கவிதை எழுதுவதற்கு லைசென்ஸ்

This entry is part [part not set] of 35 in the series 20080227_Issue

அ.முத்துலிங்கம்


பில் பிரைசன் என்ற பிரபல எழுத்தாளர் சமீபத்தில் கனடாவுக்கு வந்திருந்தபோது அவரிடம் ‘உங்களுக்கு அதிக பயம் தரக்கூடியது என்ன?’ என்று கேட்டார்கள். அவர் கண்வெட்டும் நேரம்கூட எடுக்காமல் ‘வெற்றுப் பேப்பர்’ என்று பதில் கூறினார். ஓர் எழுத்தாளருக்கு வெள்ளைத் தாள்தான் எதிரி. எங்கே ஒரு தாளைக் கண்டாலும் அவர் அதை நிரப்பவேண்டும். கல்லைக் கண்ட சிற்பி செதுக்குவதுபோல, இயற்கை காட்சியை கண்ட ஓவியர் வரைவதுபோல, எழுத்தாளர் பேப்பரைக் கண்டபோதெல்லாம் அதில் ஏதாவது எழுதவேண்டும். அது நிரம்பாதவரைக்கும் அவர் நிம்மதி அடைவதில்லை.
எழுத்தாளருக்கு எண்ணப் பிரவாகம் எடுக்கும் தருணங்களும் அபூர்வமாக ஏற்படுவது உண்டு. அப்படியான சமயங்களில் அவருக்கு அவசரத்துக்கு எழுதுவதற்கு பேப்பர் கிடைக்காது. உடனேயே எழுதிவைக்காவிட்டால் பொங்கிவரும் எண்ணக் கோர்வை மறைந்து விடும் அபாயம் இருப்பதால் எழுத்தாளர் அப்போதைக்கு கையில் என்ன அகப்படுகிறதோ அதில் பதிவுசெய்து வைத்துவிடுவார். ஹரி பொட்டர் நாவல்கள் மூலம் 100 கோடி டொலர்கள் சம்பாதித்து உலக சாதனை நிகழ்த்திய நாவலாசிரியை ஆர்.கே. ரோலிங் தன்னுடைய நாவலின் முதல் வசனத்தை லண்டன் உணவகம் ஒன்றில் கைதுடைக்கும் பேப்பரின் பின் பக்கத்தில் எழுதிப்பார்த்தார் என்பது இன்று உலகறிந்த விசயம்.
டொன்லிலோ என்ற நாவலாசிரியர் ஒருநாள் சுப்பர்மார்க்கட்டில் சாமான்கள் வாங்கிக்கொண்டு திரும்பும்போது எண்ணப் பிரவாகம் எழும்பி அவரை தாக்கியது. அவருக்கு அதை உடனுக்குடன் எழுதிவைப்பதற்கு ஒன்றுமே அகப்படவில்லை. சாமான்களைக் காவும் பேப்பர் பையின் பின் புறத்தில் எழுதிவைத்தார். அந்தப் பேப்பர் பையை இன்றும் அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கிறார்கள்.

புலம் பெயர்ந்து வாழத் தொடங்கிய எல்லோருக்கும் ஏற்படுவதுபோல எனக்கும் எழுதும் ஆசை அதிகரித்தது. வெள்ளை பேப்பரை எங்கே கண்டாலும் அதை நிரப்பினேன். புலம் பெயர்ந்தவர்கள் ஏற்பாடு செய்யும் சந்திப்புகளிலோ, அல்லது கூட்டங்களிலோ அகப்படும்போது நீங்கள் புலம்பெயர்ந்த எழுத்தாளரா என்று ஒருவர் கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. எழுத்தாளர் என்று சொல்வதற்கு எனக்கு கூச்சம். ‘எழுத்து முயற்சியில் இருப்பவன்’ என்பது பொருத்தமாக இருக்கும். அப்படியிருக்க புலம்பெயர் என்ற அடைமொழி இன்னும் கூடிய அசௌகரியத்தை ஏற்படுத்தியது. இலக்கியத்தை வகைமைப் படுத்துவதை ஓர் எழுத்தாளரும் விரும்புவதில்லை. வியாதிகளுக்கு பெயர் சூட்டுவதுபோல பத்திரிகைக்காரர்களும், பதிப்பாளர்களும் செய்யும் வேலை என்று பலர் இதை ஒதுக்கிவிடுவார்கள்.
