உண்மை கசக்கும்

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

மலர் மன்னன்



என்ன செய்ய, எனக்குத் தெரிந்த சம்பவங் களை நான் அறிந்தவரை, எனது கோணத்தில் அவை தென்பட்டவாறு சொல்கையில் சிலருக்கு அவை கசப்பாகப் போய்விடுவது தவிர்க்க இயலாதுதான். எனக்கு எவர் மீதும் தனிப்பட்ட முறையில் வெறுப்போ, விரோதமோ இல்லை. அதற்கெல்லாம் அவசியமும் இல்லை. எவரிடமும் எனக்கென்று எதையும் எதிர்பார்த்து அணுகியதில்லை. எனவே ஏமாற்றமும் இல்லை. அரசியல் தலைவர்களுடனான எனது பழகுதல்களால் அவ்ர்களுக்குத்தான் ஏதேனும் பயன் விளைந்திருக்கக்கூடுமேயன்றி நிச்சயமாக எனக்கு அதனால் லௌகீக ரீதியான பயன் ஏதும் கிடைத்ததில்லை. எனது புரிந்துகொள்ளலில் பிழைகள் இருக்கக்கூடும். ஆனால் எனது தகவல் பதிவுகளில் உள் நோக்கம் இருக்க வாய்ப்பில்லை.

எனக்குத் தெரிந்த பிரகாரம் தகவல்களைப் பதிவு செய்கையில் சிலருக்குச் சங்கடமாக இருக்கலாம். சிலருக்குச் சினம் வரலாம். சில சமயங்களில் சிலருக்கு உண்மை கசக்கத்தான் செய்யும். இதனைத் தவிர்ப்பதற்கில்லை. நான் பிம்பங்களைப் பிரதிபலிக்கின்றவன் அல்ல. மக்கள் மனதில் பதிந்துள்ள சில பிம்பங்களின் நிஜத் தோற்றங்களை அவை உள்ளவாறு காணவும் தெரியப்படுபடுத்தவும் முற்படுகிறவன். தலையில் கிரீடம் சூட்டிக்கொள்வதற்காக இந்தக் காரியத்தில் நான் இறங்கவும் இல்லை. மிகவும் சலிப்புடன், எழுதுவதை எப்போது நிறுத்துவோம் என்கிற தாபத்துடன் பதிவுசெய்கிறேனே யல்லாது, பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுவதில்லை. எழுதுவதைப் போல வெறுப்பூட்டும் காரியம் எதுவுமில்லை எனக்கு.

காமராஜர் பற்றி நான் எழுதிய பலவும் படிக்கையில் வராத கோபம் மூப்பனார் பற்றி எழுதிய ஒரேயரு வரியைப் படித்ததும் வருவது கண்டு வியப்பாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.

மூப்பனாருடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை. ஏனெனில் நான் ஒரு நிருபனாக மும்முரமாய் இயங்கிய காலகட்டத்தில் அவர் ஒரு அரசியல் சக்தியாக இருக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களுள் ஒருவராகக்கூட அவர் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. அவர் மேடைப் பேச்சாளராகவோ, நிருபர்களுடன் அரசியல்பற்றி கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்பவராகவோ இருந்ததில்லை. அவர் முற்றிலும் கட்சியைக் கட்டிக்காக்கும் அமைப்பாளராகப் பின்னணியில்தான் இயங்கி வந்தார்.

