உன்னைப்போல் ஒருவன்

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

பி.ஏ ஷேக் தாவூது


“ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.”- திருக்குறள்.

“இந்தியாவில் ஜனநாயகம் மிக ஆழமாக வேரூன்றி உள்ளது. ஆனால் அதை ஓர் அரசியல் ஏற்பாடாக மட்டுமே எடுத்துக் கொண்டால் அந்த ஜனநாயகத்தின் முழு பலனையும் நாம் அனுபவிக்க முடியாது. நம் எண்ணம் மற்றும் செயல்களில் ஜனநாயக பண்பு நிறைந்திருப்பதே உண்மையான ஜனநாயகமாகும்”. – (குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் – சுதந்திர தின உரை -2007 )

உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைக்கும் மரியாதை என்பது இந்த நாட்டில் நிலவுகின்ற குறைந்தபட்ச ஜனநாயகத்தைச் சார்ந்ததாகவே இருக்கின்றது. நம் நாட்டில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் , பங்களாதேஷ் போன்ற நாடுகளில் அவ்வப்போது சர்வாதிகாரம் ஆட்சியை பிடிப்பதும் பின்னர் ஜனநாயகம் மலர்வதும் தொடர்கதையாக இருப்பினும், அருகில் இருக்கின்ற சீனாவிலும் மியான்மரிலும் ஜனநாயகம் கேளிக்கூத்தாக்கப்பட்டு கொண்டிருப்பினும் அதனுடைய எந்த ஒரு தாக்கமுமில்லாமல் நம் நாட்டில் மட்டும் தான் தொடர்ச்சியான ஜனநாயகம் சார்ந்த அரசுகள் நிலைத்திருக்கின்றன. இங்கு நிலவுகின்ற ஜனநாயகத்தில் பல குறைபாடுகள் இருப்பினும் உலகின் பல நாடுகள் இந்தியாவை உயர்வாக மதிப்பதற்கு காரணமும் இதுவே.

ஜனநாயகமும் ஒற்றைத்தன்மையும் வெவ்வேறு பாதைகளில் பயணிப்பவை. ஜனநாயகத்தில் எப்பொழுதும் ஒற்றைத்தன்மைக்கு இடமில்லை. ஆகையால் தான் நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர்கள் நாட்டில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும் கூட்டுப்பொறுப்பாகவே இருக்குமாறு அரசியல் சட்டத்தை வரையறுத்து வைத்திருக்கின்றனர். அதிகாரம் ஓரிடத்தினில் குவிந்து அதன் மூலம் சர்வாதிகாரம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதே இதன் அடிப்படை. சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய “உன்னைப்போல் ஒருவன்” என்னும் திரைப்படத்தினூடாக நாம் அறுபது வருடங்களுக்கும் மேலாக கட்டிக்காக்கின்ற ஜனநாயகத்திற்கு எதிரான பல கருத்துக்களை மறைமுகமாக மக்களின் மனதில் விதைக்க முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். பெரும்பாலான மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசும், இந்திய நீதிமன்றங்களும் தவறு செய்தவர்களின் விடயத்தில் சரியாக நீதி வழங்காது. எனவே ரெளத்திரம் கொண்ட பொதுமக்களில் (காமன் மேன்) யாரேனும் ஒருவர் தான் தவறு செய்தவருக்கு தண்டனையை வழங்க வேண்டும் என்ற ஓர் எண்ணத்தையும் இதன் மூலம் விதைத்திருக்கின்றார். இத்தகைய எண்ணங்களின் குவியல்கள் தான் இந்த நாட்டில் நிலவும் ஜனநாயகத்தை வேரோடு பிடுங்கி எறிவதற்கும் சர்வாதிகாரத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்கும் முதல்படியாக இருக்கின்றன. இத்தகைய எண்ணங்களை விதைப்பவர்கள் யாராக இருப்பினும் அவர்களை ஜனநாயகத்தின் எதிரியாகவே கருத வேண்டும். தீவிரவாதம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலே மனிதத்தை நேசிப்பவர்கள் எவருக்கும் இரட்டைக் கருத்து இருக்கவியலாது. தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அதற்குறிய தண்டனை பெற்றேயாக வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அந்த தண்டனையை நிறைவேற்ற வேண்டியது யார் என்பது ஜனநாயகத்தில் உள்ள ஓர் முக்கிய அம்சம். தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் எனில் இங்கு நிலவுகின்ற ஜனநாயகத்திற்கு என்ன மதிப்பிருக்கின்றது?

