வாழ்க கற்பக விநாயகத்தின் நேர்மை! ஒழிக மலர்மன்னனின் பொய்கள்!

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

அரவிந்தன் நீலகண்டன்


திரு.மலர்மன்னனை வன்மையாக கண்டிக்கிறேன்.

இவர் இஷ்டத்திற்கு சுந்தர.ராமசாமி வீட்டில் தான் தங்கியதாக எழுதுவாராம். (என்ன சதிவேலை பாருங்கள்! பின்னொரு நாள் இப்படி யாராவது கற்பக விநாயகம் மாதிரி நேர்மையான அறிவாளி உண்மையை வெளிப்படுத்திவிடுவார் என்று பேரா. அ.கா. பெருமாளின் 1982 நாட்குறிப்பில் இந்த விசயத்தை பதிவு செய்து வேறு வைத்திருக்கிறார் மனிதர்!) ஆனால் அதனை பொய், அளப்பது என்றெல்லாம் பண்பாடான வார்த்தைகளில் கற்பக விநாயகம் மாதிரி நேர்மையான ஒரு அறிவாளி வெளிப்படுத்தினால் அதனால் மலர்மன்னன் வருத்தம் அடைந்து விட்டாராம்! அண்மைக்காலமாக திண்ணையில் கற்பக விநாயகம் என்கிற பெயரில் எழுதி வரும் நபர் சத்திய சந்தன் ஆவார். அவர் எழுதியுள்ள கட்டுரைகளில் பிரகாசிக்கும் உண்மைகளை பட்டியலிட முடியுமா என்ன ?

– காசி விசுவநாதர் ஆலயம் இடிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து கூறிய உண்மை

– காஷ்மீர கர்ஷனுக்கும் கர்ஷவர்த்தனனுக்கும் வேறுபாடு தெரியாமல் இருவரும் ஒன்று என்கிற அறிவுப்பிரகாசமும், அதனை அறியாமை எனச் சுட்டிக்காட்டியவரை ‘அளப்பதாக ‘ திட்டிய உயர்ந்த மனப்பாங்கும்

– சுவாமி விவேகானந்தர் பாறை வரலாறு குறித்து வேறொருவர் முன்வைத்த பிரச்சாரத்தை சிறிதும் சிந்திக்காமலும் ஆராயாமலும் முன்வைத்த அவசரத்தன்மையில் தெரிந்த மதச்சார்பின்மையையும் சமுதாய நீதியையும் காக்க உண்மையை பலிகொடுத்த தியாகமும் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அவர் திண்ணை வாசகர்களுக்காக கடுமையாக உழைத்து ஆதாரபூர்வமாக எழுதியுள்ள மற்றோர் உண்மையில் வெளிப்படும் நேர்மையின் ஒளியால் கவரப்பட்டு அதனை வழிமொழியவே இதனை நான் எழுதுகிறேன்.

கற்பக விநாயகம் அளக்கிறார் -இல்லை – உண்மை ததும்ப எழுதுகிறார்:

‘கோல்வல்கர் தனது சிந்தனைக் கொத்து எனும் நூலில் தான் விரும்பும் இந்து சமூகம் எப்படிப்பட்டது என்பதை இலை மறை காயாய் சொல்கிறார். ‘தென்னிந்தியாவில் ஒரு ஐரோப்பியருடன் நான் சென்று கொண்டிருந்தேன். அங்கே அரசாங்க அலுவலகத்தில் தாசில்தார் வேலை பார்க்கும் பஞ்சமர் ஒருவர், தன் அலுவலகத்தில் பியூனாக இருக்கும் நாயுடுகாரரைப் பார்த்தார். உடனே பியூனின் காலைத் தொட்டு இந்த தாசில்தார் வணங்கினார். ஐரோப்பியருக்கோ ஆச்சரியம். இதென்ன என்றார். நான் பெருமையுடன் கூறிக்கொண்டேன் – இதுதான் பழம்பெருமை வாய்ந்த பாரதத்தின் கலாச்சாரம் ‘.