மூப்பனாருடன் பழகியதில்லையே தவிர, என்னைக் காணும் போதெல்லாம் புன்னகைக்கும் அளவுக்கு அவர் என்னை அறிந்திருந்தார். சிறந்த கர்நாடக சங்கீத ரசிகர். அவரது வாய் எப்போதும் ஒரு ராகத்தை முணுமுணுத்துக் கொண்டிருக்கும். சிகரெட் புகை வாசனை தெரியாமலிருக்க நறுமணப் பாக்கையும் மென்றுகொண்டிருப்பார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பெரும் நிலக் கிழார். சீமான். அரசியலுக்குப் பொருத்தமில்லாத அளவுக்கு நல்ல மனிதர். தமது செல்வாக்கை சுய ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளாதவர். கைகளைக் கறைப் படுத்திக்கொள்ளாதவர். அதற்கு அவசியமும் இல்லாதவர். நான் பத்திரிகைக்காரனாகப் பணிசெய்த காலகட்டத்தில் எப்போதும் உல்லாச புருஷராகத்தான் காணப்படுவார். அப்போதெல்லாம் அவரிடம் அரசியல் பேச வேண்டும் என்கிற எண்ணமே எங்களுக்குத் தோன்றாதவாறுதான் காட்சியளித்தார்.

காமராஜர் மீதான விசுவாசம் என்பதை எஜமான விசுவாசம் என்கிற கருத்தில் நான் சொல்லவில்லை. அவரது நிலைப்பாட்டின் மீதான விசுவாசம் என்கிற அர்த்தத்தில்தான் சொன்னேன். மூப்பனாருக்கு காமராஜர் மீது இருந்த மரியாதை, ஈடுபாடு, நன்றியுணர்வு ஆகியவற்றுக்கும், காமராஜர் தமது அந்திமக் காலத்தில் எடுத்திருந்த அரசியல் நிலைப்பட்டிற்கு மாறக மூப்பனார் நடந்து கொண்டமைக்கும் சம்பந்தமில்லை. காமராஜர் மீது ஒருவர் அன்பும் மரியாதையும் காட்டுவதால் காமராஜரின் நிலைப்பாட்டிற்கும் அவர் விசுவாசமாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. தனிப்பட்ட நபர்களின் தனிப்பட்ட விசுவாசங்களை விவாதிப்பது எனது வேலை அல்ல. காமராஜர் இருந்தபோது, அவரது அரசியல் நிலைப்பாட்டிற்கு விசுவாசமாக இருந்தவர்கள், அல்லது இருப்பதுபோல் காட்டிக் கொண்டவர்கள், அவர் மறைந்தவுடனேயே அந்த விசுவாசத்தைக் கை கழுவிவிட்டார்கள் என்பதோடு, காமராஜரின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறாக நடந்து கொண்டு விட்டார்கள் என்பதைத்தான் காமராஜர் பற்றிய எனது கட்டுரையில் பதிவு செய்திருந்தேன். உண்மை கசக்கும் என்பது ஊர்ஜிதமாயிற்று..

காமராஜர் மறைந்த தருணத்தில் மூப்பனார்தான் ஸ்தாபன காங்கிரசின் தமிழ் நாடு காரியக் கமிட்டித் தலைவராக இருந்தார் என நினைக்கிறேன். அதனால்தான் ஸ்தாபன காங்கிரசை
இந்திரா காங்கிரசுடன் இணைக்கும் பொறுப்பு அவர் தலையில் விழுந்தது. சத்திய மூர்த்தி பவன், சென்னை நகரின் பிரதான பகுதியில் இருந்த தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம், ஏராளமான நிதியிருப்பு, இவை எல்லாவற்றையும்விட, மா நிலம் முழுவதும் காமராஜர் திரட்டி வைத்திருந்த தொண்டர் பலம் ஆகியவற்றைத் தமதாக்கிக் கொள்ளவேண்டும் என்கிற ஆவலில்தான் இந்திரா காந்தி இரு கட்சி இணைப்பில் மிகுந்த ஆர்வமும் அவசரமும் காட்டினார். இதையட்டியே அவர் மூப்பனார் மீது கவனம் செலுத்தி அவரைத் தம் வசம் ஈர்த்துக்கொண்டார். மூப்பனாரின் அமைப்பு ஒருங்கிணைப்புத் திறன் இந்திராவுக்குப் பயன்படலாயிற்று.

