வீரசோழியம் இலங்கை நூலா? தமிழ்நாட்டு நூலா?

This entry is part [part not set] of 31 in the series 20100128_Issue

முனைவர் மு. பழனியப்பன்


இலக்கிய நூல்களைக் காட்டிலும் இலக்கண நூல்கள் வட்டாரத்தன்மை வாய்ந்தனவாக உள்ளன. இதன்முலம் இலக்கண நூல்களை எந்த வட்டாரம் சார்ந்து அது எழுந்தது என்பதை எளிதில் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

குறிப்பாக வீர சோழியம் என்ற இலக்கண நூல் புத்தமித்திரர் என்பவரால் இயற்றப் பெற்றது. வீரசோழன் என்ற மன்னன் காலத்தில் அவனது ஆணைப்படி அல்லது அவனது பொருளுதவியின்படி புத்த மித்திரரால் செய்யப்பெற்ற இலக்கண நூலாக இதனைத் தமிழுலகம் அடையாளப் படுத்துகிறது. இதன் காரணமாகவே இந்நூலிற்கு வீர சோழியம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கருதுகின்றனர். இந்நூலைச் செய்த புத்த மித்திரருக்கு வீரசோழன் கொடையாக பொன்பற்றி என்ற ஊரை வழங்கினான் என்பதும் இதனோடு தொடர்புடைய கூடுதல் செய்தியாகும். இதுதவிர புத்தமித்திரர் ஒரு சிற்றரசர் என்றும்

முனைவர். மு.பழனியப்பன், உதவிப்பேராசிரியர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

அவர் வாழ்ந்த கோட்டை இன்னமும் புதுக்கோட்டை மாவட்ட பொன்பேத்தி என்ற ஊரில் உள்ளதாகவும் செவிவழிச்செய்திகள் வழங்கி வருகின்றன.

புத்தமித்திரர் பொன்பற்றி என்ற ஊரைச் சார்ந்தவர் என்பதை வீரசோழியத்தின் முன்பகுதியில் உள்ள பாயிரப் பகுதி உணர்த்துகின்றது.

மிக்கவன் போதியின் மேதக்கு இருந்தவன் மெய்த்தவத்தால்
தொக்கவன் யார்க்கும் தொடர ஒண்ணாதவன் தூயன்
தக்கவன் பாதம் தலைமேல் புனைந்துத் தமிழ் உரைக்கப்
புக்கவன் பைம்பொழில் பொன்பற்றி மன் புத்தமித்திரனே

இப்பாடலின் வழியாகக் குறிக்கப் பெறும் பொன் பற்றி என்ற ஊர் எவ்விடத்தது என்பதில் பல்வேறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன.

“1. பொன்பற்றி அறந்தாங்கிக்கு அருகில் உள்ள பொன்பேத்தி ஆகும். (மு. அருணாசலம் 1971:125)
2. காரைக்காலுக்கு அருகிலுள்ள பொன்பேத்தி என்றும், பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள பொன்பேத்தி என்றும் கருதப் பெறுகிறது. (மு. இராகவையங்கார்)
3. இலங்கை புத்தளம் மாவட்டப் பொன்பற்றி ஆகும். (ஆ. வேலுப்பிள்ளை.1988)”

இம்முன்று கருத்துக்களும் வீரசோழியம் எழுந்த களத்தினை உறுதி செய்வதற்குக் கொள்ளத் தக்கனவாகும்.

இவற்றில் மு. அருணாசலம் அவர்களின் கருத்துப்படி புத்த மித்திரர் வாழ்ந்தது அறந்தாங்கிக்கு அருகில் உள்ள பொன்பேத்தி என்ற இக்காலத்தில் வழங்கப் பெறும் பொன்பேத்தியே என்பதை உறுதி செய்வதற்கு பல சான்றுகள் உள்ளன.

