வடமராட்சி இலக்கிய நிகழ்வுகள்

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

சு. குணேஸ்வரன்


கவிஞர் இ. முருகையன் நினைவு விழா

அகில இலங்கை இளங்கோ கழகத்தினர் கடந்த 29.08.2009 அன்று கவிஞர் இ. முருகையன் நினைவு விழா ஒன்றினை ஏற்பாடு செய்தனர்.

புற்றளை மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்விற்கு அமைப்பாளர் பரா.ரதீஸ் தலைமை தாங்கினார். வரவேற்புரையை ம. பகீரதனும், தொடக்கவுரையை ச. உருத்திரேஸ்வரனும் நிகழ்த்தினர்.

நினைவுரைகள் இடம்பெற்றன. ‘ஈழத்து தமிழ் நாடக வரலாற்றில் முருகையன்’ என்னும் தலைப்பில் சாவகச்சேரி றிபேக் கல்லூரி ஆசிரியர் த. மார்க்கண்டு அவர்களும், ‘முருகையன் கவிதைகள் ஒரு நோக்கு’ என்ற தலைப்பில் தாயகம் சஞ்சிகை ஆசிரியர் க. தணிகாசலம் அவர்களும், ‘மொழிபெயர்ப்பும் முருகையனும்’ என்னும் தலைப்பில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆ. கந்தையா அவர்களும், ‘முருகையன் என்றொரு மானிடன்’ என்ற தலைப்பில் கவிஞர் கொற்றை பி. கிருஸ்ணானந்தன் அவர்களும், ‘எனது பார்வையில் முருகையன்’ என்ற தலைப்பில் த. கதிர்காமநாதன் அவர்களும் உரை நிகழ்த்தினர்.

கவிஞர் கல்வயல் வே. குமாரசாமி தலைமையில் ‘முருகையனின் அடிதொட்டு’ என்ற மகுடத்தில் கவியரங்கம் இடம்பெற்றது. வேல். நந்தகுமார், பெரிய ஐங்கரன், சிவ.முகுந்தன், பரா.ரமேஸ், க. வாணிமுகுந்தன், தி. கார்த்திகேயன் ஆகியோர் கவியரங்கில் பங்குபற்றினர்.

நன்றியுரையினை கோ. கோகிலரதன் நிகழ்த்தினார்.

கல்விசார் கலந்துரையாடல் – பா. தனபாலன்

அவை இலக்கிய அமைப்பின் ஏற்பாட்டில் கல்விசார் கலந்துரையாடல் ஒன்று 30.08.2009 அன்று இடம்பெற்றது. நிகழ்வுக்கு மூத்த எழுத்தாளர் தெணியான் தலைமை தாங்கினார்.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் திரு பா. தனபாலன் கலந்து கொண்டு ‘சமகாலத்தில் பெற்றோர் பிள்ளைகள் முரண்பாடுகளைக் கையாளல்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

உரையில் தனபாலன் பயனுள்ள பல தகவல்களைத் தெரிவித்தார். சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களை தரவுகளுடன் முன்வைத்தார்.

இந்நிகழ்வில் நாடகத்துறைக்கான கலாபூஷணம் விருது பெற்ற திரு வைரமுத்து கந்தசாமி அவர்களுக்கான கெளரவிப்பும் இடம்பெற்றது. அவர் பற்றிய உரையினை ஓய்வுபெற்ற அதிபர் செ. சதானந்தன் நிகழ்த்தினார்.

‘பாட்டுத் திறத்தாலே’ நூல் வெளியீடு

கலாநிதி த. கலாமணியின் ‘பாட்டுத் திறத்தாலே’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு 02.09.2009 யா/தேவரையாளி இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் தெணியான் தலைமை வகித்தார்.

நூல் வெளியீட்டுரையினை கவிஞர் கொற்றை பி. கிருஸ்ணானந்தன் நிகழ்த்தினார். முதன்மைப் பிரதியை சாவகச்சேரி பிரதேச சபைச் செயலர் திரு வே. சிவராஜலிங்கம் பெற்றுக் கொண்டார்.

நூல் மதிப்பீட்டுரைகளை சி. ரமேஷ், இயல்வாணன் ஆகியோர் நிகழ்த்தினர். கதைகரு, கதைக்காலம் என்பவற்றை மையமாக வைத்து ரமேஷ் தனது உரையினை நிகழ்த்தினார். இயல்வாணன் கதைகளின் அழகியலை எடுத்துக் காட்டிப் பேசினார்.

ஏற்புரையினை கலாநிதி த. கலாமணி நிகழ்த்தினார். நிகழ்வுக்கு எழுத்தாளர்களும், ஆர்வலர்களும், நூலாசிரியரின் மாணவர்களும் என அதிகமானோர் கலந்து கொண்டமை நிறைவைத் தந்தது.

