அலெக்ஸாண்டர் பாரத மண்ணில் தோல்வியை சந்தித்தான்

This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்


திரு.ஜெயபாரதன் அவர்கள் என் மீது கொண்டிருக்கும் அன்பிற்கு நன்றி.

வீர சாவர்க்கரின் பார்வையில் நான் உலக வரலாற்றினை காண்பதாக அவர் கூறியுள்ளமைக்கு நன்றி. ‘பாரத விடுதலைப் போரில் பங்கெடுத்து மிக்க முரண்பாடும், பிரச்சனைக்குரிய’ என்று வீர சாவர்க்கருக்கு அவர் கொடுக்கும் அடைமொழிக்கான பதில் ஏற்கனவே திண்ணையில் என்னால் கூறப்பட்டுள்ளதை அவருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என்ற போதிலும் தேவை எனில் அங்கு கூறப்பட்டுள்ள கருத்துக்களை மீண்டும் கூறுவதில் எனக்கு எவ்வித சங்கடமும் இல்லை. எந்த ஒரு நேர்நிலை வரலாற்றாசிரியரும் வீர சாவர்க்கரின் பங்களிப்பை நேர்மையாக அணுகினால் அதில் இருப்பது தீவிர விடுதலை வேட்கையே என்பதனை உணருவார். அண்மைக்காலமாக இடதுசாரிகள் கண்டுபிடித்த ஒரு உத்தி வீர சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்த போது எழுதிய ‘மன்னிப்பு’ கடிதங்களை பிரபலப்படுத்துவதாகும். ஆனால் அக்கடிதங்கள் அனைத்தையும் ஒரு சேர பார்க்கையில் அவரது சிறை வாசம் உச்சத்தை அடைந்த போது எழுதப்பட்ட கடிதத்தில் அவர் தம்மை விடுதலை செய்ய கோராமல் தம் தோழர்களை விடுவிக்க கோரியமையையும், ‘மன்னிப்பு’ கடிதம் அவர் எழுதிய அதே கால கட்டத்தில் அரசு விரோத நடவடிக்கைகளில் (கை-கால்களில் விலங்குடன்) ஈடுபட்டமைக்காக அந்தமான் சிறை அதிகாரிகள் அவருக்கு தண்டனைகள் அளித்தமையையும் அறியமுடியும். பின்னாளில் ஜப்பானில் இருந்த அவரது சக-புரட்சியாளர் ராஷ்பிகாரி போஸ¤டன் அவர் உருவாக்கிய தொடர்புகள் மூலம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆசாத் ஹிந்த் பவுஜினை உருவாக்கியதையும் அறிய முடியும். இதற்காக நேதாஜியின் வானொலி அவரை புகழ்ந்ததையும் அறிய முடியும். ஆக வீர சாவர்க்கரின் விடுதலை போராட்ட பங்களிப்பில் எவ்வித ‘மிக்க முரண்பாடோ பிரச்சனையோ’ இல்லை என்பதனை திரு. ஜெயபாரதன் உணர்தல் வேண்டும் என தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்.