ஏதோ சாதியடைப்படையில்தான் காமராஜருக்கு ஆதரவு இருந்ததைப் போல் ஓர் எண்னத்தைத் தோற்றுவிப்பது காமராஜருக்கு மரியாதை செய்வதாகாது. காமராஜர் தேர்தலில் தமது கட்சிதான் ஜயிக்க வேண்டும் என்ற நோக்கில் ஜாதி அடிப்படையில் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்காக அவர் ஜாதியுணர்வுள்ளவர் என்று எண்ணிவிடக் கூடாது. காமராஜரின் ஆதரவாளர்களை ஜாதியடிப்படையில் பிரித்துப் பார்ப்பதும் சரியல்ல.

இதைச் சொல்லும்போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நினைவுக்கு வருகிறது.

சிதம்பரத்தில் நைனியப்பப் பிள்ளை என்று ஒரு காங்கிரஸ் தியாகி இருந்தார். வீட்டு வாசலில் கா ந்திஜியின் உருவ பொம்மையை வைத்து பூஜிக்கும் அளவுக்கு காந்தி பக்தராக விளங்கியவர். காங்கிரஸ் மகாசபை அறிவித்த போராட்டங்களில் எல்லாம் தவறாமல் கலந்துகொண்டு அடியும் உதையும் பட்டு உருக்குலைந்தவர். தெருவில் ஒரு நாயைப்
போல் இழுத்துச் செல்லப் பட்டுச் சிறையில் தள்ளப் பட்டவர்.

இந்த நைனியப்பப் பிள்ளை 1957 தேர்தலின்போது சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பினார். கட்சியில் காமரஜரைவிட மூத்தவர் எனினும் காமராஜர் படிப்படியாகத் தலைமைப் பீடத்திற்குச் சென்று விட்டிருந்தமையால் வேட்பாளர் வாய்ப்பைப் பெற அவரிடம்தான் நைனியப்பப் பிள்ளை நிற்க வேண்டியிருந்தது.

காமராஜர் தேர்தல் பரபரப்பில் வெளியே வந்து விரைவாகத் தமது காரை நோக்கிச் சென்றபோது, வாசலில் கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த நைனியப்பப் பிள்ளை
ஏய் காமராஜு, சிதம்பரத்திலே நிக்க எனக்கு டிக்கட் வேணும் என்று உரக்கக் கூறினார்.

காமராஜர் திரும்பிப் பார்த்து, நீயெல்லாம் ஒதைபடவும் ஜெயிலுக்குப் போகவும்தான் லாயக்கு. எலக்ஷனுக்கு நிக்க வாகீசம் பிள்ளை இருக்காரு என்று உரக்கச் சொல்லிவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட்டார். தேர்தலில் எப்படியும் காங்கிரஸ்தான் ஜயிக்கவேண்டும் என்பதில்தான் காமராஜருக்குக் குறி என்று இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். வாகீசம் பிள்ளை சிதம்பரத்தில் ஆள் கட்டு மிக்க பெரும் நிலச் சுவான்தார். சட்ட சபையில் அவர் ஒருமுறை பேசியதாகக் கூடத் தகவல் இல்லை. ஆனால் அவர்தான் எப்போதும் தேர்தலில் வெற்றி பெறுவார்.

காமராஜர் மறைவிற்குப்பின் அவரது ஜாதியினர் மட்டும்தான் ஜாதியபிமானம் காரணமாக அவரது அரசியல் நிலைப்பாட்டிற்கு விசுவாசமாக இருந்து ஜனதா கட்சியில் சங்கமித்தனர் என்கிற தோற்றத்தை உருவாக்குவதும் சரியல்ல. இப்படிச் செய்வதுதான் காமராஜரை ஒரு குறிப்பிட்ட ஜாதியின் தலைவராகக் குறுக்குவதாகும். காமராஜர் மீது உண்மையான மரியாதை உள்ளவர்கள் இதைச் செய்ய மாட்டார்கள்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் திராவிட இயக்கக் கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொள்ளும் சபலம் காமராஜருக்கு வந்ததில்லை. தி மு க விலிருந்து எம் ஜி ஆர் பிரிந்து தனிக் கட்சி தொடங்கியபோது, தி மு க வை வெற்றிகொள்வதற்காக அ தி மு க வுடன் கூட்டு வைத்துக் கொள்ளும் எண்ணம் அவருக்கு உள்ளதா என்று அறிய முற்பட்டபோது, இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே என்று சொன்னவ்ர் அவர். தி மு க, அ தி முக என்று மாறி மாறி அவற்றின் வாசலில் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தமது பாரம்பரியம் மிக்க தேசியக் கட்சி தாழ்வதை அவரால் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது.