‘புலம்பெயர் கவிதைகள்’ உரை – அறிவோர் கூடல்

பருத்தித்துறை அறிவோர் கூடலின் மாதாந்த நிகழ்வு கடந்த மாதம் 06.09.2009 ஞாயிறு மாலை இடம்பெற்றது. அறிவோர் கூடல் ஒழுங்கமைப்பாளர்

து. குலசிங்கம் தொடக்கவுரையை நிகழ்த்தினார். மறைந்த கவிஞர்கள் ராஜமார்த்தண்டன், இ. முருகையன் ஆகியோரின் கவிதைப் பங்களிப்பை மீட்டிப் பேசினார். தொடர்ந்து ஒரு படைப்பாளிக்கு தன் கருத்தைச் சொல்லும், எழுதும் சுதந்திரம் முக்கியமானது என்றார்.

நிகழ்வில் சு. குணேஸ்வரன் ‘புலம்பெயர் கவிதைகள்’ பற்றிப் பேசினார். அவர் தனது உரையில் புலம்பெயர்ந்தவர்களின் ஆரம்பகாலக் கவிதைகள், மற்றும் கவிதைப் போக்குப் பற்றியும் எடுத்துரைத்தார். கவிதைகளின் உள்ளடக்கத்தை தாயக நினைவு, தொழில்தளம் மற்றும் நிர்வாக நெருக்கடிகள், அகதிநிலை, புதிய அனுபவம், அரசியல் விமர்சனம், அனைத்துலக நோக்கு, பெண்ணிலை நோக்கு என்றவாறு பகுத்து; தனது உரையினை நிகழ்த்தினார்.

நிகழ்வின் இறுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பலரும் ஆர்வத்துடன் பங்கெடுத்தனர். நன்றியுரையை சீனா உதயகுமார் நிகழ்த்தினார்.

‘புதிய நிலா’ – கட்டிடத் திறப்பும் மலர் வெளியீடும்

கரவெட்டியிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘புதிய நிலா’ என்ற இளையோர் சஞ்சிகையினர் தமது செயற்பாட்டைப் பரவலாக்கும் நோக்குடன் புதிய கட்டிடம் ஒன்றினை கடந்த 20.09.2009 அன்று திறந்து வைத்தனர். இந்நிகழ்வின்போது மலர் ஒன்றினையும் வெளியிட்டனர்.

மேற்படி நிகழ்வு புதிய நிலா சஞ்சிகையின் ஆலோசனை ஆசிரியர் வேல் நந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ சிரேஷ்ட விரிவுரையாளர் ஆ. சுப்பிரமணியம் கலந்து கொண்டார், சிறப்பு விருந்தினர்களாக கட்டைவேலி நெல்லியடி ப. நோ. கூ. சங்க தலைவர் சி. சிதம்பரநாதன், மற்றும் கரவெட்டிப் பிரதேச கலாசார உத்தியோகத்தர் செல்வி க. செல்வ சுகுணா, அகில இலங்கை கலை இலக்கிய சங்கத்தலைவர் பொன். சுகந்தன், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் திரு கே. பாஸ்கரன், அருட்சகோதரி சிறிய புஷ்பம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்ட புதிய நிலா சிறப்பு மலரின் மதிப்பீட்டுரைகளை சு. குணேஸ்வரன், எழுத்தாளர் குப்பிளான் ஐ. சண்முகன் ஆகியோர் நிகழ்த்தினர்.

மாணவர்களை இலக்காகக் கொண்டு நடாத்தப்படும் புதிய நிலா வின் செயற்பாடுகளை கலை இலக்கியத்தின்பால் நாட்டம் கொண்டவர்களும் முன்னெடுத்துச் செல்லவேண்டியது அவசியமாகும்.

ஏற்புரையை சஞ்சிகை ஆசிரியர் கு. அஜித்குமார் நிகழ்த்தினார்.

‘எனது எழுத்துகளும் இன்றைய எழுத்துகளும்’ – ‘அவை’ இலக்கியச் சந்திப்பு

கலாநிதி த. கலாமணி அவர்களின் ஒழுங்கமைப்பிலான மாதாந்த அவை இலக்கிய ஒன்று கூடல் 26.09.2009 சனிக்கிழமை இடம்பெற்றது. நிகழ்வுக்கு எழுத்தாளர் தெணியான் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் சாகித்திய ரத்னா கலாநிதி க. குணராசா (செங்கை ஆழியான்) கலந்து கொண்டு ‘எனது எழுத்துகளும் இன்றைய எழுத்துகளும்’ என்ற பொருளில் உரை நிகழ்த்தினார்.

தனது எழுத்தனுபவம் பற்றி உரையாற்றிய செங்கை ஆழியான் தற்போது எழுதிவரும் இளைய தலைமுறையினரின் சிறுகதைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் கலந்துரையாடலில் பங்கெடுத்தனர்.

நிகழ்வில் இடம்பெற்ற கலந்துரையாடலில் போர்க்கால இலக்கியங்களின் பெறுமானம் என்ன? என்பது தொடர்பான வினாக்கள் எழுப்பப்பட்டன. கருத்துக்களை பலரும் தத்தம் நிலையில் நின்று முன்வைத்தனர். ஆனால் செங்கை ஆழியான் மிக நிதானமாக பல வினாக்களுக்கு விடையளித்தமை முக்கியமாகும்.

இறுதியாக கலாநிதி த. கலாமணி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

kuneswaran@gmail.com

Series Navigation

சு. குணேஸ்வரன்

சு. குணேஸ்வரன்