மரங்களும் மனிதர்களும் : ழான் ழியோனோவின் “மரத்திற்கு வித்திட்ட மாமனிதன்”

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

பாவண்ணன்


ழான் ழியோனோ ஒரு பிரெஞ்சு எழுத்தாளர். அமெரிக்க இதழான ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனத்திலிருந்து 1953 ஆம் ஆண்டில் அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அப்போது அந்த இதழில் நான் சந்தித்த வியக்கத்தக்க மனிதர் என்னும் தலைப்பில் தொடர்கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருந்தன. பல எழுத்தாளர்கள் அத்தொடரில் எழுதினார்கள். ழான் ழியோனோவும் அத்தொடருக்காக ஒரு கட்டுரையை எழுதித் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. சிறது கால இடைவெளியில் ழான் ழியோனோவும் ஒரு கட்டுரையை எழுதி அனுப்பிவைத்தார். அக்கட்டுரை ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனத்துக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே அவருக்கு ஒரு பாராட்டுக்கடிதம் எழுதினார்கள். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அந்நிறுவனத்திலிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. இம்முறை கடிதம் முழுக்க வசைமழை. கட்டுரையில் சித்தரிக்கப்பட்டிருக்கும் மனிதர் கற்பனையில் உருவாக்கப்பட்ட பாத்திரம் என்ற காரணத்துக்காக அவர் வசைபாடப்பட்டிருந்தார். ழியோனோ அதனால் மனம் சோர்ந்துவிடவில்லை. விரைவிலேயே அது பிரெஞ்சு மொழியில் வெளியாகி அவருக்கு பெரிதும் பாராட்டுகளைத் தேடித் தந்தது. அக்கட்டுரையின் தமிழாக்கம் ஆரோவில் நிறுவனத்தாரால் இப்போது சிறு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. பிரெஞ்சிலிருந்து நேரிடையாக தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் இரா.கிருஷ்ணமூர்த்தி.

ஒரு மனிதனின் செயல்களை தொடர்ச்சியாக நீண்ட நாள்கள் கவனித்துவரும் வாய்ப்பு கிடைத்தால்தான் அவனது இயல்பான பண்புகளின் உண்மையான தனித்தன்மைகளைக் காணமுடியும். என்றுமே நினைவில் நிற்கக்கூடிய மனிதனின் செயல்கள் தன்னலம் எதுவுமின்றி இருக்கும். அவற்றுக்கு அடிப்படையாக ஒப்பிட இயலாத ஒரு பெருந்தன்மை அமைந்திருக்கும். அவை நிச்சயமாக எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கும். மேலும் அவை நம் பார்வைக்குப் புலனாகும்படி தம் தடயங்களைப் பதித்துச் செல்லும். இத்தகையவர்களையே வரலாறு மாமனிதர்கள் என்று அடைமொழியிட்டு அழைத்துப் பெருமைப்படுத்தும். எல்சியார் பு·பியே என்பவரை அப்படிப்பட்ட மாமனிதராக ழான் ழியோனோ தன் கட்டுரையில் புனைந்து காட்டுகிறார்.

ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் கண்ணுக்கெட்டிய தொலைவு பொட்டல்வெளியாக இருக்கக்கூடிய ஒரு பகுதியில் தன்னந்தனியாக நடந்து செல்கிற ஓர் இளைஞனின் நடைப்பயணத்தோடு தொடங்குகிறது இக்கட்டுரை. எந்த இடத்திலும் மரம், மட்டை ஒன்றுகூடக் கிடையாது. அங்கங்கே சின்னச்சின்ன காட்டுச்செடிகள். அவ்வளவுதான். வெகுதொலைவில் பாழடைந்து கிடக்கும் சின்னச்சின்ன கிராமங்கள். இடைவெளி எதுவுமில்லாமல் குளவிக்கூடுகள் போல ஒட்டிக்கிடக்கும் பாழடைந்த வீடுகள். காற்றிலும் மழையிலும் சேதமாகிச் சிதைந்துபோன கூரைகள். மனிதவாடையே அற்றுப் போயிருந்தது. ஒரு வாய் தண்ணீருக்காக தவித்தபடி அந்த இளைஞன் மேலும் அந்தப் பொட்டல்வெளியில் நம்பிக்கையோடு செல்கிறான். நெடுந்தொலைவு நடந்தபிறகு ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த ஒரு நடுவயதுக்காரரைப் பார்க்கிறான். அவர் அவனுக்கு அருந்துவதற்காக தண்ணீர் தருகிறார். அன்றைய இரவை அவருடைய வீட்டில் கழிக்கிறான் இளைஞன். அதிகம் பேசாத அந்தப் பெரியவரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அவன் கவனிக்கிறான். அவரைச்சுற்றி காணப்படும் ஒருவித தூய்மையும் ஒழுங்கும் அவனைக் கவர்கின்றன.

அருகிலிருந்த மேசையின்மீது அவர் ஒரு பையைக் கவிழக்கிறார். அதிலிருந்து ஏராளமான ஓக் மரவிதைகள் குவியலாக கீழே விழுகின்றன. பல நாட்களாக அவர் அந்தப் பையில் அவற்றைச் சேகரித்து வைத்திருக்கிறார். முதலில் குவியிலிலிருந்து நல்ல விதைகளைமட்டும் தேர்ந்தெடுத்து தனிக்குவியலாக்குகிறார். பிறகு அவற்றை பத்துபத்தாக சின்னச்சின்ன குவியலாகப் பிரிக்கிறார். அவற்றைமட்டும் தனியாகப் பொட்டலங்களாகக் கட்டி எடுத்துக்கொள்கிறார். மறுநாள் காலையில் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வெளியேகிளம்பும் முன்னர் விதைகள் அடங்கிய பையை வாளியில் இருந்த தண்ணீரில் அழுத்தி நனைத்து எடுத்துக்கொள்கிறார். கையோடு, ஒன்றரை மீட்டர் நீளமுள்ள- கட்டைவிரல் அளவு பருமனான இரும்புக்கம்பி ஒன்றை கைத்தடிபோல எடுத்துக்கொள்கிறார். காரணம் புரியாத இளைஞன் அவருக்குத் தெரியாமலேயே அவரைப் பின்தொடர்கிறான். இடையில் நேருக்குநேர் பார்க்கிற ஒரு தருணம் வாய்த்தபிறகு சேர்ந்தே மலைச்சரிவில் நடக்கிறார்கள். சரிவில் தான் நினைத்த இடத்தை அடைந்ததும் இரும்புக்கம்பியால் ஒரு குழியைத் தோண்டுகிறார் அவர். பிறகு ஒரு விதையை பையிலிருந்து எடுத்து அக்குழியில் போட்டு மூடுகிறார். இப்படியே செல்கிற இடங்களிலெல்லாம் தன் கைவசமிருந்த ஓக் மரவிதைகளை குழிதோண்டி புதைத்துக்கொண்டே செல்கிறார். ஆச்சரியத்தில் உறைந்துபோன இளைஞன் அந்த இடம் அவருக்குச் சொந்தமானதா என்று கேட்கிறான். இல்லை என்கிறார் பெரியவர். யாருக்குச் சொந்தமானது என்ற கேள்விக்கும் தெரியாது என்று விடையளிக்கிறார். அது கிராமத்தின் பொதுச்சொத்தாக இருக்கலாம், அல்லது அந்நிலத்தின் உரிமையாளர் அதைப்பற்றி அக்கறை எடுத்துக்கொள்ளாமல் இருக்கலாம் என அவர் நினைத்தார். எதையும் தெரிந்துகொள்வது அவருக்கு முக்கியமாக இல்லை. விதைகளை விதைப்பதில்மட்டுமே அவர் கவனமாக இருக்கிறார். மூன்றாண்டுகளாக இப்படி விதைப்பதாகச் சொல்கிறார் அவர். விதைத்த ஒரு லட்சம் வித்துகளில் ஐந்தில் ஒருபங்கு மட்டுமே முளைத்துக் கன்றுகளாகி நிற்கின்றன என்கிறார். இந்த வேலையைத் தொடர்ந்து செய்தால் அந்த வறண்ட மலையை அடர்ந்த காட்டுப்பகுதியாக மாற்றிவிடமுடியும் என்று சொல்கிறார். அந்த உத்வேகமும் நம்பிக்கையும் கனவும் அந்த இளைஞனை ஈர்க்கின்றன. அவரைப்பற்றி அவன் மேலும் சில தகவல்களைத் தெரிந்துகொள்ள விழைகிறான்.

