கவிதை ஒட்டகங்களுடன் நகர்ந்து செல்கின்றது – அரபு இலக்கியங்கள் ஓர் அறிமுகம்

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

எச்.பீர்முஹம்மது


வெப்பத்தை தணிக்க மறுக்கிற சூரியனின் ஒளிக்கீற்றை முன்னோக்கி நகர்த்திக் கொண்டு ஒட்டகங்கள் அதன் போக்கில் செல்கின்றன. திடீரென சூழ்ந்து கொள்ளும் புகை மாதிரி மணல் துகள்கள் ஒட்டகங்களை சூழ்ந்து கொள்கின்றன. அவை கடந்த தூரம் ஆரவாரமற்ற தெருக்களின் கூட்டுத்தொகையாக இருந்தது. அதன் ஒவ்வொரு அடியும் கவிதைக்கான வார்த்தையை வரைந்து விட்டுச் சென்றது. ஒட்டகம் கோதி விட்ட ஒவ்வொரு மணல் கூட்டமும் கடல் அலையை மறு உருவாக்கம் செய்தது.

அரபு இலக்கியத்தின் வேர் என்பது இனக்குழு சமூகத்தின் வாழ்நிலையோடு இணைந்தது. அவர்கள் தினசரி செயல் நிகழ்வுகள், மற்ற இனத்தாருடனான போர் மற்றும் உணவு தேடல் இவற்றுடன் நிகழ்கிறது. அரபு இலக்கியம் சுமார் நான்காம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டு வரை ஹாசிதா என்ற செய்யுள் முறையாக அறியப்படுகிறது.அம்ருல் கைஸ், அன்தாரா, மற்றும் சுகைர் ஆகியோர் இந்த வகைப்பாட்டிற்குள் வரக்கூடியவர்கள். இவர்களின் படைப்புகள் அக்காலகட்டத்து பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையிலோடு இயைந்திருந்தது.ஒரு சூழலில் இவர்கள் அக்காலத்து வரலாற்றாசிரியர்களாக, தொன்மங்களின் சார்பியலாளர்களாக, மொழியில் புதிய சொற்களை உருவாக்கும் வல்லுநர்களாக இருந்தனர். அதன் பிறகு அரபுச்சூழலில் இஸ்லாம் வந்து விடுகிறது. அது குர் ஆன் என்ற புதிய மொழி வடிவத்திற்கு வழி திறந்தது.ஏழாம் நூற்றாண்டு குர் ஆனின் வருகையானது அரபு செய்யுள் வடிவத்திற்கு புதிய வடிவத்தை கொடுத்தது. அதன் நீண்ட வசனங்கள் அரபு கவிதை உருவாக்கத்திற்கான வாசலை தள்ளி விட்டது. அதன் பிறகான உமய்யத் ஆட்சியில் தான் அரபு கவிதை நவ வடிவத்திற்கு திரும்பியது. அல் அஹ்தால் மற்றும் அல் பர்சாக் மற்றும் அபு நிவாஸ் ஆகியோர் அதற்கு உயிர் கொடுத்தார்கள். இவர்களில் அபுநிவாஸ் பரவலாக அறியப்பட்ட உருவமாக இருக்கிறார். அரபு இலக்கியத்திற்கான தீர்க்கமான வடிவத்தை கொணர்ந்தவர். தன்னுடைய கவிதைகளில் இஸ்லாத்தின் அடிப்படையான விதியொழுங்குகளை மீறியவர். குறிப்பாக குடித்தல் , ஓரின சேர்க்கை மற்றும் சுய இன்பம் குறித்து அதிகம் எழுதியவர். இதற்காக அன்றைய கலீபாவான ஹாரூன் அல் ரஷீதால் நாடு கடத்தப்பட்டார் கலீபாவின் மரணத்திற்கு பின்னர் அபு நிவாஸ் ஈராக்கிற்கு திரும்பினார். அடுத்த கலீபாவான அல் அமீன் தன் தந்தையை போல் மரபான அடிப்படையாளராக இல்லாமல் வித்தியாச மனோபாவத்தில் இருந்தார். இவரின் உதவியோடு அபு நிவாஸ் தொடர்ந்துஎழுதினார். இது அவரை அக்காலகட்டத்தின் தரிசியாக மாற்றியது. அன்றைய காலகட்டத்தில் அரபு மொழியானது விஞ்ஞானம் மற்றும் தத்துவ துறைக்கான முன்னோக்கு ஊர்தியாக இருந்தது. கிரேக்க, பஹ்லவி , லத்தீன் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் இருந்து ஏராளமான இலக்கியங்கள் அரபு மொழிக்கு
மொழிமாற்றம் செய்யப்பட்டன. இதன் நீட்சியில் அரபு மொழியானது உலக கலாசாரங்களுடான பரிமாற்ற ஊடகமாக மாறியது. இஸ்லாத்தோடு மட்டுமே குறுக்கப்பட்டு வந்த அரபு மொழி எல்லா திசைகளிலும் வேர் பதிக்க தொடங்கியது. இந்த காலகட்டத்தில் இப்னுல் முஹக்கா முக்கியமானவர். அவர் சமஸ்கிருதத்திலிருந்து புராண கதைகளை அரபு மொழிக்கு மாற்றம் செய்தார். சமஸ்கிருதம் போன்ற இந்திய மொழிகளுக்கும் அரபி போன்ற செமிட்டிக் மொழிகளுக்கும் இடையே அநேக ஒத்த நிலை கூறுகள் உண்டு. இதுவே மொழிபெயர்ப்பிற்கான தூண்டலாக மாறியதென கருதலாம்.

