‘திண்ணைப் பேச்சு – ஒரு தன்னிலை(இன்மை) விளக்கம் பற்றி

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

தேவமைந்தன்(அ.பசுபதி)


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
‘திண்ணைப் பேச்சு – ஒரு தன்னிலை(இன்மை) விளக்கம்’ வாசித்தேன்.
“சார்பற்றவர்கள் தான் ஜனநாயக உணர்வை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள்”
என்ற கருத்து மிகவும் மெய்யானது.
எனக்கு மலர்மன்னன் தொடர்பான உரைமடல் எழுதத் தயக்கம். இருந்தாலும், அவரை மதிப்பதால் நன்றியும் எதிர்வினையும் ஆற்ற வேண்டி வந்தது. இன்னும் அடுக்கடுக்கான விவரங்கள் புதுச்சேரி வரலாற்றுச் சங்கத்திலும் பிரெஞ்சிந்தியக் கழகத்திலும் (நானெழுதியது தொடர்பாக) உள்ளன. மிகவும் தொல்லைப்பட்டு, சுருக்கி, எல்லோரும் சரிபார்க்கத்தக்க ஆதாரங்களை மட்டும்
தந்தேன்.
தாங்கள் இந்த விளக்கம் தந்ததில் உண்மை மட்டுமே உள்ளது. இன்மை எங்கும் தென்படவில்லை..
தொடர்ந்து மறைக்கப்பட்டுவரும் தமிழறிஞர்களைக் குறித்தும் தமிழ் இலக்கண இலக்கியங்கள் பற்றியும் கட்டுரைகள் வெளியிட்டு வருவதொரு சான்று போதாதா! அதேபொழுது வேறுபட்ட துறைகளைச் சார்ந்தவர்கள், தங்களுக்கு வேறுபட்ட துறைகளை அறிந்து கொள்ளவும் திண்ணை இடம் கொடுப்பது போதாதா? குறை சொல்ல வேண்டும் என்று தீர்மானித்து விட்டால், அன்னை தந்த பாலையும் குறை சொல்லலாம் என்று கண்ணதாசன் பாட்டெழுதிக் காட்டவில்லையா? “மனிதர்கள் வரலாம்; வந்ததேபோல் போகவும் செய்யலாம்; நானோ எஞ்ஞான்றும் ஓடிக்கொண்டே இருப்பேன்” என்று மலைச்சாரலின் சிற்றோடையொன்று சொல்வதாகக் கவிஞன்
சொல்லும் இலக்கணம், சிற்றோடைக்கு மட்டுமல்ல; இயங்கும்(dynamic) ஒவ்வொன்றுக்கும் பொருந்தும். ‘திண்ணை’ – என்ன விதிவிலக்கா? அதில் எழுதுபவர்கள் – எழுதாதவர்கள் – எழுதுவதை விரும்பாதவர்கள் – எழுதுவதை நிறுத்திக் கொள்பவர்கள்.. ஒருவருக்கு மற்றொருவர் தாழ்வா? திண்ணையில் வந்து அமர்பவர்கள் எல்லோர் குறித்தும் திண்ணைக்கு மனிதர் என்ற ஒரே நோக்குதான்!

அன்புடன்,

தேவமைந்தன்(அ.பசுபதி)


karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்

திண்ணைப் பேச்சு – ஒரு தன்னிலை (இன்மை) விளக்கம்

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

கோபால் ராஜாராம்



பி கே சிவகுமார் எழுதிய கடிதமும் அதன் பின் அவரை ஆதரித்தும், அவரை விமர்சனம் செய்தும் வந்த கடிதங்கள் சென்ற வாரம் வெளியாயின. சென்ற வாரம் அதனால் சிவகுமார் சிறப்பு மலர் என்று சொல்லும்படியாயிற்று. ஒருவர் எழுதுவதால், தனக்குப் பிடித்த இன்னொரு நல்ல எழுத்தாளர் திண்ணையில் எழுதாமல் போய்விடுவாரோ என்ற ஆதங்கத்துடன் சேர்ந்து, சிலர் பிரசுரிக்கத் தக்கவர்கள், சிலர் அப்படியில்லை என்ற குறிப்பும் இந்தக் கடிதங்களில் வெளியாயிற்று. அவர் எனக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தில், சில நண்பர்கள் அவருடன் உடன்பட்டு, திண்ணைக்கு தான் எழுதாதற்கு இதனைக் காரணாய்க் கூறியிருந்ததாகவும் தெரிவித்திருந்தார். இருக்கலாம்.