அவருக்குச் சொந்தமாக சமவெளியில் ஒரு பண்ணையே இருக்கிறது, எதிர்பாராத ஒரு தருணத்தில் அவர் தன்னுடைய மகனையும் மனைவியையும் இழந்துவிடுகிறார். அதற்குமேல் அவருக்கு பண்ணையில் இருக்கப் பிடிக்கவில்லை. ஆரவாரமற்ற வாழ்க்கையைத் தேடி தம் ஆடுகளோடும் நாயோடும் தனிமையை நாடி அங்கே குடியேறிவிடுகிறார். மரங்கள் இல்லாத காரணத்தால்தான் அந்தப் பிரதேசம் சீரழிந்துவிட்டது என்பதை அவர் உடனடியாகப் புரிந்துகொள்கிறார். வேறெந்த பொறுப்பும் தனக்கில்லாததால் அச்சீரழிவைத் தடுக்கிற பொறுப்பை தானாகவே எடுத்துக்கொள்கிறார். ஓக் மரவிதைகளை நடுவதைப்போலவே பீச் மரங்களை வளர்ப்பதற்காக வீட்டருகே அதன் நாற்றுகளை நட்டு பாதுகாத்து வருகிறார். தக்க பருவம் வந்ததும் அந்த வேலையையும் தொடங்கவேண்டும் என்று சொல்கிறார். பெரியவரின் கனவுகளைக் கேட்டு மனம் பறிகொடுக்கிற இளைஞன் சில நாட்களுக்குப் பிறகு அவரிடமிருந்து விடைபெறுகிறான். 1914ல் முதலாம் உலகப் போரில் பங்கெடுத்துக்கொள்கிறான். ஐந்தாண்டுக் காலம் போர்வாழ்வை முடித்துக்கொண்டு மீண்டும் அந்தப் பிரதேசத்தைப் பார்க்கும் ஆவலில் தேடிவந்து பார்க்கிறான். அடையாளம் கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு அந்த இடத்தில் பசுமை போர்த்தியிருப்பதைப் பார்க்கிறான். அப்போது பெரியவர் மலைச்சரிவின் வேறொரு புறத்தில் விதைகளை நடும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். அதன்பிறகு கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக அந்த இடத்துக்குச் சென்று அப்பெரியவரைப் பார்த்துவருகிறான் அந்த இளைஞன். ஒவ்வொரு முறையும் சுற்றுப்புறத்தில் ஒரு மாற்றம். திடீரென இப்படி ஒரு காடு முளைத்தது எப்படி என்று தெரியாமல் வனத்துறை அதிகாரிகள் குழம்புகிறார்கள். வற்றிப்போன குளத்தில் நீர் நிறைந்திருக்கத் தொடங்குகிறது. வறண்டு கிடந்த ஓடை சலசலவென ஓடுகிறது. மிகப்பெரிய மாற்றத்தை அந்தப் பெரியவர் அமைதியாகச் செய்துவிடுகிறார். அதைவிட முக்கியம், அந்தப் பெருமைக்கும் தனக்கும் எந்தத் தொடர்புமே இல்லை என்பதுபோல விலகிச்சென்று இன்னும் தன் பணியிலேயே மூழ்கிக்கிடக்கிறார். வறண்டுகிடந்த மலைப்பகுதிகளைத் தேடித்தேடி அவற்றைப் பசுமையாக்கும் வேலையில் இறங்குகிறார். பாழடைந்து கிடந்த வீடுகள் எல்லாம் பண்ணை வீடுகளாக மாறிவிடுகின்றன. எங்கும் மனிதர்கள் ஆனந்தமாக வசிக்கிறார்கள். வாகன வசதிகளும் வந்துவிடுகின்றன. தன் சொந்த உழைப்பால் பாலைவனத்தை சோலையாக்கிய, கல்வியறிவில்லாத அந்தப் பெரியவர் தன் 87வது வயதில் முதியோர் இல்லமொன்றில் இயற்கை எய்திவிடுகிறார்.

