Last Kilo Bytes

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

கே. ஆர். மணி


1.

உலகநாயகன் அந்த நடிகன். விஜய் டிவியில் பேட்டி வந்தது – பிறந்த நாள் சிறப்பாக. ஒரு கவிஞன் சொன்னதுபோல அவர் சினிமாவின் நவின இலக்கியமுகம். மாறிக்கொண்டேயிருக்கிறது அவரது தேடல். நல்லது. ஆனால் மாறிக்கொண்டேயிருக்கிற அவரது துணைகளின் தேடல் எனக்கு உறுத்தலாயிருக்கிறது. ஏன் ? நம்மால் முடியவில்லையென புகையாயிருக்கலாம்.

பயமாயிருக்கலாம். சென்னை பாசையில், ‘ மச்சி, காண்டுமா..’

இவருக்காக சின்னவயசில் எத்தனை ஸ்டைல்மன்னன் ரசிகர்களிடம் சண்டை போட்டிருப்பேன். அவர் இருபாலருமற்ற நடுப்பாலரல்ல என்றும் முதல் மனைவியோடு சண்டையிட்டபோது அவளால்தான் இவருக்கு பிரச்சனையென்றும், தீடீரென குழந்தைபெற்றுக்கொண்டபோது (!) பாருடா வெண்ணெய். எங்காள் ஆம்பிளைடா என்றும், அந்த மனைவியை வேறுவழியின்றி அவர் திருமணம் செய்து கொண்டபோது அவரின் பெருந்தன்மைக்காகவும் காசுவாங்காத வக்கீலாக வாதிடியிருக்கிறேன்.

எல்லாம், சின்னபிள்ளைத்தனம்தான்.

இந்த குழுச்சண்டை, ஏதாவது கட்சிகளிடம் சரணாகதியடைவதும் நமக்கு இரத்திலேயே ஊறிப்போனதுதான் போல. ரஜினி,கமல் அப்போது. இப்போது விஜய், அஜித். அப்பா காலத்தில் எம்ஜியார், சிவாஜி. இருந்தால் சீ என கோபப்பட்டு சொல்லியிருப்பார். பாலச்சந்தரா, ஸிருதரா – கேள்ரா என்று. நமது ரசிகத்தன்மை வளர்ந்துகொண்டே வந்தாலும் முதல் காதல் போல, நம் மனதின் முதல் கதாநாயகன் மிகப்பெரிய நிழலாய் கூடவருவதாய் படுகிறது. அவனின் தெறிப்புகள் பட்ட கண்ணாடியிலிருந்து எனது ரசனையின் அளவுகோல்கள் கட்டப்படுவதாய் நினைக்கிறேன். ஆகவே அவன் என் ரசனையின் தவிர்க்கமுடியாத DNA துகளாய் மாறிவிடுகிறான்.

அதனாலென்ன ?

அங்குதான் பிரச்சனையே. அவனது சொந்த வாழ்க்கையிலும் எனது மூக்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ நுழைய முயற்சிக்கிறது. அவனது மற்ற ஆளுமைகளிலின் நிழல்களும் என் மீது படர்வதை கடினமாகவே தடுக்க முடிகிறது. எனக்கும் உனக்குமான தொடர்பு வெறும் செல்லுலாய்டில் மட்டும்தான் என அவன் எத்தனை முறை கூறினாலும், கதறினாலும் அவன் நடிப்புபோல அவனது ஆளுமையும் தனிச்சொத்தல்ல என்று நான் நினைப்பது தவறா.

ஊசலாடும் கேள்விகளில் பதிலும் ஆடிக்கொண்டேதானிருக்கும்போல.

“எனக்கும் அவளுக்குமான உறவு, ஆங்கில எழுத்தின் “A” போல. இருவரும் ஒருவருக்கொருவர் தூண்போல தாங்கி கொண்டிருக்கிறோம் ” தூணை பூமி தாங்கட்டுமே. இன்னொரு தூண் எதற்கு தாங்கவேண்டும். ? பூமியை மாற்றமுடியாது. தூணை அடிக்கடி மாற்றிக்கொள்ளலாம் அதற்காகவா. ரொம்ப நாள் “I” யாக நிற்கமுடியாது என்கிறாரா.. Aயில் போரடித்தால் புனரபி I புனரபி A. ? இது எப்படியிருக்கு ? ஹா..ஹா… ( 16 வயதினிலே ரஜினி..?)

