தினகப்ஸா

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue

சூடான செய்திகளை நடக்காமலேயே வழங்கும் ஒரே நாளிதழ்


தமிழில் படிக்க வேண்டும் – எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்- ‘முடியாது ‘ ஜெயலலிதா சூடான பதில்.

கவர்னர் உரையை தமிழில் படிக்கச் சொல்லி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்ததற்கு ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார்.

காஷ்மீரிலே காஷ்மீர் மொழியில் கவர்னர் உரை படிக்கபடுவதில்லை. ஏன் காஷ்மீர் மொழி கூட அந்த மாநில மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை. உருது மொழியே ஆட்சிமொழி. அப்படியிருக்கும்போது ஏன் தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் கவர்னர் படிக்கவேண்டும் ? கவர்னருக்கு தமிழ் தெரியாமல் இருக்கும்போது அவரை எப்படி தமிழில் படிக்கச்சொல்ல முடியும்…

இதற்கிடையே ஷேம் ஷேம் பப்பி ஷேம் என்று எதிர்கட்சியினரான திமுகவினரும் காங்கிரசும் ஆங்கிலத்தில் கத்தினார்கள். (பிறகு கேட்டதற்கு, ஆங்கில பள்ளிக்கூடங்களில் படிக்கும் தங்கள் குழந்தைகள் சொல்லிக்கொடுத்ததைதான் தாங்கள் கத்தினோம் என்று கூறினார்கள்)

இனி தமிழக ஆளுனர் உரை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மொழியில் படிக்கப்படும்,அதுவே நாட்டு ஒருமைப்பாட்டுக்கும் வழி, விவசாயிகளுக்கும் ஒன்றும் புரியாது என்று அதிரடியாக அறிவித்தார். முதல் கட்டமாக இனி தான் இந்த வருடம் முழுவது கன்னட மொழியிலேயே பத்திரிக்கையாளர்களுடன் பேசப்போவதாக தெரிவித்தார்.

***

தமிழ்நாட்டில் யாரும் பட்டினியால் இறக்கவில்லை என்று தமிழக முதல்வர் அறிவிப்பு.

இன்று தமிழக முதல்வர் இதுவரை பட்டினியால் இறந்தவர்களின் பட்டியலை வெளியிட்டு அதற்கு அரசாங்கம் கண்டுபிடித்துள்ள காரணங்களை தெளிவு படுத்தினார்.

அதன் பின்னரே இத்தனை பேர் பட்டினியால் இறந்திருக்கிறார்கள் என்ற உண்மையே தமிழக பத்திரிக்கையாளர்களுக்குத் தெரிந்தது என்பதும் குறிப்பிடத்தகுந்த செய்தி.

பட்டினியால் இறப்பவர்கள் எல்லோருமே இனி சட்டினியால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுவார்கள் என்றும், எல்லா மாவட்ட கலெக்டர்களுக்கும் இது சம்பந்தமாக அரசு ஆணை அனுப்பப்பட்டுள்ளது என்றும் புரட்சித்தலைவி தெரிவித்தார்.

சட்டினியால் எப்படி இறக்க முடியும் என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘நிருபர்கள் கேட்டிருக்கிறீர்கள். இதற்கு பதில் உண்டு. இப்போது என்னிடம் இல்லை. பிறகு தருகிறேன் ‘ என்று மாண்புமிகு புரட்சித்தலைவி தெரிவித்தார் என நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

***

சாத்தான்குளத்திற்கு வீரத்துடன் போகாதே – கலைஞரின் வீரக்கடிதம்

வீரம் விளைந்த மண்ணில் சோரம் போன சொக்கட்டான்கள் இன்று தேர்தல் நடத்தி நம்மை இழிவு படுத்திட நினைக்கிறார்கள். அவர்தம் மூட நம்பிக்கை இந்த பகுத்தறிவு பாசறையின் சோற்றுப்பானையிலே வேகாது. இன்னும் ஒரு தேர்தல், இன்னும் ஒரு அப்பட்டமான தேர்தல் தில்லுமுல்லுகள். நம்முடைய பருப்பை நம்மிடமே வேகவைத்துக் காண்பிக்கத் துணிந்துவிட்டார்கள் கெடுமதியினர். ஜெயலலிதா அம்மையார் திமுகவை சாத்தான் குளத்திலே போரிடவைத்து மீண்டும் ஒருமுறை சைதாப்பேட்டை காரியங்களை செய்து காண்பித்திட நினைக்கிறார். அதற்கு ஆதரவு தரமாட்டோம். அன்று ஒருநாள் சங்ககாலத்திலே இரண்டு தமிழ் நெஞ்சங்கள் போரிட வந்த போது அவர்களை போரிட வேண்டாம் என்று கவிஞர் ஒருவர் வலியுறுத்தினார். அதனால் அன்று போர் நின்றது. தர்மம் அதர்மம் முக்கியமல்ல, தமிழ் நெஞ்சமே முக்கியம் என்பதை அவர் உணர்த்தினார்.

