பாலஸ்தீனத்தை முன்வைத்து பின்நவீனத்துவ பெருங்கதையாடலாக ஒரு ஜிகாத்

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

எஸ் அரவிந்தன் நீலகண்டன்


வஜ்ரா சங்கரின் கட்டுரைக்கு திரு. பீர் முகமதுவின் பதில் கட்டுரையை கண்டேன்.

அவரது கட்டுரையின் முதல் பகுதியில் அகவயச் சார்வுகளுக்கு ஆட்படாத ஒரு அறிஞரின் போக்குடன் யூத இனக்குழு-அதன் தோற்றம்-பரவுதல் இத்யாதி குறித்து பேசுகிறார். ஆனால் இறுதி வாக்கியம் கூறுகிறது: ‘யூத அரசுகள், அவர்களின் தகிடுதத்தங்கள் பற்றிய கணிசமான விவரங்கள் என்னிடமுள்ளன. அவற்றைப் பற்றி விரிவாகவே விவாதிக்கலாம்.’ சிற்றரசுகள் செய்த அடக்கு முறைகள் தகிடு தத்தங்கள் சிற்றரசுகளின் குணாதிசயங்கள் எனில் அவை எந்த அக்கால அரசுக்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும். ஆக இன்றைய இஸ்ரேலிய-அரபு மோதல்களைக் குறித்து பேசும் போது ”யூத அரசுகள், அவர்களின் தகிடுதத்தங்கள் பற்றிய கணிசமான விவரங்கள்’ மட்டும் குறித்து தனியாகக் கட்டம் கட்டி பேசுகிற பீர் முகமது அராபிய சுல்தான்களின் தகிடு தத்தங்கள், நில விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட இறையியல் தகிடுதத்தங்கள் ஆகியவற்றையும் கூறியிருக்கலாம். இன்றைய இஸ்ரேலில் நடைபெறும் இஸ்ரேலிய-அராபிய மோதல்கள் குறித்து பேசும் போது ”யூத அரசுகள், அவர்களின் தகிடுதத்தங்கள் பற்றிய கணிசமான விவரங்கள்’ குறித்து பேசப்படுமானால், இஸ்லாமிய இறையியலில் இருக்கும் யூத வெறுப்பியல் அதற்கான சமுதாய-பொருளாதார-இனவாத காரணிகள் ஆகியவையும் விவாதிக்கப்பட வேண்டும்.

நபி என அவரது சக மதத்தவர்கள் நம்புகிற முகமதுவின் தோற்றத்தின் பின் செய்யப்பட்ட யூதப் படுகொலைகள், வழிபாட்டு பன்மை அழிப்பு, அவற்றிற்கு அன்று முதல் இன்று வரை சொல்லப்படுகிற வக்காலத்துகள் ஆகியவை எல்லாம் மானுட சமுதாய சமூக-பொருளாதார காரணிகளுக்கு அப்பால் நடைபெற்ற அமானுட வஹீ இறக்கத்தின் அசாதாரண நிகழ்வுகள். அவை எல்லாம் ‘தகிடு தத்தங்கள்’ என்கிற வரையறைக்குள் கொண்டு வரப்பட ஆகாதவை என பீர் முகமது நம்பினால் அந்த நம்பிக்கையின் பால் அவரது கட்டுரைகளும் எதிர்வினைகளும் எழுகின்றனவென்றால் அதை அவர் வெளிப்படையாகக் கூறலாம். ஏனெனில் ‘வஹீ’ என்பது அன்றைக்கு அராபிய இனக்குழு சமுதாயமாக இருப்பதிலிருந்து நில-உடைமை சமுதாயமாக மாறிய பொழுதும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட சாம்ராஜ்ஜிய விரிவாதிக்கத்திற்கு ஏற்பவும் வெளிப்பட்ட அக்காரணிகளுக்கு உட்பட்ட நிகழ்வுதானே ஒழிய எங்கிருந்தோ ‘இறங்கியதில்லை’ என்கிற அல்லது இதையத்ததோர் பார்வை நியாயப்படி பீர் முகமதுவால் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். (இப்பார்வையில் எனக்கு உடன்பாடில்லை. வஹீ குறித்து நேசகுமார் முன்வைக்கும் உளவியல் பார்வையையே நான் ஏற்கிறேன்.)

