கல்பனா சோழன்
Lutesong and Lament :Tamil Writing from Srilanka (Edited by Chelva Kanagayakam, Pages : 172, Published by TSAR Publication, Canada. Price $23.95)
மஹாகவி, எம். ஏ. நுஹ்மான், சிவசேகரம், சேரன், கே. டேனியல், டொமினிக் ஜீவா, எஸ். பொன்னுத்துரை, வ. ஐ. செ. ஜெயபாலன், அ. முத்துலிங்கம், முருகய்யன், சோலைக்கிளி, செல்வி, சிவரமணி என்று பல தலைமுறைகளைச் சேர்ந்த 33 இலங்கை தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில படைப்புகளின் ஆங்கில மொழியாக்க தொகுப்பே இந்த நூல்.
பேராதனைப் பலகலைக் கழகத் தமிழ்த்துறை பேராசிரியராக இருந்த வி. செல்வநாயகத்தின் மகனும் டொரன்டோ பல்கலைக் கழக ஆங்கிலப் பேராசிரியருமான செல்வா கனகநாயகம் தொகுத்துள்ள இந்த நூலை, கனடாவைச் சேர்ந்த TSAR பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் படைப்புகளின் அனுபவ ஆழத்தையும், கற்பனை வீச்சையும், வளமையையும் பிரதிபலிக்கிற படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, வாசக எல்லையை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த உருவாக்கப்பட்டுள்ளது என்று தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் செல்வா கனகநாயகம். ஐந்து தலைமுறை படைப்பாளிகளின் படைப்புகளில் ஆதாரமாக, அடி நாதமாக ஓங்கி ஒலிப்பது போர்க்குரல். சமூக அநீதிக்கும், இன ஒடுக்குமுறைக்கும் எதிரான போர்க்குரல். ரஷ்மியின் கவிதை சொல்வது போல இவர்களின் கண்ணீரையும் கவிதையையும் பிரித்துப் பார்த்துவிட முடியுமா ?
ஆனால் இவர்களின் கண்ணீரிலும், சோகத்திலும் கையாலாகத்தனம் இல்லை. தார்மீக கோபம் இருக்கிறது. உரிமைக் குரல் இருக்கிறது. அனுபவ செறிவு இருக்கிறது. புதிய புற நானூற்று, அக நானூற்று வாழ்க்கை தெரிகிறது.
என். கே. ரகுநாதனின் `நிலவிலே பேசுவோம் ‘ (Let ‘s chat in the Moonlight- மொழிபெயர்ப்பு : ஏ. ஜே. கனகரத்னா) சிறுகதை, ‘காந்தியின் பெயரைச் சொல்லி கள்ளை ஒழிக்கப் பார்க்கிறீர்கள். முதலில் தீண்டாமையை அல்லவா ஒழிக்க வேண்டும் ? ‘ என்று உரத்துக் கேட்கிறது.
எஸ். பொன்னுத்துரையின் `தேர் ‘ (The Chariot – மொழிபெயர்ப்பு : செல்வா கனகநாயகம்) சிறுகதையில் வருவது போன்ற சின்னண்ணா பல வீடுகளிலும் பார்க்கக் கூடும். மனசாட்சியை ஓரளவுக்கு மேல் விற்க முடியாத, டொமினிக் ஜீவாவின் பாதுகை (Shoes – மொழிபெயர்ப்பு : எஸ். திருநாவுக்கரசு) சிறுததையில் வரும் முத்து நம்மில் பலராகவும் இருக்கலாம்.
ரஞ்சகுமாரின் ‘கோசலை ‘ ( மொழிபெயர்ப்பு : ஏ. ஜே. கனகரத்னா) இலங்கை தமிழர் வாழ்வின் பிரதிபலிப்பு என்று கூட சொல்லத் தோன்றுகிறது. ‘ஒரே தாயின் வயிற்றில் பிறந்த இரண்டு பிள்ளைகள், குணத்திலும் செயலிலும் இரு துருவங்கள் ஆனாலும் அவரவர் வழியில் போராட்டத்தில் பங்கு கொள்கிறார்கள். சீலன் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவன். ராமரும் தான். ராமரும் கடல் கடந்து, காட்டில் வாழ விதிக்கப்பட்டவர். அதர்மத்தை எதிர்க்க எதிரிகளுடன் இடைவிடாது போரிடப் பிறந்தவர். தென்னிலங்கையில் அட்டகாசம் செய்து வந்த ஆணவக்காரர்களின் கொட்டம் அடக்கினார். சபிக்கப்பட்டவர்களுக்கு விமோசனம் தந்தார். ஆனால், ராமனை நேசித்தவர்கள் – தசரதர், கோசலை, சீதா என்று எல்லாரும் – வேதனை துயரில் துவள வெண்டி வந்தது ‘ என்று போகும் கோசலை, வெறும் ஒரு தாயின் கதையாக, குடும்பத்தின் கதியாக மட்டும் நின்று விடவில்லை. வேறு பலப் பல அர்த்தங்களை அள்ளி வழங்குகிறது.
