எனது வாழ்க்கையின் 3 தவறுகள் ( பிசினஸ்- கிரிக்கெட்-மதம்)The Three mistake of my life – By chetan Bhagat

This entry is part [part not set] of 45 in the series 20081009_Issue

கே ஆர் மணி


ஆசிரியருக்கு தற்கொலை செய்துகொள்ளப்போவதாக ஒரு மின்னஞ்சல். சிங்கப்பூரிலிருக்கும் அவர்
அவனைத்தேடி வருகிறார். அவனை மருத்துவமனையில் பார்க்கிறார். அவர்களின் பேச்சு
கதையாய் மலர்கிறது.

ஆகமாதாபாத்தின் பழைய நகரத்தின் குறுக்குசந்துகளில் கதையின் நாயகர்கள் ஓம், கோவிந்த்,
இஸ் மூவரும் வளர்கிறார்கள். கிரிக்கெட்டிற்கான சின்ன கடையை கோவிந்து முயற்சியால்
துவக்குகிறார்கள். இஸ் கிரிக்கெட் ப்ளேயர். ஓம் பூசாரியின் மகன். அந்தக்கடை திறந்து,
மெல்ல மெல்ல வளர்ந்து வருகிற கடையை பெரிசு செய்ய பணம் சேர்த்து புதிய கட்டடத்தில்
பணம் போடுகிறான். வருகிற குஜராத் நிலநடுக்கம் அதை துவம்சம் செய்கிறது. சாம்பலிருந்து
எழுகிற பீனிக்ஸ் பறவைபோல அந்த குஜராத்தின் இளமுனைவர்கள் எழுகிறார்கள். வெறும்
பந்து, மட்டை மட்டுமின்றி இஸ் வருகிற குழந்தைகளுக்கு விளையாடும் டிப்ஸீம் கொடுக்கிறான்.
அப்போது அலி என்கிற 12 வயது மிகத்திறமையான மட்டையாளனை கண்டுபிடிக்கிறான் இஸ். அவன்
திறமையை பட்டை தீட்டி எப்படியாவது இந்திய அணியில் சேர்த்துவிடவேண்டும், தன்னால்
முடியாத கனவை துரத்துகிறான். இந்தியா வந்திருக்கிற ஆஸ்திரேலிய அணியை ஏதோபேசி
சந்திக்கிறார்கள். பிரட்லியிடம் பந்துவீசச்சொல்ல அதை அலி கிழிகிழியென கிழிக்கிறான்.
பிரட் அசந்துபோகிறார். தனது கிரிக்கெட் பள்ளிக்கு வந்து சந்திக்குமாறு சொல்லிப்போகிறார்.
அங்கும் போய் அசத்துகிறான் அலி. ஆனால் பள்ளியில் சேர ஆஸ்திரேலிய உரிமை பெறவேண்டும்
என்கிறது நிர்வாகம். அலி மென்மையாய் மறுத்துவிடுகிறான். இந்த ஜென்மமல்ல, அடுத்த ஜென்மமும்
இந்தியானாகவேயிருப்பேன் என்று ஒரு 12 வயது பையன் மெல்ல சொல்லிவிட்டு எழுந்துவிடுகிறான்.
இடையே கோவிந்திற்கும் இஸ்ஸின் தமக்கைக்கும் வருகிற இளவயதுகாதல் – ரொம்ப அற்புதம்.
ஓமின் மாமா வலதுசாரி கட்சியை சேர்ந்தவர். கர சேவைக்கு ஆள் அனுப்பும் புனிதப்பணிகளில்
ஈடுபடுபவர். அவரது மகன் போன ரயில் கோத்ரா சம்பவத்தில் கொளுத்தப்படுகிறது. அதற்காக
பழிவாங்கும் படலம் தலைவிரித்தாடுகிறது. அலியை தேடிவருகிறார் ஓமின்மாமா, திரிசூலத்துடன்
ரத்தவெறி கேட்கும் கண்களுடன். கோவிந்து, ஓம், ஈஸ் எல்லாரும் சேர்ந்து அவனை
காப்பாற்றுகிறார்கள். இந்த மதவெறிச்சண்டையில் ஓமும், மாமாவும் இறந்துபோகிறார்கள்.
அலியின் கைமூட்டு கிழிந்துபோகிறது. இஸ்ஸிற்கு தனது தமக்கை கோவிந்து உறவு
தெரிந்துபோகிறது. அதற்குப்பின் இஸ்ஸீம், கோவிந்து பேசாமலே இரண்டுவருடம் கழிகிறது.
ஆனாலும் அலியின் கைநிவாரணத்திற்காக இருவரும் பணம் சேர்க்கிறார்கள். தனது பணத்தை
‘தவறான வழியில் சேர்க்கப்பட்டது’ என்ற சுடுசொல்லை தாங்காது கோவிந்து விசம் அருந்துகிறான்.
மறுபடியும் ஆசிரியர் போய் எல்லோரையும், சேர்த்துவைக்க இனிதே முடிகிறது. அலியின் மருத்துவம்
முடிந்து அவன் பந்தை ஆறு ரன்னுக்கு அனுப்புகிறான்.

நாம் புத்தகத்தை கீழே வைக்கிறோம்.