இல்லை எனில் வஜ்ரா ஷங்கருடனோ வேறு யாருடனுமோ விவாதங்களே தேவையில்லை. அவரது மார்க்கத்தை சார்ந்த இதர அடிப்படைவாதிகளுடன் வெளிப்படையாகக் கைக்கோர்த்து யூத வெறுப்பினையும் இணை வைப்பவர்கள் மீதான வெறுப்பியலையும் கக்கலாம். பின்நவீனத்துவ, மார்க்சிய இத்யாதி அறிவுஜீவி அரிதாரங்கள் தேவையில்லை.

இவர்களோடு ஒப்பிடுகையில் யூத சமுதாயத்தின் நேர்மை பன்மடங்கு நன்றாகத் தெரிகிறது. இஸ்ரேலில் பழமைவாத ரபாய்கள் இருக்கத்தான் செய்கின்றனர். யூத அடிப்படைவாதிகளும் உண்டு. என்றபோதிலும் யூத சமுதாயம் வரலாற்றுடன் இழைந்தோடும் தன் தொன்மக் கூறுகளை கறாரான அறிவியல் ஆய்வுகளுக்கு ஆட்படுத்துவதில் தாட்சண்யம் காட்டுவதில்லை. செங்கடல் கடந்த விவகாரமே சரித்திர ஆதாரம் அற்ற தொன்மக் கற்பனை என பேசும் யூத அகழ்வாராய்ச்சியாளர்கள் சமய விசுவாசிகளின் குறைந்த பட்ச எதிர்ப்பு கூட இல்லாமல் நாட்டின் முன்னணி ஊடகங்களில் பிரதானப்படுத்தப்படுகிறார்கள். அண்மையில் ஒரு ரபாய் யூத பண்டிகையின் போது நடைபெற்ற சமய உரையில் இந்த தொன்மத்திற்கு வரலாற்று சான்று ஏதுமில்லை என விசுவாசிகளிடம் தெரிவித்தார். மேலும் இத்தகைய தொன்மங்களை வரலாற்று நிகழ்வுகளாக காண்பதையோ நேரடி பொருள் கொள்வதையோக் காட்டிலும் அகவயப்படுத்துவதன் அவசியத்தை விளக்கினார். யூதத் தொன்மத்தின் சிதைந்த கொச்சை வடிவமே குரானில் உள்ளது. ஆனால் ‘அமைதி’ என்கிற பெயரில் கிருஷ்ணா கார்டன்ஸில் நடைபெறும் கண்காட்சி முதல் எகிப்து வரை போலித்தனமாக ஆவணப்படங்கள் என்கிற பெயரில் அப்பட்டமான அபத்தமான பொய்களை அரங்கேற்றுகின்றனர். (பிர் அவுனின் -அவ்வளவு சொன்ன வஹீக்கு பிர் அவுனின் பெயர் சொல்ல நேரமில்லாமல் போனது விசித்திரம்தான்- உடல் கடலிலிருந்து மீட்கப்பட்டது என ராம்ஸேயின் மம்மியைக் காட்டி அடுத்த திண்ணை இதழில் மெமிட்டிக் க்ளோன்கள் கதை விடுவதற்கு முன்னால் குறைந்த பட்சம் கூகிளில் எகிப்திய ஆய்வாளார்கள், சவூதி கைக்கூலி போலிகள் அல்ல, என்ன சொல்கிறார்கள் என சிறிது பார்த்துவிட்டு எழுதுவது நலம்.)

பெருங்கதையாடலை உருவாக்குபவர்கள் யார்? உருவாக்கியவர்கள் யார்? பெருங்கதையாடல்கள் மூலம் மானுட குலத்தில் ஒரு பகுதியினர் மீது வெறுப்பினைத் தூண்டி வந்தவர்கள் யார்?

