ஒட்டுக் கேட்க ஆசை

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

அப்துல் கையூம்



(சகிப்புத்தன்மை உள்ளவர்கள் மாத்திரம் படிக்கவும்)

மற்றவர் பேசுவதை ஒட்டுக் கேட்பது தப்பா? இது எனக்குள் எழுந்த கேள்வி. நிச்சயமாக அது தப்புத்தான் என்று பெரும்பாலானவர்கள் வாதாடக்கூடும். ‘ராஜா காது கழுதை காது’ என்கிற விஷயத்தை ஒட்டுக் கேட்கப் போய், ஒட்டுக் கேட்டவர்களுடைய காது கழுதை காதாக மாறிய கதையை சிறு வயதில் படித்த போது ஏற்பட்ட பயம் இன்னும் என்னை விட்டு அகலவில்லைதான்.

கீழ்கண்ட உரையாடலை முழுவதுமாக படித்த பின்னர் ஒட்டுக் கேட்பது எவ்வளவு சுவராஸ்யமான விஷயம் என்ற எனது கருத்தை நீங்களே ஒத்துக் கொள்வீர்கள் பாருங்கள்.

* * *

“நல்லா இருக்கீங்களா அண்ணே! நேத்து கூட உங்கள பார்த்தேன். குனிஞ்ச தலை நிமிராம முதலாளிக் கூட சீரியஸா போயிக்கிட்டிருந்தீங்க. பேச முடியலே”.

“அடடே நீயா? நல்லா இருக்கியா? உன் அப்பன் நல்லா இருக்குறானா?

“அந்த கழுதையோட பேச்சை எடுக்காதீங்கண்ணே”

“சேச்சே.. பெத்தவங்கள இப்படி நாக்குலே நரம்பில்லாம பேசக்கூடாதுடா”

“வேற என்னண்ணெ? ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு பயங்கரமா கத்தினதோட நிக்காம மண்ணை வாரி வேற இறைச்சுப்புட்டாரு”

“அது என்ன ஒண்ணுமில்லாத விஷயம்?

“லவ் மேட்டருதான். எனக்கு குறுக்கே நிக்கிறாருண்ணே. சாதி வுட்டு சாதி சம்மந்தம் பண்ணக் கூடாதாம்”

“அடக் கழுதை. உனக்கு கூட லவ்வா? யாரு அந்த ஜோடி? வெட்கப்படாம சொல்லு.”

“ஒன் சைடு லவ்தான். செம பிகரு. கடலை போட்டா பிக்-அப் ஆயிடும். கிண்டியிலே இருக்குறா. பாக்குறதுக்கு ‘கும்’முன்னு சும்மா அராபிய குதிரையாட்டம் இருப்பா. அந்த குதிரை வால் ஹேர்ஸ்டைலை பார்த்தே நான் மயங்கிப் போயிட்டேன். குலுக்கி மினுக்கி நடக்குற அவ நடை இருக்கே.. அடடடடா சும்மா சொல்லக்கூடாது”

“அடச்.. சீ. போதும் உன் வருணனை. ரொம்ப ஓவரா போறே. பேரு என்ன அத மொதல்லெ சொல்லு”

“டெர்பி”

“என்னடா பேரு இது டெர்பி, பார்பின்னுட்டு? ஏதோ கிண்டி ரேஸ்லே ஓடுற குதிரை பேரு மாதிரியிலே இருக்கு? அவுங்க சாதி என்ன? குலம் என்ன? இதெல்லாம் விசாரிச்சாயா?

“ஹை கிளாஸ் பேமிலி அண்ணே. அவுங்க மூதாதையரெல்லாம் அராபியாவிலேந்து வந்தவங்கள்ளாம். அந்த வெவரம் எல்லாம் இப்ராஹிம் ராவுத்தருக்குத் தெரிஞ்சிருக்கு”

“என்னடா போட்டு குழப்புறே? அராபியாங்குறே, பேரு டெர்பிங்குறே. எனக்கென்னமோ இது கிராஸ் குடும்பம் மாதிரியில்லே இருக்கு?”

