சங்கச் சுரங்கம் – 16: நெடுநல்வாடை

This entry is part [part not set] of 31 in the series 20090528_Issue

சு. பசுபதி, கனடா


டிசம்பர் மாதம்; பனியில் டொராண்டோ உறைந்திருந்தது. நண்பன் ராமசந்திரன் வீட்டில் ஒரு மாலை விருந்து. எல்லா விருந்தினரும் சென்றபின், கையை அப்பளமாகப் பொறிக்கும் சூட்டில் ஒரு ‘காபி’ டம்ளரை வைத்துக் கொண்டு, நான் குளிர்காய்ந்து கொண்டிருந்தேன். ராமின் மனைவி ரோகிணியோ, கைகளைத் தேய்த்துத் தேய்த்துச் சூடேற்றிக் கொண்டிருந்தாள். ” இவருக்கு எப்படித்தான் இந்தக் குளிர் தாங்குகிறதோ, தெரியவில்லை? எப்போதும் வீட்டுத் ‘தெர்மோஸ்டாட்’டை அதல பாதாளத்தில் வைத்து விடுகிறார்! எனக்கு ஒரேடியாய் நடுக்கித் தள்ளுகிறது” என்று ராமைக் கண்ணால் சுட்டாள் ரோகிணி. “குளிரா? இப்போதுதான் சுறுசுறுப்பாய், வேர்க்காமல் நிறைய வேலை செய்ய முடிகிறது! ‘மாதங்களில் மார்கழி’ன்னு சும்மாவா சொன்னார் கிருஷ்ணர்? என் ஓட்டுக் குளிர்காலத்திற்கே!” என்றான் ராம். “இப்படியும், ஒரே விஷயம் கணவனுக்கு அமுதமாகவும், மனைவிக்கு விஷமாகவும் இருக்குமோ? என்ன ஜாதகப் பொருத்தமோ, தெரியலை! ” என்று அங்கலாய்த்தாள் ரோகிணி.

‘டொக்’கென்று காபி டம்ளரைக் கீழே வைத்தேன். “ரோகிணி! உங்கள் ‘கேஸ்’ போல ஒரு பழங்காலக் ‘கேஸ்’ இருந்தது. அதுதான் ‘நெடுநல்வாடை’ . அரசிக்குக் குளிர்காலம் எவ்வளவுக் கெவ்வளவு நீண்டதாக, நெடியதாக இருந்ததோ, அவ்வளவுக்கவ்வளவு அரசனுக்கு நல்லதாக, சுகமாக இருந்ததாம்! அதைச் சொல்லும் சங்க நூல்தான் நக்கீரர் இயற்றிய ‘நெடுநல்வாடை” என்றேன்.

“ ஓ! இந்த நூலைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேனே? ஆங்கிலத்தில் இதன் தலைப்பை ஓர் இணையத் தளத்தில் ஒருநாள் படித்துவிட்டு, என் நண்பன் ‘நெடுநாள்வடை’ என்று கேலி செய்தது நினைவிற்கு வருகிறது” என்று சிரிக்கத் தொடங்கிய ராம் என் முகத்தைப் பார்த்ததும் ‘கப்’பென்று அடங்கி, “வாடைன்னா என்ன?” என்று ஈனக்குரலில் முணுமுணுத்தான்.

” கிழக்கிலிருந்து வீசும் காற்றுக்குப் பெயர் கொண்டல். மேற்கிலிருந்து வருவது கோடை. தெற்கில் இருந்து வீசுவது தென்றல். வடக்கே இருந்து வீசுவது வாடை; குளிர்க்காற்று . ”

” குளிர்க்காலத்தில் அரசன் அரசியைப் பிரிந்து போர்ப் பாசறையில் இருந்ததால், பிரிவு தாங்காத அரசிக்கு வாடை ‘நெடிய’ வாடையாய் இருந்தது. ஆனால், அரசனோ பாசறையில் மனைவி நினைவின்றி, வெற்றி பெறப் போகும் போரைப் பற்றியே நினைத்துப் பூரிப்போடு இருக்கிறான்; அதனால் வாடை அரசனுக்கு ‘நல்வாடை’யாய் இருந்தது என்று சொல்லி, இரண்டையும் சேர்த்து, ‘நெடுநல்வாடை’ என்று தன் நூலிற்குப் பெயரிட்டார் நக்கீரர்”

” பேஷ்! கடமையில் மூழ்கின கணவனுக்கு வாடைக் காற்றும் தென்றல் தானோ?” என்றான் ராம். “‘ஆமாம், ஆமாம், ரொம்பப் பெரிய கவின்னு எண்ணமோ? ” என்று இடித்தாள் ரோகிணி. பிறகு, அந்த நூலைப் பற்றிச் சிறிது விவரமாய் இருவருக்கும் சொன்னேன். நீங்களும் கேட்பீர்கள் அல்லவா?