திரு.பீர் முகமது ஏறக்குறைய வஜ்ரா சங்கர் கூறியதை மீள்-ஊர்ஜிதப்படுத்துகிறார். அவரது வார்த்தைகளிலேயே கூறுகிறார்: ” இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாலஸ்தீனில் இருந்த யூதர்களின் எண்ணிக்கை அதன் பிறகு இருமடங்கானது. இது வெறுமனே ரியல் எஸ்டேட் வியபாரிகள் வழி வந்ததல்ல. மாறாக ஐரோப்பிய சூழலின் நிர்பந்தம் மற்றும் சியோனிச ஊட்டல் வழியாக வந்தது. ஏற்கனவே அங்கு இருந்து வந்த யூதர்கள் தங்களின் மற்ற சகோதரர்களின் இருப்பிட வசதிக்காக பாலைவனத்தை புரோக்கர்களிடமிருந்து விலைக்கு வாங்கி அதில் குடியேறினர்.” இந்த ‘ரியல் எஸ்டேட் வியாபாரிகள்’ யார்? ஐரோப்பியர்களா? யூதர்களா? அல்லது அராபிகளா? சிரியாவிலும் லெபனானிலும் வாழ்ந்த இஸ்லாமிய பெரும் நிலவுடமை பண்ணைக்காரர்களா? யார் அவர்கள்? பீர் முகமது விளக்க முன்வருவாரா? அல்லது 1947 இல் மேற்கு பஞ்சாப் பிரதேசங்களில் தமது நிலங்களை அடிமாட்டு விலையில் இஸ்லாமியர்களுக்கு விற்க நிர்பந்திக்கப்பட்ட ஹிந்து-சீக்கியர்களைப் போல ‘பாலஸ்தீனியர்கள்’ தமது நிலங்களை யூதர்களுக்கு விற்க நிர்ப்பந்திக்கப்பட்டார்களா?அல்லது ‘எதிரி சொத்து சட்டம்’ என்கிற சட்டத்தின் மூலம் அகதிகளாக பாரதத்திற்கு வந்த ஹிந்துக்களின் நிலங்களை கபளீகரம் செய்த இஸ்லாமிய கிழக்கு வங்காள (1971 -க்குப் பிறகு பங்களாதேஷ்) ஆபாசமா யூத அரசால் அரங்கேற்றப்பட்டது?

பதூயீன்களின் நிலை குறித்து நெகிழ்ந்துருகும் பீர் முகமது விளக்குவாரா யூத வருகைக்கு முன்னர் எவ்வாறிருந்தது அவர்களின் நிலை என்று? அங்கு வாழ்ந்த விவசாயிகளுடன் அவர்கள் எவ்வித உறவுடன் வாழ்ந்தனர்? ஒரு சிறிய உதாரணம் : “சில வருடங்களுக்கு முன்னால் ஜோர்டான் பள்ளத்தாக்கு முழுவதும் ·பெல்லாகினின் கைகளில் இருந்தது. அவர்கள் சோளம் பயிரிட்டு வந்தனர். இப்போது அவை பதூயீன்களிடம் உள்ளது. அவர்கள் பொதுவாக விவசாயம் செய்வதில்லை. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக அடிமைகளைக் கொண்டு செய்யும் விவசாயத்தைத் தவிர அவர்களுக்கு விவசாயம் என்று எதுவுமில்லை.” இது ஒரு யாத்ரீகரின் பதிவு. ஆண்டு? 1865. மட்டுமல்ல ஒரு சில அராபிய நில சுவான்தார் குடும்பங்கள் இந்த நிலவுடைமை முறையினால் கொழித்தன. அவர்கள் இந்த முறையில் கிடைத்த இலாபத்தை குறைந்த பட்சம் மீண்டும் ‘பாலஸ்தீனிய’ மண்ணிலேயே கொட்டி வளர்ச்சியை ஏற்படுத்திடவும் இல்லை. மாறாக பாரிசிலும் இலண்டனிலும் வர்த்தக மையங்களை நடத்தி வந்தனர்.