கமலின் “உன்னைப்போல் ஒருவன்” படத்தின் அடிப்படைக் கரு இதுதான். “தவறு செய்பவர்களுக்குச் சரியான தண்டனையை இந்த அரசும் நீதிமன்றங்களும் கொடுக்கவில்லையெனில் கோபம் கொண்ட ஒரு தனிமனிதன் அவர்களுக்கு தண்டனையை வழங்கலாம்.” இதே அடிப்படையை வைத்து தான் நக்சல் பாரிகளும் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றனர். இந்த நாட்டில் நிலவும் அமைதியை குலைக்கும் முக்கியமான விடயங்களில் ஒன்றாக நக்சலிசம் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது. வறுமை எங்கெல்லாம் தலைவிரித்து ஆடுகின்றதோ அங்கெல்லாம் நக்சல் பாரிகள் வலிமையாக இருக்கின்றனர். வறுமையின் பிடியில் சிக்கிய அப்பாவி மக்களில் பலர் நக்சல் பாரிகளை தம்முடைய மீட்பர்களாகவே கருதிக் கொண்டிருப்பதை மேற்கு வங்கத்தின் லால்கர் சம்பவம் நமக்கு உணர்த்துகின்றது. கமல் ஒற்றை நபராக இருந்து செய்து காட்டியது போன்றே நக்சல்கள் குழுவாக இருந்து செய்துக் கொண்டிருக்கின்றனர். எனவே கமலுக்கு ஒரு நியாயம் நக்சல்களுக்கு ஒரு நியாயம் என்று அறிவுடைய எவராலும் பிரித்துப் பார்க்க இயலாது. கமல் இந்த படத்தில் சொல்ல வருகின்ற கருத்தை ஆதரிக்கின்ற மனோபாவம் யாருக்கும் இருக்குமேயானால் அவர்கள் நக்சல்களையும் ஆதரிக்க வேண்டும். இரண்டில் ஒன்றை ஆதரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ இரட்டை நிலைப்பாடுடையவர்களின் செயலாகத்தான் இருக்கவியலும். ஒரு வகையில் நக்சல்கள் நடிகர் கமலை விட ஒருபடி உயர்வானவர்கள். ஏனெனில் அவர்கள் ஜனநாயகத்தை ஏற்க மாட்டோம் என்பதை தெளிவாக அறிவித்துவிட்டு இதை செய்துக் கொண்டிருக்கின்றனர். “தேர்தல் பாதை திருடர் பாதை” என்பது அவர்களின் மந்திரச் சொல்லாகவே இருந்து வருகின்றது. ஆனால் கமல்ஹாசனோ ஜனநாயகம் என்ற ஒரு கட்டமைப்புக்குள் இருந்து கொண்டே ஜனநாயகத்திற்கெதிரான விஷ விதைகளை மக்களின் மனங்களில் விதைக்க முயற்சி செய்திருக்கின்றார்.

