இஸ்லாம் சம்பந்தமான உரையாடல்களுக்கு ஒரு எதிர்வினை

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


கடந்த பல மாதங்களாக நடைப்பெற்று வரும் இஸ்லாமிய உரையாடல்களில் முஸ்லிம்கள் ஒரு அணியிலும் வகாபிகள் ஒரு அணியிலுமாக வாதபிரதிவாதங்களில் ஈடுப்பட்டு வருவது நல்ல விஷயம் தான்.அல்தூசர் என்ற சிந்தனையாளர் அறிவுஜீவிகளை இரண்டு விதமாக பிரிப்பார்.ஒன்று உயிர்ப்புமிக்க அறிவுஜீவிகள்(organic intellectuals) மற்றது மரபுசார் அறிவுஜீவிகள்(traditional intellectuals).ஹெச்,ஜி,ரசூல் அந்தவகையில் முதல் பிரிவிலும் சூபி முகம்மது இரண்டாம் பிரிவிலும் வருகிறார்கள்.வகாபிகள் இந்த இரண்டு பிரிவிலும் இல்லை என்றால் எந்தவகையில் சொல்லவேண்டுமென்றே தெரியவில்லை.சரி அவர்களும் தான் அறிவை பயன்படுத்துகிறார்கள்?.ஜர்கன் ஹெபர்மாஸ் எனும் சிந்தனையாளர் அறிவை மூன்றாக பிரிப்பார்.மரபு அறிவு(traditional knowledge) ,விஞ்ஞான அறிவு (scientific knowledge),தளைகளுடைய அறிவு (emancipatory knowledge) என்பதாகும்.இதில் மூன்றாவது பிரிவு பற்றி அவர் அதிகம் விவாதிக்கிறார். நான் வகாபிகளை மூன்றாவது பிரிவினராகவே பார்க்கிறேன்.மரபுக்கு எதிரான விஞ்ஞானத்துக்கு எதிரான தளைகள் இவர்களிடம் நிறைய இருக்கிறது.தான் உண்மை என்று நம்பும் விஷயத்துக்கு வலு சேர்க்கும் விதமாக கட்டமைக்கிற விதம் தான் தளையுடைய அறிவு எனப்படும்.துய இஸ்லாம் என்ற பேரில் இவர்கள் வைக்கும் கருத்துக்கள் வெறும் அனுமானங்களே.சிந்தஸிஸ்ட் (Synthesist),ஜடியலிஸ்ட் (Idealist) ,பிரக்மாட்டிஸ்ட் (Pragmatist) ,ரியலிஸ்ட் (Realist) ,அனாலிஸ்ட் (Analyst) என்றவகையில் கருத்துகள் உருவாகாமல் ஹைபோதசிஸ்ட் (hypothesist) வகையாக கருத்துகள் உருவானால் அதுவே இமான்சிபேட்டரி நாலட்ஜ் (Emancipatory Knowledge) என்றழைக்கப்படும்.இவர்கள் பயன்படுத்தும் பகுத்தறிவும்,விஞ்ஞானமும் சூடோ நாலட்ஜ் (போலி அறிவு) என்றழைக்கப்படும். ஏனெனில் தீசிஸ் (thesis) ,ஆன்றி தீசிஸ் (Anti-thesis) ,சிந்தஸிஸ் (Synthesis) போன்றவை தொகுப்பாய்வு,பகுப்பாய்வு கொள்ளும் பகுத்தறிவின் உட்கிடங்களாகும்.ஆனால் வகாபிகள் சூடோ நாலட்ஜ் (Pseudo-knowledge) மாத்திரமே கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் பயன்படுத்தும் குரான் வசனங்களும் ஹதீதுகளும் அவர்களுக்கே எதிரான கருத்தை கொண்டிருக்கிறது என்பது அவர்களுக்கு புரியாது.பூக்கோ எனும் பின் நவீனத்துவ சிந்தனையாளர் போலி பகுத்தறிவும்,தளையுடைய அறிவுமுடையவரின் அறிவு அதிகாரத்தை கட்டமைக்கிறது என்கிறார்.சமாதிகளை உடைத்தெறிவோம்,முஸ்லிம் பெயர்தாங்கிகள் என்று இழிவு செய்வது போன்றவை அதிகார செயல்பாடுகளாகும்.வகாபிகளை அபௌதிகவாதிகள்( metaphysicists) என்றும் அழைக்கலாம்.அபௌதிகம் என்பது இயற்பியலுக்கு விரோதமானது அல்லது அதை தாண்டியது.அபௌதிக சிந்தனைமுறை எல்லாவற்றையும் ஒற்றை நிலையில் பார்க்கிறது.மார்க்சியம் இதை இயக்கமறுப்பு சிந்தனை என்கிறது.பின் நவீனத்துவம் அபௌதிகத்தின் மரணத்தை விரும்புகிறது.
