பார்வைக் கோணம் – முத்துலிங்கத்தின் வெளி

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

மு இராமனாதன்


‘வார்த்தை’ செப்டம்பர் இதழில் அ.முத்துலிங்கம் எழுதிய “ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து” எனும் சிறுகதை வெளியாகியிருந்தது. இது திண்ணை இதழிலும் மறுபிரசுரம் ஆகியது (http://www.thinnai.com/?module=displaystory&story_id=10809257&edition_id=20080925&format=html). கதையை வாசித்ததும் எனக்கு ஆகஸ்ட மாதம் தொலைக் காட்சியில் பார்த்த ஒரு காட்சி நினைவிற்கு வந்தது. 90,000 ஜனங்கள் எழுந்து கை தட்டுகிறார்கள். அதை ஏற்கும் விதமாக, உஸைன் போல்ட் என்கிற இளைஞர், விதிக்கப்பட்ட 100 மீட்டர் தூரத்தை 9.69 நொடிகளில் கடந்த பிறகும், ஸ்டேடியம் முழுக்கச் சுற்றி வருகிறார். போல்ட் நிகழ்த்தியது ஓர் உலக சாதனை. தவிர, போல்ட் தனது சாதனையைத் தானே முறியடிக்கவும் செய்தார். சில மாதங்களுக்கு முன்னர், நியூயார்க்கில் இதே தூரத்தை 9.72 நொடிகளில் கடந்திருந்தார் போல்ட். முத்துலிங்கத்தின் கதைக்கும் ஒலிம்பிக்ஸுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. பூகோள ரீதியாகவும் தொடர்பு இல்லை. போல்ட் வட அமெரிக்கத் தீவுகளில் ஒன்றான ஜமைக்காக்காரர். சாதனை நிகழ்த்தியது பெய்ஜிங்கில். நமது கதை நடப்பது மேற்கு ஆப்பிரிக்காவின் சியாரா லியோனில்.

நல்ல எழுத்தாளர்களும் சிறந்த விளையாட்டு வீரர்களைப் போலத்தான். இரு சாராரும் எதிர்கொள்ளும் சவாலும் ஒன்று போலத்தான்.முந்தைய சாதனைகளை, தாங்கள் நிகழ்த்தியது உட்பட, அவர்கள் கடந்து போய்க் கொண்டே இருக்கிறார்கள். இந்தக் கதையின் மூலம் முத்துலிங்கம் தனது படைப்பு உருவாக்கத்தில் இன்னுமொரு சாதனை நிகழ்த்தியிருக்கிறார் என்பதாக எனக்குத் தோன்றுகிறது. முத்துலிங்கத்தின் முந்தைய கதைகளைப் போலவே இதுவும் நேரான நடையில், எளிய மொழியில், சிறிய வாக்கியங்களில், வசீகரமான வார்த்தைகளில் சொல்லப்படுகிறது. இந்தக் கதை முழுவதையும் வாசகன் ஒரு மென் நகையோடு படிக்க முடிகிறது. கதை சொல்லி சியாரோ லியோனில் வேலை பார்க்கிறார். அவரது வேலைக்காரன் ஸாண்டி விசுவாசமானவன்; திடகாத்திரன். பக்கத்து வீட்டில் வசிக்கும் படித்த, உத்தியோகத்திலிருக்கும் ஆப்பிரிக்கத் தம்பதிகளின் வீட்டில் வேலை பார்க்கும் கதீஜாவிற்கு 12,13 வயதுதான் இருக்கும். இவர்கள் வீட்டில் வளர்க்கும் முயல்களைப் பார்க்க வரும் கதீஜாவை ஸாண்டி எப்போதும் விரட்டியடிக்கிறான். அப்படித்தான் கதை சொல்லி நினைத்துக் கொண்டிருக்கிறார். சில சந்தர்ப்பங்களில் அவன் விரட்டும் போது அவள் பிடிபட்டுக் கொள்கிறாள். அதனால் கர்ப்பமாகிறாள். பக்கத்து வீட்டுத் தம்பதிகள் வழக்கைக் கதை சொல்லியிடம் கொண்டு வருகிறார்கள்.

விசாரணை தொடங்குகிறது. கதை சொல்லி ஸாண்டியிடம் கதீஜாவிடம் பேசி பழகி இருக்கிறாயா என்று கேட்கிறார். இல்லை என்கிறான். ஆனால் அவளுடன் உறவு வைத்திருக்கிறாயா என்கிற கேள்விக்கு ஸாண்டி இல்லையென்று சொல்வதில்லை. கதீஜாவிடம் உடலுறவுக்கு சம்மதம் கொடுத்தாயா என்று கேட்டால் அவளும் மறுப்பதில்லை. ‘நான் பெரிய ஓம் சொல்லவில்லை, சின்ன ஓம் தான் சொன்னேன்’ என்கிறாள். கதை சொல்லிக்கு ஆப்பிரிக்காவில் இப்படியான குற்றத்திற்கு என்ன தண்டனை என்று தெரியவில்லை. தாலி கட்டச் செய்வதா? பக்கத்து வீட்டுக் கணவர், கதீஜாவிற்கு பராமரிப்பு காசு கொடுக்க வேண்டும் என்று கோருகிறார். ‘இவளல்லவோ அத்து மீறி நுழைந்தவள். இவளுக்கல்லவோ தண்டனை கொடுக்க வேண்டும்’ என்று ஸாண்டி கத்துகிறான்.

பஞ்சாயத்துத் தலைவர் தீர்ப்பு சொல்ல வேண்டும். ‘பிள்ளை பிறக்கும் தினத்திலிருந்து ஸாண்டி தனது சம்பளப் பணத்திலிருந்து 25 சதவீதம் தர வேண்டும்’. தம்பதிகளுக்கு வெகு சந்தோசம். கதீஜா அவர்கள் பின்னால் ஆடியபடியே போய் விடுகிறாள். ஸாண்டி மட்டும் தன் காதுகளை நம்ப முடியாமல் ‘அவளுக்கு தண்டனை என்ன’? என்று அரற்றிக் கொண்டே இருக்கிறான். ஆப்பிரிக்க முன்குடிகள் உடலுறவை குற்றத்துக்கு தண்டனையாக பயன்படுத்தியிருக்கலாம் என்ற விசயம் கதை சொல்லிக்குப் பல வருடங்கள் கழித்துத்தான் தெரிய வரும். கதீஜாவிற்குப் பிள்ளை பிறந்ததும் பக்கத்து வீட்டு மனைவி மாதா மாதம் பராமரிப்புக் காசை பெற்றுச் செல்கிறாள். கதை சொல்லிக்கு மாற்றல் உத்தரவு வருகிறது. அதற்குப் பிறகு தனது தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதா என்று தெரியவில்லை என்று கூறிக் கதையை முடிக்கிறார் ஆசிரியர். கதையின் முரண் தலைப்பிலேயே ஆரம்பமாகி விடுகிறது. பஞ்சாயத்து தமிழ் கலாச்சாரப் பின்புலத்தைக் குறிக்கிறது. அது ஆப்பிரிக்காவோடு பொருந்தாமல் நிற்கிறது. கற்பைக் குறித்தும், குடும்ப உறவுகளைக் குறித்தும் தமிழ் மனம் கொண்டிருக்கிற மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆப்பிரிக்கப் பிரச்சனையை அலசுவதைப் போலவே. கதை முழுதும் கதை சொல்லியின் பார்வைக் கோணத்திலேயே விரிகிறது. அந்தப் பாத்திரத்தின் நியாயங்களும், தர்க்கங்களும் கதையில் இடம் பெறுகின்றன. எனில் கதைசொல்லியின் தன்னிலை விளக்கங்களுக்கான எதிர் வாதங்களும் கதைக்குள்ளேயே இருக்கின்றன. வாதிக்கு எதிரான வாதங்களை ஊடு சரடாக வைத்து விடும் கதைகளை முத்துலிங்கம் இதற்கு முன்பும் எழுதியிருக்கிறார்.

ஒரு சதுரமைல் பரப்பைக் கொண்ட கனடாவின் ஒரு மா அங்காடியில் தொடங்கும் கதை “ஐந்தாவது கதிரை”. இது தங்கராசாவின் பார்வைக் கோணத்தில்தான் சொல்லப்படுகிறது. மனைவி பத்மாவதியோடு அவர் நடத்தும் மெளனப் போராட்டமும், அவள் மீது அவர் சுமத்தும் குற்றச்சாட்டுகளுமாக விரியும் கதையில், அவரது குறைகளையும் வாசகன் தெளிவாக உணர முடிகிறது. கனடாவின் சிறைச்சாலை ஒன்றிலிருந்து குடிவரவு அதிகாரிக்கு கணேசரட்னம் எழுதுகிற கடிதம்தான் “கொழுத்தாடு பிடிப்பேன்”. தனது நியாயங்களை அவன் அடுக்கிக் கொண்டே வருகிறான். என்றாலும் அவன் இழைக்கும் குற்றமும் வாசகனுக்குத் தெரிந்து விடுகிறது. பிரதிக்கு எதிரான வாதங்கள் இந்தக் கதைகளுக்குள்ளேயேதான் இருக்கின்றன. சீயத்திற்குள் இருக்கும் மதுரத்தைப் போல. கதையின் உள்பரப்பில் அது காணக்கூடியதாகவும் , சுவைக்கக் கூடியதாகவும் இருக்கிறது. எனில், “ஆப்பிரிக்கப் பஞ்சாயத்”தில் கலாசார வேறுபாடுகளை உள்வாங்கிக் கொள்ளாத கதை சொல்லியின் போதாமை, எழுதப்பட்ட வரிகளுக்கிடையில் எழுதப்படாமல் பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. உணவிற்குள் இருக்கும் உப்பைப் போல கரைந்து போயிருக்கிறது. அது கதையின் மேல் பரப்பிலோ உள்பரப்பிலோ காணக் கிடைப்பதில்லை. அதன் சுவையுணரும் வாசகனுக்கு ஓர் இலக்கிய அனுபவம் வாய்க்கிறது.
அடுத்தவரின் பிரச்சினையைப் புரிந்து கொள்ள அவரது செருப்புகளில் உங்கள் கால்களைப் பொருத்திப் பாருங்கள் என்று சொல்வார்கள். எத்தனை பேர் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவரது கால் அளவு அடுத்தவரின் அளவோடு பொருந்துவதில்லை போலும். சைவ உணவு சாப்பிடுகிறவர்களில் சிலர் அசைவ உணவுக்காரர்களை அருவருப்போடு பார்க்கிறார்கள். அசைவம் சாப்பிடுகிற சிலருக்கு சைவ உணவுக்காரர்களைப் பார்த்தால் இளக்காரமாக இருக்கிறது. ஆட்டுக்கறி சாப்பிடுகிறவனுக்கு மாட்டுக்கறி சாப்பிடுகிறவன் கீழானவனாகத் தென்படுகிறான். இரண்டும் சாப்பிடக்கூடிய ஓர் இந்தியன், பன்றியிறைச்சியும் பாம்பு சூப்பும் சாப்பிடுகிற சீனனின் உணவைக் கேலி பேசுகிறான். எல்லோரும் தத்தமது உணவே சிறந்தது என்று கருதுகிறார்கள். தங்களது மதிப்பீடுகளும் அவை உருவாக்கியிருக்கும் கற்பிதங்களுமே உலகத்தில் மேன்மையானவை என்று நினைக்கிறார்கள். அந்த அளவீட்டின்படியே மற்றவர்களின் கலாச்சாரங்களை மதிப்பிடுகிறார்கள். “ஆப்பிரிக்க பஞ்சாயத்”தின் நாயகனும் அதையேதான் செய்கிறான். இவர்கள் வீட்டில் இருக்கும் முயல்களைப் பார்க்கத்தான் கதீஜா வருகிறாள். முயல் கூட்டிலேதான் அவர்கள் உறவு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் கதையில் முயல்களுக்கு மேலதிகப் பங்கிருக்கிறது. முயல்கள் அபாரமாகப் பெருகும் என்று நம்பித்தான் இரண்டு முயல்களை வாங்குகிறார் கதை சொல்லி. ஆனால் ஆண் முயல் அணுகும் போதெல்லாம் பெண் முயல் அடித்து விரட்டி விடுகிறது. அது ஆணுடைய ஆசையை அதிகரிக்கத்தான் என்று விபரம் தெரிந்த நண்பர் விளக்குகிறார். ‘இவள் முயல் பார்க்க அடிக்கடி வருவாள் . நான் துரத்துவேன். தப்பி ஓடி விடுவாள். சிலவேளை பிடிபடுவாள். பிடிபடும் சமயங்களில் மட்டுமே உறவு கொள்வேன்’ என்று சொல்லுகிற ஸாண்டி, பிற்பாடு சொல்கிறான் :’… இவள் வேகமாக ஓடவில்லை. போகப் போக இவள் வேண்டுமென்றே என்னிடம் பிடிபட்டுக் கொண்டாள்’. முயலுக்கும் மையக் கதைக்குமிடையே ஆசிரியர் சொல்லாமல் சொல்கிற தொடர்புகள் இத்துடன் முடிவதில்லை.
கதை சொல்லிக்கு மாற்றல் உத்தரவு வருகிறது. முயல்களை என்ன செய்வது ? காட்டுக்குள் விடலாம் என்கிறான் ஸாண்டி. ‘பாவம் செத்துப் போகுமே. அவைகளுக்குத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியாதே’ என்கிறார் கதைசொல்லி. ஸாண்டி சிரிக்கிறான். ‘மாஸ்ட, வேட்டையாடும் மிருகம் என்றால் அது புதிதாக வேட்டை கற்க முடியாது. பட்டினி கிடந்து இறந்து விடும். முயல் அப்படியல்ல. அதுபதுங்கும் மிருகம். பதுங்குவதற்கு பயிற்சி தேவை இல்லை’ என்கிறான். வேட்டையாடும் மிருகங்களின் நியமம் பதுங்கும் மிருகங்களுக்குப் பொருந்தா. ஆனால் கதை சொல்லி தனக்குத் தெரிந்த சித்தாந்தங்களை எல்லாவற்றின் மீதும் பொருத்துகிறார். மேலேயுள்ள உரையாடல் அதைத்தான் உணர்த்துகிறது. அல்லது எனக்கு அவ்விதமாகத் தோன்றுகிறது. கதை முடிவில் போகிற போக்கில் ஒரு தகவல் வருகிறது. காட்டில் கொண்டு விட்டவை 31 முயல்கள். முன்னங்காலால் ஆண் முயலை அடித்து விரட்டிக் கொண்டிருந்த பெண் முயல் எப்போது இணங்கியது என்றும், அது எத்தனை முறை குட்டி போட்டது என்றும் ஆசிரியர் விளக்கப் புகுவதில்லை.

