ஆட்டோகிராஃப் 18-ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருள் என்னவோ ?

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

சித்ரா ரமேஷ்


தமிழ் இலக்கணத்தில் வேற்றுமைஉருபு, பண்புத்தொகை, வினைத்தொகை,உவமைத் தொகை, உரிச்சொல் போன்றவற்றை படித்த போதும்

ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை என்று இலக்கண குறிப்பு எழுதிய போதும் நமக்கு நன்றாக தெரிந்த மொழியை தேவையில்லாமல் எதற்கு இப்படி

கஷ்டமாக மாற்றுகிறார்கள் என்ற எதிர்ப்புதான் அதிகம் இருந்தது. கணக்கில் அல்ஜீப்ரா, சைமல்ட்டேனியஸ் ஈகுவேஷன், பிதாகரஸ் தியரம், டிரிக்னாமெட்ரி என்று எதைப் புதிதாக கற்றுக் கொண்டாலும் ஏற்படும் திகில் கலந்த பயத்தை தமிழிலும் எதிர்பார்க்கவில்லை. தமிழில் ஒரு செய்யுளை எழுதி அதில் சொற்களை குறில் நெடில் என்ற முறையில் பிரித்து இரண்டு குறில், உடன் ஒரு ஒற்றெழுத்து, ஒரு குறில் ஒரு நெடில், உடன் ஒரு ஒற்றெழுத்து வந்தால் அது நிரைசீர், குறில் ஒற்றெழுத்துடன்

வேண்டாம் இந்த விளையாட்டு! ஆக நேரசை, நிரையசை என்று முதலில் பிரித்து,

நேர் நேர் வந்தால் தேமா, நிரை நேர் வந்தால் புளிமா, கருவிளம், கூவிளம் என்று முதல் அடுக்கு, அடுத்த அடுக்கு தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய், மேலும் அதிகப் படுத்தி தேமாங்கனி, புளிமாங்கனி என்று சொல்ல சொல்ல இனிக்கவில்லை. இந்த விளையாட்டுக்கே நான் வரவில்லை என்ற விரக்தியோடு ஒதுங்கி விட்டேன். இந்த விரக்தியை கவனிக்காமல் தமிழம்மா மாமுன் நேர், விள முன் நிரை, காய் முன் நேர் வந்தால் ஆசிரியப்பா என்று யாப்பிலக்கணத்தை விளக்க ஆரம்பித்ததும் வெறுத்துப் போய்விட்டது. வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா,

குறட்பா-நாள், மலர், காசு, பிறப்பு போன்றவைகளில் தான் முடிவடையும். ஏதாவது புரிகிறதா ? ஒரு வாரம் இரண்டு வாரம் இந்த வெறுப்பிலேயே ஓடிவிட்டது.

“யாருக்காவது இந்த பாடங்களில் சந்தேகம் இருக்கிறதா ?” என்று கேள்வி கேட்டபின் சும்மாயிருக்க முடியாமல் “பரீட்சைக்கு இதிலிருந்து கேள்விகள் வந்தால் விட்டு விடுவதற்கு சாய்ஸ் இருக்குமா ?” என்று கேட்டதும் கோபமே வராத தமிழ் ஆசிரியைக்குக் கூட கோபம் வந்து விட்டது. நொபெல் பரிசு பெற்ற இந்தியப் பெண்கள் யாராவது இருக்காங்களா என்ற கேள்விக்கு “இப்பொது இல்லை வருங்காலத்தில் ____பெயர் இருக்கும் என்று தன்னடக்கத்தோடு சொன்ன பெண்ணுக்கு ஒரு சாதாரண இலக்கணம் பிடிபடவில்லையா என்ற கோபம்! அப்பொது

அன்னை தெரசாவுக்கு நொபெல் பரிசு கிடைக்கவில்லை. இன்று வரை எந்த இந்தியப் பெண்ணுக்கும் இலக்கியதுக்கான நொபெல் பரிசு கிடைக்கவில்லை! நோபெல் பரிசு பெறும் கனவு கூட காணக் கூடாதா ? நாளைக்கு ஆசிரியப்பாவிலோ, வெண்பாவிலோ

அனைவரும் ஒரு கவிதை எழுதி வரவேண்டும். நன்றாக எழுதியவர்கள் டிஸ்ட்ரிக்ட் லெவல்ல நடக்கின்ற போட்டிக்கு போகலாம் என்று அறிவித்து விட்டு தனியே என்னைக் கூப்பிட்டு இந்த போட்டிக்கு நீ போவதற்கு எந்த முயற்சியும் செய்ய வேண்டாம். நீதான் சாய்ஸில் விட்டுவிடப் போகிறாயே! ஆனால் கண்டிப்பாக வீட்டுப் பாடம் செய்து கொண்டுதான் வரவேண்டும்! என்று சொன்னதும் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் கப்பம் கட்ட வேண்டும் என்று சொன்னதும் பொங்கி எழுவாரே அதைப் போல் இல்லை மனோகராவில் ‘பொறுத்தது போதும் பொங்கி எழு மகனே ‘ என்று கண்ணாம்பா சொன்னதும் கொதித்தெழுந்த மனோகரனைப் போல் சீறிப் பாய்வேன் என்று எதிர் பார்த்தீங்களா ? அந்த வயது யார் எது சொன்னாலும் எதிர்த்து நிற்கும் புரட்சிகரமான புயலடிக்கும் வயதாயிற்றே! ஆசிரியை என்னை உசுப்பி விடுகிற மாதிரி பேசியும் அதைக் கண்டு கொள்ளாதது போல் என் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ‘கொடியசைந்ததும் காற்று வந்ததா ? காற்று வந்ததும் கொடியசைந்ததா ? பாட்டிலிருந்து நாலு வரிகள் எடுத்து எழுதி வீட்டுப் பாடமாக முடித்து கொடுத்து விட்டேன். கண்ணதாசனை காப்பியடிச்சாலும் மிகச் சிறந்த கவிதை இதுதான்

என்று வகுப்பில் அறிவித்தது கூட என்னை அவமானப் படுத்தும் முயற்சி என்றுதான் தோன்றியது. கண்டிப்பாக கண்ணதாசனை காப்பியடிக்காமல் கவிதை எழுதித் தர வேண்டும் என்ற இக்கட்டு! யாப்பிலக்கணத்தை நானே படித்து புரிந்து கொண்டபின்

கணக்கு, கவிதை எல்லாம் ஒன்றுதான்! ஒரு பக்கம் எதுகையெல்லாம் எழுதி கொள்வது

எதுகைக்கு ஏற்ற மோனைச் சொல் தேடுவது! இப்படி மொழியாற்றல் இருந்தால் போதும்! கொஞ்சம் சீர் சரியாக வரவில்லை என்றால் குறிலை நெடிலாக மாற்றி விடுவது என்று விளையாட்டாக செய்து பார்த்து ரசித்து ஆஹா! ஒரு அற்புதமான விஷயம் கைவரப் பெற்றேன். கவிதை எழுதி ரசித்ததை விட இன்னொரு கொடுமையான விஷயம்! வீட்டுக்கு யாராவது வந்தால் கவிதையெல்லாம் எழுதுவியாமே!

என்று துக்கம் விசாரிப்பது போல் விசாரித்து விட்டுப் போவது! பாட்டு கற்றுக் கொண்டால் ரொம்ப நல்ல விஷயம்! பாட்டு எழுதினால் ஒரு மாதிரி கிண்டலான

விஷயமாகிவிடும். இதனால் இந்த கவிதை எழுதும் கெட்ட பழக்கத்தையே நிறுத்தி விட்டேன். இல்லை கவிதை எழுதுவேன் என்று வெளியில் சொல்லவதை நிறுத்திவிட்டேன். நான் கவிதை எழுதுவேன் என்று தெரிந்து அதனால் அதிகம் கவரப் பட்டவர்கள் எங்கள் பாட்டு டாச்சர்தான்! வாரம் ஒருமுறை வகுப்புக்கு வரும்போது

எதாவது சொந்த சாஹித்யம் மாதிரி எதையாவது எழுதி கொண்டு வந்து என்னிடம் அசை, சீர், தளை எல்லாம் பிரித்துப் பார்க்கச் சொல்லி வெண்பா, ஆசிரியப்பா,

கலிப்பா, வஞ்சிப்பா வகைகளில் எந்த வகையைச் சார்ந்தது என்பதையெல்லாம் கண்டு பிடிப்பது என் பொறுப்பு. அந்த பாட்டுக்கள் ஸ்ரீராஜராஜேஸ்வரி, காமாக்ஷி, கஜமுகன் மாதா, அம்மா பரமேஸ்வரி வந்தருள் தருவாய் என்ற ரீதியில் வந்து இறுதியில்

‘வசந்தா உன் பாதம் பணியும் ‘ என்று அவர்கள் பெயர் கொண்ட முத்திரையோடு

முடியும் பாடல்கள்! நிறைய வடமொழிச் சொற்கள், எதுகை மோனை போன்ற எந்த சந்தத்துக்குமே அடங்காமல் புதுக் கவிதை மாதிரி எந்த இலக்கணத்திலும் சேர்க்க முடியாத புதிராக இருந்தது. பக்தி பாடல்களில் ‘சின்னஞ்சிறு பெண் போல சிற்றாடை இடையுடுத்தி ‘, ஆண்டாள் பாசுரங்கள் போன்ற அழகான கவிதைகளை விடியற்காலையில் கேட்டு எட்டிப் பார்த்த பக்தி ஓடியேப் போய்விட்டது.

எந்த பாடலைக் கேட்டாலும் ஆசிரியப்பா இல்லை வெண்பா என்று சொல்லிவிடுவேன்.

எதுகை மோனையெல்லாம் கூட மாற்றி கடைசியில் அவர்கள் பாடல் என் பாடல் ஆகிவிடும் நிலை! முருகா உன் திருவடி சரணம்! பாடுவதற்கு சரியாக வரும் என்று எழுதி விடுவார்கள். உடனே சும்மா ஒரு காப்பிய நயத்துக்காக “மயில் மேல் வரும் முருகா உன் மேல் மையல் கொண்ட மங்கை இனி உன் கையில் வேலாக வர

தையல் எனக்கு தஞ்சம் அளிப்பாய்” என்று எழுதித் தந்து விடுவேன். பாட்டு சூப்பரா இல்லை ? இது போல் மெத்தை, தத்தை, வித்தை, சொத்தை, கண், மண், பெண்,

போன்ற வார்த்தைகளில் விளையாடி நிறைய பாட்டு எழுதிக் குவித்திருக்கிறேன்.

ஆனாலும் அவர்களுக்கு அநியாயத்துக்கு ஆசை! ஏன் எப்போதும் ஆசிரியப்பா இல்லை வெண்பாவில் மட்டும் கவிதைகள் இருக்கின்றன ? வஞ்சிப்பா, கலிப்பா இதெல்லாம் எழுத முடியாதா ? என்று என்னிடம் ஐடியா கேட்க விளையாடறீங்களா ? அதெல்லாம் எழுத முடிந்தால் நான் ஏன் இப்படி உங்கக் கிட்ட மாட்டிக் கிட்டு முழிக்கணும் ? படிப்பையெல்லாம் நிறுத்தி விட்டு முழுநேரக் கவிஞனாகி இருப்பேனே ?

அதையெல்லாம் எப்படி எழுதுவது என்று எதாவது எளிமையான வழி இருக்கிறதா என்று கேட்க இதை போல எதாவது ஒரு வாய்ப்புக்குத்தானே காத்துக் கொண்டிருக்கிறேன் ? வஞ்சியென்றால் என்னை வஞ்சிப்பதோ ? இதைப் போல் சொற்கள் வந்தால் அது வஞ்சிப்பா! குதிரை குளம்பொலி சத்தம் போல் சந்தம் வந்தால் அது கலிப்பா! என்று ஏதோ எனக்குத் தெரிந்த ஷார்ட்கட் வழியைச் சொல்லிக் கொடுத்தேன். தமிழ் தாய் என்னை மன்னிப்பாளாக! முடிந்தால் அந்தாதி கூட எழுத முயற்சி செய்யுங்கள் என்று அவங்களுக்கு ‘வசந்தாகால நதிகளிலே வைரமணி நீரலைகள் ‘ பாட்டைச் சொல்லிக் கொடுத்து நல்லா ஊக்கப்படுத்தினேன். என்னுயிர்த் தோழி என்னுடைய அத்தனை குயுக்தியும் அறிந்தவள்! அந்த டாச்சர் வகுப்புக்கு வந்தாலே போதும் முகத்தில் ஒரு மந்தஹாசம்! ரகசியமாக என்னைப் பார்த்துப் புன்னகைப்பாள். அந்த புன்னகையில் ஒரு பொருள் இல்லை. பல பொருள் இருக்கும். இது கடைசியில் வகுப்பு முழுவதும் தெரிந்த ரகசியமாகி விட்டது. காதலிப்பவர்களைப் பற்றி ஃபிரெண்ட்ஸ், அக்கம் பக்கத்தினர், தெருவில் இருப்பவர்கள், எதேச்சையாக அவர்களை சேர்ந்து பார்த்தவர்கள் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும். சம்பந்தப்பட்ட அப்பா, அம்மாக்களுக்கு மட்டும் தெரியாமல் போவது போல் எங்கள் வகுப்பில் அத்தனை பேருக்கும் தெரிந்த ஒரு விஷயம் அவர்களுக்கு மட்டும் எப்படித் தெரியாமல் போனது ? என்னே என் வகுப்பின் ஒற்றுமை!