இந்திராவுக்குத் தமிழ் நாட்டு அரசியல் அடிப்படை பற்றி எதுவும் தெரியவும் தெரியாது, தெரிந்து கொண்டு தமிழ் நாட்டில் காங்கிரசை வலுப்படுத்த வேண்டும் என்கிற ஆதங்கமும் கிடையாது. அவருக்கு வேண்டியிருந்த தெல்லாம் மத்திய ஆட்சியைத் தனது கையில் வைத்திருப்பதற்காக மக்களவைக்கான ஒரு சில இடங்கள் தமிழ் நாட்டில் கிடைத்தால் போதுமென்று தமிழ் நாட்டை திராவிடக் கட்சிகளிடம் தாரை வார்த்துக் கொடுப்பதுதான் என்று மூப்பனாருக்குத் தெரியாதா?

எப்போதும் ராஜீவ் காந்தி யை மொய்த்துக் கொண்டு தாங்கள்தாம் ராஜீவுக்கு மிகவும் நெருக்கம் என்று காட்டிக் கொள்வதற்காகத் தமக்குள் போட்டி போடுபவர்கள் 1991 ஆம் ஆண்டு மே மாதம் துக்ககரமாக விடிந்த 21 ஆம் தேதி மட்டும் அவரை அம்போ என்று தனியாக விட்டுவிட்டது ஏன் என்று யோசிக்கத் தெரியாதவரா மூப்பனார்? போதுமான அளவுக்குத் துணிவு இல்லாதவராகத் தான் அவரை இது தெரிவிக்கிறது என்று சொன்னால் அதனை மறுப்பது சிரமம் அல்லவா?

நரசிம்ம ராவ் காலத்தில் கட்சித் தலைமை எடுத்த முடிவை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரசைத் தொடங்கியபோது மூப்பனாருக்கு இருந்த ஆளுமை வேறு, காமராஜர் மறைந்த சமயம் அவருக்கு இருந்த ஆளுமை வேறு என்பது உண்மைதான் என்றாலும் காமராஜர் மறைந்த தருணத்தில் ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் இருந்த ஏகோபித்த உணர்வைப் பயன்படுத்தி காமராஜர் நிலைப் பாட்டிற்கு ஒப்ப ஸ்தாபன காங்கிரசை அவர் தொடர்ந்து நடத்தியிருக்கலாம் அல்லவா?

காமராஜர் மறைந்ததும் இந்திரா வடித்த கண்ணீரும் துடிதுடித்த பரபரப்பும் தமிழ் நாட்டில் சொத்துகளும் தொண்டர் கூட்டமும் மிக்கதாய் வலிமையுடன் விளங்கும் ஸ்தாபன காங்கிரசைக் கவர்ந்துகொள்வதற்காகத்தான் என்பது கூடவா மூப்பனாருக்குத் தெரிந் திருக்காது?

குமரி அனந்தன் ஜாதி அடிப்படையில்தான் காமராஜரின் நிலைப்பாட்டிற்கு விசுவாசமாக இருந்தார் என்பதுபோல் ஒரு கருத்தை உருவாக்கும் முயற்சியைப் பார்க்கையில் வருத்தமாக உள்ளது. எனினும், என் நீண்ட கால நண்பரும், எட்டு வயதுச் சிறுமியாய் என் மகளே போல் எனது மடியில் அமர்ந்து விளையாடிய தமிழிசையின் அன்புத் தந்தையாருமான குமரி அனந்தனை நினைவூட்டியதில் மகிழ்ச்சிதான். (பல ஆண்டுகளுக்கு முன் குமரி அனந்தனை ந. முத்துசாமியின் கூத்துப் பட்டறை நிகழ்ச்சியன்றுக்கு அழைத்துச் சென்றதும், கல்லூரி நண்பர்களான அவர்களிருவரையும் சந்திக்க வைத்ததும் நினைவுக்கு வருகிறது ).