கோல்வல்கர் இப்படி கூறுவதாக இந்த பிரச்சார பிரசுரத்தில் படித்தேன் நான் நேரடியாக படிக்கவில்லை என அந்த பிரச்சார நூலின் ஆதாரத்தை அளித்திருக்கலாம். மலர் மன்னன் போன்ற நேர்மையற்ற முதுபெரும் எழுத்தாளர்கள் அப்படி செய்திருக்கக் கூடும். அல்லது அரவிந்தன் நீலகண்டன் போன்ற ஹிந்துத்வ பாசிச பொய்யர்களும் அப்படி செய்திருக்கக் கூடும். ஆனால் கற்பக விநாயகம் இப்படிப்பட்ட அற்ப பிறவியா ? மதச்சார்பின்மை, சமுதாய நீதி ஆகியவற்றை நிலை நாட்ட ஈவெரா சிறியார் வழி வந்த சிறியன அன்றி வேறெதுவும் சிந்திக்க இயலாத நேர்மையாளராயிற்றே. எனவே அவர் கோல்வல்கர் எழுதிய நூலை படித்துதான் கூறுகிறார் என்பது தெளிவான விசயம். ஆக கோல்வல்கர் ஒரு பஞ்சம தாசில்தார் நாயுடு பியூனின் காலைத்தொட்டு வணங்குவதை ஒரு ஐரோப்பியருடன் அவர் சென்று கொண்டிருக்கும் போது பார்த்து, அதை வியந்த ஐரோப்பியரிடம் இதுதான் பழம்பெருமை வாய்ந்த பாரதத்தின் கலாச்சாரம் என்றாரா ?

இதே விசயத்தை ஏற்கனவே திண்ணையில் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விலாவாரியாக ஒரு வியாசம் எழுதியதுண்டென்றாலும், ஒரு யோக்கிய சிகாமணி மீண்டும் மற்றொரு வடிவத்தில் இப்படி உண்மை விளம்பியாக அந்த விசயத்தை உருவெடுக்க வைத்திருப்பதால் மீண்டும் ஒரு முறை விளக்கலாம். இனி கீழே பாருங்கள்:

‘ஆங்கிலேய அதிகாரியின் உதவியாளர் [நாயுடு வகுப்பு சார்ந்தவர்] ஆங்கிலேய அதிகாரியின் கையைப்பிடித்துக் குலுக்கினார். ஆனால் ‘பிராமண ‘ பியூனை கண்டதும் அவர் காலைத்தொட்டு வணங்கினார். அதைக் கண்ட ஆங்கிலேய அதிகாரி வியப்படைந்து தனது உதவியாளரிடம், ‘நான் உன்னுடைய அதிகாரி! என்னிடம் கையை மட்டும் குலுக்கி விட்டு எனது பியூனின் காலை தொட்டு வணங்குகிறாயே ? இது என்ன பிரச்சனை ? ‘ என்றார். அதற்கு அந்த உதவியாளர் (நாயுடு) ‘நீங்கள் எனக்கு பெரிய அதிகாரியாக இருக்கலாம். நீங்கள் ஒரு மிலேச்சர். ஆனால் நாங்கள் வணங்கக் கூடிய பிராமண சமூகத்தை சார்ந்தவர் உங்கள் பியூன் அவரை வணங்க வேண்டியது எனது கடமை. இதுதான் ஹிந்து தர்மம் ‘ என்று கூறினார். (ஆதாரம்: RSS குரு கோல்வாக்கர் எழுதிய Bunch of Thoughts எனும் நூல் – பக். 138-139)

மேலே நீங்கள் வாசித்தது திருவாளர். கற்பக விநாயகம் முன்வைத்த அதே விசயம் குறித்து திருச்சி கீழகுமரேசபுரம் ‘பெரியார் ‘ மையம் வெளியிட்ட ‘ஆர்.எஸ்.எஸ் கேள்விகளுக்கு அதிரடி பதில்கள் ‘ என்கிற இரண்டு ரூபாய் பிரச்சார பிரசுரம் பக்.26 இல் கூறியுள்ள உண்மை. ஆக ‘குரு கோல்வாக்கர் ‘ நாயுடு பிராமணனை வணங்குவதுதான் அவரது கடமை அதுதான் ஹிந்து தர்மம் எனக் கூறியுள்ளாரா ?நிச்சயமாக ஈவெரா சிறியாரின் திருச்சி தோழரும் உண்மைதான் சொல்லக் கூடியவர்களாக இருக்கவேணும். திருவாளர் கற்பக விநாயகமோ திண்ணை அறிந்த உண்மை விளம்பி அவரும் பொய் சொல்லக் கூடியவர் இல்லை. ஆக பஞ்சமர் நாயுடு காலைத் தொட்டாரா ? அல்லது நாயுடு பிராமணன் காலைத் தொட்டாரா ? முந்தையது பழம்பெருமை வாய்ந்த பாரதத்தின் கலாச்சாரம் என கோல்வால்கர் கூறினாரா ? அல்லது பிந்தையது ஹிந்து தர்மம் எனக் கூறினாரா ?

உண்மை என்னவென்றால் இத்தகையதோர் நிகழ்ச்சியை தான் பார்த்ததாக எந்த இடத்திலும் குருஜி கோல்வல்கர் அவர்கள் கூறவில்லை இதனை எந்த இடத்திலும் ஆதர்ச பாரத கலாச்சாரம் என்றோ அல்லது ஹிந்து தர்மம் என்றோ குருஜி குறிப்பிடவும் இல்லை லாலா ஹர்தயாள் எனும் விடுதலை வீரர் இத்தகையதோர் நிகழ்ச்சியை ஒரு வெள்ளைக்காரன் பார்த்ததாகவும் (அதாவது ஆங்கிலேய மேலதிகாரி ஒரு நாயுடு அதிகாரி தன் கீழ்நிலையிலுள்ள அந்தண கடைநிலை ஊழியரின் காலைத் தொட்டு வணங்கியதை கண்டதாகவும்) அதனைக் குறிப்பிட்டு அந்த அந்தணனுக்கு கிடைத்த மரியாதையை ஆங்கிலேயன் அடையவேண்டுமென அந்த ஆங்கிலேய மேலதிகாரி கூறியதாகவும் இதனைக் குறித்து அந்த ஆங்கிலேயர் எழுதிய கடிதங்கள் இத்யாதி இருப்பதாகவும் கூறியதாக மட்டுமே இந்நிகழ்ச்சி பதிவாகியுள்ளது. எந்த இடத்திலும் குருஜி கோல்வல்கரோ அல்லது லாலா ஹர்தயாளோ இதனை தாம் விரும்பும் சமுதாய நிலைபாடாக கூறவில்லை. ஆதாரம்: கீழே ‘Bunch of Thoughts ‘ நூலில் இருந்தே அப்பகுதியை ‘ஸ்கேன் ‘ எடுத்து கொடுத்துள்ளேன். பார்த்துக் கொள்ளுங்கள். அங்கே எங்காவது ‘This is Hindu Dharma ‘ என்றோ அல்லது ‘This is the ancient culture of Bharath ‘ என்றோ அல்லது அப்பொருள்படும் படியாகவோ இருக்கிறதா என்பதனை பார்க்கவும். மாறாக இதே விசயம் ஈவெரா சிறியார் வழி செல்லும் பகுத்தறிவற்ற கும்பலின் பிரச்சார இலக்கியத்தில் எவ்வாறு திருகுவேலையுடன் ‘யோக்கியமாக ‘ அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஒப்பிட்டு பார்க்கவும்.

அதே நேரத்தில் குருஜி வர்ணாஸ்ரம தர்மம் குறித்து பிறிதோர் இடத்தில் தெளிவாக கூறியுள்ளார். அதில் அந்தணன் சூத்திரனுக்கோ அல்லது சூத்திரன் வைசியனுக்கோ எவ்விதத்திலும் உயர்ந்தவரல்ல எனக் கூறுகிறார். ‘சமுதாயம் என்பது இறைவனின் நான்கு வகைத் தோற்றங்கள்: அதனை அனைவரும் தத்தம் இயல்புக்கு ஏற்றமுறையில் – தனது ஆற்றலுக்கு ஏற்ற வகையில் வழிபட வேண்டும் என்றும் கருதப்பட்டது. பிறருக்கு ஞானத்தை வழங்குவதால் அந்தணன் உயர்வடைகிறான் எனில் எதிரிகளை அழிப்பதால் ஷத்திரியர்களும் அதே அளவுக்கு உயர்வடைகிறார்கள். வாணிபத்தாலும் விவசாயத்தாலும் சமுதாயத்தை வளமடையச் செய்யும் வைசியர்களோ அல்லது கலையாலும் தொழிலாலும் சமுதாய சேவை செய்யும் சூத்திரர்களோ எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. ‘ (Bunch of Thoughts பக்.108). ஒருவரது இயல்பையே வர்ணத்தின் அடிப்படையாக குருஜி கோல்வல்கர் கூறுவதை கவனியுங்கள். ஒருவரது குலமோ பிறப்போ அல்ல இயல்பே வர்ணத்தின் அடிப்படை என்பதை கவனியுங்கள். மட்டுமல்ல அதே பக்கத்தில் ஒருவர் மற்றவரை விட உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் எனக்கருதுவதை குருஜி ‘வக்கிரம் ‘ எனச்சாடவும் செய்கிறார். உண்மை இவ்வாறிருக்க தொடர்பே இல்லாத மற்றோர் பகுதியிலிருந்து ஒரு பகுதியை எடுத்து அதில் தாம் விரும்பும் தவறான பொருளை தரும்படியாக இல்லாத ஒரு வாக்கியத்தையும் நுழைக்கிறார் கற்பக விநாயகம். ‘இதுதான் தொன்மையான பாரத கலாச்சாரம் ‘ என்று விஷமக்கொடுக்கினை உள்ளே நுழைத்திருப்பது கற்பக விநாயகத்தின் கைச்சரக்கே ஆகும். அல்லது நேர்மைக்கேடான முறையில் அவ்வாறு நுழைக்கப்பட்ட பிரச்சார திருகுவேலையை குறிப்பிடாமல் அதனை தானே படித்ததாக கற்பக விநாயகம் குறிப்பிட்டுள்ளது அவரது கடைந்தெடுத்த வழக்கமான யோக்கியத்தனத்தின் மற்றொரு பிரதிபலிப்பாகும்.