” அந்த மாதிரி கிரியேட்டிவ் ஆளுக்கெல்லாம். இப்படியில்லாட்டி முடியாதுடா..” என் தம்பி.

என் இருபதுகளில் நானும் அப்படித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன்.விசிலடிச்சான் குஞ்சுகளை நற்பணி மன்றமாக்கியதற்கு ஒரு சலாம். அதோடு வீட்டுக் குப்பையும் பெருக்கினாலென்ன.. அதுவா குப்பை. அது ஒரு சுகந்தம் – என்று வாதிட்டால் ? குடித்துவிட்டு, பெண்களோடு கூத்தடித்ததால்தான் அந்த கவிஞரின் எழுத்துகளில்,. பாட்டு வரிகளில் உயிர் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்கிற எண்ண பிம்பத்தில் இந்த சமுதாயத்தின் சாதரண மனிதன் அறிந்துகொள்வது, இதயத்தில் போட்டுக்கொள்வது எது ?

பெரிய புரட்சிகதைகளை ஆளுமைகளோடு எழுதிய புகைமண்டலங்களிலிருந்து நமக்கு கிடைக்கும் பாடப்பதிவுகள் எவை ? இப்படித்தான் ஒரு எழுத்தாளன் வாழவேண்டும் என்கிற பிம்பத்தை அது நமக்கு கொடுத்துவிட்டு போனதாக என் எழுத்தாள நண்பர் சொன்னார். அவர்கள் இதையெல்லாம் வேண்டுமென்று வெளியூலகத்திற்காக செய்யவில்லையென்று நம்பினாலும், நம்மில் எத்தனை பேர், அன்னப்பறவைகள் ? கதையை மட்டும் படித்து அல்லது எழுதி விட்டு கசடை கழித்துவிட. நமது மூளையின் கழிப்புசக்தி ரொம்பகுறைவு.

எந்த கொம்பனாயிருந்தாலும் தனிமனித அறம்சார்ந்த ஒழுக்கம் முக்கியமானதல்லவா.. அதுவும் சமுதாய வெளிச்சம் அதீதமான இடத்திலிருக்கும் கலைஞர்கள் சாதாரண மனிதனுக்கு ஆதர்ஸமானவர்களின் பொறுப்பு இன்னும் அதிகமானதில்லையா.. சின்ன புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலெக்ட்ரான்கள் சேர்ந்தத்துதான் பிரபஞ்சமென்கிறது அறிவியல் (!). இத்தகைய சின்ன மெல்லிய கண்ணுக்குப்புலப்படாத அறம்சார்ந்த ஒழுக்கம்தானே விழுமியங்களின் வித்து..

அ) ஒரு வாசகனின்/ரசிகனின் எல்லை எது ? எந்த அளவிற்கு அவன் ஆளுமைகள் கலப்படமில்லாமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் ?

ஆ) கலைஞன் அவனது (தவறான) ஆளுமையால் (யாருக்கு) ஏற்படுத்துகிற பாதிப்புகளுக்கு பொறுப்பில்லையா..?

இ) எவை எவைகளுக்கு எந்தெந்த ஆளுமைகள் முன்மாதிரியாக கொள்ளப்படவேண்டும் ?

ஈ) ஒரு முதிர்ந்த ரசிகனாய், வாசகனாய் இருப்பது எப்படியென யார் சொல்லிக்கொடுப்பது ? அது சொல்லித்தெரிய முடியாத கலையா.? பட்டுத்தெரிந்து கொள்ளவேண்டிய வேதாந்தமாயென்ன ?

Fine it is okay. அதெல்லாம் சரி. அடுத்தபடத்திற்காக காத்திருக்கிறேன் சார்.

எத்தனை டாலர்னாலும் பாத்திருவாம்லா.. சிவாஜியாம்.. சிவாஜி..


Last kilo bytes – 2

“தமிழில் பேசுவதென்றால் தமிழில் மட்டும் பேசுங்கள். ஆங்கலத்தில் பேசுவதென்றால் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுங்கள். தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசக்கூடிய உரிமையை உங்களுக்கு யாரும் கொடுக்கவில்லை. உங்களுக்கு உரிமையில்லை..”