இருபதாம் நூற்றாண்டு முந்தைய காலகட்டத்தில் அரபு கவிதையானது சரியாக பரிணமிக்காத வடிவ ஒழுங்கை கொண்டிருந்தது. உலகின் மொழிகள் எல்லாவற்றிலுமான கவிதைளின் தொடக்கமான ஓலி நயம் மற்றும் சொற்களின் சீரான பயணம், சொற்களை விரித்து செல்லுதல் ஆகிய அம்சங்கள் அரபிக்கவிதையிலும் நிரம்பியிருந்தன. புறாவின் சப்தம் மாதிரியான தொனி கவிதைகளை ஆக்கிரமித்திருந்தது. அது சஜ் என அறியப்பட்டிருந்தது. அல் கரிரி, அல் முத்னபி மற்றும் ஒமர் இப்னு அல் பாரிதா ஆகியோர் இந்த வரைக்கோட்டிற்குள் வந்தார்கள்.அரபு , பார்சி மற்றும் உருது கவிதைகளின் மற்றுமொரு வடிவம் கஸல். இதனை இஸ்லாமின் அனுபூத மரபான சூபிகள் வளர்த்தார்கள். ரூமி, ராபியத்துல் அதவியா, கல்லாஜ் மன்சூர், அபு யஸ்திதுல் அல் பிஸ்தாமி ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். மனம் என்ற சுய பிம்ப நிலையிலிருந்து காதல் என்ற லெளகீக பிம்பத்தோடு ஓர் உரையாடலாக அவர்கள் இதனை மாற்றினர். கஸல் என்ற இந்த வடிவம் இன்று இசைத்துறையில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தி வருகிறது.( தமிழில் காதலர்
தினம் என்ற திரைப்படத்தின் பாடல்கள் இதனை உள்வாங்கி கொண்டு வெளிவந்ததாகும்). அரபு இலக்கியத்தின் ஒளியூட்ட அம்சம் என்பது ஆயிரத்தோர் இரவுகள் கதையாகும். (Thousand and one nights).இது அரபு மற்றும் பாரசீகர்கள் இடையேயான வாணிப உறவுகளின் பிரதிபலிப்பாகும். அநேகமாக உலக மொழிகள் எல்லாவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அரபு இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகார வடிவமாக இது மாறியது. தபரி, இப்னு கல்தூன், இப்னு பதூதா மற்றும் இப்னு அதிர் ஆகியோர் இக்காலகட்டத்து அரபி எழுத்தாளர்கள். இவர்களில் இப்னு கல்தூன் அக்காலகட்டத்து சிறந்த வரலாற்றாசிரியராக இருந்தார்.

