அர்ச்சகராகும் உரிமை மற்றும் வெங்கட்சாமிநாதனின் கேள்வி

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

கற்பக விநாயகம்



‘அனைத்து இந்துக்களே ஒன்று திரளுங்கள்’ என்று ஒரு குரல் 90களின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டிலும் இந்துத்துவ சக்திகளின் வாயில் இருந்து ஒலித்தது. இங்கிருந்த ஒரு சக்தி தேவதையும் அதனை வழிமொழிந்தபடியே செங்கல் எடுத்துக் கொடுத்திடத் துணைபோனது. டிசம்பர்6,1992இல் பாபரி மசூதியை இடித்து இந்து ஒற்றுமையை நிலைநிறுத்திக்கொண்டனர், இந்துத்துவவாதிகள்.

இவ்வாறு கட்டி எழுப்பப்பட்ட இந்து ஒற்றுமையின் தன்மை என்ன என்பதை 1993 மேமாதத்தில் சிறீரங்கம் ஊரில் ஊருலகம் தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பை மக்கள் கலை இலக்கியக் கழகம் (ம.க.இ.க.) எனும் அமைப்பினர் வழங்கினர்.

அனைத்து இந்துக்களும், சிறீரங்கத்தில் நெடுநாளாய்ப் பள்ளி கொண்டிருக்கும் ‘அரங்கமாநகருளானை’ அவனின் கருவறையில் நுழைந்தே தரிசித்திட அனைத்து உழைக்கும் இந்துக்களும்,ம.க.இ.க. தலைமையில் திரண்டு வந்தனர். அக்கோவிலின் கருவறையில் நுழைந்தபோதுதான், சங்க பரிவாரங்கள் அன்று வரை சொல்லி வந்த ‘அனைவரும் இந்துக்கள்’ எனும் பொய்யான விசயம் அம்பலமானது. உள்ளே நுழைந்த மக்கள் அனைவரும் இரும்புத்தடிகளால் மண்டை பிளக்கப்பட்டு, சுற்றிவளைத்து அடித்து நொறுக்கப்பட்டனர். திரவுபதியின் மானம் காத்த கிருஷ்ணனின் இன்னொரு அவதாரமான பள்ளிகொண்டான், அன்று உழைக்கும் மக்களைக் கருவறையில் காக்க வராமல் நெடிதுயிலில் ஆழ்ந்துதான் இருந்தான். கருவறையில் தீண்டாமையைக் கோலோச்சும் இந்துமத மகிமை அன்று வெட்டவெளிச்சமானது. செங்கல் தூக்கிப்போன அப்பாவி இந்துக்களுக்கு கொஞ்சமாவது மண்டையில் உரைத்திருக்கும், அக்கோவில் நுழைவு.

மறுநாளே கோவிலின் கதவைச் சாத்தி, மாட்டு மூத்திரம் உள்ளிட்ட பஞ்சகவ்யம் கொண்டும் ‘தீட்டுக்கழிப்புச் சடங்கை’ நிகழ்த்தியது இந்து தர்மம்.

சமீபத்தில் ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற தமிழக அரசின் முடிவை அமோகமாக வரவேற்றனர் இந்துக்களின் காவல்துறையினரான விஷ்வ ஹிந்து பரிஷ்த்தினரும், பாரதீய ஜனதா கட்சியும். ஆகா! இதுவல்லவா உண்மையான இந்துத்துவம் என்று புளகாங்கிதமடைந்தனர், இந்துத்துவ பஜனை கோஷ்டியினர்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் முடிவை எதிர்த்து நீதிமன்றம் சென்றனர், ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம், தென்னிந்திய திருக்கோவில் அர்ச்சகர்கள் சங்கம் ஆகியோர்.

இரு தினங்களுக்கு முன், தமிழக அரசின் இம்முடிவைத் தடை செய்து, உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சைவாச்சார்யார்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடிய ஆசாமிகள் யாவர் தெரியுமா? பராசரண் ஒருவர்.

மற்றவர்?

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அருண் ஜேட்லிதான் அந்த இன்னொருவர். (ஆதாரம் – தினகரன், 15 ஆகஸ்ட் 2006)

‘தமிழக அரசின் இச்சட்டம், இந்து தர்மத்துக்கு எதிரானது’ என்று வாதிட்டனர்.