2003ம் ஆண்டு மே மாதம் என்று எனக்கு நினைவிருக்கிறது. புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்கள் எழுத்தைப்பற்றியும் நான் சுராவுடன் பேசியபோது இதே கேள்வியை எழுப்பினேன். புலம் பெயர் இலக்கியம் என்று எதைச் சொல்கிறார்கள் என்பதுதான் வினா. சுரா, ‘இதையெல்லாம் கவனிக்கக்கூடாது. எழுத்தாளருடைய வேலை எழுதுவது’ என்று கூறி அவர் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிகளைப் பற்றி பேசினார்.
– புலம் பெயர முன்னரோ, புலம் பெயர்ந்த பின்னரோ நீங்கள் ஓர் எழுத்தாளர்; ஒரு தச்சுவேலைக்காரர் தச்சுவேலை செய்வது போல, உங்கள் வேலை எழுதுவது. எழுத எழுதத்தான் உங்கள் எழுத்தின் தரம் உயரும்.
– அங்கு ஒரு சிறுகதை இங்கு ஒரு கட்டுரை என்று எழுதக்கூடாது. சங்கீதம் பயிலும் மாணவி நாளும் சாதகம் செய்வதுபோல நீங்களும் தினம் கிரமம் தவறாமல் எழுதவேண்டும்.
-எழுதுவது என்பது உங்களுக்கு மட்டும்தான், உங்கள் கண்களுக்கு, அச்சுக்குக்கு அல்ல. அப்போதுதான் அது சுதந்திரமாக இறக்கை விரித்து பறக்கும்.

சுரா சொன்னதில் எனக்கு முழுச்சம்மதம், ஆனால் ஒருவர் கால்சட்டை போடவேண்டுமென்றால் கால்சட்டைக்குள் ஒரு காலை மாத்திரம் நுழைத்தால் போதாது; இரண்டாவது காலையும் நுழைக்கவேண்டும். எழுதி எழுதி வைத்து என்ன பிரயோசனம். அச்சுக்கு அனுப்பாத எழுத்து முழுமை பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று எனக்கு தோன்றியது.
நான் இப்படி புலம் பெயர்ந்து எழுதும் முயற்சி பற்றியும், அதைப் பதிப்பிப்பது பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் அமெரிக்காவின் அன்டி ரூனி என்பவர் வேறு ஓர் அடிப்படையான பிரச்சினையை கிளப்பினார். அவரும் ஓர் எழுத்தாளர், அத்தோடு நல்ல பேச்சாளரும்கூட. அவர் சொல்கிறார் கவிதை எழுதுவதற்கு லைசென்ஸ் தேவை என்ற சட்டம் கொண்டுவரவேண்டும் என்று. எனக்கும் அது சரி என்றே பட்டது. அவர் சொன்னது ஏறத்தாழ இதுதான்:
உலகத்துக்கு கவிஞர்களிலும் பார்க்க தண்ணீர்க் குழாய் வேலைக்காரர்களும், மின்சாரப் பணியாளர்களும், மரவேலை செய்பவர்களும் முக்கியம். கவிஞர்கள்கூடத் தேவைதான். ஆனால் மோசமான தண்ணீர்க் குழாய் வேலைக்காரர்களிலும் பார்க்க, மோசமான மின்சாரப் பணியாளர்களிலும் பார்க்க, மோசமான மரவேலைக்காரர்களிலும் பார்க்க மோசமான கவிஞர்கள் அதிகமாக காணப்படுகிறார்கள். மற்ற பணியாளர்களுக்கு உரிமம் கொடுப்பதுபோல கவிஞர்களுக்கும் உரிமம் கொடுத்தால்தான் இந்தப் பிரச்சினை தீரும்.