அரபு கவிதையானது 13 ஆம் நூற்றாண்டில் பாரசீக மற்றும் துருக்கி இலக்கியங்களின் எழுச்சி காரணமாக பின்னடைய தொடங்கியது. இதன் பிறகு ஆறு நூற்றாண்டுகள் இடைவெளியில் 19 ஆம் நூற்றாண்டில் மீண்டும் எழத் தொடங்கியது. கடல் அலைகளின் நீட்சி மாதிரி நவ செவ்வியல் வடிவத்தை கொண்டதாக பரிணமிக்க தொடங்கியது. இதில் அக்காலகட்டத்து மேற்கத்திய இலக்கிய கோட்பாடுகளின் தாக்கமும் உண்டு. செய்த் அகில், அமீன் ரைஹான், ஜிப்ரான் கலீல் மற்றும் அல் சவ்கி போன்றவர்களின் கவிதைகள் ரொமாண்டிசம், சிம்பாலிசம் போன்றவற்றின் பிரதிபலிப்பாக இருந்தன. மேற்கின் நவீனத்துவ படைப்பாளிகளான வில்லியம் வேர்ஸ்ட் வர்த், ஷெல்லி, எஸ்ரா பவுண்ட், ராபர்ட் லோயல் மற்றும் எலியட் ஆகியோர்களை உள்வாங்கி கொண்ட ஒன்றாக அன்றைய அரபு படைப்பாளிகளின் படைப்புகள் இருந்தன. வெற்று உணர்ச்சிகளை மீறி கவிதைகளில் சுருங்கு தன்மையும், அநாமதேயமும் உருக்கொண்டன.
அமீன் ரைஹான் அரபு கவிதைகளை இக்கட்டத்தில் தாராள,வடிவ ஒழுங்கற்ற முறைக்கு உட்படுத்தினார். லெபனானில் பிறந்த அவர் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து அமெரிக்க அரபு இலக்கிய ஓருங்கிணைவை ஏற்படுத்தினார். முதன் முதலாக ஆங்கிலத்தில் எழுதிய அரபு எழுத்தாளர் இவரே. இதே காலகட்டத்தில் தான் அரபு வெளியில் சிறுகதையும், நாவலும் அறிமுகமானது. இது மேற்கின் சாயலாக இருந்தது. முதல் நாவலாக முஹம்மது ஹ¥சைன் கைகலின் ஷைனப் வெளிவந்தது. அதன் பிறகு முஹம்மது தாஹிரின் அத்ரா தென்சவி வெளிவந்தது. ஆங்கிலத்தில் அமீன் ரைஹான் Book of Khalid என்ற நாவலை வெளியிட்டார்.இவை இரண்டும் அரபுலகில் நாவல் வடிவத்தின் சலனமாக இருந்தன. குடும்பம் என்ற நிறுவனத்தின் அன்றாட அசைவுகள் அதன் செயல் ஒழுங்குகள், அரசியல் மற்றும் சமூக சிக்கல்கள், சுய வாழ்வின் நெருக்கடிகள் இவற்றை கதையம்சமாக கொண்டு நாவலுக்கு நிரல் கோட்டை அவர்கள் வரைந்தார்கள். இரு முறை பாய முடியாத நதியின் சலனமாக அவை தொடர்ச்சியாக பரிணமித்தன. யஹ்யாஹக்கி, சோனல்லா இப்ராஹிம், அப்துல் ரஹ்மான் அல் முனீப், எலியாஸ்கெளரி, நாசர் இப்ராஹிம், காலித் உவைஸ், மஹ்மூத் சுகைர் மற்றும் நகுப் மஹ்பூஸ் ஆகியோர் இருபதாம் நூற்றாண்டு அரபு நாவல், சிறுகதை மரபில் முக்கியமானவர்கள். இவர்களில் அப்துல் ரஹ்மான் அல் முனீப் மற்றும் நகீப் மஹ்பூஸ் ஆகியோர் தன் நாவல்கள் மூலம் மேற்குலகின் கவனத்தை ஈர்த்தார்கள். நகுப் மஹ்பூஸின் மிடாக் குறுக்கு தெரு ( Midaq alley) என்ற நாவல் நோபல் பரிசை அவருக்கு அளித்தது. அரபுலகில் முதன் முதலாக நோபல் பரிசு பெற்றவர் இவரே. கெய்ரோ நகரின் மிடாக் குறுக்கு தெருவின் கற்பனா வெளியில் பயணித்து அதை நெடித்தடுக்கும் கதை வெளியாக அது அமைந்தது. இவரை தொடர்ந்து தான் இலக்கிய வெளியில் மேற்கின் கவனம் அரபுலகின் மீது திரும்பியது.இவரின் மற்றொரு நாவல் சர்க்கரை தெரு. மேலும் அப்துல் ரஹ்மான் அல் முனிப்பின் உப்பு நகரம் (Cities of Salt) நாவல் மிகுந்த கவனம் பெற்ற ஒன்றாகும்.சவூதி பாலைவனத்தின் ஓரு மூலையில் எண்ணெய் கண்டெடுக்கப்பட்ட பிறகான ஒரு பதூயீன் பழங்குடி குடும்பத்தின் இடப்பெயர்வை பற்றிய கதை அது. சவூதியும் அமெரிக்காவும் எண்ணெய் சுரண்டலில் எவ்வாறு கைகோர்த்தன அதன் காலனிய அரசியல் ஆகியவற்றை சக வாழ்வின் சித்தரிப்போடு ஒத்ததிர்வு கொண்ட ஆழமான உணர்ச்சியோடு ஊர்ந்து செல்லும் நாவல் இது. அரச விரோத நாவல் என்று குற்றஞ்சாட்டப்பட்டு சவூதி அரசாங்கத்தினால் இது சிறிது காலம் தடை செய்யப்பட்டது. மேலும் சில அரபு நாடுகள் இதனை தடை செய்தன.