பீர் முகமது கூறுகிறார்: “அடிப்படைவாதம்-பாலஸ்தீன் என்ற இருமை நிலையை நான் வித்தியாசப்படுத்தியே பார்த்து வந்திருக்கிறேன். யாசர் அரபாத்தின் பாலஸ்தீன் விடுதலை இயக்கம் லெளகீகமாகவே இருந்தது.1982 ல் அது பெய்ரூட்டில் சந்தித்த தோல்விக்கு பிறகு அடிப்படைவாதத்துடன் கரைந்து விட்டது. யாசர் அரபாத்தின் கனவு யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அடங்கிய சுதந்திர பாலஸ்தீனாகவே இருந்தது.”

இதுவும் வழக்கமாக முற்போக்கு என்றும் மனித நேயவாதிகள் என்றும் காட்டுகிற இஸ்லாமிஸ்ட்கள் காட்டிக்கொளும் தந்திரம்தான். இஸ்ரேலில் என்றில்லை காஷ்மீரிலும் இதே தந்திரத்தை இவர்கள் கையாண்டுள்ளனர். ஒன்றிலிருந்து மற்றொன்றை பிரித்து காட்ட முடியாதவாறு பிரச்சார வாக்கியங்கள் ஒன்றாக இருக்கும். உதாரணமாக, காஷ்மீரில் ஜேகேஎல்எ·ப் மதச்சார்ப்பற்ற அமைப்பு என்பார்கள். இந்திரா காந்தி காஷ்மீரில் அநியாயமாக குடியரசு தலைவர் ஆட்சியை அமுல்படுத்தியதால்தான் அங்கு மதவாத அமைப்புகளே உருவானது என்பார்கள். ஆனால் எத்தனையோ ஆண்டுகளாக அடிப்படைவாத ஸியா ஆட்சியின் போதே பாகிஸ்தான் ஜேகேஎல்எ·ப் ஐ ஆதரித்ததையும் மத அடிப்படைவாத ஜாமயத்-இ-இஸ்லாமியிலிருந்தே ஜேகேஎல்எ·ப் அமைப்பின் பயங்கரவாதிகள் உருவாக்கப்பட்டதையும் சாமர்த்தியமாக தவிர்ப்பார்கள்.

(உலகத்தை இஸ்லாமிய மயமாக்கும் அகில உலக ஜிகாத் கவுன்ஸில் ஐஎஸ்ஐயின் வழிகாட்டுதலில் 1994 இல் உருவாக்கப்பட்டபோது அதில் உடனடியாக இணைந்த அமைப்பு ஜேகேஎல்எப். 2004 வரை அந்த அமைப்பில் நீடித்தது.) ஜேகேஎல்எ·ப் முதல் லஸ்கர் -இ-தொய்பா வரை நாம் காண்பது எங்கெங்கும் நிகழும் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் metamorphosis. கிலா·பத் இல் ஆரம்பிக்கும். மதச்சார்பின்மை மற்றும் பேராதிக்க எதிர்ப்பு என மேல்பூச்சு பூசி உள்ளே இராட்சதம் வளரும் பின்னர் நேரம் வருகையில் பாகிஸ்தான் வேண்டும் ‘நேரடி நடவடிக்கை ஜிகாத்தில்’ இறங்கி இணைவைக்கும் இளிச்சவாயர்களை வீடு வீடாக ஏறி குடும்பத்துடன் கருவறுக்கும். இந்த இருண்ட metamorphosis-க்கு எப்போதுமே ஒரு நியாயத்தையும் அது கூறும். இஸ்ரேலிலும் கதை அதுதான்.

