முஹம்மது நபிகளின் வாழ்வு பிரதிபலிக்கும் உண்மைகள்!

This entry is part [part not set] of 35 in the series 20060922_Issue

இப்னு பஷீர்


முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத பிற மதங்களைச் சேர்ந்த அல்லது மதக்கோட்பாடுகளில் ஈடுபாடு காட்டாத அறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வெளியிட்ட சில கருத்துக்கள் இவை:

முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும்.
– ஜவஹர்லால் நேரு –

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.
– எஸ். எச். லீடர் –

இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்?
– வாஷிங்டன் இர்விங் –

நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது.
– டாக்டர் ஜான்சன் –

முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன்.
– பெர்னாட்ஷா –

திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை.
– நெப்போலியன் –

இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.
– ஜி.ஜி. கெல்லட் –

சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்க முடியாது.
– வில்லியம்மூர் –

ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும்.
– காந்திஜி –

நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப் புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.
– தாமஸ் கார்லைல் –

நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல.
– டால்ஸ்டாய் –

அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே.
– கிப்பன் –

செந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிமைமிக்க மேலோர் நபிகள் நாயகம்.
– கலைஞர் கருணாநிதி

எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது. அந்த மனிதர், ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூறினார். எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு ‘குடிஅரசு’ எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவரே விளக்கினார்.

– கவியரசி சரோஜினி நாயுடு –

இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் “ஏன் அப்படி?” என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.

எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.

– மைக்கேல் ஹெச். ஹார்ட் – ‘The 100’ என்ற நூலில்..

சுருக்கமாக சொல்வதென்றால், தெளிந்த சிந்தனையும் நடுநிலை நோக்கும் கொண்ட அறிஞர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களது வாழ்வைப் புரட்டிப் பார்க்கையில் அதில் சுயநலமற்ற தொலைநோக்குக் கொண்ட சீரிய சிந்தனை பிரதிபலிக்கக் கண்டார்கள். கீழ்த்தரமான எண்ணங்களும் குறுகிய மனப்பான்மையும் உடையவர்கள் தங்கள் மனப்போக்கிற்கு ஏற்றவாறு அண்ணலார் மீது களங்கம் சுமத்த ஏதும் வாய்ப்பு கிடைக்காதா என இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்னு பஷீர்
http://ibnubasheer.blogsome.com

ibnubasheer@gmail.com

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்