தண்ணீர்க் குழாய் பழுதென்றால் அல்லது மின்சாரத் தடங்கல் என்றால் அந்த அந்தப் பணியாளர்களை அழைத்து திருத்த வேலைகளை செய்விக்கிறோம். அவர்களும் வந்த வேலையை முடித்து மணித்தியாலத்துக்கு 60, 70 டொலர் என்று பணம் பெற்றுப் போகிறார்கள். அது மாதிரியே கவிஞர்களும் தாங்கள் கவிதை படைக்க எடுத்த நேரத்தை கணக்கிலெடுத்து இத்தனை மணித்தியாலத்துக்கு இவ்வளவு என்று விலை பேசி விற்கலாம். கவிஞர்கள் மாத்திரமல்ல மற்றவர்களும் உரிமம் பெறவேண்டும். நாவல், கட்டுரை, சிறுகதை, நாடகம், சினிமா வசனம் என்று எல்லா வகையான எழுத்து வேலைக்காரர்களுக்கும் இது பொருந்தும். அல்லது கனடிய ஆங்கிலப் பத்திரிகைகள் செய்வதுபோல வார்த்தைக்கு இவ்வளவு என்று கணக்கு பார்த்து சன்மானம் வழங்கலாம். ஒரு சிறுகதை எழுத்தாளருக்கு இது எத்தனை பெரிய வசதி. 1000 வார்த்தைகளில் ஒரு சிறுகதை எழுதினால் அதை 4000 டொலருக்கு விற்கலாம். அப்படி ஒரு சந்தர்ப்பம் புலம் பெயர் சூழலில் வாய்த்தால் நீண்ட தலைப்புகளுடன் கொழுத்த சிறுகதைகள் எழுதி பணம் சம்பாதித்துவிடலாம்.
கட்டுரை, கவிதை, சிறுகதைகளுக்கு சன்மானம் கொடுக்கும் பழக்கம் இன்னும் புலம் பெயர் தமிழ் சூழலில் உண்டாகவில்லை. சிறுபத்திரிகைகளை விடுவோம்; வணிகப் பத்திரிகைகளாவது அதைச் செய்யலாம். அவற்றை பிரசுரிப்பவர்களும் ஏதோ பெரும் உபகாரம் செய்வதாகவே நினைக்கிறார்கள். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் வாரத்துக்கு நாலு கட்டுரை, இரண்டு சிறுகதை என்று எழுதுவார். ஏழாவது நாளில் ஏன் எழுதுவதில்லை என்றால் அன்று அவருக்கு ஓய்வு. தட்டச்சு யந்திரத்திலோ, கணினி என்ற ஒரு பொருளிலோ நம்பிக்கை இல்லாதவர். கோடு அடிக்காத வெள்ளைத் தாளில் பெரிய பெரிய எழுத்துக்களில் எழுதுவதால் நாலு பக்க கட்டுரை இருபது பக்கத்தை தாண்டிவிடும். ஒருநாள் வழக்கம்போல கட்டுரை எழுதி வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அவசரமாக எடுத்துச் சென்றார். பத்திரிகை அச்சுக்கு போவதற்கு இன்னும் சில மணி நேரங்களே இருந்தன. பத்திரிகாசிரியர் சொன்னார் ‘இந்தக் கட்டுரையை போட்டால் இரண்டு விளம்பரங்களை நிறுத்தவேண்டி வரும். எனக்கு 150 டொலர் நட்டமாகும். நீங்கள் அதைத் தந்தால் இந்தக் கட்டுரையை போடலாம்.’
புலம் பெயர்ந்த எழுத்தாளருடைய நிலைமை இதுதான். ஒரு பத்திரிகை தாளுக்கு, மையுக்கு, அச்சடிப்பதற்கு, ஓவியருக்கு என்று செலவு செய்கிறது. அச்சடித்த காகிதங்களை ஒழுங்காக அடுக்கி, ஒட்டி புத்தகமாக்குபவருக்கும் சம்பளம் கொடுக்கிறது. ஆனால் முன் அட்டைக்கும், பின் அட்டைக்கும் இடையில் இருக்கும் அத்தனை விசயங்களையும் எழுதிய எழுத்தாளர்களுக்கு சன்மானம் கொடுப்பதில்லை. அவர்கள் இலவசமாகவே எழுதவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
சில வேளைகளில் சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் மனதை சந்தோசப்படுத்தும் காரியங்களும் நடப்பதுண்டு. யாராவது கட்டுரை கேட்பார்கள், அல்லது சிறுகதை வேண்டும் என்பார்கள். ஆனால் மலருக்கு எழுதவேண்டும் என்று எவராவது கேட்டால் நடுக்கம் பிடித்துவிடும். பழைய மாணவர் சங்க பாடசாலை மலரில் என்ன எழுதுவது. அல்லது அகில உலகத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு மலரில் என்ன எழுதுவது. ஐம்பது வருடமாக வளர்த்த தமிழை அதற்குமேல் வளர்ப்பது எப்படி என்பதுபற்றி கட்டுரை வரையவேண்டும்.
ஒரு நாள் புலம் பெயர்ந்த எழுத்தாளர் அமைப்பு ஒன்றின் மலருக்கு எழுதும்படி எனக்கு வேண்டுகோள் வந்தது. ஒரு மாத காலம் அவகாசம் தந்திருந்தார்கள். மலரில் யார் யார், என்ன என்ன தலைப்புகளில் எழுதுகிறார்கள், நீங்கள் இப்படி எழுதலாம் என்ற அறிவுரை வேறு கொடுக்கப்பட்டிருந்தது. இவர்கள் உண்மையில் உபகாரம் செய்வதாகவே நினைக்கிறார்கள். அந்த மலரில் எழுதுவதற்கு கிடைத்த பெரும் பேறை சரியான முறையில் நான் பயன்படுத்திக் கொள்வேன் என்றும் எதிர்பார்க்கிறார்கள். ஆகவே ‘நன்றி’ என்ற வார்த்தை வரும் என்று அவர்கள் நினைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதையெல்லாம் மீறி அவர்களுடைய நிபந்தனை என்னை திகைக்க வைத்தது. புலம் பெயர் இலக்கியத்தை செறிவூட்டும் வகையில் என்னுடைய கட்டுரை அமையவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
தமிழில் புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் இருப்பதுபோல மலையாளத்திலும், பஞ்சாபியிலும், உருதுவிலும், வங்காளத்திலும், சிங்களத்திலும் இருக்கிறார்கள். இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால் ஆங்கிலத்திலும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் இருப்பதுதான். சல்மான் ருஷ்டி இந்தியாவில் பிறந்து, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வசித்து, இன்று இங்கிலாந்தில் குடியேறியவர். அவருடைய புகழ்பெற்ற இரு நாவல்கள் பாகிஸ்தானையும் இந்தியாவையும் பின்னணியாகக் கொண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. அவை புலம்பெயர் இலக்கியம் என்று அறியப்படுகின்றன. அருந்ததிராய் இந்தியாவில் பிறந்து இந்தியாவிலேயே வாழும் எழுத்தாளர். இவருடைய புக்கர் பரிசு பெற்ற நாவல் இந்திய பின்னணியில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. ஆனால் அவர் இந்தியாவில் வசிப்பதால் அது புலம் பெயர் இலக்கியம் அல்ல. அவர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்திருந்தால் அது புலம்பெயர் இலக்கியம் ஆகியிருக்கும்.
இது இணைய யுகம். நூற்றுக்கணக்கான தமிழ் வலைத்தளங்கள் இன்று இயங்குகின்றன. புலம் பெயர்ந்தவர்களும், சொந்த நாட்டைவிட்டு வெளியேறாதவர்களும் தங்கள் படைப்புகளை இணையத்தில் ஏற்றுகிறார்கள். அவர்கள் படைப்புகள் பக்கத்து பக்கத்தில் வெளியாகின்றன. இவை படிப்பதற்கு உலகத்தின் அத்தனை நாடுகளிலும் கிடைக்கின்றன. புலம் பெயர்ந்து வாழும் ஒருவருக்கும் சொந்த நாட்டில் இருந்து எழுதும் ஒருவருக்கும் அப்படி என்ன வித்தியாசம்.
காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தன் பிறந்த நாடான கொலம்பியா நாட்டைவிட்டு புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் ஐந்து வருடங்கள் வாழ்ந்தபின் மறுபடியும் தன் சொந்த நாட்டுக்கு திரும்பினார். தன்னுடைய ஐரோப்பிய வாழ்க்கை பின்னணியில் அவர் சில படைப்புகளை வெளியிட்டார். ஆனால் ஒருவரும் அவற்றை புலம்பெயர்ந்த படைப்புகள் என்று சொல்வதில்லை. அவருடைய பிறந்தநாட்டைப் பற்றிய ஏக்கமோ, கவலையோ, கலாச்சார பிரதிபலிப்போ அங்கே இல்லை. அவையெல்லாம் ஒருவகையில் பயண இலக்கியம் போலத்தான்.
விக்கிரம் சேத் இந்தியாவில் பிறந்து ஆங்கிலத்தில் எழுதுகிறார். ரோஹின்ரன் மிஸ்ட்ரி இந்தியாவில் பிறந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து ஆங்கில மொழியில் படைக்கும் புகழ் பெற்ற எழுத்தாளர். கனடாவின் அதி உயர் இலக்கிய பரிசுகளை வென்றவர். அவரை புலம்பெயர்ந்த எழுத்தாளர் என்று கூறுகிறார்கள். விக்கிரம் சேத்துடைய எழுத்தும் ரோகின்ரன் மிஸ்ட்ரியுடைய எழுத்தும் ஒரே மாதிரி இருக்கிறது. விக்கிரம் சேத்தின் புகழுக்கும் குறைவில்லை. இந்தியப் பின்னணியில் எழுதப்பட்ட அவருடைய Suitable Boy நாவலுக்கு வேறு யாரும் நினைத்துக்கூடப் பார்த்திராத அளவு இரண்டு லட்சம் பவுண் முன்பணம் கிடைத்தது. ஆனால் ஒருவர் இந்திய எழுத்தாளர் இன்னொருவர் புலம் பெயர்ந்த எழுத்தாளர்.
புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களில் நேர்மையானவர் ஷ்யாம் செல்வதுரை என்று சொல்லலாம். இவர் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் ஆங்கில எழுத்தாளர். பத்திரிகையாளர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது ஷ்யாம் செல்வதுரை தான் படைப்பது ‘இலங்கை பின்னணியில் எழுதும் கனடிய இலக்கியம்’ என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர்கள், அவர்கள் பிறந்த நாட்டில் வாழ்ந்தாலும், புகுந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஆங்கில இலக்கியத்துக்கே செழுமை சேர்க்கிறார்கள். பிறந்த நாட்டு இலக்கியத்துக்கு அவர்களால் ஒரு பங்களிப்பும் இல்லை.
ஐஸக் பஸிவிஸ் சிங்கர் என்பவர் போலந்து யூத எழுத்தாளர். அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பிறகும் அவர் தொடர்ந்து யிட்டிஷ் மொழியில் எழுதினார். ஒரு முறை அவருடைய சிறுகதை ஒன்றை நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஸோல் பெல்லோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவருடைய புகழ் திடீரென்று பரவியது. அதன் பிறகு ஐஸக் பஸிவிஸ் சிங்கர் ஆங்கிலத்தில் படைக்கத் தொடங்கினார். யிட்டிஷ் இலக்கியத்தின் இழப்பு ஆங்கில இலக்கியத்துக்கு வரவாக அமைந்தது.
ங்கூகி வாதியோங்கோ என்பவர் ஆங்கிலத்தில் எழுதும் கென்யா நாட்டு எழுத்தாளர். இவருடைய பிரசித்தி பெற்ற இரண்டு நாவல்களான Weep Not Child, The River Between ஆகியவை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டவை. இன்று அமெரிக்காவில் வாழும் இவர், ஆங்கிலத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டு தன் சொந்த மொழியான கிகியூவில் எழுதுகிறார். இவர் சொல்கிறார் ‘ அடிமைப்படுத்திய ஓர் இனத்தின் மொழியில் நான் எழுதி எப்படி என்னை விடுவிக்கமுடியும்? என் மொழியில்தான் நான் எழுதவேண்டும்.’ ஆப்பிரிக்க இலக்கியத்தை வளர்க்கவேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான வாசகர்களை சம்பாதித்த ஓர் எழுத்தாளர் ஆங்கில மொழியை துறந்து தன் சொந்த மொழிக்கு மாறியது இலக்கிய சரித்திரத்தில் புதுமையான ஒன்று.
புலம் பெயர்ந்து ஆங்கிலத்தில் எழுதும் அகில் சர்மாவிடம் நான் சில வருடங்களுக்கு முன்னர் இந்தக் கேள்வியைக் கேட்டேன். ‘எட்டு வருடங்களை இந்தியாவிலும் 26 வருடங்களை அமெரிக்காவிலும் நீங்கள் கழித்திருக்கிறீர்கள். ஆனாலும் நீங்கள் எழுதுவது எல்லாம் இந்தியாவில் இருக்கும் ஓர் இந்தியரைப் பற்றி அல்லது அமெரிக்காவில் வாழும் ஓர் இந்தியரைப்பற்றி. அது ஏன்?’ அவருடைய பதில் இப்படி இருந்தது.
‘கா·வ்கா Metamorphosis என்று ஒரு நாவல் எழுதினார். அதிலே ஜேர்மன் கதாபாத்திரங்கள் எத்தனை, சீனக் கதாபாத்திரங்கள் எத்தனை, இந்தியக் கதாபாத்திரங்கள் எத்தனை என்று ஒருவரும் எண்ணிப் பார்ப்பதில்லை. அந்தக் கதை உலகம் எல்லாவற்றுக்கும் பொதுவானதாக இருந்தது. அதுதான் முக்கியம். எழுதுவதை மிகத் திறமாகச் செய்யவேண்டும். உலகத்து அத்தனை மக்களும் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் காலத்தால் மாறாததாகவும் இருக்கவேண்டும். அதுவே முக்கியம். அதிலே ஜேர்மனியரும் அமெரிக்கரும் வருவதால் அது முக்கியமானதாகவும் இந்தியர் வருவதால் முக்கியத்துவம் குறைந்தும் காணப்படாது. நன்றாக எழுதுவதுதான் குறிக்கோள். யாராவது ஏதாவது பெயர் சூட்ட விரும்பினால் அது அவர்கள் விருப்பம்.’ அகில் சர்மா உண்மையில் என்னுடைய கேள்விக்கு பதில் கூறவில்லை. பிறந்த நாட்டைவிட்டு அவர் எவ்வளவு தூரம் போனாலும் அவரால் தன் சொந்த நாட்டையோ, மக்களையோ மறக்கமுடியவில்லை என்பதுதான் நிசம்.