நூல் 188 அடிகள் கொண்டது. பிரிவினால் வருந்தும் அரசியைத் தேற்றி, எதிரிகளை வென்று அரசன் விரைவில் வரும்படி தோழி ஒருத்தி கொற்றவைக்கு வேண்டிக் கொள்வதுபோல் அமைந்துள்ளது பாடல். இதை நக்கீரரின் ஓர்அற்புத சொல்லோவியம் என்றே சொல்லலாம். மனத்தை மிகவும் தொடும் முறையில் இயற்கைக் காட்சிகளை வர்ணித்திருக்கிறார் புலவர். நூல் முழுதும் வாடை யின் ‘மணம்’ !

முதலில் இடையர்கள் குளிரால் நடுங்குவதைப் பாடுகிறார். நெருப்பில் கைகளை நீட்டி அச்சூட்டினைக் கன்னங்களில் ஒற்றுகின்றனர் கோவலர்கள். அந்த வெப்பமும் அவர்களுக்குப் போதவில்லையாம். கன்னத்தில் பற்கள் பறை கொட்ட நடுங்கினர் என்கிறார்.

கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க

[ எரியும் கொள்ளிமேல் கைநீட்டி, அதன் மூலம் கிடைத்த சூட்டில் குளிரைப் போக்க
முயன்று, கன்னத்தில் பற்கள் பறை கொட்டும்படி நடுங்கி இருந்தனர் ]

குளிரால் குரங்குகள் உடல் முடங்கின. பறவைகள் சிறகுகளை உடலோடு இறுக்கிக் கொண்டன. பசுக்கள் கன்றுகளுக்குப் பால் கொடுப்பதையும் மறந்திருந்தன.

பிறகு நகர்க்காட்சிகளைக் காட்டுகிறார் நக்கீரர். குளிரைப் பற்றிக் கவலையற்று இருந்தவர்கள் இரு சாரார் தாம். மிலேச்சர்கள் ஒரு சாரார். நிறைய கள் குடித்த மயக்கத்தில் அவர்களுக்குக் குளிர் உறைக்கவில்லையாம்! ( ராமின் கையிலிருக்கும் கோப்பையைக் கண்சாடையால் எனக்குக் காட்டினாள் ரோகிணி!) மாலையில் விளக்கேற்றி, தெய்வத்தைத் தொழுது, இல்லக் கடமைகளைச் செவ்வனே செய்யும் வீட்டு மகளிர் இரண்டாவது சாரார். ( தன்னைக் கூர்ந்து பார்த்த ராமுக்கு ‘அழகு’ காட்டினாள் ரோகிணி.)

நக்கீரர் சில அற்புதமான, வித்தியாசமான காட்சிகளைக் காட்டுகிறார்.

ஒரு சித்திரம். கோடையில் மட்டும் பயன்படுத்தப் படும் , செம்பினால் செய்யப்பட்ட விசிறிகளில் சிலந்தி வலை பின்னியிருந்ததாம்!

கைவேல் கம்மியன் கவின்பெறப் புனைந்த
செங்கேழ் வட்டம் சுருக்கி, கொடுந்தறி,
சிலம்பி வால்நூல் வலந்தன தூங்க

[ கைவேலையில் சிறந்த செம்பு வேலை செய்யக்கூடியவன் அழகாகப் புனைந்த, சிவப்பு நிறமுடைய, விரித்தால் வட்டமாக அமையும் விசிறிகள் , மடிக்கப்பட்டு வளைந்த முளையில் தொங்கின; சிலந்தியின் வெள்ளை நூல் அவ்விசிறிகளைச் சூழ்ந்திருந்தது. ]

இன்னொரு காட்சி. ஆடல் மங்கையர், குளிரில் சுருதி கலைந்த யாழ் நரம்புகளை, சூடான தங்கள் மார்பகங்களில் தடவி, சூடேற்றிப் பின் சுருதி சேர்க்கின்றனராம்!

ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார்
தண்மையில் திரிந்த இன்குரல் தீம்தொடை
கொம்மை வருமுலை வெம்மையில் தடைஇ
கருங்கோட்டு சீறியாழ் பண்ணுமுறை நிறுத்த .