திண்ணையின் கடந்த எட்டாண்டு வரலாற்றில் திண்ணையின் சாதனை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. சில தெரியப்படாத எழுத்தாளர்களை முன்வைத்து அறிமுகம் செய்ததும், தமிழ் ஏடுகள் தொட அஞ்சுகிற சில உண்மைகளை வெளிக் கொணர்ந்ததும் பரவலான ஒரு வாசகர் சமூகத்தை உலக அளவில் கட்டி எழுப்பியதும் எவருமே செய்திருக்கக் கூடிய ஒன்று தான்.

இந்த எட்டாண்டுகளில் திண்ணைக்கு தாமாக முன்வந்து பலரும் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். முன்பு தொடர்ந்து எழுதி வந்த சிலர், இபோது எழுதுவதில்லை. இதற்கு பி கே சிவகுமார் குறிப்பிட்ட காரணமும் இருக்கக் கூடும் தான். ஆனால் அது மட்டுமே காரணம் இல்லை. தொடர்ந்து செயல்படமுடியாத அளவில் தனிப்பட்ட காரணங்களும் இருக்கலாம். திண்ணை அனைவரையும் எழுதுங்கள் என்று அழைத்ததுண்டு. யாரையும் அழைத்து, வற்புறுத்தி எழுத வைப்பது இல்லை. அதுவும் எழுத்துக்கு அன்பளிப்புத்தர வாய்ப்பில்லாத நிலையில் அப்படிச் செய்யவும் முடியாது.

ஆனால், இன்னார் எழுதினால் நான் எழுதமாட்டேன் என்று சொல்பவர்களின் கருத்துக்கு நிச்சயம் செவி சாய்க்க முடியாது. அது சாத்தியமே இல்லை. திண்ணையில் ரசூல் பிரசினையில் , இஸ்லாமிய அடிப்படை வாதிகள் ரசூலுக்கு எதிராக எழுதியதையும் வெளியிட்டோம். இதனால் ரசூல் இனி திண்ணைக்கு எழுதமாட்டேன் என்று சொல்லியிருந்தால் அது குறித்து நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. எதிர் எதிர்க் கருத்துகள் நாகரிகமான முறையில் வெளிப்படவேண்டும் என்பது தான் திண்ணையின் நோக்கம். நேசகுமார் அளித்த இஸ்லாம் பற்றிய விமர்சனக் கருத்துகளுக்கு , இஸ்லாமியர்களின் கடுமையான விமர்சனங்கள் வந்தன. மலர்மன்னனுக்கும் பல விமர்சனங்கள் வெளிவந்தன. இந்த நூற்றாண்டின் இணையற்ற தலைவர் என்று தனிப்பட்ட முறையில் நான் கருதும் காந்தி பற்றிய விமர்சனமும் திண்ணையின் பக்கங்களில் வெளிவந்தது. எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடித்திருந்த சில கட்டுரைகளையும் கூட சில காரணங்களுக்காக திண்ணையில் வெளியிட இயலவில்லை. அதற்கு அந்தக் கட்டுரை ஆசிரியர்கள் நிச்சயம் வருந்தியிருப்பார்கள் .ஆனால் அது குறித்து ஒன்றும் செய்வதற்கில்லை.

திண்ணை முஸ்லிம் முரசோ, விஜய பாரதமோ, முரசொலியோ, விடுதலையோ அல்ல. இந்த ஏடுகளில் எழுதுபவர்கள் திண்ணைக்கு எழுத முன்வந்தால், இந்த ஏடுகளில் எழுதுகிறார்கள் என்ற ஒரு காரணத்துக்காக மட்டும் அவர்களை நிராகரிக்க மாட்டோம்.

தனிப்பட்ட முறையில் விஜயன், வாஸந்தி போன்றோர் எழுதுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சார்புகள் அற்று பிரசினையை அணுகுபவர்கள் துரதிர்ஷ்ட வசமாக பத்திரிகை உலகில் மிகவும் அருகி வருகிறார்கள். அரசியல் கட்சிகளின் ஊதுகுழல்களாகவும், செயல்திட்டத்தின் சார்பாக நின்று மற்ற கருத்துகளை விமர்சனம் என்ற வரம்பை மீறி சாதி/மதக் கண்ணோட்டத்தில் குறுகிய முறையில் அணுகுபவர்களும் நிரம்பி வரும் சூழ்நிலை வளர்ந்து வருகிறது. ஆனால் சார்பற்றவர்கள் தான் ஜனநாயக உணர்வை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள். ஆனால் அவர்களும் கூட நிச்சயம் மாறுபட்ட கருத்துகளை, அவை கட்சி சார்புள்ளவர்களிடமிருந்து வந்தாலும் கூட , அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இந்த குறிப்பு திண்ணை பற்றிய விமர்சனங்களைக் கொண்டுள்ள மனங்களை மாற்றிவிடாது. ஆனாலும் பதிந்து வைப்போமே என்று தான் இதனை எழுதுகிறேன்.


gorajaram@yahoo.com

Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்