யாசர் அராபத்தின் -ஏன் அதற்கும் முந்தைய ‘பாலஸ்தீனிய’ மக்கள் இயக்கங்களிலும்- கூட மிகத்தெளிவாக இருப்பது யூத வெறுப்பியல்தான். அதன் இறையியல் வேர் கொரானில் இருக்கிறது. இதற்கும் முந்தைய கட்டுரை ஒன்றில் பீர் முகமது தமக்கே உரிய மகத்தான எழுத்து திறமையுடன் ஒரு வாக்கியத்தை சொல்லியிருந்தார். அதாவது நாசிக்கள் ‘பாலஸ்தீனிய’ மக்களின் யூத குடியேற்ற எதிர்ப்பினை பயன்படுத்த முன்வந்தார்கள் என. இது பாதி உண்மைதான். இதன் மற்றொரு பாதி ‘பாலஸ்தீனிய’ இஸ்லாமிஸ்ட்கள் நாசி யூத எதிர்ப்புடன் தம்மை முழுமையாக இணைத்துக்கொண்டார்கள். இந்த இணைப்பு யூதேய பிரதேசத்தில் இருந்த ஆங்கில ஆக்கிரமிப்புக்கு எதிரானதல்ல என்பதனை கவனிக்கவேண்டும். (அப்படி என்றால் ஏன் சுபாஷ் சந்திர போஸ் நாசிகளின் ஆதரவை இந்திய விடுதலைக்காக வேண்டவில்லையா எனக்கூறிவிடலாம்.) உதாரணமாக, யாசர் அரா·பத்தின் நெருங்கிய உறவினரும், ஜெருசலேம் மசூதியின் மு·ப்தியும், பின்னாளின் தன் ஹீரோ என யாசர் அரா·ப்பத்தால் போற்றப்படக்கூடியவருமான ஹாஜியார் அமின் அல்-ஹ¤சைனியை எடுத்துக்கொள்ளலாம்.

சர் ஹெர்பர்ட் சாமுவேல் எனும் பிரிட்டிஷ் காலனிய அதிகாரியால் 1922 இல் ஜெருசலேம் நகர மு·ப்தியாகவும், ‘அதி-மு·ப்தியாகவும்’ (Grand Mufti) பதவியில் ஏற்றப்பட்டவர் அமின்-அல்-ஹ¤சைனி. தாம் பொறுப்பேற்ற நாள் முதல் யூதர்களுக்கு எதிராக கலவரங்களில் ஈடுபட்டார் ஹ¤சைனி. 1937 இல் அல் ஹ¤சைனி நாசிகளின் யூதவெறுப்பியலால் கவரப்பட்டு வெளிப்படையாக அவர்களுக்கு ஆதரவு அளித்தார். ‘பாலஸ்தீனத்தில்’ யூதக்குடியேற்றம் நடக்காமல் தடுத்திடுமாறு நாசிகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். இதன் விளைவாக சிரியாவுக்கு அன்னார் நாடு கடத்தப்பட்டார். 1940 இல் அவர் நாசிகளுக்கு விடுத்த கோரிக்கை தெளிவானது: “…பாலஸ்தீனத்திலும் இதர அராபிய நாடுகளிலும் அராபியர்களின் தேசிய மற்றும் இன நலன்களுக்கு ஏற்ற வகையில் யூத பிரச்சனையை ஜெர்மனியிலும் இத்தாலியிலும் தீர்க்கப்படுகிற விதத்தில் தீர்க்க” அவர் கோரிக்கை விடுத்தார். இதற்கு அவர் செயல் வடிவமும் அளித்தார் என்பதுதான் கொடுமை. நீயூரம்பர்க் விசாரணையின் போது எய்க்மானின் உதவியாளன் விஸிலென்ஸி அளித்த வாக்குமூலம்: ” ஐரோப்பிய யூதர்களை திட்டமிட்ட முறையில் அழித்திடும் செயல்முறையை நடைமுறை படுத்தத் தூண்டியவர்களுள் மு·ப்தியும் ஒருவர். எய்க்மானுக்கும் ஹிம்லருக்கும் அவர் ஆலோசகராக செயல்பட்டார்… அவர் ஆச்ட்விச் வதைமுகாம்களையும் எய்க்மானுடன் சென்று பார்வையிட்டதாக கேள்விப்பட்டேன்.” மார்ச் 1 1944 இல் அச்சு நாடுகளின் வானொலி மூலம் மு·ப்தி கொடுத்த கட்டளை: “யூதர்களை கண்ட இடங்களிலெல்லாம் கொல்லுங்கள். இது அல்லாவை மகிழ்விக்கும். வரலாற்றை மகிழ்விக்கும். மார்க்கத்தை மகிழ்விக்கும். உங்களுக்கு கௌரவப்படுத்தும். அல்லா உங்களுடன் இருப்பாராக.” மார்ச் 1 1944 இல் அச்சு நாடுகளின் வானொலி மூலம் மு·ப்தி கொடுத்த கட்டளை: “யூதர்களை கண்ட இடங்களிலெல்லாம் கொல்லுங்கள். இது அல்லாவை மகிழ்விக்கும். வரலாற்றை மகிழ்விக்கும். மார்க்கத்தை மகிழ்விக்கும். உங்களுக்கு கௌரவப்படுத்தும். அல்லா உங்களுடன் இருப்பாராக.” யாசர் அராபத் பாலஸ்தீனிய நாளேடான அல் குதுஸ¤க்கு ஆகஸ்ட் 2 2002 இல் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகிறார்: “நாங்கள் ஒரு மகத்தான மக்கள். எங்கள் ஹீரோவான ஹாஜி அமின் அல் ஹ¤சைனியை போல ஒருவரைப் பார்க்க முடியுமா? அவரை நாசிகளின் ஆதரவாளர் என்று சொன்னார்கள். அவரை அழிக்க பல முயற்சிகள் நடந்தன. ஆனா அவர் கெய்ரோவில் வாழ்ந்தார். அவர் 1948 இல் இஸ்ரேலுக்கு எதிரான போரில் பங்கேற்றார். அந்த போரில் அவரது படையில் நானும் ஒருவன்.” ஆக வேர்களிலேயே விஷமிருக்க, பீர் முக்மது கூறுகிறார் யாசர் அராபத் யூதர்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இணைந்து வாழ்வதை விரும்பினார் என. ஹமாஸ் போல அல்ல பிஎல்ஓ. வெளிப்படையாக விஷப்பல்லைக் காட்டியதில்லை. மதச்சார்பற்ற வார்த்தை ஜாலங்கள் மூடி மறைத்ததென்னவோ ஹமாஸ் கக்கிய அதே அடிப்படைவாதம் கலந்த யூத வெறுப்பியலைத்தான்.

