படி சாத்தியம் ?

தொடர்ந்து மனதை அழுத்தும் பிரச்னைகள். பெரும் சுணக்கங்கள் தருகின்றன அவை. பிரச்னைகள் என்னும் யானைகளின் ஊர்வலம்.

சரி. பிரச்னைகள் பெரியவை…. அதனால் என்ன ? நல்லது – நாம் பெறப்போகும் வெற்றிகளும் பெரியவை. நல்வாய்ப்பு அல்லவா இது ?

யனைகளை ஜெயித்து, முதுகில் ஏறி சவாரி செய்வது உலகமே வணங்கும் அழகான காரியம் அல்லவா ?

அமைதியுற்ற மனம் அன்றாட வாழ்வில் பூச்சிகளைப் போல வந்தமரும், காதில் ரீங்காரம் செய்யும் பிரச்னைகளைத் தீர்வை நோக்கிய தீர்மானங்களுக்கு இட்டுச் செல்கிறது. சக மனிதர்களைப் பற்றிய அவ நம்பிக்கைகளைக் களைய அது பயிற்றுவிக்கிறது.

அன்பின் வழியது உயிர்நிலை. அன்பினால் ஆகாதது ஒன்றில்லை. இன்முகமும் நற்சொல்லும் நன்மையை – நன்மையை மட்டுமே – கொண்டுதரும்.

குழந்தையாய் இருங்கள். எதிர்காலம் பற்றி அவை அதைரியப் படுவதேயில்லை… என்கிறாள் ஸ்ரீ அன்னை. கீழே விழுந்து அடிபட்டுக் கொண்ட குழந்தைகூட ஆறுதல் கூற, துாக்கிவிட என யாரும் இல்லை என்றால், தானே அழுகையை நிறுத்தி விடுகிறது. தானே எழுந்து கொள்கிறது. பட்ட காயத்தின் வீர்யம் பற்றி அவை கவலைப் படுவதேயில்லை. துாசி தட்டி எழுந்து ஓட்டமெடுக்கின்றன திரும்பவும். எதிர்காலம் பற்றி முகம் இருள்வதே யில்லை அவை… குழந்தையாய் இருங்கள். குழந்தையாய் உணருங்கள் – என்கிறாள் ஸ்ரீ அன்னை.

ஸ்ரீ அன்னை வாழ்க.

ஸ்ரீ அன்னை சார்ந்த என் முதல் அனுபவத்தை நான் பலமுறை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். வேதபுர வளாகத்தில் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் – அது அரவிந்தர் துயில்கண்ட இடம் என நினைத்து வளைய வந்தவன் நான். மறுநாள் வைகறைப் பொழுதில் அந்த மலர்மேடையில் சூரிய உதயம் போல வெண்துகில் விரித்து பரந்து கிடக்கிறாப் போல ஆகா அது ஸ்ரீ அன்னை அல்லவா ? ‘ ‘ஆம் ‘ ‘ எனப் புன்னகைக்கிறாள் ஸ்ரீ அன்னை. ‘ ‘நீ வந்து சேர்ந்தது என் வளாகத்துக்கு ‘ ‘ எனக் காதில் வைகறைப் போதில் நல்லொலி கேட்டேன்.

வேண்டுவோர்க்கு வேண்டும் போதில் ஸ்ரீ அன்னை புன்னகையுடன் தரிசனம் தருவதை நாம் அறிகிறோம். அது கனவு அல்ல. கனவின் ஒழுங்கற்ற தன்மை அதில் இல்லை. நான் கலைஞன். கனவு காணப் பெருவிருப்பு கொண்டவன். நான் எழுத்துக் கலைஞன். கனாப் போன்ற உறக்க விழிப்பு ஊடாட்டங்கள் எனக்குத் தெரியும். நான் இருபத்தியைந்து வருடங்களுக்கு மேலாக அவற்றை அனுபவித்து விருகிறேன்.

ஸ்ரீ அன்னை சார்ந்த தரிசன உள்கிரணங்கள். அவை கனவுகள் அல்ல. ஒருமுறை காட்டிய தரிசன முகம் மறுமுறை முற்றிலுமாய் வேறு கோணத்தில் அமைகிறதை நான் அறிகிறேன். கனவுகள் என்றே இல்லை. வாழ்வின் அநேக காலகட்டங்களில் அன்னை தன் இருப்பை அடையாளங் காட்டுவதை எப்படி மறுக்க இயலும்…

நிசப்த ரீங்காரம், நான் சைதன்யா என்ற பெயரில் ஆறு பாடல்கள் எழுதி லஹரி இசையமைத்த ஒலிநாடா. இதன் இசைகூட்டுதல் என கீபோர்டில் திரு கண்ணன் என்பவருடன் நாங்கள் அமர்கிறோம். அந்த கீபோர்ட் பழுதாகி விட்டது. நண்பர் கண்ணன் வேறு கீபோர்ட் வரவழைத்தார். நம்ப முடிகிறதா உங்களால் ? வரவழைக்கப் பட்ட கீபோர்டில் இடதுபக்கம் ஸ்ரீ அரவிந்தரின் நட்சத்திரம். வலதுபுறம் ஸ்ரீ அன்னையின் விரிந்த-தாமரைச் சின்னம்.

ஸ்ரீ அன்னை வழங்கிய நல்லாசி அல்லவா அது ? மறக்க முடியுமா அதை ? தற்செயல் என்பீரா ? கனவுப் பிதற்றல் என்பீரா ? ஜோடனை என்பீரா ?

வாழ்கிறாள் அன்னை. ஆள்கிறாள் என்னை.

யாதுமாகி நின்றாள். எனை மீதமின்றி வென்றாள்.

—-

டிசம்பர் 4, 2005

ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி சென்னை சுமித் ரோடு கிளையில் வாசித்தளித்தது

storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்