இந்தக் கடிதத்தை நாற்பத்திரண்டு நாட்களாக எழுத எண்ணியிருந்தேன்.

This entry is part [part not set] of 35 in the series 20080227_Issue

வா.மணிகண்டன்


இந்தக் கடிதத்தை நாற்பத்திரண்டு நாட்களாக எழுத எண்ணியிருந்தேன்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பாக இந்தியன் இன்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வு எழுதுவதற்கென்று சென்னை செல்லும் போது விகடன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு “10,ஜஸ்டிஸ் சுந்தரம் அய்யங்கார் தெரு” என்ற முகவரியை பெற்றுக் கொண்டேன்.

முதல் தாள் சரியாக எழுதவில்லை என்றதும் அடுத்த தேர்வை தவிர்த்துவிட்டு சுஜாதாவை பார்க்கச் செல்வது என்று முடிவு செய்து கொண்டேன். குளித்து முடித்ததும் காலையில் எட்டரை மணிக்கு மைலாப்பூர் சென்ற போது, காலை பதினோரு மணியளவில்தான் எழுவார் என்றார்கள். அதுவரையிலும் மைலாப்பூர் பூங்காவில் காத்திருந்து, பத்தே முக்கால் மணிக்கு திரும்ப வந்த போது வெளியில் சென்றுவிட்டதாகவும், இரண்டு மணியளவில் வருவார் என்றார்கள். பிறகு மதியம் உறங்குவதாகவும், மாலை ஆறு மணிக்கு பெசன்ட் நகர் பீச்சுக்குச் சென்றிருப்பதாகவும் திரும்ப திரும்ப காரணங்களை வாட்ச்மேன் சொல்வதுகாக‌ நான் அவரது வீட்டிற்கும்,பூங்காவிற்கும் நடக்கத் துவங்கியிருந்தேன்.

வாக்கிங் சென்றிருப்பதாகச் சொன்னவுடன், இனிமேல் பூங்காவிற்குச் செல்வது சரியல்ல என்று வீட்டு வாசலில் காத்திருக்கத் துவங்கியிருந்தேன். அப்பொழுது பொமேரேனியன் நாயுடன் அவரது மனைவி என்னைப் பற்றி விசாரிக்கத் துவங்கினார்.

மதிய உணவில்லாத களைப்பு முகத்தில் வரத் துவங்கியிருந்தது.இரவு ஏழு மணிக்கு சுஜாதா வ‌ந்து சேர்ந்த‌ போது, வாட்ச்மேன் என் மீது க‌ருணை கொண்டு உள்ளே அனுப்பினார்.

அவ‌ர் சோபாவில் அம‌ர்ந்திருக்க‌ நான் என் க‌விதைக் க‌வ‌ருக்குள் கை நுழைத்துக் கொண்டிருந்தேன்.

“சொல்லுப்பா”

“இந்த‌ப்பைய‌ன் ரொம்ப‌ நேர‌மா உங்க‌ளுக்கு வெயிட் ப‌ண்ணிட்டு இருக்கான்”

“சார்..நான் கோபியிலிருந்து வ‌ர்றேன். கொஞ்ச‌ம் க‌விதை எழுதியிருக்கேன். நீங்க‌ பார்க்க‌…”

“நிறைய‌ க‌விதை புஸ்த‌க‌ங்க‌ள் வ‌ருது. என்னால‌ ப‌டிக்க‌ முடிய‌ற‌தில்ல‌. நீங்க‌ ப‌த்திரிகைக‌ளுக்கு அனுப்புங்க‌. ந‌ல்லா இருந்தா என் க‌ண்ணுல‌ ப‌டும்”

“தேங்க்யூ சார்”.

நிராகரிப்பின் வேதனையுடன் வெளியேறி வந்தேன்.