விஜய் டிவியின் [ஒம்பது ரூபாய் நோட்டு] ‘அறிந்தும் அறியாததுமான’ பேட்டியில் தங்கர்பச்சன்.

சிலபேருக்கு தொடர்ச்சியாய் நாக்கில சார்ட்டன்(சனி) உக்காந்திருக்கும்போல. தனது தமிழ் மூச்சை அதிகமாய் அடுத்தவர் மீது விட முரட்டலோடு முயற்சிக்கிறார். மொழி,கடவுள் எல்லாமே தனிமனிதனின் சாய்ஸ்தான் என்கிற நிலைமையிலிருக்கிற நுகர்வோர் சமுதாயத்திற்கு இது அதீத அட்வைஸ். கலக்காமல் பேசும்போது அதன் சுவை அதிகம், சுவைத்துபாருங்கள் என்று மார்க்கெட் செய்வதே சாலச்சிறந்தது. தனித்தமிழ் வெறும் காணமல்போன கலகக்குரலாகவே மாறிவிட்டது துரதிருஸ்டம்தானென்றாலும் இப்படிப்பட்ட பேச்சுகள் முயற்சி செய்பவர்களை இன்னும் தூர ஓட்டும்.

“ஓம்பது” சரி, ‘ரூபா நோட்டு’ – ?? எனக்கு தமிழ் கொஞ்சம் வீக்கு சார்.

அதைவிட ஜோக்கு. அவரது பேட்டி முடிந்தவுடன் தொகுப்பாளினி (கம்பியர்ங்க.. ஆஹா.. தமிழ் உரிமை வேலை செய்யுது) சொன்னது காதில் தேன் வந்து பாய்ந்தது. ” ஐ ஹோப் வி ஆல் என்ஞாய்ட் தங்கர்பச்சன் சாரோட இண்டர்வியூவை.. தாட் வாஸ் வெரி இன்பர்மேட்டிவ்.. கீப் ஸ்மைலிங்.. வி வில் சி யூ நெக்ஸ்ட் வீக் ” ( கிட்டத்தட்ட இதே மாதிரியான வார்த்தைகள் தான்)

அப்படித்தாக்கு..

அது சரி.. அவர் சொன்னதும் சரிதானோ ? அவர் சொன்ன ஒரு அற்புதமான தகவல்., தனது படைப்புகளெல்லாம் நாவலோ, சிறுகதையோ, கவிதையோ அதிலிருந்து உருவாக்கப்பட்டதுதான் என்பது. தலைகீழ் விகிதங்கள் அப்படியே எடுக்கப்பட்டிருந்தால் அவ்வளவு நன்றாய் வந்திருக்காது என்பது என் அபிப்ராயம். அதற்கான பிரயத்தனத்திற்காக நமது பாராட்டுகள். அவரது படங்கள் நன்றாக வந்திருக்கும்போது அவற்றை எப்போதுமே பாராட்டத்தவறுவதேயில்லை மக்கள். அவர்களுக்கு தேவை ஒரு நல்ல final product., அவ்வளவுதான்.

“நல்ல வில்லனுக்கு அவார்டு கொடுக்கறாங்க.. இலக்கியத்திலிருந்து எடுக்கப்பட்ட நல்ல சினிமாவுக்குன்னு பரிசு கொடுக்கணும். அப்படி குடுத்தா எல்லா வருசமும் அது எனக்குத்தான் கொடுக்கணும்.. ”

சிலபேரால் தான் தனக்கென்றான Niche market/ பரிசுகளை உருவாக்கிக்கொள்ளமுடியும்.

தங்கர்பச்சன் கலகக்காரர்போலயிருக்கிற ஸ்மார்ட்டான சினிமா விவசாயி.


Last kilo bytes – 3

போன செய்திமாதிரியே இதுவும் ஒரு மாரல் போலிசிங் வேலைதான். ஆனால் அமைதியாய் ஆர்ப்பாட்டமில்லாது வேரினில் விழும் வெந்நீரை துடைக்கும் வேலை.

