அரசாங்கங்களை ஒப்பிட ஒரு சிறிய கையேடு

This entry is part [part not set] of 18 in the series 20010812_Issue


நிலப்பிரபுத்துவம் : உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பண்ணையார் எல்லாப் பாலையும் எடுத்துக்கொள்கிறார்.

ராணுவ பாஸிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் உன் பசுக்களை எடுத்துக்கொண்டு உன்னை ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கிறது.

கிளப்டோகிராடிக் பாஸிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண்டையும் எடுத்துக்கொண்டு உன்னைச் சுட்டுக் கொல்கிறது

நைஜீரியா ஜனநாயகம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண்டையும் எடுத்துக்கொள்கிறது. உன்னைச் சுட்டுக் கொல்கிறது. பசுக்களை அரசாங்கம் ஸ்விட்சர்லாந்துக்கு அனுப்புகிறது.

சோஷலிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண்டையும் எடுத்துக்கொள்கிறது. அவைகளை கவனித்துக்கொள்ள உன்னை வேலைக்கு வைத்துக்கொள்கிறது. பாலை உன்னிடம் நல்ல விலைக்கு விற்கிறது.

யுடோபியன் கம்யூனிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அவைகளை கவனித்துக்கொள்ள உன் பக்கத்து வீட்டுக்காரர்கள் உனக்கு உதவுகிறார்கள். நீங்கள் எல்லோரும் பாலை பங்கிட்டுக்கொள்கிறீர்கள்.

லெனினிஸ கம்யூனிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ அவைகளை கவனித்துக்கொள்ள வேண்டும். அரசாங்கம் எல்லாப்பாலையும் எடுத்துக்கொள்கிறது.

மாவோயிஸம், ஸ்டாலினிஸ கம்யூனிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் அவைகளை எடுத்துக்கொள்கிறது. பிறகு பசுக்கள் இருந்ததையே மறுக்கிறது. அரசாங்கம் பாலை தடை செய்கிறது.

சுத்தமான ஜனநாயகம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பால் யாருக்குக் கிடைக்கும் என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் முடிவு செய்வார்கள்

பிரதிநிதித்துவ ஜனநாயகம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பால் யாருக்குக் கிடைக்கும் என்று உன் பக்கத்துவீட்டுக்காரர்கள் தேர்ந்தெடுத்த ஒரு ஆள் நிர்ணயம் செய்வான்.

சிங்கப்பூர் ஜனநாயகம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அபார்ட்மெண்ட்டுக்குள் இரண்டு விவசாய மிருகங்களை வைத்திருந்ததற்காக அரசாங்கம் உனக்கு அபராதம் விதிக்கிறது.

அமெரிக்க ஜனநாயகம்: அரசியல்வாதிகள், அவர்களை தேர்ந்தெடுத்தால் உனக்கு இரண்டு பசுக்கள் தருவதாக வாக்களிக்கிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பசு யாருக்குக் கிடைக்கும் என்பதற்கான தகுதிகளை நிர்ணயம் செய்வார்கள். அரசியல்வாதிகளின் தேர்தல் செலவுக்கு அதிகப் பணம் கொடுத்தவர்கள் மட்டுமே தகுதி போல நிர்ணயம் நடக்கும். பசுவை ஒப்பந்தத்தில் இழுத்துவிட்டதால், உன் மீது விலங்குகள் உரிமைகள் பற்றி அக்கறைப்படும் இயக்கங்கள், பசுக்களின் சார்பாக, வழக்கு தொடுக்கும். இதே வேளையில் பாலின் விலை ஒரேயடியாக ஏறிப்போய், நீ கோககோலா குடிக்க ஆரம்பித்து விடுவாய்.

இங்கிலாந்து ஜனநாயகம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ அவைகளுக்கு ஆட்டு மூளையைச் சாப்பிடக் கொடுக்கிறாய். பசுக்களுக்குப் பைத்தியம் பிடிக்கிறது. அரசாங்கம் ஒன்றும் செய்வதில்லை.