எனக்கென்னவோ புலம் பெயர் இலக்கியம் என்றால் ஒருவர் புலம் பெயர்ந்து இருந்தால் மட்டும் போதாது. அவர் தன் சொந்த மொழியில் எழுதவேண்டும். புலம் பெயர் சூழலால் அவர் மொழியிலும், சிந்தனையிலும் மாற்றம் இருக்கவேண்டும். இலங்கையில் வாழ்ந்து தமிழில் எழுதிக்கொண்டிருந்த ஒருவரை கனடாவுக்கு அழைத்து வந்து அவரை ஓர் அறையில் பூட்டி வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு வருட முடிவில் அவர் ஒரு நாவல் எழுதி முடிக்கிறார். உடனே அது புலம் பெயர்ந்த இலக்கியம் ஆகிவிடுமா? அவர் இலங்கையில் இருந்தாலும் அதே நாவலைத்தான் எழுதியிருப்பார். அதேபோல இன்னொருவர் கனடாவில் 40 வருடங்கள் வாழ்ந்து கனடிய பின்னணியில் ஒரு தமிழ் நாவல் எழுதுகிறார். அவருடைய பிறந்த நாட்டைப் பற்றிய பிரக்ஞையோ, இழப்போ, ஏக்கமோ, பிரதிபலிப்போ அதில் இல்லை. பிறந்த நாட்டு வாழ்வு முறைகூட அவருக்கு அந்நியமானது. அவருடைய நாவலை புலம்பெயர்ந்த இலக்கியம் என்று அடையாளப்படுத்த முடியுமா?
என் நண்பர் ஒருவர் சமீபத்தில் தன் இலங்கை கதையை சொன்னார். அவர் அங்கே வாழ்ந்த காலத்தில் பணி நிமித்தமாக பல இடங்களுக்கு அலைய வேண்டியிருந்தது. வீடு திரும்ப சிலவேளைகளில் இரவு பன்னிரெண்டு, ஒரு மணியாகிவிடும். அவருடைய அம்மா அவருக்காக பொறுமையாக கண்விழித்துக் காத்திருப்பார். அவர் வந்து கதவை தட்டியதும் அதைத் திறந்து, அவர் உள்ளே நுழைந்ததும் அமரவைத்து, உணவு பரிமாறுவார். அவர் சாப்பிட்டு முடித்தபின்னர் அந்த தாயார் தனக்குத்தானே பரிமாறி தனிய இருந்து சாப்பிட்டு கழுவி வைத்துவிட்டு படுக்கைக்கு போவார். தாயாரிடம் அவர் ஒரு வார்த்தை பேசியதில்லை. இப்பொழுது அவருடைய கனடா வீட்டு கதவுக்கு நாலு சாவி உண்டு. ஒன்று அவரிடம், ஒன்று மனைவியிடம், ஒன்று மகனிடம், ஒன்று மகளிடம். அவர்கள் வேண்டிய நேரங்களில் வருவார்கள்; போவார்கள். ஒருவருக்கொருவர் காத்திருப்பதில்லை. நண்பர் நேரம் கழித்து வரும் வேளைகளில் மனைவி தூங்கப் போய்விடுவார். இவர் தானே கதவை திறந்து வந்து தானே சாப்பாட்டை பரிமாறி சாப்பிட்டுவிட்டு மீதியை குளிர் பெட்டியில் வைத்துமூடிவிட்டு தூங்கப்போவார். அவருடைய தாய் சமீபத்தில் இலங்கையில் இறந்து போனபோது அவர் இதைச் சொன்னார். ‘ஒரு நாளாவது வீட்டு கதவுக்கு இன்னொரு திறப்பு செய்யலாம் என்பதை நான் யோசித்தது இல்லை. ஒரு நாளாவது நான் அம்மாவை எனக்காக காத்திருக்காமல் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சொன்னது கிடையாது. ஒரு நாளாவது சாப்பாடு நல்லாய் இருக்கிறது என்று அம்மாவின் முகத்தைப் பார்த்து பாராட்டியது இல்லை. 8000 மைல் தூரத்தை கடந்த பிறகுதான் இதுவெல்லாம் எனக்கு புலப்படுறது.’