அது சரி அ.முத்துலிங்கம் எழுதிய ‘திகடசக்கரம் ‘ என்ற சிறுகதையைப் படித்திருக்கிறீர்களா ? ஒரு அணைக்கட்டினால் ஏற்படும் பாதகமான விளைவுகளைப் பற்றி எடுத்துச் சொல்லி அணைக்கட்டு கட்டுவதை நிறுத்த வேண்டும். அதற்கு

கச்சியப்பர் யுக்தி என்று ஒன்றைச் சொல்லுவார். கந்த புராணம் எழுதிய கச்சியப்பர் எழுதிய முதல் வார்த்தையான ‘திகடசக்கரம் ‘ என்ற வார்த்தையை திகழ்+தசம்+சக்கரம்

என்று பிரித்துப் பொருள் தர இதைப் போன்ற புணர்ச்சி விதி தொல்காப்பியத்திலேயே கிடையாது என்று ஆட்சேபிக்க முருகனே எடுத்துக் கொடுத்த முதல் வரி இதை எப்படி மாற்றுவது என்று அவர் திகைத்து நின்றார். மறுநாள் சோழதேசத்திலிருந்து வந்த ஒரு புலவர் வீரசோழியம் என்ற இலக்கண நூலை சமர்ப்பிக்க அதில் ‘திகடசக்கரம் ‘ என்ற வார்த்தைக்கு கச்சியப்பர் கூறிய புணர்ச்சி விதி சரியாக அமைந்திருப்பதைக் கண்டு கச்சியப்பரின் நூல் அரங்கேற்றம் கண்டது. கிட்டத் தட்ட இதேப்போன்ற ஒரு யுக்தி கண்டு பிடித்து தன்னுடைய பிரச்சனைக்கும் தீர்வு காணும் கதாநாயகன்!

என்ன அருமையான கதை! இதை படித்ததிலிருந்து திரு முத்துலிங்கத்துக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே….யிருக்கிறேன்.அவர் திண்ணை வாசகராக இருக்கும் பட்சத்தில் இந்த பிரச்சனைக்கு தீர்வு வந்து விடும்.

கச்சியப்பரைப் போல் நான் கூறிய யாப்பிலக்கணத்தையும் ஒத்துக் கொள்ளக் கூடிய வகையில் வருங்காலத்தில் ஒரு இலக்கணநூல் வராமலா இருக்கும் ?

மாவட்ட அளவில் நடை பெற்ற கவிதைப் போட்டியில்

“தத்தை நிறமே எங்கும் தவழ புல்

மெத்தை விரித்த மென்மழையே

வித்தை செய்த விந்தை மழையே உன்

சொத்துத்தானோ சொக்கத்தங்கம்” இதைப் போல் கவிதை எழுதினால் பரிசு கிடைக்காமாலா போகும் ? கவலைப் படாதீர்கள். இப்போது கவிதை எல்லாம் எழுதுவதில்லை. உண்மை! என்னதான் சொல்லுங்க! ஆயிரம் புதுக் கவிதைப் படித்தாலும் என்னவோ சொல்ல வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டாலும்

மனதில் தங்குவது என்னவோ மரபுக் கவிதைதான்! மனப்பாடம் செய்ய வசதி!

தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் தமிழ் தெரிந்த எந்தத் தமிழனும் குறைந்த பட்சம் பத்துக் குறளாவது சொல்ல முடியும். புதுக் கவிதைகள் அதை நானே எழுதியிருந்தாலும் திடாரென்று யாரிடமாவது சொல்ல வேண்டும் என்றால் தட்டித் தடுமாறிப் போக நேரிடுகிறது. கொண்டுகூட்டுப் பொருள் கோள் போல் வார்த்தைகள் வரிகள் மாறிவிடுகிறது. என்ன மாறினாலும் பிரச்சனையும் இல்லை. இதுதானே புதுக் கவிதைதையின் பலம்!

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

Series Navigation

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்