“அதப்பத்தி எனக்கு கவலை இல்லேண்ணே. குட்டி பாக்குறதுக்கு ஷோக்கா இருக்கா. ஸ்போர்ட்ஸ்லே பயங்கர இண்டரஸ்ட். போலோ விளையாட்டுக் கூட தெரியுமாம். அவ தாத்தா மிலிட்டரியிலே இருந்து ரிடயர்ட் ஆனவரு. இப்படிப்பட்ட சம்மந்தம் கிடைச்சா அது பெருமையில்லையா?

“சரி. அதுக்காக பெத்தவங்களை தனியா விட்டுட்டு வந்துடறதா? உன் அப்பன் இருக்கானே அவன் வாயில்லாத ஜீவன். கெடந்து குதிப்பானே தவிர உள்ளே ஒண்ணுமிருக்காது”

“வீட்டை விட்டு வெளியே போடா நாயேன்னு அவரு சொன்னதைத்தான் என்னாலே தாங்கிக்கவே முடியலேண்ணே.”

“நாய்ன்னு சொன்னது மஹா தப்பு. அப்படி அவன் சொல்லியிருந்தா அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்”

“அப்படியென்ன நாம நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ‘லோ..லோ..’ன்னு அலையுறோமா? சொல்லுங்க”

“அதுதான் நான் மன்னிப்பு கேட்டுட்டேன்லே. விட்டுத் தொலைடா”

“ப்ரண்டுங்கிறதுகாக நீங்க ஒரேயடியா வக்காலத்து வாங்காதீங்க. உங்களுக்கு அவரைப் பத்தி எதுவுமே தெரியாது”

“டேய்! எனக்காடா தெரியாது? அவன் பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா? காலம் முழுக்க மூட்டை தூக்கி, உழைச்சு உழைச்சு ஓடா தேஞ்சுப் போயிட்டான். கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பா ஆன கதையா போயிடுச்சு அவன் நெலமை. அவனோட குரலைக் கேட்டு நானே அன்னிக்கி ஆடிப் போயிட்டேன்”

“குடும்பம் குட்டின்னு ஆன பொறவு. பாரத்தெ சுமந்துதான் ஆவணும். ஒலகத்துலெ யாருதான் கஷ்டப்படலை சொல்லுங்க”.

“உனக்குத் தெரியாது. ஒண்டக்கூட இடமில்லாம வெயிலுலேயும் மழையிலேயும் உங்க அப்பன் தெருவுலே அனாதையா நின்னதெ நான் என் கண்ணாலே பாத்தவன்டா.

“என்னத்தெ பெருசா கிழிச்சுப்புட்டாரு? அவருக்கு வெறும் வாயிலே மென்னுறதுக்கு ஏதாவது ஒரு மேட்டரு கெடச்சா போதும், அதை வச்சு காலத்தெ ஓட்டிடுவாரு”.

“சகிப்புத்தன்மைக்கு எல்லாரும் அவனைத்தாண்டா உதாரணம் காட்டுவாங்க. அது தெரியுமா உனக்கு?

“ஆமா பெரிய சகிப்புத்தன்மை. எங்களுக்கு மாத்திரம் இல்லையாக்கும்”.

“அட குறை பெரசவத்துலே பொறந்தவனே! நான் சொல்லுறதெ காதை தொறந்து நல்லா தூக்கி நிறுத்தி வச்சு கேளுடா”

“போதுமுண்ணெ அவரை நீங்க ஒரேயடியா புகழுறது”.

“உ..ம். அவனோட அருமை உனக்கு இப்பத் தெரியாதுடா, போவப் போவத் தெரிஞ்சுக்குவே. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனைன்னு சும்மாவா சொன்னாங்க.”

“ஆமாண்ணே. தூரத்துலேந்து பாத்தா கழுதை கூட குதிரை மாதிரிதான் தெரியும். வந்து பாருங்க. எப்படி மிருகத்தனமா நடந்துகுறாருன்னு தெரியும். எங்க ஆத்தாவையே போட்டு கதறக் கதற உதைக்கிறதை நீங்க கண்ணாலே பாத்தீங்கன்னா ஓடிப்போயிடுவீங்க”

“டேய்! உங்க அப்பன் ஒம் மேலே எவ்ளோ பிரியம் வச்சிருந்தான்னு எனக்குத்தாண்டா தெரியும். நீ அப்ப குட்டியா இத்துனூண்டு இருப்பே. உன்னை வச்சிக்கிட்டு எப்படியெல்லாம் கொஞ்சுவான் தெரியுமா?”