புராணத்தைப் புதுப் பார்வையில் பொருத்தி புது அர்த்தம் காணும் இந்த போக்கு கதை, கவிதை இரண்டிலும் இருக்கிறது. மஹாகவியின் அகலிகை வெறும் சம்பவ அடுக்காக அல்லாமல், அறமாக வகுக்கப்பட்ட எல்லைகளை மீற வைக்கும் ஆசாபாசங்களின் வல்லமையை, தனிமனித விருப்பை முன்னிலைப்படுத்துகிறது. எஸ். சிவசேகரத்தின் அகல்யாவோ(மொழிபெயர்ப்பு லஷ்மி ஹொல்ம்ஸ்ட்ராம்) கடல் கடந்து போராடி மீட்ட மனைவியை, ஊரார் பேச்சுக்கு பயந்து, தீக்குளிக்க வைத்த, ஆணின் கால் பட்டு உருப் பெறுவதை வெறுத்து கல்லாய், காலத்தை வென்று வாழ விரும்புபவளாக இருக்கிறாள்.
புராண மறுபார்வை ஒரு பக்கம் இருக்க தற்கால வாழ்வையும் புதுப் பார்வைக்கு உள்ளாக்குகின்றன இந்த படைப்புகள். யாழ் நூலக எரிப்பைப் புத்தனின் மரணமாகப் பார்க்கிறது எம். ஏ. நுஹ்மானின் புத்தரின் படு கொலை. (Murder – மொழிபெயர்ப்பு : எஸ். பத்ம நாதன்).
சேரநின் கவிதையோ,
துயிலா இரவுகளில்
`அப்பா ‘ என்று அலறித் துடிக்கும்
சின்ன மழலைக்கு
என்னதான் சொல்வாய் ?
உலவித் திரிந்து நிலவைக் காட்டி
மார்பில் தாங்கி
`அப்பா கடவுளிடம் போனார் ‘
என்று சொல்லதே.
துயரம் தொடர்ந்த வகையைச் சொல்
குருதி படிந்த கதையைச் சொல்
கொடுமைகள் அழியப்
போரிடச் சொல்
என்கிறது. (மொழிபெயர்ப்பு : லஷ்மி ஹொல்ம்ஸ்ட்ராம்).
சிவரமணி,
யுத்த கால இரவொன்றின் நெருக்குதலில்
எங்கள் குழந்தைகள்
திடாரென்று
வளர்ந்தவர்களாகி விடுகிறார்கள்
என்கிறார். (A War-torn Night – மொழிபெயர்ப்பு : செல்வா கனகநாயகம்)
ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று உலகின் பல நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்கள் புதிய சூழலில் தங்கள் அனுபவத்தையும் இலக்கியத்தில் பதிக்கத் தவறவில்லை. எஸ். ராஜசிங்கம் மொழி பெயர்த்துள்ள அ. முத்துலிங்கத்தின் Butterflies சிறுகதையும், வ. ஐ. செ. ஜெயபாலனின் `பிராங்க்ஃபர்ட் நகரத்து இரவு` (A Night in Frankfurt) இரண்டும் வெளி நாட்டில் தமிழன் படும் பாட்டை விவரிக்கின்றன.
36 கவிதைகளும், 12 சிறுகதைகளும் கொண்ட இந்தத் தொகுப்பு, படைப்புகளின் அளவையோ, வெளிவந்த காலத்தின் அடிப்படையிலோ வரிசைப்படுத்தப்படாமல் கருத்துரீதியாக அடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நுண்மையை விளங்கிக் கொள்வது ஒரு சவால் நிறைந்த, தனி முயற்சியாக அமைகிறது.
உதாரணமாக, அகலிகையை இருவேறு கோணங்களில் பார்க்கும் மஹாகவியின் கவிதை முதல் படைப்பாகவும், சிவசேகரத்தின் கவிதை இறுதி படைப்பாகவும் கொண்டு நூல் தொகுக்கப்பட்டுள்ள விதம். இந்த அணுகுமுறையால், ஒவ்வொரு படைப்பையும் தனித்தனியாக விளங்கிக் கொள்வதோடு, ஒப்பிட்டு பார்த்து தலைமுறை வித்தியாசத்தையும், பார்வை வித்தியாசத்தையும், அனுபவ வித்தியாசத்தையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டி இருக்கிறது.
இந்த படைப்புகளின் மொழிபெயர்ப்பு சொல்வதற்கு நிகராகவும், ஏன் அதற்கு மேலாகவுமே, நிறைய உண்மைகளை சொல்கிறது தொகுப்பாசிரியர் செல்வா கனகநாயகத்தின் முன்னுரை. இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, மைல்கற்கள், போக்குகள், பரிமாணங்கள் என்று ஆழமாகவும், அகலமாகவும் விரிகிற இந்த முன்னுரை சில இடங்களில் தமிழ் நாட்டு நிலையுடன் ஒப்பிட்டு சீர்தூக்கும் ஒப்பியல் இலக்கியமாகவும் மாறுகிறது. இது, ஒரு நல்ல ஆராய்ச்சிக் கட்டுரையாக நூலின் உள்ளே தனி இடம் பெற்றிருக்கலாம்.
