தேயும் விரல்களும், தோய்ந்த நஞ்சும்

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

கருப்பரசன்


முடிந்தவரை மோதிப் பார்ப்பது… கருத்து மோதலில் வெல்ல முடியவில்லையா… திரித்துப் பேசி தூற்றுவது… அதிலும் எதிரி அசரவில்லையா… பாராட்டிப் புகழ்ந்து அரவணைத்து அழித்து விடுவது… இந்த தந்திரம் மலர்மன்னன் `வர்ணத்துக் ‘குலச் சொத்து. புத்தரையே விழுங்கியவர்களல்லவா ? இப்போது பெரியாரை – அவர் கொள்கைகளை ஏப்பம் விட எத்தனிக்கிறார்கள். இதைத்தான் பெரியார் சொன்னார், பார்ப்பனியம் என்பது பலித்தவரை என்று!

பெரியாரை சிறியார் என்று எழுதி மூர்க்கம் காட்டுபவர், தான் நம்பும் கொள்கைகளுக்குச் சிம்ம சொப்பனம் பெரியார் என்று சினங்கொள்ளும் நாணயமான எதிரி. ஆனால் மலர்மன்னனோ, அண்ணா அகவல் பாடினாரே – அந்த ரகம். பெரியாரைப் புகழ்வதுபோல் அவர் வைக்கும் ஒவ்வொரு வாதமும் நஞ்சு தோய்ந்தவை. ஆனாலும் பாராட்டத்தான் வேண்டும் அவரை… இந்துத்துவம் இன்றளவும் செரிமானம் செய்ய முடியாத கருஞ்சூரியனை – பார்ப்பன இந்துமத சிமிழுக்குள் அடைக்கத் துடிக்கும் அவரது முயற்சியை… சாதாரணமானதா என்ன!! மேற்கில்தான் சூரியன் உதிக்கிறான் என்று கூசாமல் சொல்வது.

“ ‘ ‘பெரியாருக்கு உள்ளூறத் தாம் ஒரு ஹிந்து என்ற உணர்வு நீருபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டுதானிருந்தது, ‘ ‘ என்று கூறும் மலர்மன்னன், தம்மை ஒரு ஹிந்துவாக அவர் உணராதிருப்பின் காந்தியார் கொல்லப்பட்டபோது பாரதத்துக்கு ஹிந்துஸ்தான் என்று பெயர் சூட்டலாம் என்று சொல்லி இருப்பாரா என்றும் வினவுகிறார். நல்லவேளை பெரியாரை ஹிந்துவாக்க – பிள்ளையார் சிலை வைத்து அவர் வணங்கினார் என்று சங்பரிவார்கள் வழக்கமாக அள்ளிவிடும் கைச்சரக்கை ஆதாரமாகக் காட்டவில்லை. இப்போதெல்லாம் இதற்கென்ன ஆதாரம் என்று கேட்கத்தான் நிறைய பேர் புறப்பட்டு விட்டார்களே… அதனாலோ என்னவோ ‘ ‘உள்ளூற அந்த உணர்வு கனன்றது ‘ ‘ என்பதோடு சுதாரித்து நிறுத்திக் கொண்டுவிட்டார்போலும்!

பெரியாரின் சொற்களிலேயே – அவருக்குள் கனன்ற உணர்வைச் சொல்லிவிடலாம். இதோ: “நான் மட்டுமல்லாமல், சூத்திரர், பஞ்சமர் என்ற வகுப்புகளில் பலர், அதாவது திராவிடர் கழகம், சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றிலுள்ள பலர் `தாங்கள் இந்துக்கள் அல்ல ‘ ‘ என்றே முடிவு செய்து கொண்டு இருக்கிறார்கள். திருவாரூரில் 1940-ல் கூடிய திராவிடர் கழக மாநாட்டில் `நாங்கள் திராவிடர்கள் ‘ என்றும் `இந்துக்கள் அல்ல ‘ என்றும் ஏகமனதாய் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முடிந்தவரை இந்துக்கள் அல்லாதவர்களாகவே திராவிடர்களாகவே வாழ்ந்தது வருகிறோம். எங்கள் மனப்பூர்வமாகவும் நான், நாங்கள் இந்துக்கள் அல்ல ‘ ‘ என்று செவிட்டில் அடித்துச் சொன்னவருக்கு ஹிந்து உணர்வு கனன்று கொண்டிருந்ததாம்.

