கவிஞர் கே. ஆர் திருத்துவராஜாவுக்கு பாராட்டு

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

பதிவு – சு. குணேஸ்வரன்


இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட மூத்த படைப்பாளியாகிய கே. ஆர் டேவிட் அவர்களின் சகோதரனாகிய கே. ஆர் திருத்துவராஜாவும் நன்கு அறியப்பட்ட கவிஞர். இவர் தேசிய உயர்கல்வி அமைச்சினால் 2009 இல் நடாத்தப்பட்ட ‘தேசத்தின் மரபுரிமை – சிறுவர்களுக்கானது’ என்ற தலைப்பின் கட்டுரைப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடம் பெற்றார். இதனை அவரில் பற்றும் பாசமும் கொண்ட இலக்கியக் குடும்பத்தினர் ஒரு விழாவாக எடுத்துக் கெளரவித்தனர்.
மரபுக்கவிதையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட திருத்துவராஜா சமூக மேம்பாடு குறித்த கவிதைகளுடன் 50 ற்கு மேற்பட்ட வாழ்த்துப்பாக்களையும் நூற்றுக்கு மேற்பட்ட சரம கவிகளையும் இயற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறுவர்பாடல்களையும் ஆலயம்சார் பாடல்களையும் இயற்றியுள்ளார். இவரின் சில பாடல்கள் ஒலிப்பேழையாகவும் உள்ளன. பிரதேச ரீதியாக நடத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கான பிரதேச கீதத்தை இயற்றியமை இவரின் சிறப்புக்களில் ஒன்றாக விளங்குகின்றது. சமூக மேம்பாடு குறித்த பல செயற்பாடுகளில் தொடர்ந்து பங்காற்றி வருபவர்.
இவ்வாறான சிறப்புக்களைப் பெற்ற கே. ஆர் திருத்துவராஜாவைப் பாராட்டிக் கெளரவிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக இந்நிகழ்வை ஒழுங்குசெய்தவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இந்நிகழ்வு 10.03.2010 வெள்ளிக்கிழமை மட்டுவில் அ.த.க. பாடசாலை மண்டபத்தில் அப்பாடசாலையின் அதிபர் திரு த. கிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் வரவேற்புரையினை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பி. தளிர்ராஜா நிகழ்த்தினார். ஆசியுரையை சாவகச்சேரி பங்குத்தந்தை வணபிதா தயாபரன் அவர்கள் நிகழ்த்தினார்.
வாழ்த்துரைகளை மிருசுவில் பங்குத்தந்தை வணபிதா ம. பத்திநாதர் அவர்களும், ஓய்வுபெற்ற அதிபர் கி. கணேசன், ஓய்வுநிலை ப.அ.ச. உத்தியோகத்தர் திருமதி செல்லக்கிளி சின்னத்தம்பி ஆகியோர் நிகழ்த்தினர். சுதந்திரபுரம் ஸ்கந்தவரோதய மகாவித்தியாலய அதிபர் மு. பாலசுப்பிரமணியத்தின் வாழ்த்துச் செய்தியை திருமதி கு. குலம் வாசித்தார்.
நிகழ்வில் விழாநாயகனைக் கெளவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. விழாவுக்கு வந்திருந்த உறவுகளும் இலக்கிய நண்பர்களும் பொன்னாடைபோர்த்தி, மாலையிட்டு, நினைவுப் பொருட்கள் வழங்கி தங்கள் அன்பைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து பாராட்டுரைகள் இடம்பெற்றன. பாராட்டுரைகளை சாவகச்சேரி பிரதேசசபைச் செயலர் வே. சிவராஜலிங்கம், மட்டுவில் கிராம அலுவலர் க. வாமதேவன், ஓய்வுபெற்ற அதிபர் செ. சதானந்தன், மட்டுவில் மோகனதாஸ் ச.ச.நிலையத் தலைவர் சி. றதீஷன் ஆகியோர் நிகழ்த்தினர். விழாவில் பாராட்டுக் கவிதைகளை திரு சந்தியாம்பிள்ளை, திருமதி ரூபா குறூஸ் (டென்மார்க்), செல்வன் வசந்தன் ஆகியோர் நிகழ்த்தினர். நிகழ்வில் நன்றியுரையை விழா ஏற்பாட்டாளராகிய திருமதி புஸ்பராணி லியோன் அவர்கள் நிகழ்த்தினார்.
மிக எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்ற நிகழ்வில் கவிஞர் கே.ஆர் திருத்துவராஜாவின் கவிதைகள் விரைவில் தொகுப்பு வடிவமாக்கப்படவேண்டும் என்ற கருத்து பலராலும் முன்வைக்கப்பட்டது. மற்றவர்களின் உயர்வினைக் கண்டு மனம் மகிழ்ந்து நேரில் சென்று பாராட்டும் அவரின் உயர்ந்த பண்பினையும் மிக எளிமையாகவும் இயல்பாகவும் எந்தப் பூச்சுக்களுமின்றி சமூகத்துடன் பழகும் திருத்துவராஜாவின் இயல்பினையும் பேச்சாளர்கள் எடுத்துக் கூறினர்.

Series Navigation

பதிவு:- சு. குணேஸ்வரன்

பதிவு:- சு. குணேஸ்வரன்