சமகால அரபு கவிஞர்களில் மஹ்மூத் தர்வீஸ், அதோனிஸ், ஜுமானா ஹத்தாத், ஹிசாம் ஹத்தாத், நசிக் அல் மலாய்க்கா, சாதி யூசுப், ஹசன் சக்தான், அப்துல் வஹ்ஹாப் அல் பைத்தி ஆகியோர் முக்கியமானவர்கள்.இவர்களில் மஹ்மூத் தர்வீஸ் முன் வரிசையில் வருகிறார். பாலஸ்தீன் கவிஞரான இவரின் மறதிக்கான நினைவுகள், துரதிஷ்டவசமாக இது சொர்க்கம் மற்றும் ஆதாமின் இரு தோட்டங்கள் ஆகியவை பலராலும் கவனம் பெற்ற தொகுப்புகளாகும். மறதிக்கான நினைவுகள் தொகுப்பில் கடந்து செல்லும் வார்த்தைகளுக்கு இடையே பயணிப்பவர்கள் என்ற கவிதை புலம் பெயரும் மனிதர்களின் உணர்வு நிலையை வெளிப்படுத்துவதாகும்.” ஆகவே கடந்து செல்லும் நிலம்,
கடந்து செல்லும் கடல், அதன் கரை
கோதுமை, உப்பு, நம் காயங்கள்
வார்த்தை நம்மை கடந்து செல்கிறது.”
பாலஸ்தீனியராக இருந்து கொண்டு புலம் பெயர்தலுக்கு உள்ளான இவரின் வாழ்நிலை நெருக்கடிகள் அவருக்கு இம்மாதிரியான படிம உணர்வை வெளிப்படுத்துகிறது. இவரை தொடர்ந்து அதோனிஸ் அரங்கில் வருகிறார். சிரியாவில் பிறந்த அதோனிஸ் நெருக்கடிகள் காரணமாக லெபனானுக்கு புலம் பெயர்ந்தவர். வாழ்வின் நெருக்கடிகள், புலம் பெயர் வாழ்வால் உருவாகும் மன இடைவெளி இவற்றை தன் கவிதைகளில் வெளிப்படுத்தியவர். இரவு மற்றும் பகலின் பக்கங்கள் , கடல் மட்டுமே உறங்க முடிந்திருந்தால், ரோஜாவுக்கும் சாம்பலுக்கும் இடையேயான காலம் ஆகியவை முக்கிய தொகுப்புகள். அடுத்த நிலையில் ஈராக்கிய கவிஞரான நாசிக் அல் மலாய்க்கா முக்கியமானவர். ஈராக்கின் இலக்கிய பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்த மலாய்க்காவின் கவிதை வெளி தனித்துவமானது.
இவரின் “கடல் தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் போது” தொகுப்பானது அரபு மற்றும் ஐரோப்பா முழுவதான கவனம் குறித்தது. வாழ்க்கையின் இயல்பான அந்நியப்பாடுகள் அது உருவாக்கும் தவிப்புகள் ஆகியவற்றை இவரது கவிதைகள் மொழிப்படுத்தின. சிறுகதை மற்றும் நாவல்களில் பாலஸ்தீனிய நாவலாசிரியரான எலியாஸ் கெளரி தனக்கான தனித்துவத்தை கொண்டிருக்கிறார்.அவரின் முதல் நாவல் வட்டத்தின் உறவுகள் மீது என்ற பெயரில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்தது. இலக்கிய படைப்பு என்பதை மனித ஆன்மாவின் பிரதிபலிப்பாகவும் , வாழ்க்கை முறையின் தோற்றமாகவும் காண்கிறார். படைப்பாளி ஒரு விதத்தில் சமூகத்தின் அலகாக இருக்கிறான். அது அவனின் வாழ்க்கை முறையியலும் கூட. பின் காலனிய சிந்தனையாளரான எட்வர்ட் செய்த்தின் நெருங்கிய நண்பராகவும் எலியாஸ் கெளரி இருந்தார். நடப்பு அரபு இலக்கியத்தின் தோற்ற பாவனை மற்றும் வெளிச்ச தெளிப்பாக எலியாஸ் கெளரி இருக்கிறார்.

