விமர்சனக் கடிதம் – 2

This entry is part [part not set] of 27 in the series 20090604_Issue

வே.சபாநாயகம்


அன்புள்ள பாரதிமணி அவர்களுக்கு,

‘சிரிப்புத்தான் வருகுதையா’ என்ற இரண்டாவது கட்டுரையில், தங்களது 50 ஆண்டு
தில்லி வாசத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடனான உங்களது நட்பையும் அவர்கள்
தொடர்பான பல ரசமான தகவல்களையும் குறிப்பிட்டுள்ளீர்கள்.அதோடு சாமான்யனை வாய்
பிளக்க வைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களது இலவச சலுகைகளைப் பட்டியலிட்டிருப்பது
மூச்சு முட்ட வைக்கிறது. பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை
ஒரு அறையை மட்டும் வைத்துக் கொண்டு பாக்கிப்பகுதியை வாடகைக்கு விட்டு அதிலும்
தேற்றுகிற கேவலத்தையும் அறிய நாம் தான் வெட்கப்பட நேருகிறது. இதற்கெல்லாம் ஏற்பாடு
செய்து பிழைக்கும் கும்பல் பற்றிய தகவலும் ‘சிரிப்புத்தான் வருகுதய்யா’ தலைப்பை அர்த்தப்
படுத்துகின்றன.

‘அமுதசுரபி’ தீபாவளிமலரில் வந்த ‘நாதஸ்வரம் – என்னை மயக்கும் மகுடி’
என்னும் கட்டுரை நாதஸ்வரம் பற்றியும் அதில் மன்னராக விளங்கிய திருவாவடுதுறை
ராஜரத்தினம் பிள்ளை மற்றும் அவரது அத்யந்த சீடர் காருகுறிச்சி அருணாசலம்
பற்றியெல்லாம் பல ரசமான தகவல்களைச் சொல்கிறது. ‘நாதஸ்வரமா – நாகஸ்வரமா’
எனும் சர்ச்சை, ரயிலில் பயணம் செய்யும் போது தன் ஊர் நெருங்குகையில் 50ரூ
அபராதத்தை தன் உதவியாளரிடம் கொடுத்துவிட்டு சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி
தன் வீட்டுக்கருகே இறங்கிக் கொண்ட ராஜரத்தினம் பிள்ளையின் சாகசம் என எத்தனை
சுவாரஸ்யமான தகவல்கள்!

‘தீராநதி’யில் வந்த ‘சுப்புடு சில நினைவுகள்’ அவரைப் பற்றிய பல புதிய செய்திகளைச்
சொல்கிறது. சிறு வயதில் பர்மாவிலிருந்து பலநாட்கள் உணவில்லாமலே நடந்தே இந்தியா
வந்து, குமாஸ்தாவாகச்சேர்ந்து அண்டர் செகரட்டரியாக ஓய்வுபெற்ற சாதனை பெரிதல்ல
எனும்படி பின்னர் உங்கள் சிபாரிசில் உங்கள் அலுவலகத்தில்நல்ல சம்பளத்தில் வாங்கிக்
கொடுத்த வேலையில் அலுவலுக்கே வராமல் சம்பளத்தை வாங்கிக் கொண்டு உங்களைச்
சங்கடத்தில் ஆழ்த்தியதும், நீங்கள் அவரை நம்பி ஒப்படைத்த பல முக்கிய, அவரது துறைசார்ந்த
வேலைகளில் அவர் நாணயமற்று நடந்து ண்டதுமான நிகழ்வுகளை நீங்கள் பெரிது படுத்தாமல்
பெருந் தன்மையுடன் அவரது கடைசிக்காலம் வரை நடந்துகொண்டதும் நெகிழ்ச்சியூட்டுபவை.
ஆனால் உங்களிடம் நன்றி உணர்வை பலமுறை வெளிப்படுத்தியதையும், உங்களது திறமைகள்
பலவற்றை மனம் திறந்து பாராட்டிய குணத் தையையும் குறிப்பிட்டுள்ளீர்கள். உபரியாக செம்பை
வைத்தினாத பாகவதருடனான உங்கள் பரிச்சயத்தையும், அவருக்குப்பிடித்த உங்கள் ஊர்
மட்டிப்பழத்தையும்,அது தொடர்பாக அவர் சொன்ன ஜோக்கை உங்களிடமிருந்த அறிந்தது
நினைவில்லாமல் உங்களிடமே சுப்புடு தனது ஜோக்காகக் குறிட்டதும் வேடிக்கைதான்.
பலாபலன்களை எதிர் பார்த்து சுப்புடுவின் நட்பு அடிக்கடி மாறும் என்னும் பலரது
குற்றச்சாட்டுகளுக்கு மாறாக உங்களிடம் அவர் ஆத்மார்த்தமான நட்புடன் இருந்ததைப்
பெருந்தன்மைடன் மறவாது குறிப்பிட்டுள்ளீர்கள்.

– தொடர்ச்சி அடுத்த கடிதத்தில்.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்