ஐரோப்பிய ஜனநாயகம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ அவைகளுக்கு என்ன கொடுக்கலாம், எப்போது பால் கறக்கலாம் என்று நிர்ணயம் செய்கிறது. அப்புறம் நீ அவைகளை பால் கறக்காமல் இருக்க உனக்குப் பணம் கொடுக்கிறது. பிறகு இரண்டையும் எடுத்துக்கொண்டு ஒன்றை சுட்டுக்கொல்கிறது, ஒன்றை பால் கறக்கிறது. பாலை கடலில் கொட்டுகிறது. பிறகு ஏன் பசுக்கள் காணாமல் போயின என்று இரண்டு படிவங்கள் முழுமையாக எழுதி அரசாங்கத்திடம் கொடுக்க வேண்டும்.

லெய்ஸஸ் ஃபேர் முதலாளித்துவம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ ஒன்றை விற்று காளை மாடு வாங்குகிறாய்

நவீன உலக அமைப்பு முதலாளித்துவம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. ஒரு பன்னாட்டு நிறுவனம் அதில் முதலீடு செய்கிறது, பாலை மிகவும் குறைந்த விலையில் உன்னிடம் இருந்து வாங்குகிறது. பிறகு அதை இன்னொரு நாட்டுக்கு ஏற்றுமதி செய்து பதனப்படுத்துகிறது. நீ தயிர் வாங்க ஏராளமாக காசு கொடுக்க வேண்டும் ஏனெனில், பால் தொழிற்சாலை கூட்டமைப்பும், பால் தொழிலாளர்கள் யூனியனும் இறக்குமதி வரியை அதிகப்படுத்த போராடியிருப்பார்கள்.

ஹாங்காங் முதலாளித்துவம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அந்த மூன்று பசுக்களையும் உனது நிறுவனத்துக்கு விற்கிறாய். அதற்கு உன் மச்சான் ஆரம்பித்த வங்கியை கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு, கடன்/பங்குகள் மாற்றி உன் நான்கு பசுக்களையும் திரும்பப் பெற்றுக்கொள்கிறாய். அத்தோடு கூட ஐந்து பசுக்களையும் வைத்துக்கொள்ள வரி விலக்கு கிடைக்கும். உன் ஆறு பசுக்களையும் பால்கறக்கும் உரிமைகளை ஒரு பனாமா கம்பெனி வழியாக கேய்மன் தீவுகளில் இருக்கும் ஒரு பேப்பர் கம்பெனிக்கு ரகசியமாக விற்று நீ பெரும்பான்மை பங்குகளுக்கு சொந்தக்காரனாக ஆகிறாய். ஏழு பசுக்களுக்குமான மொத்த உரிமைகளை மீண்டும் பழையக்கம்பெனிக்கே விற்கப்படுகிறது. கம்பெனியின் வருடாந்தர அறிக்கை கம்பெனிக்கு எட்டுபசுக்கள் வைத்துக்கொள்ள உரிமை இருக்கிறது என்றும் இன்னொரு பசு வைத்துக்கொள்ள ஆப்ஷன் கிடைக்கும் என்றும் அறிவிக்கிறது. இதே நேரத்தில் நீ உன்னிடம் இருக்கும் இரண்டு பசுக்களையும் கெட்ட ஃபெங் சுயி (சீனத்து வாஸ்து சாஸ்திரம்) காரணமாக கொன்று விடுகிறாய்.

சவூதி அரேபியா: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அவைகளைப் பற்றி உனக்குக் கவலையில்லை. ஏனெனில், பங்களாதேஷிலிருந்து கடத்தப்பட்ட இரண்டு பெண்களை உனது பெட்ரோல் பணம் கொடுத்து வாங்கியாய் விட்டது.

Series Navigation

செய்தி

செய்தி