சேத்தன்பகத் புத்தகங்கள் எடுத்தால் கீழே வைக்கமுடியாதவை. அவை எழுத்தாளாரின்
குரலல்ல. இந்த பெருநகரத்தலைமுறையின் குரல். ஜஜடி, கால்செண்டர், வளரத்துடிக்கிற
இளந்தலைமுறையென அவரது பேனா, இல்லை மெளஸ் பட்டையை கிளப்பியிருக்கிறது.
ஜஜம் – அகமாதாபாத்தில் படித்து அயல்நாட்டு வங்கிய்ல் நிறைய பணத்திற்கு குப்பை கொட்டிய
இவரின் மூன்று கதைகளும் இந்தியாவின் ஹாட் சேல்ஸ் லிஸ்டில் முதலிடம் வகிக்கிறது.
எந்த சங்கரரும் பாடாமலே தங்க நாணயங்கள் இவர் பிளாட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு
கொட்டுகிறது – காரணம் இவரது ஒன்நைட் கால் செண்டர் பாலிவுட்டில் படமாகப்போவதாக செய்தி.
ஹ¥ம். வெகுசீக்கிரமாகவாகவே பணக்காரரான இந்திய எழுத்தாளார்களில் ஒருவர் என்கிறார்கள்.

சேத்தனின் கதையை சொல்வது கஸ்டம், அது அதன் ஜூவனை கொன்றுவிடுவதாக நினைக்கிறேன்.
அதில் கதையேயிருக்காது. சேத்தன் பகத் பாட்டி வடை சுட்ட கதையை கூட சுடச்சுட எழுதிக்
கொடுக்கிற எழுத்தாளர். வேகமாக தாவிச்செல்லும் வசனமும், அதில் எப்போதும் தொக்கிநிற்கும்
அங்கதமும், படீரென கிளம்பும் உணர்வுகளான வார்த்தைகளுமே சேத்தனின் பலம். அவரின்
டீரிட்மெண்ட்தான் கதையே.

சேத்தன் பகத் – இந்த பின்நவினத்தலைமுறையின் எழுத்தாளர். பயம்கூட்டாத கதாபாத்திரங்கள்,
கதைசொல்லியின் தூரம், தேவையான திருப்பங்கள், எதையும் அதீதமாக்க விரும்பாத அடங்கிய
குரல், சமகால கட்டத்தின் பின்ணணியில் அதன் அதிர்வுகளை பாத்திரங்களின் மீது மென்மையாய்
ஏற்றுதல், மேலாண்மை குறியீடுகள், இளந்தலைமுறைக்கு நெருக்கமான படிமங்கள், ஹ¥ம்.. – என்னால்
எல்லாவற்றையும் பாராட்டத்தோன்றுகிறது. இப்படி நவினமாய், இளமையாய் தமிழில் இல்லையே
என்று பொறாமையாயிருக்கிறது.

சேத்தனின் மூன்று புத்தகங்கள்

அ) 5 பாயிண்ட் சம் ஓன்
அலோக், ஹரி, ரயான் மூன்று ஐஐடி மாணவர்கள் அங்குள்ள GPA மதிப்பெண்முறையால் நோகடிக்கப்பட்டு,
அதிலிருந்து எப்படி மீறிவருகிறார்கள் என்பதைப்பற்றியான கதை. மதிப்பெண்ணை வைத்துத்தான் உலகமே
இருக்கிறது, அதுவும் ஐஐடிமாணவர்கள் உலகத்தை வெல்ல பிறந்தவர்கள் என்ற பட்டையோடு இருக்கிற
உலகத்தில் இந்தமாணவர்களின் மன உளைச்சல், ஏற்ற இறக்கங்கள் அதில் பரிசோதிக்க்படுகிற சுயம்,
தோல்விகளை எதிர்கொள்கிற தனிமனித உறுதி எல்லாம் கலந்துகட்டி செய்யப்பட்ட கதை இது.
தோல்விகளை எதிர்கொள்ளமுடியாது மாணவர்கள் அதுவும் ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்து
கொள்ளல், பழம்பஞ்சாங்க பாடத்திட்டங்கள், மாணவப்பருவ காதல் – கதையை உயிருள்ளாதாக்குகிறது.

முதல் மாதத்தில் 5 ஆயிரம் காப்பிகள் விற்றுத்தீர்ந்தது.

ஆ) ஓன்நைட் கால் செண்டர்
கால்செண்டர் வாழ்க்கை, அதன் அபத்தங்கள், அதில் கிடைக்கிற சுகமான வாழ்க்கைகாக கொடுக்கிற
விலை, அதற்கு கவலைப்படாது அது கொடுக்கிற பகட்டை மட்டுமே பாராட்டும் சமூக விழுமியங்கள்
என்று சகல தளங்களையும் தொட்டு இயல்பாய் போகும் கதை. முதல் மாதத்தில் 50 ஆயிரம்
காப்பிகள் விற்றது அதிசியமில்லை.

இப்போது பாலிவுட்டின் படமாக வரப்போகிறது.

இ) த திரி மிஸ்டேக் ஆப் மை லைப்
முதல் மாதத்தில் 5 லட்சம் காப்பிகள் விற்றதாய் பட்சிகள் சொல்கின்றன.

ஒரு சாதரண மெட்ரோவாசகனுக்கான தளம், வேகமான சுஜாதாத்தனம், கொஞ்சம் செக்ஸ்,
கொஞ்சம் லேட்டஸ்ட் மசாலா, நல்ல மார்க்கெட்டிங், புத்தக வெளீயிடுக்கென இணையதளம்,
அதற்கென தனி விளம்பரப்படுத்துதல் என கொடிகட்டிப்பறக்கிறார் இந்த வெகுஜன வெற்றி
மசாலா ரைட்டர்.. அதுவும் நல்லாத்தானிருக்கு..

ஹீம்.. தமிழ் சந்தை இதையெல்லாம் எட்டிப்பிடிக்க ரொம்ப நாளாகும் போல..

mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி