இது பகடி செய்யும் காலம்

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

சேதுபதி அருணாசலம்


 
ஜெயமோகன் தன்னுடைய வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருந்த கட்டுரைகள் ஆனந்த விகடன் புண்ணியத்தில் ஊரெங்கும் விளம்பரமாயிருக்கின்றன. யாரோ சும்பன், குசும்பனெல்லாம் இக்கட்டுரைகளைப் பற்றிய ஆனந்த விகடனின் விமர்சனத்தின் பின்னணியில் இருப்பதாக சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் எரிந்ததென்னவோ ஆனந்த விகடன் பிரதிகள்தான். ‘கொஞ்சம் பேர் மட்டும் படித்துக் கொண்டிருந்த கட்டுரைகளை இப்படி ஊருக்கெல்லாம் சொன்னது விகடன்தான்’ என்று எரித்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதைத்தாண்டி வன்முறையாய் எதுவும் நடக்கவில்லை என்பது மிக ஆறுதலான விஷயம்.
 
தமிழர்களின் நடிகர்கள், தலைவர்கள் மீதான ‘கடவுள்’ வழிபாடு தமிழர்கள் அல்லாத எல்லோராலும் கேலி செய்யப்படும் ஒன்று. சென்னை வடபழனியில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்த ஒரு நடிகருக்கு கட்-அவுட் வைத்து, மாலை போட்டு, பாலபிஷேகம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். இத்தனைக்கும் அந்த இரண்டு திரைப்படங்களில் ஒன்று மட்டுமே ஹிட், இன்னொன்று மகா ஃப்ளாப். மூன்றாவது படமும் விழுந்தால் அதற்கப்புறம் நடிப்பாரா என்பதே சந்தேகம். அதற்குள்ளாகவே, குமரன் நகர், மூன்றாவது தெருவைக் கிளையாகக் கொண்டு ஒரு ரசிகர் மன்றம்; பாலபிஷேகம்.
 
சென்ற வருடம் இரண்டு புரட்சி நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே மோதல் வந்து கத்திக்குத்து வாங்கி ஒரு புரட்சி நடிகரின் ரசிகர் செத்துப் போனார். பொதுவாக என் தமிழரல்லாத நண்பர்கள் ‘உங்க ஆளுங்களைக் கொல்லனும்னா, உங்க தலைவனைப் பற்றித் தப்பாப் பேசினா போதும்… உடனே தீக்குளிச்சிடுவீங்க, இல்லை?’ என்று கேட்கும்போது புன்னகைப்பதைத் தவிர வேறு வழி இருப்பதில்லை எனக்கு. சிலை வழிபாட்டைக் கேலி செய்யும், ‘சிலை உடைப்புகளில்’ நம்பிக்கை வைத்திருக்கும் பகுத்தறிவு ‘நம்பிக்கை’யாளர்கள் சிலைகளை உடைத்துப் பழகியபின் தங்களுக்கென்று சிலைகளைவிடக் கடினமான உடைக்க முடியாததொரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள். விரலைச் சுற்றி கண்ணைக் குத்துவது, கண்ணைச் சின்னதாக்கி புருவத்தை உயர்த்தி முறைத்துப் பார்ப்பது, பளாரென்று அறைவது போல் (பார்ப்பவர்களைத்தான்) பஞ்ச் டயலாக் பேசுவது என்று முந்தாநேற்று நடிப்பதற்கு அட்வான்ஸ் வாங்கிய நடிகர்கள் கூட இந்த ‘பிம்ப’ கட்டமைப்பில் டிப்ளொமா வாங்கியிருக்கிறார்கள். நடிகர்கள், தலைவர்களை மனிதர்களாக இல்லாமல் கடவுள்களாகப் பார்க்கும் போக்கு, பாசாங்கு இது போன்ற பகடிச் சித்திரங்களிலாவது அழிந்து போகாதா என்று ஒரு நப்பாசை இருக்கிறது எனக்கு.
 
***

அபத்தங்களை எதிர்கொள்ள நகைச்சுவையை விட வேறு சிறந்த ஆயுதம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட ஆனந்த விகடன் செய்ய நினைத்த வேலையை ரஷ்ய கம்யூனிஸ்டுகள் செய்திருக்கிறார்கள். (ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கு அத்தனை அதிகாரம் இல்லை, அவ்வளவே!) கொள்கைச் சாயம் வெளுக்காமலிருக்க ரேடியோ, திரைப்படம், பத்திரிகை இப்படி அத்தனை வாசல்களையும் மூடி எங்கெங்கும் கம்யூனிஸப் புகழ் மட்டுமே பரவி வந்தது. யதார்த்தத்துக்கும், வாழ்பனுபவத்துக்கும் சற்றும் ஒத்து வராத விஷயங்கள் மேல் ஏளனம் ஏற்படும். ஆனால் யதார்த்தமே தங்கள் கொள்கைகளின் அடிப்படை என்று கூறிக்கொண்ட கம்யூனிஸ்டுகளுக்கு இந்த விஷயம் புரியாமல் போனது ஆச்சரியமான விஷயம். ஏளனத்தையும், நையாண்டியையும் புரிந்து கொள்ளவும் கொஞ்சம் கற்பனா சக்தி வேண்டும். மக்களின் கற்பனா சக்திதான் தங்கள் அதிகாரத்துக்கு முதல் எதிரி என்று கம்யூனிஸ்டுகளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அந்த கற்பனா சக்திக்கான வாசல்களைத்தான் அவர்கள் அடைத்து வைத்திருந்தார்கள்.

மக்கள் தங்களுக்கிடையே கூட கிண்டலாகக் கம்யூனிஸ்டுகளைப் பற்றி எதுவும் சொல்லிவிட முடியாது. (‘1984’ என்ற புத்தகத்தில் ஜார்ஜ் ஆர்வெல் இந்த விஷயத்தை மிகச்சிறப்பாக எழுதியிருப்பார்).  நோபல் பரிசு பெற்ற அலெக்ஸாண்டர் சோல்ஸெனிட்ஸின் (Alexander Solzhenitsyn) தன் நண்பர்களிடம் சோவியத் அரசாங்கம் பற்றிப் பேசியதையும், அவரெழுதியக் கட்டுரையையும் காரணமாகக் காட்டி எட்டு வருடங்களை சிறையில் கழிக்க நேரிட்டது. ஆனால் அப்போது அவருக்குக் கிடைத்த அனுபவங்களை “இவான் டெனிஸவிச்சின் வாழ்வில் ஒரு நாள்” (One day in the life of Ivan Denisovich) என்ற புத்தகமாக எழுதியதுதான் அவருக்கு உலகப்புகழையும், நோபல் பரிசையும் வாங்கித்தந்தது.
 
கம்யூனிஸக் கொடுமைகள் கண்ணில் பட்டாலும் வெளியில் மகிழ்ச்சியாக இருப்பதாகப் பொய் சொல்ல வேண்டும் என்றுதான் அன்றைய ரஷ்ய மக்களின் நிலை இருந்திருக்கிறது. அதைப் பற்றி கூட ஒரு ஜோக் இருக்கிறது.
 
இரண்டு ஐரோப்பிய கம்யூனிஸ்டுகளுக்கு இலவசமாக ரஷ்யாவைச் சுற்றிப் பார்த்து வர வாய்ப்புக் கிடைத்ததாம். ஆனால் ரஷ்யாவுக்குப் போன இருவரில் ஒருவன் தான் திரும்பி வந்தான். திரும்பிவந்த அவனிடம் அவன் நண்பன் கேட்கிறான்.

“சோவியத் யூனியனில் வாழும் சூழ்நிலை எப்படி இருக்கிறது?”
“பிரமாதம். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.”
“வீடுகள் எப்படி இருக்கின்றன? சாப்பாட்டு விஷயம் எப்படி?”
“மிக அருமை. என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.”
“ஆனால் உன்னுடன் சென்ற உன் நண்பனுக்கு என்ன ஆயிற்று?”
“அவன் இப்போது சைபீரியச் சிறையில் இருக்கிறான் – அவன் கண்களை அவன் நம்பியதால் வந்த வினை!”
 
ராய் மெத்வதேவ் (Roy Medvedev) என்ற வரலாற்று ஆய்வாளர் கே.ஜி.பி(K.G.B)-யின் ஆவணங்களை ஆராய்ந்ததில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பேர் ஸ்டாலின் காலத்தில் ஜோக்கடித்தற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தது. அப்போதும் மக்களுக்கிடையே ரகசியமாகப் பல்வேறு ஜோக்குகள் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. இந்த ஜோக்குகளால் கம்யூனிஸம் சரிந்து விடவில்லை. ஆனால் அடக்குமுறையில் அமிழ்ந்து கிடந்த மக்களுக்கு இப்படி தங்களுக்கிடையே நகைச்சுவையாகப் பேசிக்கொள்வது, ஒரு மிகப்பெரிய சுதந்திர உணர்வைத் தந்திருக்கிறது.
 
ஆனால் இந்த அடக்குமுறை நிலை ஸ்டாலினின் மறைவுக்குப் பிறகிலிருந்தே கொஞ்ச கொஞ்சமாக மாறத்தொடங்கியது. அதிலும் கடைசிக்கால கட்டங்களில் வந்த கம்யூனிஸ அதிபர்கள் பத்திரிகைகளில் வெகுவாக விமர்சிக்கப்பட்டார்கள். கம்யூனிஸ அரசாங்கத்தோடு அதன் தலைவர்கள் அத்தனை பேரும் மலையேறி விட்டபடியால் சமீப காலங்களில் நிறைய விமர்சனங்களும், புத்தகங்களும் ரஷ்ய கம்யூனிஸ்டுகளைப் பற்றி எழுதப்பட்டு வருகிறது. (நான் இங்கே குறிப்பிடுவது உண்மையான நடுநிலை விமர்சனங்கள் மட்டுமே.) அந்த வரிசையில், “சிறு புரட்சிகள்” (Tiny Revolutions) என்ற பெயரில் ரஷ்ய அரசியல் நகைச்சுவைத் துணுக்குகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக ப்ரூஸ் ஆடம்ஸ் (Bruce Adams) என்பவர் வெளியிட்டிருக்கிறார்.[சுட்டி1] (நகைச்சுவைத் துணுக்கை சிறு புரட்சி என்று முதன் முதலில் அழைத்தவர் ஜார்ஜ் ஆர்வெல்).

ரஷ்யத் தலைவர்களைப் பற்றி பெரும்பாலும் ரஷ்ய மக்களே பேசி வந்த நகைச்சுவைத் துணுக்குகளும், சம்பவங்களும் “சிறு புரட்சிகள்” புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. புத்தகம் அரசியல் காலக்கிரமப்படி தொகுக்கப்பட்டிருக்கிறது. புத்தகத்தில் மொத்தம் ஆறு பகுதிகள். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தலைவரைப் பற்றிய ஜோக்குகள் அடங்கியிருக்கின்றன. லெனின், ஸ்டாலின், க்ருஷ்சாவ் (Khrushchev), ப்ரெஷ்னெவ் ஆகியோருக்குத் தனித்தனிப் பகுதிகளும் – ஆந்த்ரபோவ், செர்ன்யென்கோ ஆகியோர் ஒரு பகுதியிலும் இதர பிற்கால சோவியத் தலைவர்கள் கடைசிப் பகுதியிலும் வருமாறு புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் பற்றிய ஜோக்குகளும் பிற்காலத் தலைவர்கள் பற்றிய ஜோக்குகளும் மிகவும் சிறப்பாக வந்திருக்கின்றன.

“ரஷ்ய அதிபர் ப்ரெஷ்னெவ் 1980 ஒலிம்பிக் பந்தயத்தைத் தொடங்கி வைத்துத் தன்னுடைய உரையைப் படிக்கத் தொடங்குகிறார்.
‘ஓ… !ஓ… !ஓ… !’
உடனே அவருடைய உதவியாளர் அவர் காதுகளில் கிசுகிசுக்கிறார்.
‘அது ஒலிம்பிக் சின்னம். உரை அதற்குக் கீழே தொடங்குகிறது!”

மேலும் ஒவ்வொரு பகுதிக்கு முன்னரும் தேவைப்பட்ட முன்னுரையும், விளக்கமும் அளிக்கப்பட்டிருக்கிறது. ‘கம்யூனிஸத்தின் கீழ் பொதுமக்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள இப்புத்தகம் பேருதவியாக இருக்கிறது’ என்று விமர்சித்திருக்கிறது “காண்டெம்பரரி ரீவ்யூ” (Contemporary Review) என்னும் பிரிட்டிஷ் பத்திரிக்கை. மேலும் பிற நாடுகள் அதிலும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, சோவியத் அரசாங்கத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள், சோவியத் அரசாங்கம் மற்றும் அமைச்சரவை செயல்பட்டவிதம் ஆகியவற்றைப் பற்றி புரிந்துகொள்ளவும் இத்துணுக்குகள் உதவியாக இருக்கின்றன.

புத்தகத்திலிருந்து ஒரு ஜோக்:
“பி.பி.சி (BBC) செய்தி நிறுவனம் ரஷ்ய அரசியல் ரகசியங்களை எப்படியோ உடனுக்குடன் தெரிந்துகொண்டு வந்தது ரஷ்ய அரசாங்கத்தை மிகவும் எரிச்சலூட்டியது. அதனால் அடுத்த அமைச்சரவை சந்திப்பை யாருக்கும் சொல்லாமல் மூடப்பட்ட அறையில் நடத்தினார் ப்ரஷ்னெவ். கூட்டம் முடியும் வரை யாரும் வெளியில் செல்லக்கூடாது என்று உத்தரவும் போடப்பட்டிருந்தது.

கூட்டத்தின் நடுவில் பிரதமர் கஸீகினுக்கு (Kosygin) வயிற்றைக் கலக்க ஆரம்பித்து விட்டது. நெளிந்துகொண்டே வெளியில் செல்ல அனுமதி கேட்டார். அனுமதி மறுக்கப்பட்டு விட்டது.

சில நிமிடங்களில் கதவை யாரோ தட்டினார்கள். திறந்து பார்த்தால் துப்புரவுப்பணி செய்யும் வேலைக்காரி கையில் ஒரு பெரிய வாளியுடன் நின்று கொண்டிருந்தாள்.

‘கஸீகின் ‘டூ பாத்ரூம்’ போய்விட்டார் என்று பி.பி.சி-யில் சொன்னார்கள் அதுதான் சுத்தம் செய்வதற்காக வந்தேன்!’
 
***

பென் லூயி(Ben Lewis) இயக்கிய ஆவணப் படமான “சுத்தியலும், நகைச்சுவையும்” (‘Hammer and Sickle’ – ஐ நக்கலடித்து தலைப்பிடப்பட்ட Hammer and Tickle) சோவியத் ரஷ்யா மட்டுமில்லாமல் பல்வேறு ஐரோப்பிய கம்யூனிஸ்டுகளின் ஜோக்குகளையும், நகைச்சுவைத் துணுக்குகள் சமூக, அரசியல் ரீதியாக எவ்விதமான தாக்கங்களை ஏற்படுத்தின என்பதைக் கூறுகிறது.
 
இத்திரைப்படத்தைக் குறித்து ‘ப்ராஸ்பெக்ட்’ (Prospect) என்ற இதழில் இவரெழுதிய கட்டுரை[சுட்டி2] மிகச்சுவையான ஒன்று.
 
அக்கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:
 
“ரொமேனியாவில் கொஸாக்கோவைப் (Ceausescu) பற்றித் திரைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது முதன்முறையாக கம்யூனிஸ்டு ஜோக்குகளைப் பற்றிய வரலாற்றுப் பாரம்பரியத்தைத் தெரிந்து கொண்டேன். என்ற புகாரஸ்ட் போக்குவரத்துத் துறையில் எழுத்தராக வேலை செய்த கேலின் பாக்தன் ஸ்டெஃபானெஸ்கோ (Calin Bogdan Stefanescu), கொஸாக்கோவின் ஆட்சியின் கடைசி பத்து வருடங்கள் அரசியல் ஜோக்குகளை சேகரித்து வந்திருக்கிறார். தான் எந்த ஜோக்கை, எப்போது கேட்டோம், என்று குறிப்பெடுத்து கிட்டத்தட்ட 900 ஜோக்குகளை புள்ளியியல் ரீதியாக ஆய்வு செய்திருக்கிறார். ஒரு அரசியல் நிகழ்வுக்கும், அந்த நிகழ்வு மீதான ஜோக்குக்கும் இடைப்பட்ட கால இடைவெளியை வரைபடமாக்கி (graph) ரொமேனிய கம்யூனிஸ ஜோக்குகளின் வேகத்தை ஆய்வு செய்திருக்கிறார். கொஸாக்கோவின் கடைசி மூன்று வருட ஆட்சிக்காலத்தில் ஜோக்குகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கானதால் இந்த ஜோக்குகளுக்கும் கொஸாக்கோவின் வீழ்ச்சிக்கும் தொடர்பு இருந்ததாகக் கூட அவர் முடிவு செய்திருக்கிறார். ஜோக்குகளின் புள்ளியிலாளரான ஸ்டெஃபானெஸ்கோவின் கதை, அவர் ஆய்வு செய்த ஜோக்குகளை விட நகைச்சுவையாக இருந்தது ஒரு நரண்முகை. அது ஒரு கம்யூனிஸ்ட் உலகை எதிர்த்துப் போராடிய ஒரு சாதாரண மனிதரின் உண்மைநிலையைக் காட்டியது போலிருந்தது.”

“… எனக்குத் தெரிந்தவரை ஜோக் சொல்வதில் யாரும் சலிப்படையவே இல்லை. ஆனால் ஜோக் சொன்னதற்காக அவர்கள் ஜெயிலுக்குப் போவது வழக்கமாக இருந்தது. ஹங்கேரியின் ரகசிய போலிஸின் ஆவணக் கோப்புகள் சேகரிப்பில் ஏராளமான ஆவணங்கள் ஜோக்குகள் சொன்னதற்காகக் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றியே இருந்தது. அரசு அலுவலர்கள் நாள் தோறும் இது போன்று ஜோக் சொன்னவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, சில வழக்குகளில் ஜோக் சொன்னதற்கான ஆதாரங்களைக் காட்டி தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்”.

“கம்யூனிஸம் ஒரு நகைச்சுவை உற்பத்தி செய்யும் இயந்திரமாக இருந்தது. அதன் பொருளாதாரக் கோட்பாடுகளும், அடக்குமுறை இயக்கமும் நகைச்சுவைக்கான சூழ்நிலைகளை இயல்பாகவே உருவாக்கின. ஃபாஸிஸ ஆட்சி, நாஜி ஆட்சி இதிலெல்லாமும் நகைச்சுவைத் துணுக்குகள் இருந்தன. ஆனால் கம்யூனிஸம் போல ஒவ்வொரு நிமிடமும் ஜோக் சொல்வதற்கான அபத்தத்தை அவை கொண்டிருக்கவில்லை.

கம்யூனிஸ ஜோக்குகள், அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான ஒரு விஷயமாக மட்டுமில்லாமல், மக்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றம் நடக்க உதவும் ஒரு ரகசிய மொழியைப் போலவும் இருந்தது.”

ரஷ்யப் புரட்சியைப் பற்றிய ஜோக்குகள் அக்டோபர் 1917-இலேயே ஆரம்பித்துவிட்டன.
ஆரம்பகால ஜோக் ஒன்று:
ஒரு மூதாட்டி மாஸ்கோ மிருகக்காட்சி சாலைக்கு சென்று முதல் முறையாக ஒரு ஒட்டகத்தைப் பார்த்துவிட்டு வியந்துபோய் சொன்னாள். “போல்ஷெவிக்குகள் ஒரு குதிரையை எப்படி மாற்றி விட்டார்கள்!”

கார்பசேவும் நிறைய அரசியல் ஜோக்குகளைத் தெரிந்து வைத்திருந்தார். தனக்கு முன்பு அதிகாரத்திலிருந்தவர்கள் போலவே அவற்றைப் பிறரிடம் பகிர்ந்தும் கொண்டார். ஸ்டாலினோ, க்ருஷ்சாவோ தங்களுடைய செல்வாக்கின் வீழ்ச்சியைப் பற்றி ஜோக்கடித்துக் கொள்வது உங்களால் கற்பனை கூட செய்ய முடியாத காரியம். ஆனால் கார்பசேவ் அதைச் செய்தார். 1996-இல் கிளைவ் ஆண்டர்சன் வழங்கிய பிரிட்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கார்பசேவ் கலந்து கொண்டார். அப்போது அவர் சொன்ன ஒரு ஜோக்.

மாஸ்கோவில் ஒருவர் உணவுப்பொருட்களுக்கான க்யூவில் நின்று கொண்டிருந்தார். க்யூ மிக நீண்டதாக இருந்ததால் பொறுமையிழந்த அவர், “இவ்வளவுதான்.. இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியாது. இப்போதே போய் கார்பசேவைக் கொல்லப் போகிறேன்” என்று அருகிலிருந்த மனிதரிடம் சொல்லிவிட்டுச் சென்றார். சற்று நேரம் கழித்து கொலை செய்யப் போனவர் திரும்பி வந்து விட்டார். அருகிலிருந்த மனிதர் “என்ன கொலை செய்யவில்லையா?” என்று கேட்க, “அங்கே இதை விட நீளமான க்யூ இருந்தது. அதற்கு இதுவே பரவாயில்லை என்று திரும்பிவந்துவிட்டேன்” என்றார்.

‘அரசியல் ஜோக்குகள் நம்மைக் காப்பாற்றுபவையாக இருந்தன’ என்று ஏமாற்றத்திலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும் விடுபட ஜோக்குகள் காரணமாக இருந்ததைக் காட்டி 1989 – இல் கார்பவேவ் ஒரு தொழிலாளர் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

கவனித்தால் ஒன்று புரியும் – மொத்த கம்யூனிஸ்ட் புள்ளிகளிலேயே கார்பசேவ் ஓரளவு சுதந்திர சமுதாயத்தை ஆதரித்தவர். அவருக்கு நகைச்சுவை உணர்வும் அதை வெளிப்படுத்துவதில் தைரியமும் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. நகைச்சுவை உணர்வில்லாதவர்களுக்கு அரசியல் அதிகாரம் தரக்கூடாது என்று கூட ஒரு சட்டத்தைக் கொண்டு வரலாம் போலிருக்கிறது.

***
“ஒருவேளை கம்யூனிஸம் ஒழிந்துவிட்டால் நாங்கள் பேசிக்கொள்வதற்கு நகைச்சுவையான விஷயமே இருக்காதோ என்றெல்லாம் நாங்கள் வேடிக்கையாகக் கவலைப்பட்டிருக்கிறோம்” என்று பென் லூயியிடம் சொல்லி இருக்கிறார் ஒரு ஹங்கேரியர்.

ஆனால் ரஷ்யர்கள் அப்படியில்லை. விளாதிமிர் புதின் தாண்டி இப்போது வந்திருக்கும் திமித்ரி மெத்வதேவையும் விட்டு வவக்காமல் வாரு, வாரென்று வாருகிறார்கள் [சுட்டி3].

திமித்ரி மெத்வதேவ், விளாதிமிர் புதினால் ஆட்டி வைக்கப்படும் ஒரு பொம்மை என்பது ஊரெங்கும் தெரிந்த ரகசியம். அதை வைத்துதான் இப்போது அங்கே காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு ஒன்று:
மெத்வதேவ் பதவியேற்பு உரை நிகழ்த்தவிருக்கிறார். அப்போது அவருடைய உதவியாளர் ஒருவர் மெத்வதேவின் கோட்டிலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் நூல்களைப் பார்த்துவிட்டு அகற்றப்போகிறார்.

அவரிடம் புதின் சொல்கிறார். “அவற்றை நீக்காதே. அவை என்னுடையவை!”

பாவம் மெத்வதேவ். “ஆரம்பத்துலயே ஆரம்பிச்சுட்டாய்ங்களா!” என்று கவலைப்பட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

****

இரண்டு வருடங்களுக்கு முன்னால் தமிழ் நாட்டில் ஒரு மிகப்பெரிய நகைச்சுவை அலை கிளம்பியது. ஒரு டிவி சேனலில் வந்த ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியடைய எந்த சேனலைத் திருப்பினாலும் ஒரே நகைச்சுவை மழை! இந்த நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்பவர்களிடம் நிச்சயமாக ஒரு எம்.ஜி.ஆர், ஒரு சிவாஜி மீதான ‘ஐட்டம்’ கண்டிப்பாக இருக்கும். எம்.ஜி.ஆர் என்றால் அவர் குரலையோ, சிவாஜி என்றால் அவர் மிகை நடிப்பையோ கிண்டல் செய்யாமல் நகைச்சுவையே இருக்காது! இங்கே உடைபட்ட பிம்பங்கள் எழுத்தானபோதுதான் ஆனந்த விகடனுக்குக் கோவம் வந்துவிட்டது.

ஆரம்பத்தில் நன்றாக இருந்த இந்நிகழ்ச்சிகள் போகப்போக சலிப்பூட்ட ஆரம்பித்துவிட்டன. புளித்துப்போன மிமிக்ரி, சலித்துப் போன ஜோக்குகள், அபத்தமான கிண்டல்கள். இப்போதெல்லாம் ஏதாவது மிரட்டுவதற்காக நாக்கை மடித்தால் கூட, ஆறே வயதான என் அக்கா மகன் “விஜய்காந்த் மாதிரி பண்ணாதீங்க மாமா..” என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறான். இத்தனைக்கும் அவன் வாழ்நாளில் பார்த்தது இரண்டே தமிழ்த் திரைப்படங்கள்தான் (ஒன்று சண்ட்ரமுகி, இன்னொன்று சிவாஜி). மற்றதெல்லாம் இந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளின் உபயம்தான்.

இந்த நிகழ்ச்சிக்கு வருகை தரும் விருந்தினர்கள் எப்படிப்பட்ட மட்டமான ஜோக்குக்கும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். (இந்தக் கலையில் விற்பன்னர், ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாடிய நவ்ஜோத்சிங் சித்து. இவர் சிரிக்கும்போது தட்டித் தட்டியே நிறைய மேஜைகளை உடைத்திருக்கிறார் என்று ஒரு வதந்தி நிலவுகிறது).

ஒரு மாதம் முன்பு நான் பார்க்க நேர்ந்த மகா அபத்தமான காமெடி நிகழ்ச்சியில் ஒரு ‘வளர்ந்துவரும்’ நடிகர் நடுவராக வந்திருந்தார். எந்த ஜோக்குக்கும் சிரிக்காமல் ‘உர்ர்ரென்றே’ இருந்தார். பரவாயில்லையே.. திராபை ஜோக்குக்கெல்லாம் சிரிக்காமல் இயல்பானவராக இருக்கிறாரே என்று நினைத்தேன். நினைப்பில் விழுந்தது ஆற்றில் திருடிய ஒரு லாரி மணல்.

நிகழ்ச்சியில் கமலஹாசனைப் பற்றி ஏதோ கிண்டலாகச் சொல்லப்போக கோவம் வந்ததே பார்க்கவேண்டும் நம் விருந்தினருக்கு. “ஒரு உலக மகா கலைஞனை இப்படியெல்லாம் பேசலாமா? அதிலும் சினிமாவிலேயே இருக்கும் நாமே அதைக் கேட்டுக்கொண்டும் இருக்கலாமா? அவர் நம்முடன் இருப்பதே நமக்குப் பெருமை இல்லையா?” என்றெல்லாம் எகிற ஆரம்பித்து விட்டார். ‘கமலஹாச அஷ்டோத்ர நாமாவளி’ ஏதாவது எடுத்து வந்திருக்கிறாரா என்று பார்த்தேன். நல்லவேளையாக அப்படி எதுவும் இல்லை.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த சினிமா நடிகருக்கோ ஒரே தர்மசங்கடம். “ஹி… ஹி… இதெல்லாம் சும்மா காமெடிக்குதானே… ஹி… ஹி… கமல்ஹாசன் மிகச்சிறந்த நடிகர்தான்.. ஹி.. ஹி.. இருந்தாலும் இந்த நிகழ்ச்சியே ஒரு காமெடி நிகழ்ச்சிதானே…” என்றெல்லாம் வழிந்த அந்த நடிகர்… அட.. ஜெயமோகனை தொலைபேசியில் கூப்பிட்டு “செந்தமிழில்” திட்டிய அதே நடிகர்! கம்யூனிஸ நாட்டில் மட்டுமில்லை நம் நாட்டிலும் நகைச்சுவைக்குப் பஞ்சமே இல்லை போங்கள்!

***
ஒரு பின்குறிப்பு:

கம்யூனிஸ ஜோக்குகளைப் பற்றிய புத்தக, திரைப்பட மேற்கோள்கள் தற்செயல் நிகழ்வுகள் மட்டுமே. இதை வைத்து நான் கம்யூனிஸ அரசியலையும், தமிழ்நாட்டின் திராவிட அரசியலையும் ஒப்பிடுவதாக வீணாக முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டாம். சும்ப, நிசும்பர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி எனக்கு விளம்பரமெல்லாம் தர மாட்டார்கள். என்னையே அடித்து ஒட்டுவார்கள். அதனால் இந்த desclaimer மிக முக்கியமான ஒன்று.

****
sethupathi.arunachalam@gmail.com

****
சுட்டிகள்:
[1]http://www.amazon.com/Tiny-Revolution-Russia-Twentieth Routledgecurzon/dp/0415351731
[2]http://www.prospect-magazine.co.uk/printarticle.php?id=7412
[3]http://timesofindia.indiatimes.com/World/Europe/Russians_make_fun_of_next_Prez/articleshow/2841177.cms

Series Navigation

சேதுபதி அருணாசலம்

சேதுபதி அருணாசலம்