வீர சாவர்க்கரின் பங்களிப்பு விடுதலைவீரர் என்பதுடன் நின்றிடவில்லை. வரலாற்றாசிரியர் என்கிற விதத்திலும் மகத்தானது. 1857 எழுச்சியை பாரத சுதந்திர போர் என நாம் கூறும் போது வீர சாவர்க்கரின் பார்வை அது ஆனால் பெத்தாம் பெரிய மேற்கத்த்திய வரலாற்றாசிரியர்கள் எல்லாம் அதனை கலகம் (mutiny) என்கின்றன என்போமா என்ன? அதைப்போலவே அலெக்ஸாண்டரின் இந்திய படையெடுப்பு குறித்து மாறுபட்ட விவரணங்களை பதிவு செய்த சர்.பட்ஜும் வீர சாவர்க்கரின் பார்வையில் உலகைப் பார்த்தாரா என்ன? இறுதியாக அலெக்ஸாண்டர் தோற்றோடினால் புரவிப்படையில் பறந்திருக்கலாமே ஏன் அமைதியாக கப்பல் கட்டி சென்றான் என்கிறார் ஜெயபாரதன். நான் எழுதியுள்ள பதிலில் கூறியுள்ள வாசகங்களை மீள் படிக்க வேண்டுகிறேன்: பாட்ஜின் விவரணப்படி “ஜீலம் போரில் அலெக்ஸாண்டரின் குதிரைப் படைகள் கடுமையாக அழிக்கப் பட்டன. போர் தொடர்ந்தால் தான் நிர்மூலமாக்கப்படுவோம் என்பதனை அலெக்ஸாண்டர் உணர்ந்து கொண்டான். எனவே போரஸ் மன்னனிடம் போரினை நிறுத்தும்படி வேண்டிக்கொண்டான். இந்திய பாரம்பரியத்திற்கே உரிய பெருந்தன்மையுடன் தன்னிடம் சரணாகதி என வந்த அலெக்ஸாண்டரை கொல்லவில்லை. இதற்கு பின்னர் அலெக்ஸாண்டர் புருஷோத்தமனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டான். புருஷோத்தமனுக்கு போர்களில் உதவியும் செய்தான்.” எனவே அலெக்ஸாண்டர் போரில் புறமுதுகிடவில்லை மாறாக புருஷோத்தமனிடம் சரணடைந்தான். இரண்டாவதாக, மீண்டும் மலைப்பிரதேசம் வழியாக அவன் சென்றிருந்தால் ஆங்காங்கே மலைவாச அரசுகளின் இராணுவ தாக்குதல்களுக்கும் அவன் ஆளாகியிருப்பான். இந்த அரசுகள் மீது மின்னல்வேக தாக்குதல்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தி வந்திருந்தான் அலெக்ஸாண்டர். எனவே அவன் திரும்ப அதே வழியில் சென்றால் நிச்சயம் அவனது படை தாக்குதல்களை சந்தித்திருக்கும். எனவே புருஷோத்தமனிடம் சரண ஒப்பந்தம் எழுதி இங்கு அவனுடைய பாதுகாப்பில் கப்பல்கள் மூலம் செல்வதே புத்திசாலித்தனமான முடிவு என்பதால் இது நிகழ்ந்திருக்கும்.

நேரு தமது ‘Discovery of India’ நூலில் கூறுகிறார்: “கிமு நாலாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அலெக்ஸாண்டரின் இந்திய படையெடுப்பு ஒரு இராணுவப் பார்வையில் மிகவும் சிறிய விஷயம்தான். அது எல்லைகளுக்கு அப்பால் நடத்தப்பட்ட ஒரு சூறையாட்டம் (raid) தானே ஒழிய படையெடுப்பல்ல. அதுவும் அவனுக்கு அத்தனை வெற்றிகரமான சூறையாட்டம் கூட இல்லை. ஒரு சாதாரண எல்லைப்புற தலைவனிடமே இத்தனை வன்மையான எதிர்ப்பு இருக்கும் என்றால் தெற்கே உள்ள இன்னமும் வலிமையான பேரரசுகளிடமிருந்து எத்தனை எதிர்ப்புகள் இருக்கும் எனும் எண்ணம் பாரதத்துக்குள் படையெடுக்கும் எண்ணத்தையே அலெக்ஸாண்டரை மறுபரிசீலனை செய்ய வைத்தது.” (பக்.114) நேரு தமது வார்த்தைகளில் கவனமாக அலெக்ஸாண்டருக்கும்-எல்லைப்புற தலைவனுக்கும் இடையிலான போரில் வெற்றி-தோல்வி எனும் பதங்களை தவிர்க்கிறார் என்பதுடன் போர்களத்தில் அலெக்ஸாண்டர் சந்தித்த நிகழ்வுகளே அவனது பின்வாங்கலுக்கு காரணம் என்பதையும் கூறுகிறார்.

ஆக, வரலாற்றில் அலெக்ஸாண்டர் தனது முதல் தோல்வியை இந்தியாவில் சந்தித்தான் என்பதனை மறுப்பதைக்காட்டிலும் ஏற்றுக்கொள்ளவே அதிக காரணங்கள் இருக்கின்றன. மேலைநாட்டவருக்கு கசப்பாக இருக்கலாம். மேலைநாட்டார் வசப்பட்ட வரலாற்றாசிரியர்களுக்கு கசப்பாக இருக்கலாம். மேலைநாட்டு கலைக்களஞ்சியங்கள் இத்தகவலை இயன்றவரை புறந்தள்ள பார்க்கலாம். ஆனால் குறைந்தபட்சம் நாமாவது இந்த தகவல்களை முன்வைக்க வேண்டியது அவசியமாகும்.

இதுவே இத்தேசத்தை நேசிப்பதில் இணையும் மனம் கொண்ட தங்களிடம் நான் கேட்பதெல்லாம். இவ்விஷயத்தில் இதற்கு மேல் நான் பெரிதும் மதிக்கும் தங்களுடன் விவாதிக்கவும் விரும்பவில்லை.

என்றென்றும் பணிவன்புடன்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்