“தொடக்கம்” என்கிற முத்துலிங்கத்தின் கதையில் Saker Falcon என்று ஒரு பறவை வரும். ‘ருஸ்யாவின் வடகிழக்கு மூலையில் இருந்து குளிர்கால ஆரம்பத்தில் இது புலம் பெயரும். தெற்கு ஆப்பிரிக்கா வரைக்கும் பறந்து வந்து வசந்தம் வரும் வேளைகளில் திரும்பி விடும். ஐயாயிரம் மைல்கள் இதற்கு ஒரு பொருட்டல்ல’. முத்துலிங்கத்தின் கதை வெளியும் அப்படித்தான். அது கனடா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சூடான், சோமாலியா, சியாரா லியோன் என்று விரிகிறது. Saker Falcon சூரியனையும், நட்சத்திரங்களையும் வைத்து திசையறிந்து செல்லும். முத்துலிங்கத்தின் கதைகளும் அப்படித்தான். இலக்கை நோக்கி சரி கணக்காகப் பயணிக்கின்றன. அந்நிய மண்ணில் நிகழும் ஒரு புலம்பெயர்ந்த மனிதனின் சாட்சியங்களாகப் பதிவாகியிருக்கும் முத்துலிங்கத்தின் கதைகளிலெல்லாம் கலாசார வேறுபாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. பலவற்றிலும் அவை ஸ்தூலமாக வெளிப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, மேற்கு ஆப்பிரிக்காவில் நடக்கும் “குதம்பேயின் தந்தம்” என்கிற கதையைச் சொல்லலாம். அதில் உயர்ந்த குதிகால் அணி, தொடை தெரியும் ஸ்கர்ட், நீண்ட கழுத்து வைத்த இறுக்கமான மேல் சட்டையுடன் வரும் ‘லெபனிஸ்’ இளம் பெண் தனக்கு சேலை உடுக்க ஆசையென்றும், ஆனால் அவளது வீட்டிலே அசிங்கம் என்று தடை போட்டு விடுவார்கள் என்றும் சொல்கிறாள்.

‘என்ன அசிங்கமா? சேலையா?’ ‘ஆமாம், இடையைக் காட்டி சேலை உடுப்பதை எங்கள் வீட்டில் செக்ஸியாக கருதுகிறார்கள். இது நடக்காத காரியம்’. விமர்சகர் க.மோகனரங்கன் சொல்கிறார் : ‘முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தை வைத்து ஆப்பிரிக்காவை மதிப்பிடுவதில்லை. மாறாக ஆப்பிரிக்காவை வைத்து யாழ்ப்பாணத்தை மதிப்பிடுகிறார்’. “அ.முத்துலிங்கம் கதைகள்” (தமிழினி பதிப்பகம், 2003) தொகைநூலின் முன்னுரையில்தான் மோகனரங்கன் இப்படிச் சொல்கிறார். நூலில் இடம் பெற்றிருக்கும் கதைகளின் தரத்திற்கு இணையானது இந்த முன்னுரை. “முழு விலக்கு” கதையிலும் கலாசார வேறுபாடு ஸ்தூலமாக வெளிப்படுகிறது. இந்தக் கதையும் ஆப்பிரிக்காவில் நடக்கிறது. தினசரி வரும் மீன்காரியின் முதுகோடு ஒட்டிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு சங்கீதா வைத்திருக்கும் பெயர் கரிக்குருவி. அது மீன்காரியின் குழந்தை அல்ல. அவளது தங்கை பதினைந்து வயது ஓனஸாவின் குழந்தை. கதை தொடர்கிறது. ‘ஒரு பெண் பருவமடைந்ததும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவள் தன் கருவளத்தை உலகுக்குக் காட்டி விட வேண்டும். ஒரு பிள்ளை பெற்றுவிட்டால் அவள் அந்தஸ்து உயர்ந்து விடும். அவளை முடிப்பதற்கு ஆடவர்கள் போட்டி போடுவார்கள். ஒரு பெண்ணின் உண்மையான விலைமதிப்பு அவளுடைய பிள்ளை பெறும் தகுதியை வைத்துத்தான் அங்கே நிர்ணயிக்கப்படுகிறது’. “ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து” கதையில் கலாசார வேறுபாடுகள் “முழுவிலக்கை”ப் போலவோ, “குதம்பேயின் தந்த”த்தைப் போலவோ வெளிப்படையாக வைக்கப்படவில்லை. நேரான விவரணைகள் இல்லை. என்றலும் இந்த வேறுபாடுகளை வாசகனே உய்த்துணர்ந்து கொள்கிறான். அதைப் போலவே “ஆப்பிரிக்கப் பஞ்சாயத்”தில் பிரதிக்கு எதிரான கூற்று “கொழுத்தாடு பிடிப்பே”னைப் போலவோ, “ஐந்தாவது கதிரை”யைப் போலவோ கதையின் பரப்பில் காணக் கூடுவதில்லை. அது வாசகனின் நுட்பமான உணர்வுக்கு விடப்பட்டிருக்கிறது. இந்த வகையில் முத்துலிங்கம் தனது வெளியால் நிகழ்த்திய புதிய சாதனையாக அமைகிறது “ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து”.

100 மீட்டரை உலக சாதனை நேரத்தில் கடந்த உஸைன் போல்ட்டின் அடுத்த சாதனையை தடகள ரசிகர்களால் நான்கு தினங்களுக்குள் அதே ஸ்டேடியத்தில் பார்க்க முடிந்தது. இம்முறை 200 மீட்டர், நேரம்- 19.30 நொடிகள். இன்னொரு உலக சாதனை. ஒவ்வொரு சாதனையும் ஒரு சவால்தான். அடுத்த முறை முந்தையதை விஞ்ச வேண்டுமே. செய்கிறார்கள் சாதனையாளர்கள். இவர்களைப் பார்க்கவும், படிக்கவும் வாய்த்ததில் சந்தோஷம்.

(வார்த்தை அக்டோபர் இதழில் வெளியான கட்டுரையின் சற்றே விரிவாக்கப்பட்ட வடிவம்)

www.muramanthan.com
mu.ramanathan@gmail.com

Series Navigation

மு இராமனாதன்

மு இராமனாதன்