அபௌதிகவாதிகளும் தர்க்கத்தை (logic) பயன்படுத்துவர்கள் தாம்.இமாம் இப்னு தைமியாவும்,அப்துல் வஹாபும் தொடங்கி அத்தனை வகாபிகளும் பயன்படுத்தும் தர்க்கமுறை ஆங்கிலத்தில் உட்டோபியன் லாஜிக் (Utopian Logic)என்றழைக்கப்படுகிறது.உட்டோபியன் லாஜிக்கின் சிறப்பம்சமே பொய்யை உண்மையாக்குவது என்பதாகும்.முரண்பாடுகளை இவர்களால் சகிக்க இயலாது. இதுவே பெரிய முரண்பாடு என்பதை அவர்களால் புரிய இயலாது.இவர்களது லாஜிக்கே இவர்களுக்கு எதிரானதாகும்.இவர்களது லாஜிக் படி வாசிப்பது( இந்த கடிதத்தையே வாசிக்கும் போது) ஒற்றைநிலையில் புரிந்து கொள்வார்கள்.ஆனால் படிப்பது என்பது பலவகைப்படும்.அரசியல் வாசிப்பு,மறுவாசிப்பு .நோய்நிலை வாசிப்பு , தகர்வமைப்பு வாசிப்பு,பொருள்கோள் வாசிப்பு, உள் அர்த்த வாசிப்பு.சூழலியல் வாசிப்பு,பிரதியியல் வாசிப்பு என விரிந்து கொண்டிருக்கிறது.இவர்களது வாசிப்பு நோய் நிலை வாசிப்பாகும்.அதாவது வாசிப்பதிலும் இத்தனை வித்தியாசங்கள் உண்டன்பதை நம்பமாட்டார்கள்,குரான்,ஹதீதுகளின் மொழியியல் செயல் பாடுகளை தவிர்த்து வெறுமனே வசன மேற்கொள் காட்டுவது தான் இவர்களின் ஆக சிறப்பான அணுகு முறையாகும்.ஆனால் மொழியியல் ஆய்வில் நின்று குறி ஆக்கம்(encoding), பரப்புதல்(transmission),குறியவிழ்ப்பு(decoding),பொருட்குறி யாக்கம்(semantic encoding),இலக்கணகுறியாக்கம் (grammatical encoding), ஒலிக்குறியாக்கம்(phonologigal encoding),ஒலி,இலக்கண.பொருட்குறி அவிழ்ப்பு(decoding) போன்றவற்றுடன் செமியாட்டிக்ஸ் எனும் குறியியல் புலமும் இணைந்து செயல்பட்டு அதன் வழியாக குரான்,ஹதீதை பயன்படுத்தும் போது தவறுவர வாய்ப்பில்லை.ஆனால் வகாபிகளுக்கு மொழிபெயர்ப்பு மட்டும் போதும் புகுந்து விளையாடிவிடுவார்கள்.இது அவர்களுக்கு பாதகமாக இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.அபௌதிகவாதிகளின் புரிதல்,சிந்தனை,ஆய்வு எல்லாம் நியாயகட்டமைப்பை நோக்கி இயங்குகிறது. தான் உண்மையென்று கருதும் கருத்தே இவர்களுக்கு நியாயமாக அதுவே மனஇயக்கமாக உருவாகிறது.இந்த நியாயங்களை இமானுவல் காண்ட் எனும் புகழ்மிக்க தத்துவஞானி வகைப்படுத்தும் போது 1.உலகளாவிய நியாயம் 2.குறிப்பிட்ட நியாயம் 3.ஒருமை நியாயம் 4.மாறுதலான நியாயம் 5.முடிவற்ற நியாயம் 6.வகைசார்ந்த நியாயம் 7.விவரணை நியாயம் 8.அனுமான நியாயம் 9.பிரித்துணரா நியாயம் 10.பிரச்சனை சார்ந்த நியாயம் 11.நிலையான நியாயம் 12. காரணகாரிய நியாயம் என்பதாகும்.இவை சார்ந்து அபௌதிகவாதிகளின் மனம் ,சிந்தனை,செயல் இயங்குவதால் எளிதில் ஏமாந்துவிடுபவர்களாகவும் மீறி சிந்திக்க தெரியாதவர்களாகவும் இருப்பார்கள்.எனவே இவர்கள் நடத்தும் வாதபிரதிவாதங்கள் கோழியிலிருந்து முட்டைவந்ததா? அல்லது முட்டையிலிருந்து கோழிவந்ததா? என்பன போல தான் அமையும் என்பதில் வியப்பில்லை.விவாதங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சொல்லுகிறேன்.இறுதியாக வகாபிகள் ஒருவிஷயத்தை சரியாக வாசித்து புரிந்து கொண்டு பேசட்டும்.அது தான் நல்ல வாசகருக்கு அழகு.அப்படி நிகழாது என்பதே இக்கடிதம் சொல்லும் விஷயமும் ஆகும். பொறுத்திருந்து பார்ப்போம்.

————————

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்