தந்திரங்களின் திசைகளும் அன்பின் பயணமும் ஜெயந்தி சங்கரின் “குவியம்”

This entry is part [part not set] of 25 in the series 20091204_Issue

பாவண்ணன்


“பத்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் கூடியிருக்கலாம்” என்பது ஒளவையார் பாட்டின் ஒரு பகுதி. அப்படி கூடியிருக்க வழியில்லையென்றால் இல்லறவாசியாக இருப்பதைவிட சந்நியாசவாசமே மேல் என்று கிளம்பிப் போய்விடலாம் என்று கசப்போடு முடிகிறது அப்பாடல். ஓர் ஆணை நோக்கி இப்பாடல் முன்வைக்கப்பட்டிருந்தாலும் ஒரு பெண்ணைநோக்கிச் சொல்வதாகவும் நாம் எடுத்துக்கொள்ளலாம். ஏறுமாறாக நடக்கின்ற மனைவியை ஒரு கணவனால் பொறுத்துக்கொள்ள முடியாமல்போவதுபோல ஏறுமாறான கணவனையும் மனைவியால் ஏற்றுக்கொள்ள இயலாமல் போகும். ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில் கடந்த காலத்தில் கணவன்மார்கள் ஊரைவிட்டு ஓடிப்போனார்கள். மனைவிமார்கள் கிணற்றிலோ குளத்திலோ குதித்து உயிரைத் துறந்தார்கள். இன்று சட்டபூர்வமான மணவிலக்கு எல்லாராலும் ஏற்கப்பட்ட ஒரு விடையாக நம் சமூகத்தில் வழங்குகிறது. இது நிரந்தர விடையல்ல என்றபோதிலும் தற்காலிக நிம்மதிக்கு ஒரு வழியாக உள்ளது என்பது உண்மை.

வாழ்வின் மையம் அன்பு. அந்த அன்பிலிருந்து பிறழும் கணத்தில் வாழ்க்கையின் சமநிலை குலைந்துவிடுகிறது. அன்பை இழக்கும்போது நாம் எல்லாவற்றையுமே இழந்துவிடுகிறோம். பைசா நகரத்துச் சாய்ந்த கோபுரம் சாய்ந்த நிலையிலும் அதன் புவிஈர்ப்பு மையம், கோபுரத்தின் அடித்தள வட்டத்தின் சுற்றளவுக்குள்ளேயே அமைவதால்தான் இன்னும் சரிந்து விழாமல் இருக்கிறது. எந்தக் கணத்தில் அதன் புவிஈர்ப்பு மையம் சுற்றளவு வட்டத்தைவிட்டு வெளியே விழுகிறதோ, அக்கணமே அதன் சமநிலை குலைந்து சரிந்துவிடக்கூடும். இது அறிவியல் கணக்கு. வாழ்வியலுக்கும் பொருந்தக்கூடிய உண்மையே இது. அன்பை மையமாகக் கொண்டிருப்பதுவரை வாழ்க்கை வலிமை உள்ளதாகவே இருக்கும். அன்பை உயிராகக் கொண்ட உடலில்மட்டுமே உயிர்ப்பு இருக்கும். அன்பற்ற உடல் என்பது வெறும் எலும்புகளைப் பூட்டி தோலால் இணைத்த பொம்மைக்கு நிகரானது. அதன்பின் ஈரமில்லாத வாழ்க்கை பாலை நிலத்துக்குச் சமம். அதில் விதைக்கப்படும் விதைகள் ஒருபோதும் துளிர்ப்பதில்லை. அன்பின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் வள்ளுவரின் வாய்மொழி இது. இன்றுவரை எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகளின் வரிகளில் அன்பைக் குறித்த வரிகளே அதிகமாக இருக்கக்கூடும். இதற்கு நேர்எதிராகவே மனிதர்களின் எதார்த்த வாழ்க்கை அமைந்திருப்பது துயரமுரண்.

ஜெயந்தி சங்கரின் குவியம் ஒருவகையில் அன்பின் மையத்திலிருந்துவிலகிப்போன மனிதர்களின் துயரங்களையும் பதற்றங்களையும் தொகுத்துக் காட்டுகிறது. குவிமையம் இடைக்குறுகலாகி குவியம் என்று மலர்நதிருக்கிறது. சுவாதி-மோகன், சித்ரா-மணி, உஷா- சுந்தர், பத்மா- குமார், தீபிகா-சரவணன், சங்கீதா- டேவிட் என பல குடும்பங்களின் வாழ்க்கைமுறை துணைக்கூறுகளாக பின்னப்பட்டுள்ளது. பெரும்பாலான குடும்பங்கள் அன்பின் மையத்திலிருந்து பிறழ்ந்துபோனவையாக உள்ளன. குடும்ப வாழ்வுக்கு நிதியும் கணவனும் நேருற அமையவேண்டும் என்பது ஒளவைப்பாட்டியின் விழைவு. சில குடும்பங்களில் நிதி நேருற அமையவில்லை. சில குடும்பங்களில் கணவன் நேருற அமையவில்லை. இன்னும் ஒரு சில குடும்பங்களில், நிதி, கணவன் இரண்டுமே நேர்படவில்லை. நிதியும் கணவனும் நேருற அமைந்த குடும்பத்துக்கு உலகும் உறவும் துணையாக இல்லை.