இஸ்ரேல் பிரகடனத்தினை அடுத்து அரபு நாடுகளின் கூட்டுப்படைகள் யூதர்களைக் கடலுக்குள் தள்ளி அழிப்போம் என்கிற கோஷத்துடன் ஜிகாத்தைப் பிரகடனப்படுத்திய போது அதையும் ஆதரித்தவர் யாசர் அரா·பத்.முதல் வளைகுடா போரின் போது சதாம் இரசாயனத் தாக்குதலை யூத குடிமக்கள் வாழும் பகுதிகளில் ஸ்கட் ஏவுகணைகள் மூலம் நடத்தப் போவதாகக் கூறியதை வெளிப்படையாக வரவேற்றவர் யாசர் அரா·பத் (அப்போது தூர்தர்ஷனில் வெளியான ப்ரணாய்ராயின் ‘வோர்ல்ட் திஸ் வீக்’ நிகழ்ச்சியில் சதாமின் அறிவிப்பும் அது முடிந்ததும் அரா·பத் அவரைக் கட்டித்தழுவுவதும் காட்டப்பட்டன.).ஆக ஒவ்வொரு முறையும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் யூதர்களின் முழுமையான அழிவே தமது நோக்கம் எனக் கூறவும் நிரூபிக்கவும் தவறியதில்லை யாசர். ஆனால் பீர் முகமது கூறுகிறார்: “யாசர் அரபாத்தின் கனவு யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அடங்கிய சுதந்திர பாலஸ்தீனாகவே இருந்தது.” பின்நவீனத்துவ நேர்மை கொழுந்து விட்டு எரிகிறது. வேறென்ன!