“கழுதைக்கும் தன் குட்டி பொன் குட்டிதான். தான் பெத்த புள்ளைங்களை யாரும் கொஞ்சத்தான் செய்வாங்க. இதுலே என்ன ஆச்சரியம் வேண்டிக் கெடக்கு?”

“போடா போக்கத்தப் பயலே. அந்தக் காட்சி இன்னும் என் கண்ணுலேயே நிக்குதுடா. உன்னை சிரிக்க வைக்கிறதுக்கு என்னென்ன சேஷ்டை பண்ணுவான் தெரியுமா? உப்பு மூட்டை தூக்குவான். பல மாதிரியான குரல்லே கத்துவான். சுத்தி சுத்தி வந்து வேடிக்கை காட்டுவான். அழுகையை நிறுத்திப்புட்டு நீ கெடந்து சிரிப்பே. அதப் பாத்து ‘அழுவுன புள்ளே சிரிச்சுச்சாம். கழுதைப் பாலை குடிச்சிச்சாம்’னு சொல்லிப்புட்டு நாலு காலு பாய்ச்சல்லே கெடந்து துள்ளுவான்.”

“நிறுத்துங்கண்ணே போதும். இப்படியெல்லாம் பேசுனா எனக்கு மனசு மாறிடும்னு நெனக்காதீங்க.”

“உன்னைப் பத்தி தாண்டா அவனுக்கு சதா கவலை. இப்படி சினிமா பைத்தியம் புடிச்சு, ஊரை சுத்துக்கிட்டு இருக்கியேன்னு ரொம்பவும் கவைலப் படுறான்.”

“ஏண்ணே உங்களுக்குத் தெரியாததா? அவரும் அப்படித்தானே இருந்தாரு. தெருவிலே எங்காச்சும் சினிமா போஸ்டரை பாத்தா போதும். பட்டிக்காட்டான் முட்டாய் கடையை பாத்த மாதிரி வாயை பொளந்துக்கிட்டு நின்னுடுவாருன்னு நீங்களே என்கிட்ட பலதடவை சொல்லியிருக்கீங்களே?”

“வாஸ்தவம்தான், நானும் அவனும் சேர்ந்து போடாதா ஆட்டமா? இதே வண்ணாரப்பேட்டையிலே துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடியிருக்கோம். அப்பவே அவன் பயங்கர வாலு. சலவைக்காரி ஜோக்குன்னா அவனுக்கு பயங்கர இஷ்டம்.”

“நாங்களும் அப்படித்தானே? எங்களுக்கும் உணர்ச்சின்னு ஒண்ணு இருக்குத்தானே?”

“அதே சமயம். அவன் என்னென்ன வேலை பார்த்தான்னு உனக்குத் தெரியாது. வண்டி இழுத்திருக்கான். ஆர்ட் படத்துலே நடிச்சிருக்கான். ‘அக்ரஹாரத்தில் ஒரு கழுதை’ங்குறது அந்த படத்தோட பேரு. பாரதி ராஜாவோட பதினாறு வயதினிலே படத்துலே டப்பிங் வாய்ஸ் கூட கொடுத்திருக்கான். இவ்வளவு ஏன்? வண்டி கூட இழுத்திருக்கான்னா பாத்துக்கோயேன்.”

“என்ன பிரயோஜனம்? சாப்பாட்டுக்கே வழியில்லாம இன்னும் நாங்க நடுத்தெருவுலேதானே நிக்கிறோம்?”

“எனக்கு என்ன தோணுதுன்னா, உனக்கு ஒரு கால்கட்டு போட்டாச்சுன்னா சரியாயிடுவே. அப்புறம் இங்கேயே சுத்தி சுத்தி வருவே”

“ஏண்ணே! நான் சுதந்திரமா இருக்குறது புடிக்கலியா? நான் இப்படியே இருந்துட்டுப் போறேன்.”