காந்தியாரை பெங்களூரில் சந்தித்தபோது, அவருக்குள் கனன்றது என்னவென்று பார்ப்போமா ?

பெரியார்: இந்து மதம் ஒழிந்தாக வேண்டும்

காந்தியார்: ஏன் ?

பெரியார்: இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை.

காந்தியார்: இருக்கிறதே!

பெரியார்: இருக்கிறதாகப் பார்ப்பனர்கள் கற்பித்து மக்கள் மனத்தில் அப்படி நினைக்கும்படி செய்திருக்கிறார்கள்.

காந்தியார்: நீங்கள் சொல்வது எல்லாம் சரி, அதாவது இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. உண்மைதான் ஒப்புக் கொள்கிறேன்.

இந்து மதம் என்பது பார்ப்பன மதம் – வர்ணாசிரமத்தைப் பாதுகாத்து ஜாதி பேதம் போற்றும் சுரண்டல் மதம் என்று காரி உமிழ்ந்து, தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும் அறிவையும் இழந்தான் என்றும், இதிகாசங்கள், புராணங்களை மோசடி-புரட்டு என அம்பலப்படுத்தியவர் ஹிந்துவாம். இந்துக்கள் வணங்கும் ராம பிரானை பேடி என்றும் சீதா பிராட்டியை பஜாரி என்றும் ஆய்ந்துகூறி (அவர் எழுதிய ராமாயன பாத்திரங்கள் -Ramayana: A true reading, உத்தரப் பிரதேச அரசால் தடை செய்யப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் பின்னர் தடை விலக்கப்பட்டது) ராமன் உருவப் படத்தை நடுத்தெருவில் செருப்பாலடித்ததும் அவருக்குள் கனன்ற ஹிந்து உணர்வுதானோ ?

காந்தியார் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டபோது (மறைந்தபோது என்கிறார் மலர்மன்னன்) பெரியார் விடுத்த இரங்கல் செய்தியில், “பார்ப்பனர்கள் தங்கள் சுயநல வாழ்வுக்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மதக் கற்பனைகளே இப்படிப்பட்ட பார்ப்பனர்களை (கோட்சே) உற்பத்தி செய்யும் விளைநிலமாக இருந்து வருகிறது. உண்மையிலேயே மத மாச்சரியம், வகுப்பு மாச்சரியம், இன மாச்சரியம் முதலிய துவேஷங்களுக்கு பார்ப்பன மதம் தவிர மற்றபடி இந்த நாட்டில் வேறு காரணம் இருக்க முடியுமா ? ‘ ‘ என்று இந்து மதத்தை பொட்டில் அடித்துச் சொன்னார். ஆனால் மலர்மன்னன் ஒற்றை வார்த்தையை வைத்து வானத்தை வில்லாக ஒடிக்கிறார். என்னே திறமை.

இடுப்பெலும்பு முறிய துவைத்து எடுத்தாலும், மலர்மன்னன் பெரியாருக்கு CONCESSION தரக் காரணம் இல்லாமலில்லை. அவரே ஒப்புக் கொண்டுள்ளபடி, “சரியோ தவறோ அவரைக் கொண்டாடும் லட்சக்கணக்கானோர் உலகெங்கிலும் வியாபித்திருக்கிறார்கள். அவரைக் கொண்டாடுவோரில் 99 சதவீதம் பேர் இந்துக்கள். ‘ ‘ பெரியார் ஆழ வேரூன்றிவிட்ட ஒரு தத்துவம். அதை எதிர்த்துப்பேசி முறியடிக்கும் முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. அவரைப் புறக்கணிக்கவும் இயலாது. அதனால்தான் இந்தப் புதுத்தந்திரம். உஷார்.

இந்து மதத்தை எவ்வளவு சாடினாலும் பரவாயில்லை. பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் என்று நிரந்தரமாகப் பிளவுபடுத்திவிட்டாராம் பெரியார். அதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை ம.ம.வால். உணராமலா சொன்னார் எங்கள் குன்றக்குடி அடிகளார், ‘இங்கே நாத்திகம் என்பது பெரும்பான்மையினர் நலம். ஆத்திகம் என்பது சிறுகூட்டத்தார் நலம் ‘ என்று!

****

karupparasan@gmail.com

Series Navigation

கருப்பரசன்

கருப்பரசன்