“திரைப்படத்தில் முழு உண்மையையும் சொல்லிவிட முடியாது. எனவே என்னால் ஈழத்தைப் பற்றி திரைப்படம் எடுக்க முடியாது.” தன்னை முற்போக்குவாதியாக காட்டி கொள்ள நடிகர் கமல் ஹாசனே முன்னர் கொடுத்த பேட்டியின் உட்கரு மேலே குறிப்பிட்ட வாசகம். ஆனால் “உன்னைப்போல் ஒருவன்” திரைப்படத்தின் மூலம் சில பொய்களை கமல் துணிந்து சொல்லியிருக்கின்றார். “அனைத்து முஸ்லிமகளும் தீவிரவாதிகளல்ல; ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லிம்கள்” என்ற சங்பரிவார்களின் விஷக் கருத்தை மிக சிரத்தையோடு இந்த படத்தில் காட்சியமைப்புகளின் மூலம் நிறுவ முயன்றிருக்கிறார். “ஒரு மனிதரை வாழ வைத்தவர் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையே வாழ வைத்தவர் போலாவார்” என்ற போதனையை மனித சமுதாயத்துக்குச் சொல்லும் குர்ஆணை இறைமறையாக ஏற்றுக் கொண்ட எந்த ஒரு உண்மையான இஸ்லாமியனும் குண்டு வெடிப்பில் ஈடுபட மாட்டான். அப்படி ஈடுபடுகின்றவன் வெறுமனே இஸ்லாமிய பெயர் தாங்கியாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இந்த படத்தில் கமலால் கொல்லப்படும் தீவிரவாதிகளில் மூவர் முஸ்லிம் மதத் தீவிரவாதிகளாகவே காட்டப்பட்டிருக்கின்றனர். மீதமுள்ள லாலா கரம்சந்த் நாத்திகராகவும் பணத்திற்காக எதையும் செய்யும் ஆயுத வியாபாரியாகவே காட்டப்பட்டிருக்கிறார். அவரைப் பற்றிய அறிமுகத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்று சொல்லிவிட்டு அவர் நெற்றியில் குங்குமப் பொட்டை வைப்பதன் மூலம் யாரை ஏமாற்ற கமல் முயற்சித்திருக்கிறார் என்பதை அவர் முடிவுக்கே விட்டுவிடலாம்.

இந்த திரைப்படத்தில் காட்டப்படும் பொதுமனிதனுடைய ரெளத்திரம் என்பது நேர்மையான ஒன்றாக இருக்குமேயானால்
இந்த நாட்டில் தீவிரவாதம் ஏற்பட காரணகர்த்தாக்களாக இருக்கின்றவர்களின் மீதல்லவா ஏற்பட்டிருக்க வேண்டும். வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீரை தவிர்த்து முழு இந்தியாவிற்கும் தீவிரவாத செயல்கள் பரவியது யாரால் என்ற அடிப்படை உண்மையை தெரியாதவரா கமல் ஹாசன். பாபர் மஸ்ஜித் இடிப்பிற்குப் பின்னர் மும்பையில் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான (1993 – ம் ஆண்டு ) கலவரத்தில் அரசும் நீதிமன்றங்களும் பாராமுகமாக இருந்ததினால் தான் மும்பை குண்டு வெடிப்பு நடைபெற்றன. மும்பை குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர்களுக்கு நீதிமன்றமும் தண்டனைகள் கொடுத்து விட்டன. ஆனால் மும்பை குண்டு வெடிப்பிற்கு மூல காரணமாயிருக்கின்ற முஸ்லிம்களுக்கெதிரான கலவரத்தில் ஈடுபட்டவர்கள் இன்னும் வெளியில் எத்தகைய தண்டனைகளும் பெறாமலல்லவா சுற்றித் திரிகின்றனர். அவர்களுக்கு எதிராக திரும்பாத இந்த பொது மனிதனின் கோபம் எந்த வகை நீதியை சார்ந்தது? ஒரு வேளை கமல் சொல்ல வருவது மனு நீதியோ?

கோவை குண்டுவெடிப்பு வழக்கைப் பொறுத்தவரை மேல்முறையீடுக்காக உயர் நீதிமன்றத்தில் இருக்கின்ற ஒரு வழக்கு. எனவே இந்த வழக்கைப் பற்றிய கருத்து சொல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக கருத்துச் சொல்லியிருக்க வேண்டும். இது தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் நியதி. ஆனால் உயர் நீதிமன்றத்திலிருந்து தீர்ப்பு வருவதற்கு முன்னரே கமல் இந்த வழக்கிற்கான தண்டனையையே கொடுத்து விட்டார். இந்த கோவை குண்டு வெடிப்பு நடப்பதற்கு மூல காரணமாயிருந்த நவம்பர் மாதக் கலவரத்தில் 18 முஸ்லிம்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சேதங்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. அரசோ நீதிமன்றங்களோ இதற்கு நியாயம் வழங்கவில்லை. இந்த கலவரத்தை நடத்தியவர்கள் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை. இவர்களுக்கு எதிராகவல்லவா இந்த பொது மனிதனிம் கோபம் திரும்பியிருக்க வேண்டும்? கமலின் படத்தினில் நாங்கள் இருந்திருந்தால் இதை நடக்க விட்டிருக்க மாட்டோம் என்று குஜராத்தினில் நடந்த முஸ்லிம் இனப் படுகொலையைப் பற்றி காவல்துறை அதிகாரி ஆரிப் பேசுகின்ற ஒரு வசனம் வரும். கோவை குஜராத் மாநிலத்தில் இருக்கின்றதா அல்லது தமிழகத்தில் இருக்கின்றதா? இதைக் கூட அறியாதவரா கமல் ஹாசன்? யாரை ஏமாற்ற இந்த வசனத்தை கமல் பயன்படுத்துகின்றார்? கமலுக்கு ஏற்பட்ட கோபம் போன்று கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் ஏற்படாது என்று அவர் எண்ணுகிறாரா? அவர்களும் கமலை போன்று பழிவாங்க மொட்டை மாடியில் ஏற ஆரம்பித்தால் இந்த நாட்டில் நீதிமன்றங்கள் எதற்கு?

நடிகர் கமல் ஏறியது போன்று கட்டி முடிக்கப்படாத பல அடுக்குமாடி கட்டடங்கள் இந்த நாட்டில் இருப்பினும் குஜராத் இனப்படுகொலை, கோவை கலவரம் , ஒரிசா கலவரம் போன்ற பல கொடூர நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனநாயகவாதிகள் காட்டுவது நீதிமன்றங்களின் படிக்கட்டுகளைத் தான். அங்கே நீதி கிடைக்க தாமதமானாலும் சரியே. இந்த படத்தினில் இறுதிக்கட்டத்தில் கமல் தன்னுடைய முற்போக்கு முகமூடியை காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு ஏற்பட்ட கோர சம்பவத்தை மிகவும் உணர்ச்சிகரமாக விவரிப்பார். ஆனால் அதை நடத்தியது யாரென்று தெரிந்திருந்தும், நடந்த இடம் குஜராத் மாநிலம் என்பதையும், அதை நடத்தியவர்கள் இந்துத்துவா தீவிரவாதிகள் என்பதையும் மிக லாவகமாக மறைத்து விடுகின்றார்.

உலகில் இருக்கின்ற பெரும்பாலான இலக்கியங்களில் உள்ள தத்துவங்களை எல்லாம் தேடித்தேடி படித்து பல மேடைகளில் அவற்றை உதாரணம் காட்டிப் பேசும் கமல் ஹாசன் திருக்குறளையும் கண்டிப்பாகப் படித்திருப்பார். இருப்பினும் கட்டுரையில் மேற்குறிப்பிட்ட குறளை மீண்டும் ஒருமுறை அவர் படிக்க வேண்டும். அந்த குறள் உணர்த்துகின்ற செய்திகளை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். இறுதியாக கமல் ஹாசனுக்கு வைக்கும் ஒரு வேண்டுகோள் என்னவெனில் இனியும் நீங்கள் முற்போக்கு முகமூடி போட்டு எந்த ஒரு மேடைகளிலும் பேசித்திரியாதீர்கள். ஏனெனில் “உன்னைப்போல் ஒருவன்” திரைப்படம் உங்களின் முற்போக்கு முகமூடியை முற்றிலும் கிழித்து விட்டது. மீறியும் முற்போக்கு முகமூடியை அணிந்து தத்துவவிசாரம் செய்வீர்களென்றால் அது நாலாந்தர அரசியல்வாதிகளின் பேச்சுக்களை விட மிகக் கேவலமாகவே ஜனநாயகவாதிகளால் பார்க்கப்படும்.

pasdawood@gmail.com

Series Navigation

பி.ஏ ஷேக் தாவூது

பி.ஏ ஷேக் தாவூது