[ புணர்மார் – யாழிசை கூட்ட, தண்மையில் – குளிரில், திரிந்த – சுருதி கலைந்த , இன்குரல் – இனிய ஓசையைத் தரும், தீம்தொடை – நல்ல யாழ் நரம்புகளை , கொம்மை வருமுலை – திரண்ட, வளர்ந்த மார்பகங்களின், வெம்மையின் – சூட்டில், தடைஇ – தடவி, கருங்கோட்டு சீறியாழ் – கரிய தண்டுள்ள சிறிய யாழை, பண்ணுமுறை நிறுத்த – பண்ணில் நிறுத்த ( சுருதி சேர்க்க) ]

மேலும், சங்க காலத்துக் கட்டடக் கலையின் வளர்ச்சியும் இந்நூலின்மூலம் நமக்குத் தெரிகிறது.மன்னனின் மாளிகை, சித்திரை மாதத்தில், நடு பத்து நாள்களில், ஒரு நன்னாளின் நடுப்பகலின் உச்சி நேரத்தில் கால்கோள் ( அங்குரார்ப்பணம்) செய்து கட்டப் படுகிறது . ( தரைக்கு மேலே குறுக்கில் இருக்கும் இருகோல்களின் நிழல்கள் ஒன்றும்போது நண்பகலைக் குறிக்கும் ஒரு பழங்கால, பொழுதறியும் முறையையும் [ இருகோல் குறிநிலை வழுக்காது ] இங்கே குறிப்பிடுகிறார் நக்கீரர்.) உத்தரப் பலகையில் திருமகளின் உருவம் இருக்கும். அதன் இருபக்கங்களிலும் , இரண்டு பெண்யானைகள் திருமகள் மீது குவளை மலர்களைப் பொழிவது போல் சிற்பங்கள் இருக்கும். வாசல் நிலைகள் மீது நெய்பூசி, வெண்கடுகு அப்பியிருக்குமாம்.

மன்னனின் மாளிகைக்குள் , முற்றத்தில் அன்னம் கவரிமானோடு விளையாடிக் கொண்டிருக்கும். அந்தப்புரத்தில் , யவனர்களால் செய்யப்பட்ட பாவை விளக்குகளில் மகளிர் நெய்யை விட்டுச் சுடரேற்றுகின்றனர் . அந்தப் புரத்தில் மலைபோல் இருக்கும், அரசிக்குரிய பெரிய மாளிகைமேல் பன்னிறக் கொடிகள் பறக்கும் காட்சி, மலைமீது காணப்படும் வானவில் போல் தோற்றமளிக்கிறது. மாளிகையின் வெளிச்சுவரில் வெண்சாந்து; உட்சுவரில் செம்பு நிறச் சாந்து. தூண்களில் நீலமணிகள். சுவர்களில் வளைந்து போகும் கொடியின் சித்திரம்.

” அரசியின் படுக்கை அறையைப் பற்றி விவரமாகச் சொல்லுங்கள், சார்” என்றாள் ரோகிணி.

ராணியின் கட்டில் தந்தக் கட்டில். போரில் விழுந்த யானைகளிடமிருந்து எடுத்த தந்தங்கள் அவை. (உயிருள்ள யானைகளிடமிருந்து அல்ல! ). தந்தச் சட்டங்களில் பல வேலைப்பாடுகள். கட்டிலைச் சுற்றித் தொங்கும் முத்துமாலைகள். பன்னிற மயிர்க்கம்பளத்தின் மேல், பல ஓவியங்கள் வரையப் பெற்ற மெல்லிய போர்வை. அன்னங்கள் உதிர்த்த மயிரால் நிரப்பப் பட்ட மெத்தை. மெத்தை மேல் தலையணை, சாயணை. மெத்தை மீது கஞ்சி போட்டுச் சலவை செய்யப் பட்ட மெல்லிய துகில். மெத்தை மேல் துயரமே உருவாக அரசி உட்கார்ந்திருக்கிறாள். தோழிகள் ‘ அரசர் விரைவில் வந்துவிடுவார்’ என்று அவளைத் தேற்ற முற்படுகின்றனர். அரசி கட்டிலின் விதானத்தைப் பார்க்கிறாள். அங்குள்ள மெழுகுச் சீலையில் , அழகிய ஒரு படம். சந்திரனும், அவனுக்குப் பிடித்த மனைவி ரோகிணியும் இணைந்திருப்பதைக் காட்டும் படம். ( “சந்திரனும், ரோகிணியுமா? என்ன ஆச்சரியம்!” என்று வாயைப் பிளந்தனர் ராமசந்திரனும், ரோகிணியும்) . அந்தப் படத்தைப் பார்த்ததும் துக்கம் பீறிட்டுக் கொண்டு வருகிறதாம் அரசிக்கு. கண்ணில் துளிர்க்கும் நீரை விரலால் வழித்துத் தெறிக்கிறாள்.
திண்நிலை மருப்பின் ஆடுதலை ஆக,
விண்ஊர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து,
முரண்மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய,
உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிதுஉயிரா,
மாஇதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியா
புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவை.

