ஜெயமோகனின் “காடு” நாவலை முன் வைத்து

This entry is part [part not set] of 44 in the series 20090813_Issue

அதிரை தங்க செல்வராஜன்


மொழி புரியாத ஒரு தேசத்திற்கு பயணம், தம்பி தந்த பச்சை நிற புத்தகம்.
தனிமை நிறைந்த மாலை நேரங்கள், ஒரு புறம் மண் மலைகளும் மறு புறம்
கடலும் இடைவெளியில் நிறைய எண்ணையும், எரி வாயுவும். வெப்பம்
மட்டுமே நிரந்தரம். நேரத்தை விழுங்க என்ன செய்வது, அந்த பச்சை நிற
புத்தகம் ஞாபகம் வந்தது.

திரு ஜெயமோகனின் காடு. இதுவரை ஜெமோவின் எழுத்துக்களை
வாசித்ததில்லை. நான் எழுதப்போவது என் வாசிப்பனுபவமே. இன்னும்
சொல்லப்போனால் ஒரு சராசரி மனிதனின் பார்வை அவ்வளவுதான்.
மிக மிக தாமதமான ஒரு வெளிப்பாடு, என்னை போல் படிக்காமல் தவற
விட்டவர்களுக்கு ஒரு உந்துதலாய் இருக்கட்டும் என்ற எண்ணத்தில்.

நெகிழல்

1. ஒரு நாள் பத்து பக்கங்களுக்கு மேல் நகர முடியவில்லை, வாசிப்பு, மறு வாசிப்பு
லயித்துக் கிடந்தேன். ஒன்னரை மாதங்கள் நான் கிரியாகி காட்டில் குட்டப்பனோடும்,
நீலியோடும், நாகராஜ் அய்யரோடும் அலைந்து திரிந்த அனுபவம் புதிது.

2. “யார் மனதிலாவது அவர்கள் இன்றி பிறர் இருக்கிறார்களா? தெரியவில்லை” இது போல்
கதை நெடுகிலும் கொட்டிக்கிடக்கும் யதார்த்தங்கள்.

3. மிளாவை பார்த்ததில்லை, ஏன் கேள்வி பட்டது கூட இல்லை. என் சிறு வயதில்
எங்கள் வீட்டு பசு மேய்ச்சல் முடித்து திரும்பும் போது கடைக்கு வந்து, சிறு துண்டு
புண்ணாக்கு தின்றுவிட்டு வீட்டுக்கு வரும் நேரம் ஐந்து மணிக்கு ஐந்து நிமிடம்
முன்னோ பின்னோ இருக்கும். மாட்டை விற்ற பிறகும் வெகு காலம் இது தொடர்ந்தது.
மிளாவும் பசுவும் நம்மோடு தொட்டு பழகாது மனதில் தடம் பதித்த ஜீவன்கள்.

4. சிந்திய கரும்புச்சாறில் மொய்க்கும் எறும்புக்கூட்டம் போல் கதை மாந்தர்கள், கதை
நெடுகிலும் காமத்தில் திளைத்தாலும் அருவருப்பாய் இல்லாதது ஆறுதல்.

5. ஒரு கால அல்லது நாகரீக மாற்றத்தின் ஆரம்பம் ஈரமாய் பதிவாகியுள்ளது. பாதுகாப்பும்,
இலவச மருத்துவமும், இலவச படிப்பும்தான் விதைகளாய் விழுந்து, ஒரு கிருஸ்துவ விருட்சம்
முளைத்த பருவம் கண் முன் விரிகிறது.

6. காட்டின் ராஜா ஆனையாக்கும், காடு தலைக்கடிச்ச மனுசனாக்கும் அய்யர், குட்டப்பனின்
வரிகள் வசீகரமானவை.

7. காடும் காட்டின் அசைவும் கபிலரோடு உறவாடி வாழ்வின் கடைசியில் கம்பரும் கதைக்குள்
கலந்தது சுகம்.

8. எல்லை மீறல் ஆண்களுக்கு மட்டும் சொந்தமல்ல என்ற நிலையில் கதைக்கு முற்றுப்புள்ளி
விழுகிறது.

நெருடல்.

1. மலையாளம் கலந்த மொழியாடல், கேரள கரையில் உள்ள தமிழர்களுக்கும், வெளிநாடு வாழ்
தமிழர்களுக்கும் இனிமையாய் இருந்தாலும், மற்றவர்கள் முழு நாவலையும் படித்து
முடிப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.

2. நாவலுக்கு முன்னுரை அவசியமா?

ts23071965@yahoo.co.in

Series Navigation

அதிரை தங்க செல்வராஜன்

அதிரை தங்க செல்வராஜன்