எல்சியார் பு·பியேபற்றிய இந்த உத்வேகமூட்டக்கூடிய இந்தச் சித்தரிப்பு ழியோனோவின் கற்பனைப் பாத்திரமென்றாலும், உலகில் இப்படிப்பட்டவர்கள் இல்லாமலில்லை. ஏராளமானவர்கள் இந்த மண்ணில் கருணையே உருவாக இப்படி வாழ்ந்து இயற்கையைக் கட்டிக்காத்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைப்பற்றிய சின்னச்சின்ன அறிமுகக் குறிப்புகள் நூலின் இரண்டாம் பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனைமலைப் பகுதியில் தேக்கு விதைகளை கண்ணில் கண்ட இடங்களில் எல்லாம் நட்டு வளர்த்து ஆளாக்கிய அமெரிக்கரான ஆப்பிள் கீட், ராலேகாவுன் சித்தி கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மக்களே மனமுவந்து தாமாகவே முன்வந்து மரங்களை நட்டு வளர்த்துக் காடாக்கத் தூண்டுகோலாக இருந்த மகராஷ்டிரத்தைச் சேர்ந்த அண்ணா ஹஜாரே, இருபது ஆண்டு காலம் தொடர்ச்சியாக உழைத்து தனக்குச் சொந்தமான முப்பது ஏக்கர் நிலத்தில் ஒரு காட்டை உருவாக்கிக் காட்டிய கேரளத்தைச் சேர்ந்த அப்துல்கரீம், குமரகம் உப்பங்கழி பகுதியில் ஒரு சிறு தோணியின் உதவியோடு, உப்பங்கழி சதுப்பு நிலங்களில் ஏராளமான தாவரங்களை வார்த்த ஒரு மூதாட்டி, கர்நாடகத்தில் பாதைநெடுக முந்நூறுக்கும் மேற்பட்ட ஆலங்கன்றுகளை நட்டு வளர்த்து தினமும் தண்ணீர் ஊற்றி பெரிதாக்கிய திம்மக்கா-சிக்கய்யா தம்பதியினர் நிதிம்பா மலைச்சரிவில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்த சுவாமி வனகண்டி, புதுக்கோட்டை அருகே தரிசு நிலங்களையெல்லாம் காடாக்கிக்காட்டிய கீரனூர் தங்கசாமி என ஏராளமானவரைப்பற்றிய தகவல்கள் அப்பகுதியில் உள்ளன. ஒருபுறம் கற்பனைப்பாத்திரமான பு·பியே. மறுபுறம் உயிரோடு வாழ்ந்து காடுகளின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட உண்மையான மனிதர்கள். அடுத்தடுத்து இவற்றை வாசிக்கும் தருணத்தில் உண்மைக்கும் கற்பனைக்கும் இடையில் உள்ள வித்தியாசம் எவ்வளவு மெல்லிய கோடாலானது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எங்கோ நடக்கிற உண்மைதான் இன்னொருவருக்குக் கற்பனை. இடம் மாறுகிறது. அவ்வளவுதான்.
(மரத்திற்கு வித்திட்ட மாமனிதன் – ழான் ழியானோ. தமிழாக்கம்-இரா.கிருஷ்ணமூர்த்தி. ஆரோவில் வெளியீடு, புதுச்சேரி )


paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்