புதுக்கோட்டைப் பகுதியில் தற்போதும் வழங்கி வரும் பல வழக்குகளுக்கு உரிய இலக்கணமாக வீரசோழியம் வடிக்கப் பெற்றுள்ளது.

மேலும் வரலாற்று அடிப்படையில் சோழ, பாண்டிய போர்ப்பகுதியாக அறந்தாங்கிக்கு அருகில் உள்ள பொன்பேத்தி விளங்கியிருக்கிறது.

இதனோடு தற்காலச் சூழலில் புதுக்கோட்டை சார்ந்த பொன்பேத்தி பகுதியில் கண்டெடுக்கப் பெற்ற புத்தர் சிலை, மற்றும் பொன்பேத்தியில் உள்ள கோட்டைகள் முதலான அமைப்புகள் இவ்வூரைச் சார்ந்தவர் புத்த மித்திரர் என்பதைத் தெளிவு படுத்துகின்றன.

வரலாற்று அடிப்படை, நில அடிப்படை போன்றனவற்றினைக் கொண்டு புதுக்கோட்டை மாவட்ட பொன்பேத்தியின் பழமை குறித்தும், புத்தமித்திரரின் இலக்கண நூலான வீரசோழியம் எழுந்த களமா இது இருப்பது குறித்தும் ஆய்வுலகம் ஆராயவேண்டும். அதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

இலக்கணநூல் செய்முறையில் உள்ள வட்டாரத்தன்மை அந்நூலின் பிறந்த இடத்தை எடுத்துக்காட்டி விடுகிறது என்ற உண்மையின் அடிப்படையில் புத்தமித்திரர் இருந்த இடத்தை உறுதி செய்ய இக்கட்டுரை முயலுகின்றது. சில சான்றுகளின் அடிப்படையில் இவ்வுண்மை தெற்றென வெளிப்பட்டுவிடுகிறது.

இந்நூலுள் உள்ள முப்பத்து முன்றாம் காரிகை பின்வரும் அடிகளை உடையதாக உள்ளது.

” ஐ என்பது கரும்த்து இரண்டாவது ஒரு கால்
பைய அழிதரும் முன்று ஓடு ஒடு ஆலாம்….”

இதனுள் இடம் பெற்றுள்ள `பைய’ என்ற சொல் மெதுவாக என்பதைக் குறிக்க வந்ததாகும். இந்த வழக்குப் பாண்டி நாட்டு வழக்கு. “பையவே சென்றுப் பாண்டியர்க்கு ஆக” என்பது சம்பந்தர் வாக்கு ஆகும். சம்பந்தர் தங்கி இருந்த மடத்திற்கு தீ வைக்க முயன்றபோது அந்த வெம்மையைப் பைய சென்று பாண்டியனின் வெப்பு நோயாக மாறட்டும் என்று மாற்றிட அவர் இவ்வழக்கைக் கூறிப் பயன்படுத்துகிறார். இன்னமும் பாண்டிநாட்டுப் பகுதிகளில் இச் சொல் மக்கள் வழக்காக இடம் பெற்று வருகின்றது. புதுக்கோட்டைப் பகுதிகளில் இவ்வழக்கு உண்டு.

அடுத்ததாக வேற்றுமை உருபுகளில் “அது ” என்பது ஆறாம் வேற்றுமை உருபாகும். இது தொல்காப்பிய நன்னூல் வரையறையாகும். இவ்வேற்றுமை உருபிற்கு “உடைய” என்பதைத் தான் வாழ்ந்த நிலத்தின் அடிப்படையில் கொண்டு வந்து சேர்க்கிறார் புத்த மித்திரர். “ஆன் ஆள் ஆர் ஆர்கள் அது இன ஆறிற்கு உடை” என்பது வீரசோழியக் கருத்தாகும்.

உடை என்பது ஆறாம் வேற்றுமை உருபாக புதுக்கோட்டைப் பகுதிகளில் அதிகமாகப் பயன்படுத்தப் பெற்று வருகின்றது.

