“பழந்தமிழ்ப் பாக்கள்- மரபுவழிப் படித்தலும் பாடுதலும்” – சில எண்ணங்கள்

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

கோ.ந. முத்துக்குமாரசுவாமி


“பழந்தமிழ்ப் பாக்கள்- மரபுவழிப் படித்தலும் பாடுதலும்”
(கோ.ந.முத்துக்குமாரசுவாமி)

செம்மொழித் தமிழ் உயராய்வு மையம், மைசூர், வெளியிட்ட , “பழந்தமிழ்ப் பாக்கள்- மரபுவழிப் படித்தலும் பாடுதலும்” குறுந்தகடு கேட்டேன். அது குறித்த சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

வழங்கியோர் அனைவரும் இசை வல்லுநர்கள். எனவே ,இப்பழந்தமிழ்ப் பாடல்களை இந்தோளம், சங்கராபரணம், மோகனம் என இராகங்களைக் கூட்டியே ‘இசைத்”துள்ளனர். குறுந்தகட்டில் சுட்டியுள்ள பாடல்கள் அனைத்தும் ஆசிரியப்பாவால் அமைந்த இயற்பாக்களே. தொல்காப்பியம் நூற்பா யாப்பே. நூற்பா யாப்பென்பது அடிவரையற்ற ஆசிரியம்மே. (தொல்.செய்யுளியல் 165)

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய நூல்கள் அனைத்தும் ஆசிரியப்பாவால் அமைந்தனவே. அவற்றை இசைக்குபோது அனைவரும் ஒரே வகையாகத்தானே இசைக்க வேண்டும்? ஆனால், பாடியவர் அனைவரும் வேறு வேறு வகையாக இசைத்துள்ளனரே! இவர்கள் இசை, யாப்புக்கு உரிய ஓசையா? அல்லது யாப்பைப் பொருட்படுத்தாது இயற்பாவுக்கு இவர்கள் கூட்டிக் கொண்ட இசையா?

தொல்காப்பியம் , அகவல் அல்லது ஆசிரியப்பாவுக்கு உரிய ஓசையாக அகவலோசையை விதிக்கின்றது. அகவலோசை எப்படியிருக்கும் என்பதை உரையாசிரியர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.

“அகவலென்பது ஆசிரியம்மே. அகவிக் கூறுதலான் அகவலெனக் கூறப்பட்டது. … …
அதாவது வழக்கினுள்ளார் அழைத்தலென்றும் சொல்லுப. ( சாமியாடிகள் சாமியழைக்கும் பாடல்களைப் போல). அவை, தச்சுவினை மாக்கள்கண்ணும், களம்பாடும் வினைஞர்கண்ணும், கட்டுங்கழங்கும் உரைப்பார்கண்ணும், தம்மில் உறழ்ந்துரைப்பார்கண்ணும் பூசலிசைப்பார்கண்ணுங் கேட்கப்படும். கழங்கிட்டுரைப்பார் அங்ஙனமே வழக்கினுள்ளதாய்க் கூறும் ஓசை ஆசிரியப்பா வெனப்படு மென்றவாறு”
குறி கூறும் பெண்டிரைச் சங்க இலக்கியம் அகவன் மகளிர் என்று கூறும். அவர்கள் குறிசொல்லிப் பாடும் பாட்டின் ஓசையே அகவலோசை. ஆசிரியப்பா இவ்வகலோசையில்தான் இசைக்கப் பெறுதல் வேண்டும்.

மேலும் பாவோசை என்றால் என்ன? நம் முன்னையோர் கூறிய விளக்கியுள்ளனர். .ஒருவன் மிகத் தூரத்தில் இருந்துகொண்டு, எழுத்துஞ் சொல்லும் இன்னதென்று புலப்படாமல் பாடினாலும், அவன் சொல்லுகின்ற செய்யுள் இன்னதென்று வேறுபடுத்து அடையாளம் காணுவதற்கு ஏதுவாகப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை’ அகவற்பாடலை இசைப்போர் இதனையும் கருத்திலிருத்துதல் வேண்டும்.

இக்குறுவட்டை வெளியிட்டோர் மூலபாடத்திற்கு மர்ரே பதிப்பினை அடிப்படையாகக் கொண்டுள்ளனர். மர்ரே பதிப்பு தொல்காப்பியம் செய்யுளியல் இலக்கணத்திற்கு முரண்படச் சொற்களைச் சந்திபிரித்தும் குற்றியலுகரங்களை விரித்தும் அமைந்துள்ளது.
இவ்வாறு விரித்தால் செய்யுளோசை சிதையும். அகவலோசை வராது..

தொல்காப்பியர் எழுத்தெண்ணிச் சீர் வகுக்கும் இலக்கணத்தை விதித்தார்.; ஒற்றும் ஆய்தமும் குற்றுகரமும் எழுத்தாக எண்ணப்படா என்றார். “உயிரி லெழுத்தும் எண்ணப் படாஅ, உயிர்த்திற மியக்கம் இன்மை யான” (தொல்காப்பியம் செய்யுளியல்44) என்னும் விதியின்படி, ஒற்றும் ஆய்தமும் குற்றியலுகரமும் ‘நாப்புடைபெயரும் அளவுக்கு ஒலித்தலும் சார்பெழுத்தாகச் சொல்லினைச் சார்ந்தொலித்தலும் உடைய வென்றாலும், அவ்வாறு ” உயிர்க்குந்திறம் ஈண்டுச் செய்யுட்பாற் படுங்கால் உபகாரப்பட இயங்கு மாறிலவாகலின் எண்ணப்படா” எனவே, செய்யுளில் சந்தி பிரித்தலும் குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆகியவற்றை எழுத்தாக எண்ணிப் பிரித்து எழுதுதலும் ஒலித்தலும் தொல்காப்பிய விதிகளின்படி பிழை.

தொல்காப்பியம் செய்யுளியல் விதிகளின்படி அமைந்த செய்யுள்களை அவ்விதிகளுக்கு மாறான் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு, அவர் கூறிய இயற்பாவோசைக்கு வேறாக இசைப்பாவாக இக்குறுந்தகடு அமைந்துள்ளது. சங்கப் பாடல்களை இவ்வாறு இசையமைத்துப் பாடலாம் என்பது இவ்விசை வல்லுநர்களின் கருத்துப் போலும். ஆனால் அகவலோசையை அறிந்து கொள்ளும் ஆர்வமுடையவர்களுக்கு இதனால் பயனில்லை.

சந்தி பிரித்துப் படிப்பதனால் செய்யுளோசை கெடுவதுமன்றிப் பொருளும் பிழைபடும். பேரா மா/ வயித்தியலிங்கனார் திருமுருகாற்றுப்படையைப் பாடியுள்ளார்.”பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு” என்னும் அடியை, “ பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆங்கு” எனப்பாடியுள்ளார். `கடற்கண்டாங்கு` என்பது ஏழாம் வேற்றுமைத் தொகைத் தொடர். `கடல் கண்டு` ஆங்கு எனப் பிரித்தால் எழுவாய்த் தொடராகிப் பொருளே மாறுபடும்.

செம்மொழித்திட்டத்தின் கருத்து அவற்றுக்கு உரிய செய்யுளோசையுடன் சங்க இலக்கியங்களைப் படிக்க உதவுதல் என்றால் இக்குறுந்தகடு அக்குறிக்கோளுக்கு உதவவில்லை.


kumaran388@hotmail.com

Series Navigation

முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி

முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி