ஈரம் – ஆன்ட்டி கிளைமாக்ஸ்

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

சரண்


ஈரம் படம் சுட்ட கதையோ, சுடாத கதையோ… அதைப் பற்றி அப்புறம் பேசுவோம். அதுல சுயநலம் காரணமாவோ, ஜாலிக்காகவோ வாய்க்கு வந்த படி ஒருத்தரைப் பற்றி அதிலும் பெண்களைப் பற்றி பேசவே கூடாதுன்னு அருமையான செய்தி இருக்குங்க.

கல்லூரி மாணவி ஒரு வாலிபனோட தப்பு செஞ்சுட்டு மற்றவங்க கிட்ட இருந்து தப்பிக்க இன்னொரு பெண்ணோட நடத்தையை கொச்சைப்படுத்துவா பாருங்க…இது மாதிரி தினம் தினம் நமக்கு தெரிஞ்சும் தெரியாமலும் நிறையவே நடக்குது. இது ரொம்ப ரொம்ப தப்புங்க.

இந்த மாதிரி ஒரு பொண்ணால நடந்த விஷயத்தை எழுதுறேன்.

என்னுடைய உறவினர் அவருக்கு பழக்கமான நண்பர் ஒருவர் உடல் நலமில்லாதபோது அவர் அட்மிட் ஆகியிருந்த மருத்துவமனைக்கு விசாரிக்கச் சென்றிருக்கிறார். அதன் பிறகு இரண்டொரு நாளில் உறவினருக்கு நான்கு வாலிபர்கள் வடிவில் அதிர்ச்சி காத்திருந்தது.

எடுத்த எடுப்பிலேயே மரியாதை இல்லாமல் பேசத் தொடங்கிய அந்த வாலிபர்கள், “காதலைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? நீ யார் காதலைப் பிரித்து வைக்க…உன்னைய என்ன பண்றோம்னு பார்…”என்றெல்லாம் ஆவேசமாகப் பேசியிருக்கிறார்கள். உறவினருக்குதான் எதுவும் புரியாத நிலை. அவர்களிடம் என்ன ஏதென்று விவரம் கேட்கலாம் என்று பார்த்தால் அவர்கள் இருந்த அந்த ஆக்ரோஷ நிலையில் கையை ஓங்கி விடுவார்களோ என்று பயந்திருக்கிறார் இவர்.

அவர்கள் அப்படி கத்திவிட்டுப் போன பிறகு என் உறவினர், அந்த வாலிபர்களை யார் என்று விசாரித்திருக்கிறார்.

உடல் நலமில்லாத நண்பரைப் பார்க்கச் சென்றார் அல்லவா?…அந்த நண்பரின் மகள் இந்த நான்கு வாலிபர்களில் ஒருவனை தீவிரமாக காதலித்திருக்கிறாள். பிறகுதான் அவன் நடத்தை மிக மோசம் என்று தெரிந்திருக்கிறது. அவனை விட்டு விலக ஏதாவது காரணம் தேடியபோது சிக்கியவர்தான் என் உறவினர்.

அவள் தன் காதலனிடம்,”அப்பா உடல் நலமில்லாம இருந்ததைப் பார்க்க வந்த அவர்தான் நம்ம விஷயத்தை எப்படியோ தெரிஞ்சுகிட்டு வீட்டுல சொல்லிட்டார். இனிமே நாம சந்திக்க வேணாம்… என்னை மறந்துடு.” என்று கூறியிருக்கிறாள்.

அந்த வாலிபன் இதைக் கேட்டு ஒதுங்கிப் போகும் வகையில்லையே…அதனால்தான் என் உறவினரை வந்து மிரட்டியிருக்கிறான்.

இது தான் அதுவரை நடந்தது.

‘அதெல்லாம் சரி… எங்க ஆன்ட்டி கிளைமாக்ஸ்’ன்னு நீங்க கேட்குறது என் காதுல விழுது.

உறவினரைத் திட்டிட்டு போனதோட விட்டிருந்தா இந்த கட்டுரைக்கு வேலையே இருந்திருக்காதுங்க. உன்னை என்ன பண்றேன் பாருன்னு சவால் விட்டுட்டு போன பசங்க இவரை அடிக்கணும்னு ஒரு தாதா(?!)கிட்ட பேசிட்டானுங்க. அந்த ஆளும் இவனுங்க காதலைப் பிரிச்ச வில்லனை அடிச்சு துவைச்சு காயப்போட்டுடுறேன்னு ஒத்துகிட்டாராம்.

அந்த பசங்களுக்கு கெட்ட நேரமா இல்ல எங்க சொந்தக்காரருக்கு நல்ல நேரமான்னு தெரியலை. அந்த தாதா வீட்டுக்குப் பக்கத்துல இவர் ரொம்ப நாள் குடியிருந்திருக்கார். இவர் மேல அந்த தாதாவுக்கு நல்ல மரியாதை இருந்திருக்கு. அது அந்த பசங்களுக்கு தெரியாம போய் ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க.

‘ஒளியத் தெரியாதவன் தலையாரிவீட்டுல போய் ஒளிஞ்சானாம்’அப்படின்னு கிராமத்துல ஒரு பழமொழி சொல்லுவாங்க. இந்த விளங்காத விளக்கெண்ணைங்களும் அதத்தான் செஞ்சிருக்காங்க.

அந்த தாதா என்ன பண்ணினாரு…இந்த பசங்களையும் அழைச்சுகிட்டே நம்ம உறவினரை பார்க்கப் போயிருக்காரு.(நீங்கதான் இந்த சம்பவத்தோட ஒன்றிப் போயிட்டீங்கிளே…அதான் நம்ம உறவினருன்னு சொன்னேன்.)

இடி, மழை, அடி, உதை, மின்னல் எல்லாத்தையும் எதிர்பார்த்து அந்த பசங்க நிக்கிறாங்க. “என்னப்பு…பயலுக உங்களை உதைக்க எங்கிட்ட வந்து ரேட் பேசுறானுங்க…வாங்க…நாம ரெண்டு பேரும் சேர்ந்து இவனுங்களை போட்டு புரட்டிடுவோமா” அப்படின்னு கேட்கவும் அவைங்களுக்கு கால்சட்டை நனையாததுதான் குறை.

நம்ம ஆளு செத்த பாம்பை அடிக்கவே பயப்படுறவர்தான். எப்பவும் இந்த தாதா கூடவே பாதுகாப்புக்கு வர மாட்டாருன்னு நல்லாவே தெரியும். இந்த எதார்த்தம் புரிஞ்சதால, “படிக்கிற புள்ளைங்கப்பா…விட்டுடுவோம். நண்பரோட பொண்ணும் இப்பதான் கல்லூரியில படிச்சுகிட்டு இருக்கு. அதுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காம இருக்கணும்னு கண்டிச்சு விட்டுடு…”ன்னு ரெண்டு பிரச்சனையை ஒரே நேரத்துல தீர்த்து வெச்சுட்டாரு.

ஆனா ஒரு விஷயம் மட்டும் உறுதிங்க… அந்த பசங்க மட்டும் வேற யார் கிட்டயாவது பஞ்சாயத்துக்கு போயிருந்தா நம்ம உறவினருக்கு பஞ்சர் ஒட்ட வேண்டியதாயிருக்கும்.

இப்ப சொல்லுங்க…இது ஆன்ட்டி கிளைமாக்ஸ் தானே.
writersaran@gmail.com

Series Navigation

சரண்

சரண்