“அந்தந்த வயசுலே அதை அதை பண்ணிடனும்டா. அப்புறம் நம்ம வாரிசுன்னு சொல்லிக்க சந்ததியே இல்லாம போயிடும்.”

“உங்களுக்கு புரியுது. என் அப்பன் இன்னமும் குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டனும்னு ஆசைப் படுறான்”

“சரி. சரி. கொஞ்சம் பொறுமையாத்தான் இருந்து பாரேன்”

“இதுக்கு மேல என்னத்தெ பொறுமை காட்டுறது? கழுதைக்கு முன்னாடி காரட் கட்டி விட்ட மாதிரி காலத்தை கடத்திக்கிட்டே போறாரு,”

“கவலைப்படாதேடா. நடக்க வேண்டிய நேரத்துலே எல்லாமே நடக்கும்”

“மொதல்லே என் அப்பனுக்கு முன்னாடி நான் ஒரு பெரிய ஆளாகி காட்டணும். அதுதான் என்னோட ஆசை”

“தேர்தல்லே ஏதாவது நிக்கப் போறியா நீ?”

“ஏன்? நின்னாலும் ஒண்ணும் தப்பில்லையே? ஈஸியா வந்துட்டு போயிடுவேன். அமெரிக்காவுலே ஜிம்மி கார்ட்டர் நின்னாரே அவருக்கு கூட நம்ம உதவிதானே தேவை பட்டுச்சு.”

“ஆ .. ஊ .. ன்னா அமெரிக்காவை இழுத்துப் புடுவீங்களே?”

“இன்னிக்கு இல்லாட்டி ஒரு நாளைக்கு என்னோட போட்டோவை எல்லா கடையிலேயும் பிரேம் பண்ணி மாட்டி வைக்கத்தான் போறாங்க. நீங்க வேணும்னா பாருங்கண்ணே.”

“அவ்ளோ பெரிய ஆளா ஆகப் போறியா? அப்படி ஆனா அதப் பாத்து சந்தோஷப் படுற மொத ஆளு நான்தான்டா”

“அதெல்லாம் போவட்டும். கழுதை கெட்டா குட்டிச் சுவரு. பேசாம உன் அப்பன்கிட்ட போயி சேர்ந்துடு. அதுதான் உனக்கு புகலிடம். அவன் சொல் பேச்சு கேளு”

“நீங்க என்ன சொன்னாலும் நான் என் முடிவை மாத்திக்கிறதா இல்லேண்ணே.”

“உனக்கேத்த மாதிரி ஒரு ஜோடி பாத்து வச்சிருக்கேன். நம்ம சாதிதான். நம்ம லாண்டரிக்காரரு இருக்காருல்லே; அவரு வீட்டுக்கு பக்கத்துலேதான். நல்ல ஐஸ்வர்யம். நம்மள மாதிரிதான் அவுங்களும் தாவர உண்ணி. என்ன சொல்றே?”

“ஹே .. ஹே .. நல்ல ஜோக். உன்னி மேனன் தெரியும். உன்னி கிருஷ்ணன் தெரியும். அது என்ன தாவர உண்ணி?”

‘தாவர உண்ணி’ன்னு சொன்னா வெஜிடேரியன்னு அர்த்தம்.

“அப்படி புரியுற மாதிரி சொல்லுங்க.”

“பேரு கூட அம்சமான பேரு – பஞ்ச கல்யாணி”

“கழுதையோட பேரு மாதிரி இருக்கு போங்க. பஞ்சத்துலே அடிப்பட்டவ மாதிரி இருப்பாள்னு தோணுது.”

“எதுக்கெடுத்தாலும் ஒரு குறையைச் சொல்லு”

“நம்ம ரேஞ்சே வேறண்ணே. புலி பசிச்சாலும் புல்லைத் திங்காது. புரிஞ்சுக்குங்க.”

“ஓஹோ.. நீங்க புலியோ? மொதல்லே உன் முகத்தெ கண்ணாடியிலே நின்னு பாரு. வரிக்குதிரையைப் பார்த்து கழுதை உடம்பிலே சூடு போட்டுக்கிச்சாம். அது மாதிரி இருக்கு நீ பேசுறது.”