[ ஆகாயத்தில், திண்ணிய கொம்பினை உடைய மேட ராசி முதலாக ஏனை ராசிகளில் சென்று திரியும், மிகுந்த பயணங்கள் மேற்கொள்ளும் சூரியனோடு மாறுபாடு மிகுந்த, தலைமைமிகுந்த திங்களின் பக்கத்தில் நின்ற, உரோகிணியை நினைக்கின்றாள் அரசி ; அந்த ஓவியத்தை உற்று நோக்கி, ( தானும் உரோகிணியைப் போல் கணவனுடன் பிரிவற்று இருப்போமா? என்று எண்ணிப்) பெருமூச்சு விட்டு, நீலப் பூவிதழ் போன்ற கண்ணிமைகள் தேக்கி நிற்கும் கண்ணீர்த் துளிகளைத் துடைத்து, சிவந்த விரலால் கடைக்கண்ணில் இருந்த சில துளிகளைத் தெறித்துவிட்டு, தனியாய் வசிக்கும் , பலநலங்கள் மேவும் அரசி ]

அதே சமயத்தில் பாசறையில் உள்ள மன்னன் , போரில் காயமடைந்த தன்வீரர்களுக்கு ஆறுதல் கூற ஒவ்வொரு கூடாரமாகப் போகிறான். தெருவெல்லாம் சேறு. தம்மீது விழும் மழைத் துளிகளை உதறிக் கொள்ளும் குதிரைகளால் தெறிக்கும் சேறு மன்னன் மீது படுகிறது. இடது தோளில் இருந்து தன் மேலாடை (உத்தரீயம்) நழுவி விடாமல் இருக்க , அதனை அரசன் தன் இடக் கையால் பற்றிக் கொள்ளுகிறான். வாளைத் தோளில் தொங்கவிட்டு, கூட நடக்கும் காவலனின் தோளில் தன் வலக் கையை வைத்தபடி நடக்கிறான் அரசன். அரசன் மேல் மழை விழா வண்ணம், ஒரு வெண்கொற்றக் குடை பிடித்தபடி கூட நடக்கிறான் ஒரு போர்வீரன். நள்ளிரவு என்றும் பாராமல், வீரர்களை நேரில் சென்று பார்த்து, அவர்களின் வீரத்தைப் புகழ்ந்து பேசி, அவர்களை ஊக்குவிக்கப் போகிறான் அரசன். அவனுக்கு வாடைக் காற்று நல்லதாகவே இருக்கிறது ! இந்த அருமையான காட்சியுடன், ‘அரசன் தொடுத்த போர் விரைவில் வெற்றியில் முடியட்டும்’ என்று வேண்டிப் பாடலை முடித்து விடுகிறார் நக்கீரர்.

“என்ன அருமையான பாடல்! அதுவும் அந்தப் படுக்கையறைக் காட்சி பிரமாதம்! எனக்கு ஒரு யோசனை. ஒரு நல்ல ஓவியனைக் கூப்பிட்டு, நம் படுக்கையறை மேற்சுவரில், சந்திரனும் ரோகிணியும் சேர்ந்திருக்கும் காட்சியை வரையச் சொல்லலாம்னு தோன்றுகிறது ” என்றான் நண்பன் ராமசந்திரன்.

” போறும், போறும், உங்க புத்தி போறதே! அப்படிச் செய்தாலும் பொருத்தமான்னாப் படம் போடணும். குறட்டை விடறாப் போல ஒரு சந்திரனையும், காதில் பஞ்சை வச்சிண்டு தூங்க முயலும் ரோகிணியையும் படம் போடச் சொல்லுங்கோ !” என்று ஒரு போடு போட்டாள் ரோகிணி !

குறட்டை விடும் சந்திரனை எப்படிப் படம் வரைவது என்று கற்பனை பண்ணிக் கொண்டே என் வீட்டிற்குக் கிளம்பினேன்.

~*~o0O0o~*~

s dot pasupathy at yahoo dot ca

Series Navigation

சு. பசுபதி, கனடா

சு. பசுபதி, கனடா