நாவலின் தொடக்கத்தில் நிதியும் கணவனும் நேர்பட அமையாத குடும்பத்தின் தலைவியாக காட்டப்படுகிறாள் சுவாதி. காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்களே இவர்கள். காதலிக்கும்போது உணர்ந்த அன்பும் நெகிழ்ச்சியும் இல்லற வாழ்வில் தொலைந்துபோகின்றன. திருமண சமயத்தில் ஓரளவு நல்ல வருமானத்தை கொடுத்துவந்த வேலையை மிகச் சாதாரணமாக- ஏதோ ஒரு அற்ப காரணத்தைச் சொல்லி- உதறிவிட்டு வந்து நிற்கிறான் சுவாதியின் கணவன் மோகன். பொருத்தமான வேலையைத் தேடிவிடுவதாக அவன் அளிக்கும் வாக்குறுதியை இறுதிவரை அவன் நிறைவேற்றவே இல்லை. உழைப்பதில் தயக்கமும் ஊதாரித்தனமாக செலவு செய்வதில் ஆர்வமும் பொய்சொல்லி பணம் புரட்டுவதில் கூச்சமே இல்லாத தன்மையும் அடுத்தவர்கள் சங்கடங்களைப்பற்றிய வருத்தமோ அக்கறையோ கிஞ்சித்தும் இல்லாத மனமும் கொண்டவன் தன் கணவன் என்பதை தாமதமாகப் புரிந்துகொள்கிறாள் சுவாதி. அதற்குள் காலம் கடந்துவிடுகிறது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிவிட்ட நிலையில் மனம் நொந்து குமுறுகிறாள். தன்னைப்பற்றியோ குழந்தைகளைப் பற்றியோ சிறிதும் கவலையல்லாமல் கடன்வாங்கி செலவு செய்வதிலும் போதையில்மிதப்பதிலும் மூழ்கி விட்ட கணவன் மீண்டும் பொறுப்புள்ளவனாக மாறும் சாத்தியங்கள் குறைவு என்கிற நிலையில் குழந்தையின் மருத்துவச் செலவுக்கான பணத்தேவைக்காக அவள் வேலை தேடி ஓடுகிறாள். இன்னும் இன்னும் என தேவைகள் பெருகும்போது, சிங்கப்பூருக்குச் செல்கிறாள். தன்னை பணம் வழங்குகிற ஏ,டி.எம். முனையாகமட்டுமே கருதுகிற கணவனின் போக்கு முற்றிலும் அவநம்பிக்கை தரும் சூழலில் அவனிடமிருந்து சட்டப்படு மணவிலக்கு பெறவேண்ய நிலைக்கு தள்ளப்படுகிறாள். எழுதாத தீர்ப்பாக மனைவியிடமிருந்தே ஜீவனமாம்சம் வாங்கிக்கொண்டு விலகிப் போகிறான் அவன்.

ஒரு பொழுதுபோக்காக தொடக்கத்தில் ப்ரானிக்ஹீலிங் பயிற்சியில் இறங்கி, பிறகு அதைவிடமுடியாத அளவுக்கு ஆழமாக ஈடுபட்டு, அந்தப்பயிற்சிக்கு அதிக அளவில் முக்கியத்துவத்தை வழங்கி, இல்லற வாழ்விலிருந்தும் பொறுப்பிலிருந்தும் சிறுகச்சிறுக விலகிப் போகிறான் ஒரு கணவன். தேடி வந்த நோயாளியின் கால்வலியை குணப்படுத்துகிறவன் சொந்த மனைவி முதுகுவலியால் நாட்கணக்கில் துடிப்பதைக் கண்டும் பொருட்படுத்தாமல் புறக்கணக்கிறான். இரண்டாவது மனைவிக்கு பெண்குழந்தைகளே தொடர்ந்து பிறப்பதால் சட்டத்துக்குப் புறம்பாக முதல் மனைவியிடமிருந்து தூங்கிச் சென்ற திருப்பிக்கொடுக்க மறுத்தபடி காலம் தள்ளுகிறான் மற்றொரு கணவன். வாழ்வின் மையம் விலகிப் போக ஆண்கள் ஏதோ ஒரு வகையில் காரணமாகிறார்கள். வாழ்வின் சவால்களை தனித்துநின்று எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு பெண்கள் ஆளாகிறார்கள். நெருக்கடிகளுக்கு ஆளான சூழல்களில் பிரச்சனையின் வெப்பம் தீன்டாதபடி பிள்ளைகளை தனித்து வளர்த்து, ஆளாக்கி, அவர்கள் மெல்லமெல்ல ஓர் ஆளுமையாக உருவாவதைப் பார்த்து மகிழ்ந்து தன் வாழ்க்கைக்கு ஒர் அர்த்தத்தை உருவாக்கிக்கொள்கிற வாழ்க்கைமுறைக்கு இந்திய வரலாற்றிலும் புராணங்களிலும் ஏராளமான எடுத்துகாட்டுகள் உண்டு. முதல் எடுத்துக்காட்டு சீதை. . இன்னொரு எடுத்துக்காட்டு சகுந்தலை. சுவாதியாக இருந்தாலும் சரி, மாலாவாக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் சீதையின் தொடர்ச்சி. சீதையும் சகுந்தலையும் மக்கள் தொடர்பே இல்லாத காட்டில் இருந்தவர்கள். சுவாதியும் மாலாவும் சிங்கப்பூரில் இருக்கிறார்கள். இது ஒன்றுதான் மிகப்பெரிய வேறுபாடு.