வெறும் இர‌ண்டு நிமிட‌ பேச்சுக்காக‌ ஒரு நாள் காத்திருக்க‌ வேண்டுமா என்று நினைத்தால் முட்டாள்த்த‌ன‌மான‌ காரிய‌மாக‌த்தான் தோன்றும். ஆனால் சுஜாதா அத‌ற்கு ச‌ரியான‌ ஆளுமைதான். என் த‌லைமுறையிலும், முந்தைய‌ இர‌ண்டு த‌லைமுறைக‌ளிலும் எந்த‌ குறிப்பிட‌த் த‌குந்த‌ எழுத்தாள‌ர்க‌ளின் ஒரு க‌தையிலாவ‌து சுஜாதா வாடையிருக்கும்.

இல‌க்கிய‌த்தின் நுணுக்க‌‌ங்க‌ளை சாமானிய‌ வாச‌க‌னுக்கு எடுத்துச் சென்ற‌ சுஜாதா எந்த‌ ‘இச‌ம்’ அல்ல‌து ‘இய‌’ங்க‌ளிலும் த‌ன் எழுத்தைச் சிக்க‌ வைத்துக் கொண்ட‌தில்லை.

குறுந்தொகை,புற‌நானூறின் சிக்க‌ல்க‌ளையும், வானிய‌ல் த‌த்துவ‌ங்க‌ளையும், நேனோ டெக்னால‌ஜியின் கூறுக‌ளையும்,ஆன்மிகத்தின் பன்முகங்களையும் எந்த‌த் த‌டுமாற்ற‌முமில்லாம‌ல் த‌மிழில் சொல்ல‌க் கூடிய‌ எழுத்தாள‌ர் அவ‌ர் ம‌ட்டுமாக‌த்தானிருக்க‌ இய‌லும். சுவார‌ஸிய‌த்திற்கு எந்த‌க் குறையுமில்லாம‌ல்.

அடுத்த‌ இர‌ண்டு ஆண்டுக‌ளுக்கு சுஜாதா என்னோடு சரியாக பேசவில்லை என்ற‌ கார‌ணத்திற்காக‌ அவ‌ரின் வெகுஜ‌ன‌ ப‌த்திரிக்கைக் க‌ட்டுரைக‌ள் மீது கூட‌ என் வெறுப்பினைக் காட்டி வ‌ந்தேன். ‘க‌ணையாழியின் க‌டைசிப் ப‌க்க‌ங்க‌ள்’ க‌ட்டுரைக‌ளை ய‌தேச்சையாக‌ இர‌ண்டாண்டுக‌ளுக்கு முன்ன‌தாக‌ ப‌டிக்கும் போது, என‌க்கும் அவ‌ர் எழுத்துக்கும் இடையிலான‌ திரையால் என்னைத் த‌விர‌ வேறு யாருக்கும் இழ‌ப்பில்லை என‌ உணர‌த்துவ‌ங்கினேன்.

புத்த‌க‌க் க‌ண்காட்சிக‌ளில் உயிர்மை அர‌ங்க‌த்தில் நின்று கொண்டிருக்கும் போது, அவ‌ரின் வாச‌க‌ர்க‌ள் ‘சுஜாதா புக் புதுசா என்ன‌ வ‌ந்திருக்கு’ என்று கேட்கும் போதெல்லாம், வேறொரு எழுத்தாள‌ரின் புத்த‌க‌த்தை நான் ப‌ரிந்துரைத்திருக்கிறேன். அப்பொழுது அந்த‌ வாச‌க‌ரின் அல‌ட்சிய‌மான‌ பார்வையும், என்னை த‌விர்த்துவிட்டு அவ‌ரின் புத்த‌க‌ங்க‌ளை எடுத்துப் பார்க்கும் போதும் அவ‌மான‌த்தில் குறுகியிருக்கிறேன்.

எழுத்துக்க‌ளையும் தாண்டி ப‌டைப்பாள‌ன் என்ற‌ ஆளுமை மீது அவ‌னது வாச‌க‌ர்க‌ள் கொண்டிருக்கும் ந‌ம்பிக்கையை சுஜாதாவின் வாச‌க‌ர்க‌ளிட‌த்தில்தான் பார்த்திருக்கிறேன்.