பீர் முகமது எழுதுகிறார் : “இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை யூத அறிவுஜீவிகள் கூட ஒத்துக் கொள்வதில்லை….இஸ்ரேல் உருவானவுடன் யூத தலைவர்கள் ஐன்ஸ்டீனை இஸ்ரேல் ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் படி கேட்டுக்கொண்டதையும் அதை ஐன்ஸ்டீன் மறுத்ததையும் இதனோடு நாம் ஒப்பிட்டு பார்க்க முடியும்.” 1938 இல் நாம் பார்க்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காந்தியவாதி. ஒரு யூத தேசம் என்பது யூத தர்மத்தின் பிரபஞ்சம் தழுவிய ஆன்மிக மாண்புகளைக் குறுக்கிவிடும்; துன்பப்படுவதில் ஆன்மிக முன்னேற்றம் உள்ளது என்கிற மாதிரியான நிலைப்பாட்டினைக் கொண்டவர். அவர் கூட பாலஸ்தீனிய பிரதேசத்தில் யூதக் குடியேற்றங்களை ‘ஆக்கிரமிப்பாக’ காணவில்லை. நேர் மாறாக உள்ளது அவர் சித்தரிக்கும் காட்சி: “ஸியோனிஸத்தின் ஆக்கபூர்வமான செயல்பாடு பாலஸ்தீனிய பிரதேசங்களில் அனைவருடைய எதிர்பார்ப்புகளையும் மிஞ்சிவிட்டது. உலகம் முழுவதும் உள்ள நம் சகோதரர்களின் ஒத்துழைப்போடு சுய-தியாகங்களால் உருவாக்கப்பட்ட இந்த ஆக்கபூர்வமான செயல்பாடு நம் சகோதரர்கள் எண்ணற்றவர்களின் மிக முக்கியமான தேவைகளை பூர்த்தி செய்துள்ளது….காலையில் பயிரிடப்படும் வயல்கள் இரவுகளில் வெறி கொண்ட அரபு சமூகவிரோதிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டியுள்ளது…” (Our debt to Zionism, ஏப்ரல் 17, 1938) ஆனால் 1949 இன் இறுதியில் எந்த ஐன்ஸ்டைன் யூத நாட்டினை தமது ஆன்மிக யூத பண்பினால் ஏற்கவில்லையோ அதே ஐன்ஸ்டைன் இஸ்ரேலின் யூதர்களுக்கு உதவிட அமெரிக்கா மற்றும் உலகெங்கும் வாழும் யூத சமுதாயத்திற்கு அழைப்பு விடுத்தார். “இன்றைக்கு யூதர்களாகிய நமக்கு இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் இஸ்ரேலில் ஆச்சரியப்படத்தக்க சக்தியுடனும் சமானமில்லாத தியாகத்திற்கான வைராக்கியத்துடனும், அடைந்திருக்கும் மகத்தான சாதனையை நிலைப்படுத்திக் கொள்வதுதாம்.” (The Jews of Israel, 27-நவம்பர்-1949) ஆக, ஐன்ஸ்டைன் இஸ்ரேலின் தலைமையை மறுத்தது இஸ்ரேலின் போராட்டத்தை ஆக்கிரமிப்பாக எண்ணியல்ல. மாறாக தமக்கு அரசியலோ அல்லது அல்லது உயர்பீட சடங்காச்சாரங்களோ தமக்கு ஒத்து வராது என்பதால்தாம். எனவே சகோதரர் பீர் முகமது எழுதுவதில் ஒரு அடிப்படை தவறும் பிரச்சார மாயையை ஏற்படுத்தும் நோக்கமும் உள்ளது.

நிற்க. திரு.பீர் முகமதுவின் வாதங்கள் அவரது உலகப் பார்வை ஆகியவை மதச்சார்பற்ற மொழியின் மூலம் வெளிப்படுத்தப்படும் இஸ்லாமிய அடிப்படைவாதமும் இஸ்லாமிய விரிவாதிக்க பாசிசத்திற்கான ஆதரவுமே ஆகும். இத்தகைய சாமர்த்தியமான மொழியாடல் இதற்கு முந்தைய கால கட்டத்திலும் ‘பேராதிக்க எதிர்ப்பு சக்தியாக’ விரிவாதிக்க-இஸ்லாமிய அரசியலாளர்களால் முன்வைக்கப்பட்டது. மௌலானா முகமது அலிக்கு பிரிட்டிஷ்-துருக்கிய பூசல் எழும்வரை பாரத ஒற்றுமையே கேலிக்குரியதாக இருந்ததும் பின்னர் பாரத ஒற்றுமையை உளப்பூர்வமாக நம்பிய காந்திஜியினுடன் இணைந்ததும் அதற்கு பிறகு அதே இயக்கம் முழுமையான ஹிட்லரியத்தன்மையுடன் ஹிந்துக்களை மேற்கு பஞ்சாபிலும் கிழக்கு வங்கத்திலும் இன-ஒழிப்பு செய்ததும் வரலாற்றில் தெள்ளத்தெளிவாகவே இருக்கின்றன. இன்றைய இஸ்லாமியவாதிகளின் அமெரிக்க எதிர்ப்பும் சரி அன்றைய இஸ்லாமியவாதிகளின் அரைகுறை பிரிட்டிஷ் எதிர்ப்பும் சரி மார்க்க ரீதியிலான வழிகாட்டுதலில் மட்டுமே அமைந்தவை. மானுட நேயம் எனும் முலாம் பூசப்பட்டிருப்பினும் சரி செவ்விய-நவீனத்துவ-பின்நவீனத்துவ ஜிகாத் வரையறைகளுக்கு அப்பாலும் சரி பீர்முகமது போன்றோரின் குரல் பாலஸ்தீனிய பயங்கரவாதிகளுக்காகவோ பள்ளிக்குழந்தைகளைக் கொல்லும் செசென்னிய பயங்கரவாதிகளுக்காவோ, ஈராக்கில் அமெரிக்கர்களை விட ஷியாக்களையே குறிவைத்து அழிக்கும் சதாம் ஹ¤சைனின் சன்னி கூலிப்படையினருக்காகவோ எழுமே அல்லாது இலங்கை தமிழருக்காகவோ, பங்களா தேஷில் அவமானப்படுத்தி அழிக்கப்படும் தலித் ஹிந்துக்களுக்காவோ அல்லது இஸ்லாமியரால் நிலம் பறித்து விரட்டப்பட்ட பௌத்த சக்மாக்களுக்காகவோ அல்லது திபெத்திய இனப்படுகொலைக்காகவோ அல்லது காஷ்மீரிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட இன சுத்தீகரிப்பு செய்யப்பட்ட காஷ்மீரி ஹிந்துக்களுக்காகவோ எழும்பவே எழும்பாது. பின்நவீனத்துவ அதிசயங்களில் இதுவும் ஒன்று.

ஆனால் போஸ்னியாவில் முஸ்லீம்கள் அழிக்கப்பட்டபோது இஸ்ரேல் எதிர்ப்புக்குரல் கொடுக்க தயங்கவில்லை. நேடோ விமானங்கள் போஸ்னிய முஸ்லீம்களூக்காக தமது சொந்த மதத்தவரை எதிர்த்து குண்டு மழை பெய்ய தயங்கவில்லை.பீர் முகமது எழுதுகிறார்: “நான் இஸ்ரேல் மீது சேற்றை வாரி இறைக்கிறேன் என்பதல்ல. அது ஏற்கனவே சேறுகளாலும், மணற்புழுதிகளாலுமானது.”
உண்மைதான்.
மணற்புழுதியாக கிடந்த பிரதேசத்தை வியர்வையைச் சிந்தி வயல் சேறாக மாற்றிய வீரத் தியாகிகளினால் உருவாக்கப்பட்டதுதான் இஸ்ரேல்.
மனப்பிறழ்வின் விளைவாக விண்ணிலிருந்து இறங்கியதாக நம்பப்படும் மதவெறியால் உருவாக்கப்பட்ட மானுடமிழந்த பெட்ரோ-சாம்ராஜ்ஜியங்களைக் காட்டிலும் மணல் புழுதியும் வயல் காட்டு சேறும், அப்புழுதியும் சேறும் சார்ந்த இஸ்ரேலும் மகத்தானவைதான்.


aravindan.neelakandan@gmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்