மோகனின் விசித்திரப்போக்குக்கு என்ன காரணம்? மிருதங்க வித்வானாக மகனை வளர்க்க ஆசைப்பட்ட தாய், அவனது ஆர்வத்தை அறியாமையாலேயே மிருதங்கப் பயிற்சியைத் திணிக்கிறாள். இந்தத் திணிப்புதான் முதல் திருகல். விருப்பத்துக்குரிய கிரிக்கெட் ஆடடத்தை விளையாட அனுமதிக்காத தாய்மீது அவன் மனத்துக்குள் கோபம் கொப்பளிக்கிறது. ஒரு கட்டம்வரைக்கும்தான் இந்த மனப்போராட்டம். மிருதங்கப் பயிற்சியை முன்னிறுத்தி, தேவைப்பட்டபோது தாயிடமிருந்து சில்லறைகளைப் பெறுவதும் படிப்பை ஒதுக்கி ஊர் சுற்றுவதும் சாத்தியம் என்ற தந்திரம் பிடிபட்டதும் திருகல் மேலும்மேலும் வளர்ந்துகொண்டே போகிறது. அந்தத் திருகலை தாயும் குடும்பமும் உணரும் முன்பேயே அவன் மீண்டுவர முடியாத எதிர்த்திசையின் எல்லைக்கு நடந்துபோய் விடுகிறான். தாயிடம் தந்திரம் பலிக்காத தருணத்தில் அவன் தந்திரங்களை நம்புகிறவளாக மனைவி வாய்த்துவிடுகிறாள். மனைவி நம்ப மறுக்கிறபோது, அவன் தந்திரங்களை சகோதரர்கள் நம்புகிறவர்களாக அமைந்துபோகிறார்கள். அன்னை, மனைவி, சகோதரர்கள் என அனைவருமே நம்ப மறுக்கிறபோது, அவன் தன் தந்திரங்களை நம்புவதற்கு ஏற்றவளாக ஒரு வெளிநாட்டுப் பெண்ணை இணையத் தொடர்புகளின் வழியாக பெற்றுவிடுகிறான். தந்திரங்களின் திசையில் பயணம் செய்ய துணிந்துவிட்டவனுக்கு உறவுகள் உதிர்க்கப்பட வேண்டியவர்களாக மாறிப் போய்விடுகிறார்கள். இல்லறத்திலிருந்தே விலகிப் போனவனுக்கு இல்லறத்தின் மையப்புள்ளியான அன்பின் விலை எப்படிப் புரியும்?

பாத்திரங்களின் மனமோதல்களையும் திட்டங்களையும் நாட்குறிப்பு, இணைய உரையாடல்கள், கடிதம் என பல உத்திகள் வழியாக முன்வைத்து ஊக்கமுடன் எழுதியிருக்கிறார் ஜெயந்தி சங்கர். கால நகர்வை முன்னும் பின்னுமாக பல கட்டங்களாகக் கோர்ப்பதிலும், நாவலை வாசிக்கவைப்பதிலும் ஜெயந்தி சங்கர் மேற்கொண்டிருக்கும் கலைத்துவம் மிக்க முயற்சி பாராட்டுக்குரியதாக இருக்கிறது. தொடர்ந்து இவருடைய ஆக்கங்களை வாசித்து வருகிறவன் என்கிற வகையில் வாழ்க்கைச்சிக்கல்மீது இவருக்கு இருக்கிற கரிசனத்தையும் எந்த முன்முடிவுமின்றி அதைப் புரிந்துகொள்ள அவர் காட்டுகிற ஆர்வத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. சரியான திசையில் அவர் பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பது நம்பிக்கை தருகிறது.

(சந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் ஜெயந்தி சங்கரின் புதிய படைப்பான குவியம் நாவலுக்கு எழுதப்பட்ட முன்னுரை)

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்