குமரி அனந்தனைச் சந்திக்கும் வாய்ப்பு இப்போதெல்லாம் கிடைப்பதில்லை என்றாலும் மகள் தமிழிசையை அடிக்கடி சந்தித்துப் பேசி மகிழ முடிகிறது. சிறந்த மேடைப் பேச்சாளராகவும் மிகச் சிறந்த மருத்துவராகவும் தமிழிசை தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கிறபோது பெருமையாக இருக்கிறது. மறைப்பானேன், எங்கள் வழிகாட்டி என்று சில சமயங்களில் சம்பிரதாயமாக அவள் என்னைக் குறிப்பிடுகிறபோது மகிழ்சியாகத்தான் இருக்கிறது.

காமராஜரின் அரசியல் நிலைப்பாட்டிற்கு விசுவாசமாக இருந்தமையால்தான் ஸ்தாபன காங்கிரசை ஜனதா கட்சியில் இணைப்பதில் குமரி அனந்தன் முன்னின்றார். ஜனதா பரிசோதனை உட்கட்சிப் பூசலால் படு தோல்வியடைந்தபோது அதே விசுவாசம்தான் தனிக் கட்சி தொடங்கும் கட்டாயத்தையும் அனந்தனுக்கு அளித்தது. பிற்பாடு தமிழ் நாட்டில் தேசிய சக்திகள் சிதறிக் கிடப்பது சரியல்ல என்ற எண்ணத்தில்தான் அவர் தமது கட்சியை இந்திரா காங்கிரசில் இணைக்க நேர்ந்தது.

ஒரு பத்திரிகை நிருபன் என்கிற முறையில் எனக்குத் தெரிந்த தகவல்களை நான் வெளியிட்டு வந்தது காமரஜருக்கு ஏமாற்றத்தையும் எரிச்சலையும் அளித்ததேயன்றி என்னால் அவர் வாட்டமுற்றிருக்க இயலாது. ஆளுமை மிக்க பெருந்தலைவரான அவரை என்னைப் போன்ற ஒரு சிறுவனால் வாட்டமுறச் செய்திருக்க முடியும் என்று எண்ணுவதே காமராஜருக்கு மரியாதைக் குறைவுதான். மேலும் அவர் திரும்பத் திரும்ப என்னை அழைத்து நிலவரங்களை விசாரித்துக் கொண்டிருந்ததிலிருந்தும் என்னால் அவர் வாட்டமுற்றிருக்க வாய்ப்பில்லை என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

எவரும் தம்மிடம் சலுகை எதுவும் எதிர்பார்க்க இடமளிக்கலாகாது என்பதற்காகவும் காமராஜர் முகத்தை எப்போதும் கடுமையாக வைத்திருந்திருக்கக்கூடும். ஆனால் இளைஞனான எனக்கு அதனைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் இருக்காதுதானே? அதிலும் எனக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் எனது கருத்தை அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் தெரிவித்ததற்காக என் மீது அவர் எரிந்து விழுகையில் ஏனடா இவரிடம் போனோம் என்று எனது இளம் மனதில் தோன்றுவதும் இயல்பே அல்லவா? அதே சமயம் எப்போது சென்றாலும் இன்முகம் காட்டி, உவப்பில்லாத விஷயம் சொன்னாலும் கிண்டலாக அதனை விமர்சித்துச் சிரிக்க வைக்கும் அண்ணாவைச் சந்திப்பதில் உற்சாகம் எழுவதும் இயற்கைதானே? இந்த உண்மையுமா கசக்க வேண்டும்?


Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்