மண்டைகாடு கோவிலுக்கு அருகில் கோவிலிலிருந்து நேராக கடலுக்கு செல்லும் வழியில் இருப்பது சர்ச்சல்ல குருசடி. ஆனாலும் குருசடியை சர்ச் என மாற்றுவது கற்பக விநாயகம் மார்க் யோக்கியத்தனம், நேர்மை, சமுதாய நீதி-மதச்சார்பின்மை குறித்த அதீத அக்கறை மற்றும் இன்னபிற பகுத்தறிவு இணைந்த அற்புதத்தின் விளைவு. திருவாளர் கற்பக விநாயகத்திற்கு பழைய நாசி இளைஞர் அமைப்பைச் சார்ந்த இன்றைய போப்பாண்டையால் (சங்கராச்சாரியார் சங்கராச்சாரி என்றால் போப்பாண்டவர் போப்பாண்டை ஆவதில் தவறில்லையே!) ஒரு ‘செயிண்ட் ‘ பட்டம் வழங்க ஏற்பாடே செய்ய இந்த அற்புதத்தில் இடமிருக்கிறது. முடிந்தால் this gentleman should be made the patron saint of all such யோக்கிய சிகாமணிகள். எப்படிபட்ட நேர்மையான மனிதர் பாருங்கள் இந்த கற்பக விநாயகம். எப்படிபட்ட அசாத்தியமான நேர்மையான உழைப்புடன் சான்றாதாரங்களுடன் இவர் தரும் இதர விசயங்களின் ‘யோக்கியதையும் ‘ எப்படி பட்டதாக இருக்கும் என தெரிந்து கொள்ளுங்கள்! (இனி என்ன ‘Mea Culpa Mea Culpa Mea Maxima Culpa – என் பாவமே என் பாவமே என் மகா பாவமே ‘ என பாதிரியிடம் மண்டியிட்டு கதறி மதச்சார்பற்ற சமுதாய நீதி சோதியில் ஐக்கியமாகிவிட வேண்டியதுதான்!) இத்தகைய நேர்மை சிகாமணியை எங்காவது பார்க்க முடியுமா! படிக்காத நூலை படித்ததாக அதில் இல்லாத ஒன்றை கற்பனை செய்து அதனை நேர்மையின் ரத்தினமாக ஒரு இணைய இதழில் முன்வைப்பது என்பது அத்தனை சுலபமா ? அதனை வாசிப்பவர்கள் அனைவரும் கேனையர்களாக இருப்பார்கள் என முடிவுக்கு வர கொஞ்சநஞ்ச மனதைரியமா தேவைப்படும். இத்தகைய மன தைரியம் கொண்ட யோக்கிய சிகாமணி தன்னை அளப்பதாக கூறியதற்காக மலர்மன்னன் வருந்துகிறாரென்றால் மலர்மன்னனைக் கண்டிக்காமல் என்ன செய்வது ?

எங்கள் ஊர் பக்கம் ஒரு வழக்கு உண்டு: ‘யோக்கியரு வாறாரு சொம்பை எடுத்து உள்ள வை பிள்ளா ‘ திருவாளர். கற்பக விநாயகம் மகா யோக்கியர்.

—-

aravindan.neelakandan@gmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்