“உருவத்தை வச்சு யாரையும் எடை போடாதீங்கண்ணே.”

“போடா கழுதை! எல்லாரும் அவனுக்கு வரப்போற ஜோடி ஐஸ்வர்யா மாதிரி இருக்கணும்னு நெனக்கிறது இயற்கைதான். அதுக்கு நாமும் அபிஷேக் மாதிரி இருக்கனுமில்லே?

“நெனப்பு எப்பவும் உசத்தியா இருக்கணும் அண்ணே”

“உன்னை திருத்தவே முடியாதுடா. வர வர மாமியாரு கழுதை போல ஆனாளாம். அப்பிடிதான் போவுது உன் கதை.”

“சாதி விட்டு சாதி சம்மந்தம் பண்ணிக்கிட்டவங்களோட குழந்தை குட்டிங்க எப்படி கொழு கொழுன்னு இருக்காங்கன்னு பாருங்க. நாமதான் இன்னும் சாதி சாதின்னு கத்திக்கிட்டு இருக்கோம். அதனாலதான் நம்ம சந்ததிங்க வத்தலும் சொத்தலுமா நாளுக்கு நாளு சுருங்கி போயிக்கிட்டே இருக்காங்க.

“டேய்.. நானும் உன்னை என்னமோ நெனச்சேன். உன் சிந்தனையெல்லாம் ரொம்ப வித்தியாசமா இருக்குதுடா”

“இத்தினி கழுதை வயசு ஆயிடுச்சு. சும்மா ஊரை பொறுக்கிட்டு அலையுறேன். அப்படிதான் என் அப்பனும் நெனச்சுக்கிட்டு இருக்கான். இந்த சமுதாயத்தை பத்தி நல்லாவே நான் தெரிஞ்சு வச்சிருக்கேன். கொஞ்சம் அசந்தா போதும் நமக்கு டின்னை கட்டி விட்டுடுவானுங்க.

“டேய் மவனே! நீ சரியா சொன்னே.”

“அண்ணே! ஏதோ நாம இந்த உலகத்துலே பிறவி எடுத்துட்டோம். நமக்குன்னு குரலு கொடுக்க யாரு இருக்குறா சொல்லுங்க? ஒரே ஒரு சங்கம் இருக்கு. அவுக பேச்சும் சமயத்துலே எடுபடுது. சமயத்துலே எடுபடாம போயிடுது. ‘இந்தியன்’ படம் பார்த்தீங்கதானே? நம்ம சாதி சனத்துக்கு தொடர்ந்து கொடுமைங்க நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. நமக்கு பின்னாடி எப்படியெல்லாம் கேவலமா பேசுறாங்க தெரியுமா? அன்னிக்கி பாருங்க நம்ம ஜாதிக்காரன் ஒருத்தன் லாரியிலே அடிப்பட்டு செத்துக் கெடக்குறான். கேக்குறதுக்கு நாதியில்லே.”

“இவ்ளோ புத்திசாலித்தனமா பேசுறியே. எப்படிடா?”

“தெனமும் பேப்பரை பார்க்குறேன்லே. பொது அறிவுதான்”

“நானும் உன்னை என்னமோ நெனச்சேன். நம்ம சாதிக்காக குரலு கொடுக்க நீயாவது இருக்குறியே. எனக்கு உன்னை நெனச்சா ரொம்ப பெருமையா இருக்குதுடா. கிட்ட வாடா உச்சி மோந்து முச்சம் கொடுக்கறேன்”

[ஏதோ ஒரு படத்துலே நடிகர் விவேக் மிருகங்கள் பேசுறதை எல்லாம் புரிஞ்சுப்பாரு. அதனாலே பல கஷ்டத்தை அனுபவிக்க வேண்டி வரும். அந்த மாதிரி ஒரு சக்தி நமக்கும் கிடைச்சு இரண்டு கழுதைங்க பேசுறதை காதுலே வாங்கினா என்னாகும்னு கற்பனை பண்ணிப் பார்த்தேன். அதன் விளைவுதான் இந்த உரையாடல். ஹி.. ஹி.. ஹி..]


vapuchi@hotmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்