எழுத்தின் சுவாரஸியம் மட்டுமே ஒரு எழுத்தை வாசகர்கள் கொண்டாடுவதற்கான காரணமாக அமைவதில்லை. படைப்பின் ஆழமும், அதன் எளிமையும் முக்கியம். சிறுகதை, கட்டுரை, நாவல், நாடகங்கள் என இலக்கியத்தின் பல்வேறு வகைகளையும் வெற்றிகரமாக தொட்டிருக்கிறார். சிறுகதை,கட்டுரை இலக்கியங்களின் உச்சபட்ச சாத்தியங்களையும், கட்டற்ற தன் எழுத்தின் போக்கில் தொட்டு வந்த எழுத்தாள ஆளுமை சுஜாதா.

அவ‌ருக்கு ஏதாவ‌து மின்ன‌ஞ்ச‌ல் அனுப்புவ‌தும் அத‌ற்கு எந்த‌ ப‌திலும் வராத‌தும் என‌க்கு சாதார‌ண‌மான‌ விஷ‌ய‌ங்க‌ள். ஒரு வேளை இந்த‌ மின்னஞ்ச‌ல் முக‌வ‌ரியை அவ‌ர் உப‌யோக‌ப்ப‌டுத்தாம‌ல் இருக்க‌லாம் என்ற‌ எண்ண‌த்தில் தொட‌ர்ச்சியாக‌ எந்த‌ ‘Forward’ மின்ன‌ஞ்ச‌லையும் அவ‌ருக்கு அனுப்ப‌த் துவ‌ங்கியிருந்தேன்.

‘Please remove my ID from your group mailing list -ws” என்று என‌க்கு ப‌தில் வ‌ந்த‌து. அத‌ற்குப் பிற‌காக‌ அவ‌ருக்கு மின்ன‌ஞ்ச‌ல் அனுப்புவ‌தை நிறுத்திவிட்டேன்.

ம‌னுஷ்ய‌ புத்திர‌ன் என் க‌விதைத் தொகுப்பை சுஜாதாவை வைத்து வெளியிட‌ச் செய்ய‌லாம் என்ற‌ போது மிகுந்த‌ ச‌ந்தோஷ‌ம‌டைந்திருந்தேன்.

அவ‌ர் நிக‌ழ்ச்சி முடிந்து செல்லும் போது “சார்,க‌விதைக‌ளை ப‌டிச்சுப் பாருங்க‌” என்றேன். “ம்ம்..ஒரு காப்பி எடுத்துட்டு போறேன்ப்பா..ப‌டிக்கிறேன்” என்றார். இந்த‌ முறை என‌க்கும் அவ‌ருக்குமான‌ உரையாட‌ல் அரை நிமிட‌த்தில் முடிந்திருந்த‌து. ஆனால் என‌க்கு ஒரு திருப்தியிருந்த‌து.

அனேக‌மாக‌ என‌து புத்த‌கம்தான் சுஜாதா வெளியிட்ட‌ க‌டைசி புத்த‌க‌மாக‌ இருக்கும் என்னும் போது மிகுந்த‌ துக்க‌மாக‌ இருக்கிற‌து. க‌விதை வெளியீட்டிற்காக‌ ந‌ன்றி தெரிவித்தும், என‌து க‌விதைக‌ளை அவ‌ர் ப‌டித்தாரா என்ப‌து குறித்தும் ஒரு மின்னஞ்ச‌ல் அனுப்ப‌ நினைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது என் க‌விதை குறித்து எதுவும் கேட்காம‌ல் வெறும் ந‌ன்றி ம‌ட்டும் தெரிவித்து ஒரு மின்னஞ்ச‌ல் அனுப்புகிறேன். இதுவ‌ரை ந‌ன்றி தெரிவிக்காத‌ குற்ற‌வுண‌ர்வில் சிதைந்த‌வ‌னாக‌.

வா.மணிகண்டன்.

Series Navigation

வா.மணிகண்டன்

வா.மணிகண்டன்