கடிதம் – ஏப்ரல் 15,2004

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

வெங்கட், டொராண்டோ.


அன்புள்ள திண்ணை ஆசிரியர் குழுவிற்கு,

வணக்கம்.

என்னுடைய முதலாவது தமிழ்ப் புத்தகம் ‘குவாண்டம் கணினி – அறிவியல் கட்டுரைகள் ‘ யுனைட்டெட் ரைட்டர்ஸ் (தமிழினி) பதிப்பாக சென்றவாரம் சென்னையில் வெளிவந்திருக்கிறது. இந்த நேரத்தில் திண்ணைக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள இதை எழுதுகிறேன்.

இந்தக் கட்டுரைத் தொகுதியில் இருக்கும் பெரும்பாலான கட்டுரைகள் முதலில் திண்ணையில்தான் வெளியாயின. அந்த வகையில் துவக்க கால எழுத்தாளனான எனக்குக் களம் அமைத்துக் கொடுத்தற்கு என்னுடைய நன்றிகள்.

திண்ணையின் ஆரம்ப நாள் முதலே நான் தொடர்ந்து அதைப் படித்து வருகிறேன். (வெளிவந்த இரண்டாம் வாரத்தில் தெரியவந்து, இன்றுவரை தொடர்ந்து வாசித்துவருகிறேன்). திண்ணையின் அமைப்பையும் நோக்கங்களையும் பார்த்தவுடன் அதில் என்னுடைய படைப்புகளைப் பிரசூரிக்க வேண்டும் என்று தோன்றியது. அப்படி ஆரம்பித்ததுதான் என்னுடைய அறிவியல் கட்டுரைகள். பின்னர், லினக்ஸ் பற்றி ‘ஒரு பெங்குவின் தமிழ்க் கற்றுக்கொள்கிறது ‘ தொடரையும் எழுதினேன். கடந்த இரண்டு வருடங்களாகவே, சுந்தர ராமசாமி, இரா. முருகன், ஜெயமோகன் போன்ற பலரும் என்னுடைய திண்ணைக் கட்டுரைகளை அச்சில் பதிப்பிக்க உற்சாகமூட்டி வந்தார்கள். இவர்கள் பல பதிப்பங்களுக்கு அறிமுகமும் தந்தார்கள். நானும் சளைக்காமல் கட்டுரைத் தொகுப்பை அனுப்புவேன். பிறகு ஓசையின்றி ஒய்ந்துபோகும் (தமிழகத்தில் என்னுடைய அறிவியல் கட்டுரைகளுக்கு என்ன மதிப்பு என்று தெரியவந்தது அப்படித்தான் . ஒரு சமயத்தில் பதிப்பாளர்களுக்காகத் தொகுத்துவைத்திருந்ததை, மொத்தமாக மின்புத்தகமாக மாற்றி திண்ணை வழியாகவே கொடுக்கலாம் என்றும் நினைத்திருந்தேன். ஆனால், இவற்றை அச்சில் பதிப்பது தமிழகத்திலும், இலங்கையிலும் இந்த அறிவியல் கட்டுரைகளைச் சென்றடைய உதவும் என்பதாலும், ஏற்கனவெ இவை திண்ணையிலேயே தனித்தனியாகப் படிப்பதற்கு ஏற்றபடி இருப்பதாலும் அதை ஒத்திபோட்டேன்.

முதலில் இவற்றைத் தொகுத்தபொழுது ‘திண்ணையில் கற்ற அறிவியல் ‘ என்றுதான் தலைப்பிட்டிருந்தேன். பின்னர், பதிப்பாளரின் ஆலோசனையில் குவாண்டம் கணினி என்ற பெயர் தெரிவாயிற்று. புத்தகத்தின் முழு உள்ளடங்கிய கட்டுரைகளின் தலைப்பை இங்கே பார்க்கலாம்; http://www.tamillinux.org/venkat/myblog/archives/000274.html

அடுத்தவார இறுதியில் இங்கே டொராண்டோவில் அ.முத்துலிங்கம், என்.கே. மகாலிங்கம், கவிஞர் செழியன் இவர்கள் புத்தங்களுடன் என்னுடையதும் வெளியிடப்பட இருக்கின்றது. இதைப் பற்றிய தகவலை திண்ணையில் வெளியிட சற்றுமுன் தனியாக அனுப்பியிருக்கிறேன்.

தொடர்ந்தும் சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுதெல்லாம். திண்ணையில் எழுத ஆவல். என்னுடைய மதிப்பீட்டில் தற்காலத் தமிழில் திண்ணை தளத்தின் பணி மிகவும் முக்கியமானது. அந்த வகையில் திண்ணையுடன் ஆரம்ப நாளிலிருந்து தொடர்புகொண்டவன் என்பது எனக்குத் தனிப்பெருமை.

மீண்டும் என்னுடைய நன்றிகள்.

அன்புடன்

வெங்கட்

டொராண்டோ.

Series Navigation

வெங்கட், டொராண்டோ.

வெங்கட், டொராண்டோ.