கால் செண்டர்களில் நடக்கிற ஒழுக்ககேடுகள் பற்றி எவ்வளவு வந்தாலும் (படிக்க) சுவாரசியமாகத்தானிருக்கிறது. நான் எழுத கூச்சப்பட்ட மிக அருகிலிருந்து பார்த்த, வளர்ந்துவரும் ஒரு செடி, f..* buddy என்கிறதான ஒன்று. மிகத்தெளிவாய் ஒரு பெண் ஆணிடம் எந்த long term எதிர்பார்ப்புமின்றி உடனடித்தேவைக்கான உடல் எதிர்பார்ப்பு மட்டுமேகொண்ட உறவு.

Times of India அண்மையில் இதைப்பற்றி நீண்ட ஆய்வுக்கட்டுரை ஒன்று வெளியிட்டிருந்தது. அதுபோக இந்தத்துறையின் அருகிலே தொழில்நுட்பம் சேர்ந்த சேவை எனக்கு என்பதாலும், அதன் HR -மனிதவள மேலாண்மை துறைத்தலைவர்களிடம் பழக வாய்ப்பிருப்பதாலும் இதன் தீவிரங்கள் உள்ளிருந்து பார்க்க வாய்ப்பு. பசி போல உடல் உறவுகளும் ஒன்றுதான் இதற்கு அதீத முக்கியத்துவம் தேவையில்லை என்கிறதான கருத்து மெல்ல நிறுவனப்படுத்தப்படுகிறது. என் FBக்கு வேலை போய்விட்டது ஏதாவது ப்ரொகஜக்ட் இருக்குமா என்று தன் துறைத்தலைவரிடம் அவளது ப்யோடேட்டாவை அனுப்பி வைக்குமளவுக்கு இது ஒப்பனாகிவிட்டது. இதென்னவோ பன்னாட்டு கால் செண்டர்களில்தானிருக்கும், அதுவும் அங்கென்றும் இங்கென்றுமாகத்தானிருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்த என் எண்ணத்தில் மண். பெரியதாகயில்லாவிட்டாலும் கருத்தளவில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு கொஞ்சமாய் அந்த திசைநோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது விழுமியங்கள்.

ஒரு 25 வருடங்கள் முன்பு, ஒரு நிறுவனம் விட்டு மற்ற நிறுவனம் தாண்டுவதென்பது, ஒரு நல்ல சிக்னலாக பட்டதில்லை. அவர்களை முதுகுக்குபின்னோ, முன்னோ rolling stone என்றழைக்க தவறுவதேயில்லை. இப்போது அப்படியில்லை. ஒரு நிறுவனத்தில் 5 வருடங்களுக்கு மேல் பணியாற்றும் எவரும் ஒருவிதமான அமைதியின்மை அநுபவிக்கதொடங்குகிறார்கள். இப்போது நிறுவனம் மாறிக்கொண்டேயிருப்பது ஒன்றே, தங்களது தனி மனித வளர்ச்சியின் அளவுகோலாக பார்க்கத்தொடங்குகிற விழுமியங்கள்.

மாறும் விழுமியங்கள். நல்லது கெட்டது பார்க்க துணியாத, முடியாத வேகம்.

ஆரம்பித்த விசயத்திற்கே வருகிறேன். அது என்ன – அமைதியாய்

ஆர்ப்பாட்டமில்லாது வேரினில் விழும் வெந்நீரை துடைக்கும் வேலை ?

ஒரு வலதுசாரி கலாச்சார இயக்கம், மெதுவாய், அமைதியாய் பெங்களூரில் கால் செண்டர் மட்டும் ஐடி இளைஞர்களிடம் தேவையான நல்ல விழுமியங்களை பரப்ப, சின்ன குழுவாய் ஐடிமிலன் என்ற பெயரில் தனது வேலையை கடந்த ஐந்தாண்டுகளாக செய்து கொண்டுவருகிறது. உடல் பசி தாண்டி, தேசத்தின் சில விழுமியங்களை, அதன் தலைமுறை தாண்டி செல்லவேண்டிய அவசியத்தை தேசத்தை அச்சுறுத்தும் தீவிரவாதத்தை மற்றும் பல விசயங்களைபற்றி, தோளில் கை போட்டு தோழமையோடு கருத்துபரிமாற்றம் நடத்துவதாக கேள்விப்பட்டேன்.

ஹ¥ம். நடக்கட்டும் நடக்கட்டும்.


Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி