2004-ஆம் ஆண்டிற்கான இலக்கியச் சிற்பி விருது

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கு


அமெரிக்க தமிழிலக்கிய ஆர்வலர்கள் அமைப்பு* வழங்கும் 2004-ஆம் ஆண்டிற்கான ‘இலக்கியச் சிற்பி ‘ விருது கவிஞர் திரு. மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கவிஞரைப் பற்றிய சிறு குறிப்பு கீழே.

இவ் விருதின் பரிசுத் தொகையான ரூ. 20,000 காசோலை மூலம் அவருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

– ஒருங்கிணைப்பாளர்

அமெரிக்க தமிழிலக்கிய ஆர்வலர்கள் அமைப்பு

மனுஷ்ய புத்திரன்

சில சொற்கள்.

மனுஷ்ய புத்திரனின் இயற்பெயர் எஸ்.அப்துல் ஹமீது. பெற்றோர்:ஷேக்முகமது, கதீஜாபீவி. ஊர்: திருச்சிமாவட்டம் துவரங்குறிச்சி. விவசாய-வர்த்தக முஸ்லீம் குடும்ப் பிண்ணணி. பிறந்த தேதி 16.5.68. ஐந்தாம் வகுப்புவரையே முறையான பள்ளிக்குச் சென்றார். பிறகு எம்.ஏ. வரலாற்றுத்துறை பட்டம்பெறும்வரை அஞ்சல் வழியில் பயின்றார். பின்னர் முறையான திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியலில் மற்றொரு முதுகலைப் பட்டம் பெற்றார்.

மிக இளம்வயதிலேயே இலக்கியத்தில் ஈடுபாடுகொண்ட மனுஷ்ய புத்திரனின் முதல்கவிதைத் தொகுப்பு (மனுஷ்ய புத்திரனின் கவிதைகள்) அவரது 16ம் வயதில் வெளிவந்தது. மார்க்சியத்தின்பால் ஆழமான ஈடுபாடுகொண்ட மனுஷ்ய புத்திரன் அதன் தாக்கத்தில் சிலவருடங்கள் தொடர்ந்து கவிதைகள் எழுதினார். எண்பதுகளின் மத்தியில் தீவிர இஇடதுசாரி இஇதழ்களில் தொடர்ந்து எழுதினார். கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிஸம் அடைந்த வீழ்ச்சியும் மார்க்சியத்தின் பெயரால் நிழ்த்தப்பட்ட கொடுமைகளும் அவரை மனம் உடையச் செய்தது. 90களில் அவரது கவிதைகள் ஆழமான தனிமையையும் மனமுறிவையும் கொண்டதாக மாறியது. குரூரத்தின் அழகியலை எழுதுபவர் என பரவலாக அறியப்படும் மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் நவீன வாழ்க்கையின் அர்த்தமற்ற வன்முறையை புரிந்துகொள்வதற்காக தொடர்ந்துபோராடுகின்றன. 1993ல் வெளிவந்த அவரது இரண்டாம் கவிதைத் தொகுதியான ‘என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் ‘, மற்றும் 1998ல் வெளிவந்த ‘இடமும் இருப்பும் ‘ ஆகிய இரு தொகுதிகளிலும் தேற்ற முடியாத துக்கமும் தீராத வலிகளும் நிரம்பியிருக்கின்றன. 2001ல் வெளிவந்த ‘நீராலானது தொகுதி ‘ இதற்கு மாறுபட்ட தொனியைக்கொண்டதாக அமைந்தது. நேரடியான எளிமையான படிமங்கள் மூலம் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் உரையாடல் தன்மை கொண்ட 119 கவிதைகளைக்கொண்ட இந்தத் தொகுப்பு ஆறே மாதத்தில் தொடர்ச்சியாக எழுதி முடிக்கப்பட்டது. Plain poetry என்ற வடிவத்தினை தீவிரமாக பரிசோதிக்கும் முயற்சியாக அமைந்த இந்தத் தொகுதி பெரும் கவனத்தைப் பெற்றது.

தொடர்ந்து இலக்கிய விமர்சனங்களும் எழுதிவரும் மனுஷ்ய புத்திரனின் கவிதைகுறித்த கட்டுரைகள் அண்மையில் நூலாக வெளிவந்திருக்கிறது. மேலும் அம்பலம் இணைய இதழில் அவர் எழுதிய பத்திகளும்(column) நூலாக வெளிவந்துள்ளது.

காலச்சுவடு இலக்கிய இதழின் சிரியர் குழுவில் பத்தாண்டுகளாக தீவிரமாக பணியாற்றிய மனுஷ்ய புத்திரன் தமிழின் அநேக முக்கிய படைப்பபாளிகளின் படைப்புகளையும் வெளியிட்டதுடன் பல இளம் படைப்பாளிகள் உருவாகவும் காரணமாக இருந்தார். 2003 துவக்கத்தில் காலச்சுவடிலிருந்து விலகி ‘உயிர்மை ‘ என்ற பதிப்பகத்தை தொடங்கிய மனுஷ்ய புத்திரன் 2003 செப்டம்பரிலிருந்து ‘உயிர்மை ‘ என்ற மாத இதழையும் நடத்திவருகிறார். இஇளம் படைப்பளிகளுக்கான வழங்கப்படும் உயரிய விருதாகிய ‘சன்ஸ்கிருதி விருது ‘ 2003ல் மனுஷ்ய புத்திரனுக்கு வழங்கப்பட்டது.

மனுஷ்ய புத்திரனின் நூல்கள்.

கவிதைத் தொகுப்புகள்:

1.மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் (1984)

2.என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்(1993)

3.இடமும் இருப்பும்(1998)

4.நீராலானது(2001)

கட்டுரைத் தொகுப்புகள்

5. எப்போதும் வாழும் கோடை(2003)

6. காத்திருந்த வேளையில் (2003)

* ‘அமெரிக்க தமிழிலக்கிய ஆர்வலர்கள் அமைப்பு ‘ ஒரு தன்னார்வ அமைப்பாகும். தமிழில் எழுதி வரும் சிறந்த இளம் படைப்பாளிகளை அடையாளம் கண்டு, அவர்களைக் கவுரவிப்பதே இந்த அமைப்பின் நோக்கம்.

—-

sirpiaward@yahoo.com

Series Navigation

கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கு

கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கு