இந்துக்கள் அனைவரும் சமம் என்பது மாதிரி பம்மாத்து வேலை பண்ணி, மதவெறியில் குளிர்காயும் இதே கூட்டம்தான், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகிட ஆதரவு தெரிவித்து தீர்மானமும் போட்டது. பேட்டி தந்தது.

விசயம் கோர்ட்டுக்கு வரும்போது, இந்து தர்மமான சாதி ஆதிக்கத்தைக் காக்க கருப்பு கோட்டு மாட்டி வாதாடுகிறது.

இம்முறையும், இந்துத்துவத்தின் இரட்டை வேசம் அம்பலமாகி உள்ளது.

இதே போன்றுதான், சுதேசிவேசம் போட்டுக்கொண்டே நாட்டை அன்னியனுக்கு 6 ஆண்டுகளாய் அது காட்டிக்கொடுத்தது.

‘இந்தியா ஒளிர்கிறது’ எனும் விளம்பரத்தை வடிவமைக்கவே அது வெளிநாட்டு நிறுவனத்தை சார்ந்து நின்ற அதே வேளையில், கோவையில் சுதேசி வர்த்தகக் கண்காட்சியையும் நடத்தியதுதான் அதன் இரட்டைவேசத்தின் மற்றொரு பரிமாணம்.

***************************************************************************************************
இரு வாரங்களுக்கு முன்னர், பி.கே.சிவகுமாரின் ‘அட்லாண்டிக்குக்கு அப்பால்’ எனும் நூலை சிலாகித்து, நண்பர் வெங்கட்சாமிநாதன் எழுதியிருந்தார். பெரியாரை ‘பெரியார் எனும் வெங்காயம்’ என்று எழுதுவதால் பி.கே.எஸ்.ஐ வெங்கட்சாமிநாதனுக்குப் பிடித்துப்போனதொன்றும் அதிசயமில்லை. பிடிக்காமல் போனால்தான் அதிசயிக்கத் தோன்றும். விசயம் அதுவல்ல இப்போ.

அந்நூலினைக் குறித்த பாராட்டுரை / விமர்சனத்தில் வெ.சா., அந்நூலுக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார்.

“எங்கள் குழந்தைகள் பள்ளியில் வந்தே மாதரம் பாடாது. அது எங்கள் மதத்திற்கு விரோதம்” என்று சொல்லும் மதத்தலைவரை, அரசியல் தலைவரை என்னென்பது?” என்பதுதான் அவரின் கேள்வி.

இக்கேள்வியை ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கிளையமைப்புகள் காலம் காலமாய்க் கேட்டுத் துவேஷத்தை உண்டுபண்ணுவதும், அதற்கு மதச்சார்பற்றவர்கள் விளக்கமளிப்பதும் பலமுறை திரும்பத்திரும்ப நடந்து வருகின்றன.

ஒருவன் ‘வந்தேமாதரம்’ பாடுவதாலேயே அவன் தேசப்பற்றாளன் என்றோ, அதனைப் பாடாததாலே பற்றில்லாதவன் என்றோ பொருள்கொள்ள முடியுமா?

எத்தனைதான் சரியாக விளக்கம் தந்தாலும், சிலரிடம் (சோ மாதிரியானவர்கள்) இருந்து சில கேள்விகள் எப்போதுமே கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. (சாதியை ஒழிக்கப்போவதாய்ச் சொன்னவர்கள் ஏன் ஸ்கூலில் சாதி கேட்டுப் பிள்ளைகளைச் சேர்க்கின்றனர்? கடவுளை வணங்குபவனைக் காட்டுமிராண்டி என்றவர்கள் ஏன் பெரியாருக்கே சிலை வைத்து மாலைபோடுகின்றனர்? என்பதெல்லாம் ‘அறிவாளி’த்தனமான கேள்விகளுக்கு உதாரணம்)

வந்தே மாதரம் பாடலின் வரலாறு என்ன?

மொகலாயர் ஆட்சிக்குப் பிறகு வங்காளத்தை ஆண்ட முசுலீம் நவாபுகள், ஜமீன்தார்கள் ஆட்சியில் பார்ப்பன மேல்சாதியினர் தங்கள் ஆதிக்கத்தை இழந்து தவித்தனர். எனவே நவாபுகளை முறியடித்த ஆங்கிலேயர்களை அவர்கள் நெஞ்சார வாழ்த்தி வரவேற்றனர். இந்தச் சூழ்நிலையை வைத்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி எனும் பார்ப்பனர் ‘ஆனந்த மடம்’ எனும் புதினத்தை எழுதினார். முசுலீம் அரசர்களை எதிர்த்து இந்துச் சாமியார்கள் போராடுவதைக் கூறும் இக்கதையில்தான் ‘வந்தே மாதரம்’ (தாய்க்கு வணக்கம்) என்ற பாடல் வருகிறது. காளி, சரஸ்வதி, லட்சுமி என்று தாயை விளிக்கும் ‘வந்தே மாதரம்’ இப்படித்தான் தோன்றியது.

“நம்முடைய நவாபின் ராஜ்ய பரிபாலனத்தைப் பாரும். மதம் போய் விட்டது; சமூகம் போய் விட்டது; மானம் போய்விட்டது;குலம் போய்விட்டது; இப்போது பிராணனும் போய்க்கொண்டிருக்கிறது..” இது ‘ஆனந்தமடம்’ நாவலில் வரும் ஓர் உரையாடல். இதில் யாருடைய மதம்-சமூகம்-மானம்-குலம்-பிராணன் போய்விட்டதென்பதைத் தெள்ளெனவே உணரமுடியும். அதனால்தான் முசுலீம் அரசர்களிடமிருந்து வங்கத்து மாதாவை விடுதலை செய்த ‘ஆங்கிலப் பிதாவை’ அன்றைய வங்கத்துப் பார்ப்பன மேல் சாதியினர் மனதார வாழ்த்தினர். வந்தேமாதரத்தின் தோற்றத்திலேயே நாட்டுப்பற்றுக்கு இடமில்லை.

வந்தேமாதரம் எனும் பஜனைப் பாடலை, தேசபக்தியோடு கபடமாய்ச் சேர்த்த பெருமை காங்கிரசுக்கு உண்டு. அப்போதே இப்பாடலைப் பாட மறுத்த முசுலிம்களின் தேசியத்தைக் கொச்சைப்படுத்திய மேல்சாதிப்போக்கு வெகு பிரபலம்.

வந்தேமாதரம் பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பினைப் பார்க்கையில் அப்பாடலில் துர்க்கா,லட்சுமி போன்ற தேவதைகள் வருகின்றன.

“Thou art Durga, Lady and Queen,
With her hands that strike and her
swords of sheen,
Thou art Lakshmi lotus-throned,
And the Muse a hundred-toned,
Pure and perfect without peer,
Mother lend thine ear,
Rich with thy hurrying streams,
Bright with thy orchard gleems,
Dark of hue O candid-fair”

காலப்போக்கில் வங்கத்து வந்தே மாதரம் ஆங்கிலப் பிதாவை எதிர்க்கும் பாரத மாதாவாக மறுபிறவி எடுத்தது. இந்த பாரத மாதா பஜனையை விடுதலைப் போராட்டத்தில் திணித்தது காங்கிரசு கும்பலின் கைங்கர்யமாகும். இந்திய அளவில் இந்து மதமும், பாரத மாதாவும் உருவாக்கப்பட்டு வந்த நிகழ்ச்சிப் போக்கும், காங்கிரசின் பார்ப்பன மேல்சாதித் தலைவர்களும் அவர்களின் பார்ப்பனீய இந்துத்துவக் கருத்தும் ‘வந்தே மாதரத்தை’ப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருந்தன.

துர்க்கா, லட்சுமிதான் பாரத மாதா; இந்தப் பெண் தெய்வத்தை வருணிக்கும் பாடல்தான் ‘விடுதலை கீதம்’ என்று சொன்னால் அது பிற மதத்தினரை வெறுப்படையச் செய்யாதா?

முசுலீம்,கிறித்துவ மதங்கள் ஓரிறை வழிபாட்டை மையமாகக் கொண்டவை. அதிலும் முசுலிம் மார்க்கம், உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத ஒன்று. அம்மதத்தைப் பின்பற்றுவோரிடம், துர்க்கா மாதா பஜனைப்பாட்டை, ‘இதுதான்யா தேசியகீதம்; பாடு’ எனச் சொல்லிப் பாட வற்புறுத்துவது என்னவகை வக்கிரம் எனத் தெரியவில்லை?

இந்துப் பாசிசவாதிகள் இவ்வளவு நாளாய்க் கேட்டுக்கொண்டிருந்த ஒரு கேள்வி, இலக்கிய விமர்சகர் ஒருவரிடமும் இருந்து வருவதுதான் புதிதாக உள்ளது. வெங்கட்சாமிநாதன் ஒளிவுமறைவின்றித் தனது சார்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

***********************
vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்