தொகுப்பாசிரியர் உள்ளிட்ட ஏழு மொழிபெயர்ப்பாளர்களும் பல்கலைக் கழகங்களில் படித்து, படிப்பித்த அனுபவம் வாய்ந்தவர்கள். முக்கியமான பல படைப்புகளை மொழி பெயர்த்துப் பெயர் பெற்றவர்கள். அந்த அனுபவமும் பக்குவமும் இந்த தொகுப்பில் தெளிவாகத் தெரிகிறது. எளிய நடையும். சின்னச் சின்ன வாக்கிய அமைப்பும், பள்ளிக்கூட மாணவர்களும் படித்துப் புரிந்து கொள்ள உதவும் விதத்தில் இருக்கிறது. பல சொற்கள், உறவுமுறைகள், சொற்றொடர்கள், பண்பாட்டு, கலாசார அடையாளங்கள் அப்படியே இடம் பெற்றிருப்பதோடு அவற்றின் விளக்கங்கள் நூலின் இறுதியில் பட்டியல் இடப்பட்டுள்ளது. திருஷ்டிப் பரிகாரம் போல சில சொற்றொடர்கள், தமிழில் உள்ளதைஆங்கிலத்தில் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்திருப்பதாக அமைந்திருப்பது அதிர்ச்சி தருகிறது. ஒரு உதாரணம் : எஸ் பெ ‘ன்னுத்துரையின் `தேர் ‘ (The Chariot) கதையில் ஒரு இடத்தில் வரும் வாசகம் : Have you come from a place where you stand all the time ?
புலம் பெயர் நாடுகளில் புதிய சூழலில், புதுவித அனுபவம் வாய்ந்த பல இளம் படைப்பாளிகள் உருவாகி இருப்பதாகவும், வாழ்க்கை அனுபவத்தை எழுத்தில் வடிக்கும் பெண்கள் அதிகமாகி விட்டார்கள் என்றும் முன்னுரை சொன்னாலும் இந்தத் தொகுப்பில் அவர்களின் குரலைக் காண முடியவில்லை.
ஐந்து தலைமுறை கவிதைகளை அறிமுகப்படுத்தும் அற்புத கட்டுரையாக முன்னுரையில் பாராட்டப்படும் நுஹ்மானின் கட்டுரை, தொகுப்பில் எங்கும் காணோம்.
இருந்தும், இந்தத் தொகுப்பு நூல், ஈழத் தமிழ் இலக்கியத்துடன் பரிச்சயமும், பிணைப்பும் உள்ளவர்களுக்கு ஒரு மீள் பார்வையாகவும், அறிய ஆர்வம் இருந்தும், மொழி தெரியாத சிக்கலில் இருக்கும் வெளி நாட்டினருக்கும், இளைய தமிழ் தலைமுறைக்கும் இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் அருமையை எடுத்துக் காட்டுகிம் அரிய முயற்சியாகவும் அமைந்துள்ளது என்பது உண்மை.
– கல்பனா சோழன்
- உருவமற்ற நான்.
- எங்களின் கதை
- மணிரத்னத்தின் நாயகன் – ஒரு மறுபார்வை
- எனக்குப் பிடித்த கதைகள் -10- பூமணியின் ‘பொறுப்பு ‘ – சிரிப்பும் எரிச்சலும்
- Lutesong and Lament :Tamil Writing from Srilanka புத்தக விமர்சனம் : புதிய புற நானூறு, அக நானூறு
- பார்வை–கொங்கு மண்டல கூத்துக் கலை
- இடியாப்பம்
- சீயம்
- கோழிகளுக்கும் தேவை குடும்பம். அம்மா அப்பா சண்டையிட்டால் குஞ்சுகள் அசிங்கமாய் இருக்கும்
- அமெரிக்காவின் முதல் அணு உலை இயக்கிய என்ரிகோ பெர்மி
- அறிவியல் மேதைகள் – ஆர்கிமிடிஸ் (Archimedes)
- வரம்
- ரமேஷின் மூன்று கவிதைகள்
- நாளை மற்றுமொரு நாளே . . . என்ற நாவலின் ஒரு பகுதி)
- அந்த நாளும் அண்டாதோ ?
- மகிழ்ச்சி என்பது ஒருமை..
- மன்னனாய் என் வாழ்க்கை..
- சின்னப் புறா ஒன்று
- தொடர்ந்துவரும் பாரம்பரியம்: ஆனந்த குமாரஸ்வாமிக்கு ஒரு அஞ்சலி
- ரஸ் கான் – ஒரு கிருஷ்ண பக்தர் சூஃபி
- இந்தியாவில் வறுமையின் முடிவு, நிலைமையும் காரணங்களும்.
- உரிமை கொண்டாடுகிற ஆளுமை
- Carnage in Gujarat
- வாழ்க்கையின் கேள்விகள் ,பதில்கள், பதில்களுக்கு அப்பால்…
- அகதி மண்
- புலம் பெயர்ந்த காட்சிகள்