ஆவுடையார் கோயில் மணிவாசகர் உபதேசம் பெற்ற கோயில்
கண்ணுடைய நாயகி நாட்டரசன் கோட்டை அம்மனின் பெயர்
கொப்புடைய நாயகி காரைக்குடி அம்மனின் பெயர்

இவ்வெடுத்துக்காட்டுகளின் முலம் உடை என்பது ஆறாம் வேற்றுமை உருபாக இவ்வப்பகுதிகளில் பயன்படுத்தப் பெற்று வருகிறது என்பது உறுதியாகின்றது.

புதுக்கோட்டை மக்கள் வழக்குகளில் இது யாருடைய பொருள் என்பதைக் கேட்பதற்கு “இது யாருட்டு?” என்று வழங்குகிறார்கள். இது என்னுடையது என்பதைச் சொல்வதற்கு “இது என்னுட்டு ” என்று வழங்குகிறார்கள். இவை உடை என்பதன் திரபுகளே ஆகும்.

மேலும் தன் வாழிடம் சார்ந்த சில பெண்பால் முடிவுகளைப் புத்தமித்திரர் உரைக்கின்றார். இவை மற்ற இலக்கண நூல்களில் இடம் பெறாதன என்பது குறிக்கத்தக்கது.

“அச்சியொடு ஆட்டி அனி ஆத்தி,அத்தி தி ஆளொடு அள்இ
இச்சி சி ஆதியும் பெண்மைத் தெளிவாம்”

இக்காரிகையில் சுட்டப் பெற்ற அச்சி, ஆட்டி, அனி, ஆத்தி, அத்தி, தி, ஆள், அள், இச்சி, சி என்பன கொண்டு பெண்பால் பெயர் முடிவுகள் முடியும் என்பது அவரின் வரையறையாகும்.

ஆத்தி, அத்தி ஆகிய முடிவுகள் புதுக்கோட்டைப் பகுதிகளில் பெண்பால் பெயர் முடிவுகளாக அதிகம் வழங்குகின்றன.

வண்ணாத்தி, பாப்பாத்தி, (ராஜாத்தி) போன்ற சொற்கள் ஆத்தி என்ற முடிவைப் பெற்ற சொற்களுக்குச் சான்றுகளாகும்.

மறத்தி, குயத்தி, பாதகத்தி போன்ற சொற்கள் அத்தி என்ற முடிவைப் பெற்ற பெண்பால் சொற்களுக்குக் காட்டுக்களாகும்.

இவை இரண்டைத் தவிர
அச்சி குண்டச்சி, முண்டச்சி, வேட்டுவச்சி,
ஆட்டி பெண்டாட்டி, வைப்பாட்டி
போன்ற வழக்குகளும் புதுக்கோட்டைப் பகுதிகளில் வழங்கி வருகின்றன.

இவற்றின் அடிப்படையில் காணும் பொழுது புதுக்கோட்டையைச் சார்ந்த பொன்பேத்திதான் புத்தமித்திரரின் படைப்புக்களமாக இருந்திருக்க வேண்டும் என்று முடிய முடிகின்றது.

“புத்த மித்திரர் பௌத்தர், இலங்கையைச் சேர்ந்தவர். வீரசோழனால் ஆதரிக்கப் பெற்றவர்” என்ற கருத்தைத் தற்போது அறவேந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற பல கருத்துக்களுக்கு வீரசோழியம் இடமளிப்பினும் அதன் உண்மைத்தன்மை அது உணர்த்தவரும் இலக்கண வரையறையின்படி தெற்றென வெளிப்பட்டுவிடுகிறது. எனவே புதுக்கோட்டை சார்ந்த பொன்பேத்தியே புத்தமித்திரரின் வீர சோழியப் பாயிரம் குறிப்பிடும் பொன்பேத்தி எனக் கொள்வதேச் சிறப்புடையதாகும்.

irruvatchi , udaya kannan chennai
muppalam2006@gmail.com

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்