சிங்கையில் இந்தியச் சுதந்திர தினவிழா

This entry is part [part not set] of 34 in the series 20070816_Issue

இரா.பிரவின்குமார்


இந்தியாவின் 60வது சுதந்திரதினம் சிங்கையில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காலை 7.30 மணி முதலே சிங்கையில் உள்ள இந்தியத்தூதரகத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வந்தவண்ணம் இருந்தனர்.கார்மேகங்கள் அனைத்தும் ஒன்று சூழ்ந்து,நிகழ்ச்சிக்கு தடங்கலாக மழைவருமோ என்று அஞ்சியபோது, சரியாக 8.30 மணிக்குக் கொடியேற்று நிகழ்ச்சியோடு விழாவை அரங்கேற்றினார் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திரு.ச.ஜெய்சங்கர் அவர்கள். தொடர்ந்து “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட இந்திய மக்களின் ஒருமித்த குரலோடுப் பாடப்பட்ட நாட்டுப்பண் சிங்கையையே அதிரவைத்தது. அந்த அதிர்வுகாற்றின் மூலம் பட்டோளி வீசி பறந்துக்கொண்டிருந்த எம் தாயின்மணிக் கொடியைக் கண்டுவணங்க அந்த கதிரவனும் கார்மேகத்தைக் களைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான்.

குடியரசுத்தலைவர் அவர்களின் சுதந்திரதின உரையின் முழுச்செய்தியின் நகல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்தியத் தூதர் திரு.ச.ஜெய்சங்கர் அவர்கள், குடியரசுத்தலைவரின் சுதந்திரதின உரையின் சாராம்சத்தை வாசித்தார். மற்ற தூதரக அதிகாரியிடம் இருந்து சற்று வேறுபட்ட இவர் தன்னுடைய சொந்தக் கருத்துக்களையும் பகிர்ந்துக்கொண்டார், தான் மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்தியா சென்று வருவதாகவும்,ஒவ்வொருமுறைச் செல்லும் போதும் நாட்டின் வளர்ச்சி அபரிவிதமாக வளர்ந்துகொண்டு போவதாகவும், அயல்நாட்டில் வாழும் இந்தியர்கள் அவர் அவர்ப் பங்கிற்கு நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் எனும் வேண்டுகோளையும் முன்வைத்தார்.சிங்கை இந்தியத் தூதரகத்தின் இணையதள மாறுதல்களை விளக்கி, அதன் வழி சிங்கைவாழ் இந்தியமக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள அழைப்பும் விடுத்துத் தனது உரையை முடித்துக்கொண்டார்.

தொடர்ந்து அரங்கேரிய கலைநிகழ்ச்சிகள்,விமான உதவியின்றி நம்மை நம் மண்ணிற்கே கொண்டுசென்றது.குறிப்பாக DBS INTERNATIONAL பள்ளியின் சிறார்கள் பாடியப் பாடல்கள் நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பான அம்சமாக அமைந்தது.அக்குழந்தைகள் உணர்வுப்பூர்வமாகவும்,ஆரவாரத்துடனும் மழலைக் குரலில் பாடியவிதம் உண்மையில் அங்கிருந்தோரை மெய்சிலிர்க்க வைத்தது மட்டும் அல்லாமல், அவர்களுடையப் பாதங்களை ஆட்டம் காணவும் செய்தது. அந்நிகழ்ச்சி முடிந்த பின் அதன் ஒருங்கிணைப்பாளருக்குத் தனிப்பட்ட முறையில் நமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டோம்.

இந்த உணர்வுப்பூர்வமான நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர், தன்மகனை பள்ளிச் சீறுடையுடன் அழைத்து வந்த தந்தையையும், இரவு வேலையை முடித்து நேரடியாக அலுவலக சீறுடையுடன் வந்த சகோதரர்களையும்,கல்விக்காக சிங்கை வந்து, இந்த நிகழ்ச்சியில் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்ட மாணவர்களையும், கணவன், மனைவி,குழந்தைகள் என குடும்பமாக வந்தவர்களையும் கண்டு உள்ளம் ஆனந்தத்தில் ஊஞ்சலாடியது. நிகழ்ச்சி இனிதே நிறைவை வந்தடைந்தது.

அதன்பின் வழங்கிய சிற்றுண்டியும் நிகழ்ச்சிகளைப் போல மிகச் சிறப்பாக இருந்தது. அங்கிருந்த ஒரு இளைஞர் குழு நிகழ்ச்சி முடிந்த பின் இரத்தவங்கியை நோக்கிப் பயணித்தது, பலர் ரத்தங்கள் சிந்தி வாங்கித்தந்த இச்சுதந்திரத்தை இரத்ததானம் செய்துக் கொண்டாட எண்ணிய அக்குழுவில் எங்களையும் இனைத்துக்கொண்டு அங்கிருந்து விடைப்பெற்றுக் கொண்டோம்.

இதமுடன்

இரா.பிரவின்குமார்.

praver5@gmail.com
www.velgatamil.page.tl


Series Navigation

இரா.பிரவின்குமார்

இரா.பிரவின்குமார்