1992ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற டெரிக் வால்கொட் என்பவருடைய நோபல் உரை மேற்படி சம்பவத்தை நுட்பமாக உணர்ந்துகொள்வதற்கு உதவும். ‘ஒரு பூஜாடி உடைகிறது. அதன் உடைந்த துண்டுகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி திருப்பி ஒட்டும்போது கிடைக்கும் காதல் உணர்வு அந்த பூஜாடி பூரணமாக இருந்தபோது கிடைப்பதில்லை.’ புலம்பெயர் இலக்கியம் என்று சொல்லும்போது இழந்ததை மீட்கும் அந்தக் காதல் உணர்வு வெளிப்பாடு அங்கே இருக்கவேண்டும்.
இந்தக் காதல் இரண்டு வகையாக வெளிப்படலாம். பிறந்த நாட்டைப் பற்றி எழுதும்போது அந்த இலக்கியம் புகுந்த நாட்டின் கலாச்சார மாற்றத்தால், புதிய வாழ்வுச் சூழலால், வித்தியாசமான மொழிப்பயிற்சியால் செழுமை பெறவேண்டும். அல்லது புகுந்த நாட்டுப் பின்னணியில் எழுதும்போது இழந்த நாட்டின் கலாச்சாரமும் மொழியும் படைப்பில் புது வெளிச்சம் வீசவேண்டும். ஒரு கலாச்சாரம்தான் ஓருவருடைய படைப்பை முழுமை பெறச் செய்கிறது.

புலம் பெயர்ந்த எழுத்தாளர் அமைப்பு மலருக்கு கட்டுரை கேட்டு எழுதியவர்கள் எத்தனை வார்த்தைகளில் கட்டுரை இருக்கவேண்டும் என்பதை குறிப்பிட்டிருந்தார்கள். என்ன தேதிக்கு முதல் அனுப்பவேண்டும், ஆசிரியரின் புகைப்படம் எந்த அளவில் அமையவேண்டும், எத்தனை வரிகளில் சுயவிபரக் குறிப்பு இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு அம்சத்தையும் நினைத்து நினைத்து எழுதியவர்கள் கடிதத்தின் ஒரு மூலையிலோ, பின் குறிப்பிலோ, கண் பார்க்க முடியாத சின்ன எழுத்துருவிலோ கட்டுரைக்கு எவ்வளவு சன்மானம் கிடைக்கும் என்பதைக் குறிப்பிட மறந்துவிட்டார்கள். ஓர் உரிமம் பெற்ற தச்சு வேலைக்காரரிடமோ, தண்ணீர்க் குழாய் திருத்துபவரிடமோ, மின்சாரப் பணியாளரிடமோ இப்படி இலவசமாக வேலை செய்துதரும்படி யாராவது கேட்பார்களா? லைசென்ஸ் இல்லாத எழுத்தாளர்தானே, அதுவும் புலம் பெயர்ந்து பொழுது போக்கிக்கொண்டு இருப்பவர், அவரிடம் என்னவும் கேட்கலாம்.
எழுத்தாளருக்கு எப்படி வெற்றுத்தாள் எதிரியாகிறதோ, அப்படியே புலம் பெயர்ந்து வாழும் ஒருவருக்கு அவருடைய எழுத்து அடையாளம் பிரச்சினையாகிறது. அவர் படைப்பது புலம்பெயர் இலக்கியமா அல்லது சாதாரண இலக்கியமா என்ற விவாதம் அவர் எழுதி அது கம்புயூட்டரின் நினைவுக்கலனில் சேமிக்கப்படுமுன்னரே ஆரம்பமாகிவிடுகிறது. கவிதை எழுதுபவர்களுக்கு லைசென்ஸ் வழங்கும் முறை செயல்படுத்தப்படும்போது புலம்பெயர் எழுத்தாளர்களுக்கு அத்தாட்சி முத்திரையும் வழங்கினால் நல்லது. அப்பொழுது அவர்கள் எழுதுவது புலம்பெயர் இலக்கியம் என்பது நிச்சயமாகும். அந்த இலக்கியம் செறிவூட்டுவதாகவும் அமையலாம்.

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்