கபாவில் சமாதியா

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

சூபிமுகமது


சமாதிவழிபாடு என்னும் கபருசியாரத்தை அவமதிக்கும் வகாபியின் கடிதம் கண்டேன். தர்காக்களில் அடங்கப்பட்டிருக்கும் இறைநேசர்களது சூபிஞானிகளின் நினைவிடங்களை நாடிச்செல்வதை திருக்குரானோ ஹதிசோ தடுக்கிறது என்று ஆதாரம் காட்டமுடியுமா.. மஸ்ஜிதுக்கும் தர்காவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இஸ்லாமியர்களின் ஹஜ் வழிபாடு பிற சமயத்தவரின் பார்வையில் ஒருவகை சமாதி/கல் வணக்கமாகவே கருதப்படுகிறது.ஊரெல்லாம் அல்லாவுக்கான பள்ளிவாசல் இருக்கிறது ஆனால் ஏன் வசதியுள்ள பணக்காரர்கள் மக்காவின் கபாவுக்கு செல்கிறார்கள். அங்குதான் அல்லாவின் சமாதி இருக்கிறது என்று நினைப்பதை தடுக்கமுடியவில்லை. ஏனெனில் நபிமுகமதுவிற்கு முன்பு அரபு பழங்குடிகள் அல்லா என்னும் ஆண்கடவுளை சிலையாக வணங்கி வந்துள்ளார்கள் என்பது சமூக வரலாறு.

மேலும் ஹஸ்ருல் அஸ்வத் கறுப்புக் கல்லை தொட்டு முத்தமிடுவது பிறருக்கு கல் வணக்கமாகவே படுகிறது.

அதுசரி கபாவின் வெளியே ஹரம்சரீபில் தொழுகை நடத்தும் அதேசமயத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் கபாவின் வாசல் திறக்கப்படுகிறது. சவுதி மன்னர் சார்ந்த பரம்பரைக்குமட்டுமே போக அனுமதியுள்ள கபாவின் உட்புறத்தில் என்ன இருக்கிறது வகாபி ஆதாரத்தோடு சொல்லமுடியுமா..

கபாவில் நடைபெறும் ஹஜ்ஜின் அமல்கள் அனைத்தும் நபி இபுராகீம் வாழ்வோடு சம்மந்தப்பட்டதாகும். நபி இபுராகீமின் இளையதுணைவியார் அன்னை ஹாஜராமகன் இஸ்மாயிலின் தாகம் தணிகக ஸபா மர்வா மலைக்குன்றுகளிடையே ஒடிய ஒட்டம்தான் தொங்கோட்டம் என்னும் ஸயூசெய்தலாக நடப்பில் உள்ளது. மக்காவின் புனித எல்லைமுழுவதும் மகாமு இபுராகீம் என்றே அழைக்கப்படுகிறது.இங்குதான் இரண்டு ரக அத் தொழவேண்டும். இந்நிலையில் கபாவின் உள்ளே நபி இபுராகீமின் சமாதிஅடையாளம்தான் இருக்கிறது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இதை இல்லையென வகாபி மறுக்கட்டும் பார்க்கலாம்.

மற்றுமொரு கருத்து கபா என்ற சொல் கர்ப்பகிருகா என்ற சமஸ்கிருத மூலச் சொல்லிலிருந்து உருவானது என்றும் இது கோவிலின் மூலஸ்தான கருவறையை குறிப்பது போன்றதாகும் என்பதும் கபாவிற்கு உள்ளே அஷ்ட கோண வடிவ மகாம் ஏ இபுராகீமின் பீடம் உள்ளது என்றொரு கருத்தும் உள்ளது. மேலும் ஹஸ்ருல் அஸ்வத் கறுப்புக்கல்லை ஸ்ங்கே அஷ்வேத என்னும் பொருள்படும் வெண்மை அல்லாத கல் எனவும் இது சிவலிங்கத்திற்கு ஒப்பானது எனவும் கூட பொருள் கொள்ளப்படுகிறது.

தர்கா சமாதிகளை இடிக்க கடப்பாரைகளை தூக்கித்திரியும் வகாபிகள் இந்த கபாவை என்ன செய்யப்போகிறார்களோ…?
—————————
tamilsufi@yahoo.com

Series Navigation

சூபிமுகமது

சூபிமுகமது