கடிதம் செப்டம்பர் 9,2004 – தாஜூக்கு..

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

பிறைநதிபுரத்தான்


இலக்கிய உலகில் – ஊடுருவி உரை வீச்சின் மூலம் பார் போற்றும் – அளவிற்கு ‘பேர் ‘ போட்டும் நிறைவில்லாமல், சமர்த்தாக தங்களை சமதள வாசியாக பிரகடனப்படுத்தும் உங்களின் உரைவீச்சு படித்தேன். தங்களின் உரைவீச்சில், பொத்தாம் பொதுவாக என்னையும் விளாசி தள்ளியிருக்கிறீர்கள். அதனால்தான் இந்த தன்னிலை விளக்கம்.

அரவிந்தன் நீலகண்டன், ஆசாரக்கீணன் போன்றவர்கள் இஸ்லாத்திற்கும், இந்திய முஸ்லிம்களுக்கும் எதிராக ‘மட்ட-மலின ‘ பிரச்சாரம் நடத்தி வருகிறார்கள். இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானிய கைக்கூலிகள் என்றழைத்தக்காலம் போய் – தற்போது லோகஸ்ட்டுகளாக முத்திரை குத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

எல்லை மீறி வளரும் இவர்களின் விசம பிரச்சாரத்தை படித்த – படிக்கிற என்னை, என் உணர்வுகள் எதிர்க்க தூண்டியதால் எழுதுகிறேன். ஆனால் எதிர்ப்புக்குரல் எழுப்ப வக்கு இல்லாத தங்களை போன்றவர்களுக்கு என் எழுத்துக்கள் ஏளனமாக தெரிகிறது. வெட்டி வம்பு வளர்க்கிற விருமாண்டிகளை கண்டு தங்களைப்போல் பயந்து ஒதுங்கிப்போகாமல் – மல்லுக்கட்டி நிற்கிற நான் உங்களுக்கு பரிகாசமாக தோன்றுகிறேன். உண்மையை புரிந்துக்கொள்ளாமல், பொத்தாம் பொதுவாக என் மீதும் பழிபோடுகிறீர்களே!.

பாலஸ்தீனர்களுக்கும் – இஸ்ரேலியர்களுக்கும் நடக்கும் சண்டையில் இருவரையும் கண்டிக்கும் மனப்பாங்கை என்னவென்று அழைப்பீர்கள் ? அடித்தவனும் – திருப்பி அடிக்கிறவனும் ஒன்றா ? ஒன்றுதான் என்று கூறுகிற எவரும் சமதளவாசியாக இருக்க முடியாது. நீங்கள் என்னை கெக்கலிப்பதற்கு காரணமென்ன அறியாமையா அல்லது புரியாமையா ?

நீங்கள் சமதளத்தில் படுத்து, கன்ணை மூடி, பிறர் காதடைக்க, விண்ணை முட்டும் குறட்டை விட்டு சந்தோசமாக தூங்குங்கள். ஆனால், நடுநிசியில் – நிசப்தத்தில் – நித்திரை களைந்து எழும்போதெல்லாம் அரைகுறையாக எதையும் படிக்காதீர்கள் – அப்படி படித்தவைகளை பற்றி தூக்கக் கலக்கத்திலேயே கவிதைகளாக எழுதாதீர்கள்.

மிக்க பணிவன்புடன்…

பிறைநதிபுரத்தான்

say_tn@hotmail.com

Series Navigation

பிறைநதிபுரத்தான்

பிறைநதிபுரத்தான்