நவீனத்துவம் – பின்நவீனத்துவம் கேரள மாநிலத்தில் தேசிய கருத்தரங்கம்

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

ஹெச்.ஜி.ரசூல்


கேரள மாநிலம் திருவனந்தபுரம் பல்கலைகழக கல்லூரியில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம் கடந்த அக்டோபர் ஏழாம் தேதி நடைபெற்றது.நவீனத்துவம் – பின்நவீனத்துவம் என்ற பொருளில் இது நிகழ்ந்தது.துவக்கவிழா முதல் அமர்வை தமிழ்துறைதலைவர் முனைவர் ஏ.ஜே.சொர்ணராஜ் நடத்தினார். முதல்வர் முனைவர் பி.எஸ்.மோகனசந்திரன் தலைமை உரை ஆற்றினார்முன்னாள் தமிழ்துறைதலைவர்கள் முனைவர் எம்.எம்.மீரான்பிள்ளை, முனைவர் எஸ் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்க சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியர் பொன்னீலன் துவக்க உரை நிகழ்த்தினார். அவர் தன் உரையில் தமிழ்நாவலின்யதார்த்தவகைப் போக்குகள் குறித்தும், மனிதனை மையப்படுத்திய இலக்கியங்கள், அதன் விரிவான களங்கள் அதன் போதாமைகள் பற்றியும் பேசினார். அந்த அமர்வுக்கு தமிழ் பேராசிரியர் எஸ்.பி.சீனிவாசன் நன்றி கூறினார்.

இரண்டாம் அமர்வுக்கு தமிழ்பேராசிரியர் பேபிஷகிலா தலைமை தாங்கினார். திரு.தமிழவன் பின்நவீனத்துவம் என்ற பொருளில் பேசினார்.பின் நவீனத்துவத்தின் கேள்விகேட்கும் பண்பையும் கட்டவிழ்ப்பு,ஒற்றைத்தன்மைக்கு மாற்றான பன்மைத்தன்மை,மையத்திற்கு எதிரான் விளிம்புகளின் குரல் குறித்தும் விரிவாக உரையாற்றினார். பர்த்,தெரிதா, பூக்கோ வின் வழியாக இவ்விவாதங்களை முன்னிறுத்தினார்..நவீனத்துவத்தை வெறும் உளறல் என கூறும் யதார்த்தவாதிகளின் கருத்தை கண்டனம் செய்த தமிழவன் அழுகுரல்கள் மனிதவாழ்வில் இல்லாமலே போய்விட்டதா எனக் கேள்வி கேட்டு திருவந்தபுரத்தில் வாழ்ந்து மறைந்த நகுலனை நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து முனைவர்நயினார் தமிழ் இலக்கியத்தில் உருவகம் – படிமம் என்ற பொருள் குறித்த உரையை ஆற்றினார். பழந்தமிழ் இலக்கியத்திலும் பிரமிள் உள்ளிட்ட நவீன கவிஞர்களிடம் ஆளுமை செலுத்திய படிமப் போக்கை விவரித்தார்.இந்த அமர்வுக்கு தமிழ் பேராசிரியர் கே.மாணிக்கராஜ் நன்றி கூறினார்.

மூன்றாம் அமர்வுக்கு முனைவர் ரமாதேவி தலைமைதாங்கினார். நவீனத்துவமும் நவீனம்தாண்டிய கவிதைகளும் என்ற பொருளில் ஹெச்.ஜி.ரசூல் உரை நிகழ்த்தினார்.

நவீனத்துவத்தின் அகமனக்குரல் தமிழ்கவிதைகளில் படிந்திருந்த விதம் குறித்தும் முக்கிய மூன்று போக்குகளான பிராயடீயம்.சர்ரியலிசம் என்கிற மிகை எதார்த்தம், எக்ஸிஸ்டென் ஸியலிசம் எனும் இருத்தலியம் குறித்தும் விளக்கினார். மலையாள கவிதைப்போக்கில் தத்துவ விசாரத்தையும் அந்நியத்தன்மையையும் படைப்பில் வெளிப்படுத்திய குஞ்சுண்ணி கவிதைகளையும் தமிழின் நகுலன் கவிதைகளையும் ஒப்பீட்டுப்பார்க்க சாத்தியமுள்ளது என்றார்.

நவீனம் தாண்டிய கவிதைப் போக்குகளான மெட்டா கவிதை, தொன்மக்கவிதை, ஜாலயதார்த்தகவிதை ,பெண்ணியம் ,தலித்தியம் சார்ந்த பின்காலனிய கவிதையியல் குறித்தும் உரையாடினார்.

நான்காம் அமர்வு நிறைவுவிழாவிற்கு தமிழ்துறைப் பேராசிரியர் முனைவர் ஹசீனா வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் தமிழ்துறை தலைவருமான முனைவர் ஏ.ஜே. சொர்ணராஜ் தலைமைதாங்க முனைவர் ஜேம்ஸ் ஆர் டேனியல்,கேரள பல்கலைக் கழக தமிழ்துறை தலைவர் முனைவர் காஞ்சனாபாலு ஆகியோர் சிறப்புரையும் நிறைவுரையும் ஆற்றினர்.முனைவர் நிஷாராபி நிகழ்வுக்கு நன்றி கூறினார்.

மலையாளம் பேசும் மாநிலத்தில் மூன்று பல்கலைகழகங்களில் உள்ள இளங்கலை,முதுகலை, ஆராய்ச்சி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டது ஆச்சர்யத்திற்கு ஒன்றாகவும் தென்பட்டது.தமிழவன் தனது பேச்சின் துவக்கத்தில் இதனையே கூறினார் பெங்களூரில் தமிழ்துறையும் தமிழர்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி அழிந்துவிட்ட நிலையில் கேரள மாநிலத்தில் தமிழுக்கும் தமிழ்துறைக்கும் முக்கியத்துவம் அளித்திருப்பதை வரவேற்பதாக அவர் கூறியிருந்தார்.

mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்