அரபு இலக்கியத்தின் மற்றொரு பங்களிப்பு நாடகமாகும். பல்வேறு நாடகங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான நிலைபாட்டை காட்சிப்படுத்துபவை. மனிதனின் எல்லாவித நெருக்கடிகளும் அதிலுண்டு. இவர்களில் எகிப்திய நாடகாசிரியரான லெனின் எல் ரெம்லே முக்கியமானவர்.அகஸ்தோபோவால் மாற்று அரங்கினை முன் வைப்பதற்கு முன்பே தன்னுடைய நாட்டில் அதனை செயல்படுத்தி காட்டியவர். இவரின் “அவர்கள் கழுதையை சுடுகிறார்கள்” “எல்லாம் நல்லது என்று நம்புவோம்”, “ஆதாமும் ஏவாளும்” “நமக்கு ஒரு சித்திரம் தேவை” போன்ற நாடகங்கள் பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த அதிர்வை ஏற்படுத்தியவை. சில நேரங்களில் எகிப்திய அரசாங்கம் இவரின் நாடகங்களை தடை செய்திருக்கிறது. மார்க்சியத்தின் மீது தாக்கமுற்ற இவர் தன் பெயரோடு லெனின் என்ற பகுதியை சேர்த்து கொண்டார். தாராளமயமாக்கல் எகிப்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பல்வேறு தருணங்களில் காட்சிப்படுத்தினார். அரபு கலாசாரம் எவ்வாறு அறிவு நிலை தேக்கமாக இருக்கிறது என்பதை திரை விலகல் காட்சிப்படுத்தியது. சராசரி அரபு மனிதன் இழந்து விட்ட ஒன்றை அடைவது எப்படி என்பதை வெளிப்படுத்தியும் காட்சிகள் இருந்தன. இவருடைய நாடகங்களில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

அரபு இலக்கியத்தை பொறுத்தவரை அதன் வரை கோடுகள் மிகவும் தெளிவானவை. அதிர்வுகள் நிரம்பியவை. மனித வாழ்வின் எல்லாவித சலனங்களும் அதிலுண்டு. சூபியின் ஆழ்மன தேடல் மற்றும் உள்முக போராட்டம் , சக மனிதன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவனின் இடப்பெயர்வு ஆகிய எல்லா புள்ளிகளாலும் அதன் கோடுகள் வரையப்பட்டிருக்கின்றன. ஹமதானி தொடங்கி நகுப் மஹ்பூஸ் மற்றும் எதிப் அத்னான் வரைக்கும் அது பரிணமித்து இருக்கிறது. இஸ்லாத்துக்கு முந்தைய அரேபிய பழங்குடி மக்களின் வாழ்க்கை சித்திரமாக தொடங்கிய அரபு இலக்கிய வெளி நேர்கோட்டில் நகர்ந்து இன்னொரு உலகை நோக்கி நெறிபடுகிறது. இன்று 100 க்கும் மேற்பட்ட நாவல்கள் , கவிதை தொகுப்புகள், நாடகங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பின் மூலம் ஐரோப்பாவின் மிகுந்த கவனத்துக்கும் அரபு இலக்கியம் உட்பட்டிருக்கிறது. பாலைவனத்தின் ஒரு வழித்தடத்தில் ஒட்டகங்கள் அணிவகுத்து செல்லும் போது வார்த்தைகள் மணல் வெளியிலிருந்து அதன் வயிற்றின் மீது படர்ந்து செறிகின்றன.


peer8@rediffmail.com

Series Navigation

எச்.பீர்முஹம்மது

எச்.பீர்முஹம்மது