நாங்கள் சங்கக்கவிதைகளை மனத்தில் கொண்டு உரை எழுத இருக்கிறவன் என்பதால், திமுக அதிமுக இரண்டுமே தமிழ் நெஞ்சங்கள்தாம் என்பதால் போரிடாமல் இருந்துவிட்டோம் என்றும் வருங்காலத்திலே உரை எழுத இருக்கிறேன் என்பதை முன் கூட்டியே அறிவிக்கிறேன். போரிடும் குணமல்ல சங்ககாலக்குணம். அது சமாதானக் குணம். திமுகவுக்கு வேண்டியதை அதிமுக கொடுத்துவிடுமெனில் ஏன் போர், ஏன் தேர்தல்.

இதனை மனத்தில் இருத்தி தமிழ் நெஞ்சங்களுக்கு ஆதரவு தரும்படி உடன்பிறப்பை வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்

இப்படியாக கலைஞரின் கடிதம் இருந்ததாக நம்பத்தகாதவட்டாரங்கள் தெரிவித்தன.

***

எல்லா திமுக எல்எல்ஏக்களும் கைது. ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை

இன்று அதிகாலை எல்லா திமுக எம்.எல்.ஏக்களும் அதிரடி நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார்கள். பரிதி இளம் வழுதி கைது நடவடிக்கையைத் தொடர்ந்து எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தியதால், இந்த சட்டம் ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டி வந்தது என்று ஜெயலலிதா எதிர்கட்சியினரை குற்றம் சாட்டினார். தீவிரவாதிகளை ஆதரிக்கும் திமுக எம்எல்ஏக்களை கைது செய்தது வரவேற்கவேண்டிய விஷயமே என்று சோ குறிப்பிட்டார். பாஜக கட்சி வழக்கம் போல மவுனம் சாதித்தது.

காங்கிரஸ் கட்சித்தலைவரான இளங்கோவன் வழக்கம்போல ஆவேசமாக அறிக்கை விட்டார். அதனை பிரசுரிக்க முடியாமல் பத்திரிக்கையாளர்கள் திணறினார்கள் என்று நம்பத்தகாத வட்டாரங்களிலிருந்து செய்திகள் வருகின்றன.

***

தென் மாநில டிஜிபிகள் நடத்தும் வெற்றிகரமான நூறாவது வீரப்பனைப் பிடிக்க திட்டமிடும் கூட்டம் கூட்டப்பட்டது.

இந்த நூறாவது கூட்டத்தை வெற்றிகரமாக் கொண்டாட வேண்டி எழும்பூரைச்சுற்றி வாழ்க டிஜிபிகள், வளர்க அவர்தம் வீரம் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த கூட்டத்தொடரின் நூறாவது நாளை சிறப்பிக்க ராமதாஸ் அழைக்கப்பட்டிருந்தாலும், அவர் கோர்ட் கேஸ் என அலைந்து கொண்டிருப்பதால் வர இயலவில்லை என நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன. ராமதாஸ் கோவித்துக்கொள்ளக்கூடாது என்று இனி வீரப்பனை மாண்புபொருந்திய வீரப்பனார் என்றே எலலா பதிவேடுகளிலும் குறிப்பிடப்படும் என இன்று சிறப்பு அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்துக்கு வந்து பெருமை சேர்த்த தென் மாநில டிஜிபிகள் அனைவருக்கும் ஒரு யானைத்தந்த சிற்பமும், சந்தன கட்டையும், மான்கறி சோறும் போடப்பட்டதாக நம்பத்தகாத சிறப்புச் செய்திகள் கூறுகின்றன.

***

மேற்கண்ட அனைத்து செய்திகளையும் வரும்முன்னரே அளித்த நம்பத்தகாத வட்டாரங்களுக்கு மிக்க நன்றி கூறுகிறோம்.

***

Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா