நீதியும் நாட்டார் விவேகமும் : பழமொழி நாநூறும்

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

ஜெயமோகன்


ஒன்று

இந்திய சமூகத்தில் நீதி என்ற கருத்தாக்கம் எப்போது உருவாயிற்று என்று சொல்ல முடியுமா?

மிகமிக அரசியல் சார்ந்த ஒரு வினாவாக பலதளங்களிலும் விரியக்கூடியது இது. காரணம் நாம் நீதி என்பது நம் முன்னோர்களால் நமக்கு அளிக்கப்பட்ட ஒரு பாரம்பரியச் சொத்து என்று எண்ணும்படி பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். நீதி என்பது நம் முன்னோர் அவர்களின் இயல்பான விவேகத்தால் அடைந்த ஒரு மெய்ஞானம் என்று கருதுகிறோம். நீதி என்பது எந்நிலையிலும் மாறாத ஒரு கருதுகோள் என்ற எண்ணம் நம்மிடையே உள்ளது. நம்மில் பெரும்பாலானவர்கள் உண்மையில் நாம் நீதி என்று எதைச் சொல்கிறோம், நேற்றும் முன்தினமும் வரலாற்றில் அதுதான் உத்தேசிக்கப்பட்டதா என்றெல்லாம் சிந்தித்திருப்பதில்லை. சொல்லப்போனால் நீதி என்பதே நம்மிடையே ஒரு புகைமூட்டமான இலட்சியக்கனவுபோலத்தான் உள்ளது.

‘இன்று நீதியுணர்வு மங்கிவருகிறது, இன்று இலட்சியங்களுக்கு இடமில்லை, இது சீரழிவின் காலகட்டம்’ என்பதுபோன்ற வரிகளை நம்மில் பெரும்பாலானவ்ர்கள் சொல்லிக் கேட்கிறோம். எழுத்தாளர்கள் கூட அதை மீண்டும் மீண்டும் சொல்வதை வாசிக்கிறோம். உண்மையிலேயே நமது இறந்தகாலம் நீதியுள்ளதாகத்தான் இருந்ததா?இம்மண்ணில் வாழும் மக்களில் நேர் பாதிப்பங்கினர் இல்லை என்றே பதில் சொல்லக்கூடும். அவர்கள் ஒடுக்கப்பட்டிருந்தார்கள்.சுரண்டப்பட்டிருந்தார்கள். இழிவுபடுத்தப்பட்டிருந்தார்கள். இன்றைய காலகட்டமே வரலாற்றின் மிக அதிகமான நீதி கொண்ட காலகட்டமென அவர்கள் சொல்லக்கூடும்.

அப்படியென்றால் நீதி என்பதை எப்படி வரையறுத்துக் கொள்வது? நீதி என்பது ஒரு இலட்சியக் கனவு அல்ல. அது ஒரு சமூக அமைப்பு. அவ்வமைப்பு மெல்லமெல்ல ஆழ்படிமங்களாக ஆகி சமூக ஆழ்மனத்திற்குள் உறைகிறது. எந்த ஒரு சமூக அமைப்¨ப்பபோலவும் அதுவும் மெல்லமெல்ல பரிணாமம் கொண்டு உருவாகும் ஒன்றுதான்.

எந்த ஒரு சமூகத்திலும் நீதி என்ற கருத்தாக்கம் ஏதேனும் ஒரு வகையில் இருந்தே தீரும். வேட்டைக்குடிகள் சிலர் திரண்டு ஒரு பழங்குடிச்சமூகமாக மாறும்போது அவர்கள் தங்களுக்குள் ஒரு பொதுப்புரிதலை உருவாக்கிக் கொண்டாகவேண்டியுள்ளது. ஒரு குழுவாக அவர்கள் இயங்கும்பொருட்டு சில நெறிகள் தேவையாகின்றன. அந்த பொதுநெறிகளே நீதியின் தொடக்கம்.

பழங்குடிச் சமூகங்கள் வளர்ந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து மாபெரும் இனக்குழுத்தொகுப்பாக ஆகிறது.சமூகம் என்ற சொல் இங்குதான் உருவாகிறது. அந்நிலையில் பல்வேறு இனக்குழுக்கள் ஒன்றாகத்திரள்வதற்கான பொது நெறிமுறைகள் தேவையாகின்றன. இனக்குழுக்களுக்குள் தனியாக நெறிகள் புழங்கலாம். ஒட்டுமொத்த சமூகத்திற்காக அவற்றில் சில நெறிகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.

பண்டைச்சமூகங்களில் நாம் காணும் ‘ நீதி ‘ என்பது மேற்குறிப்பிட்ட இரண்டுவகை நீதிகளில் ஒன்றாக இருக்கும் என்று தோராயமாக வகுக்கலாம். ஒன்று ‘பழங்குடிச்சமூகநீதி’. இன்னொன்று ‘இனக்குழுச்சமூகநீதி’. பழங்குடிச் சமூகத்தின் நீதி என்பது அச்சிறுகுழு சீராக செயல்படுவதற்கு அவசியமான விதிகள் மற்றும் நம்பிக்கைகள் அடங்கியது, அச்சமூக உறுப்பினர்களுக்குள் செயல்படுவது. இனக்குழுச்சமூக நீதி என்பது பல்வேறு பழங்குடிச்சமூக நீதிகள் ஒரு பொதுவான அமைப்பில் இணைந்திருப்பது. அனைத்துக்குலங்களுக்கும் பொதுவான சிலநீதிநெறிகள் உருவாகி வந்திருக்கும் காலம்.

இனக்குழுச் சமூகம் மேலும் விரிவான அடித்தளம் கொண்ட பெரும்சமூகமாக இரு காரணிகளால் உருவாக்கப்படுகிறது. ஒன்று பேராரசு. இன்னொன்று பெரு வணிகம். ஆகவே மேலும் விரிவான நீதி என்ற கருத்தாக்கமும் பேரரசுகளாலும் வணிகத்தாலுமே உருவாக்கப்படுகிறது. சொல்லப்போனால் மிக அதிகமான மக்களை உள்ளே கொள்ளும்தோறும் நீதி என்ற கருத்தாக்கம் விரிவு பெறுகிறது.

ஒரு நிலப்பகுதியின் இனக்குழுச் சமூகங்களை ஒன்றாகத்திரட்டி ஒரு அமைப்புக்குள் கொண்டுவரும்போது அரசு உருவாகிறது. அவ்வரசு வலிமை பெறும்தோறும் அது பேரரசாகிறது. நமது மன்னர்கள் அனைவருமே ‘குலசேகரன்’ – குலங்களை தொகுப்பவன்-என்ற பட்டப்பெயருடன் விளங்கினார்கள். பிற்காலச் சோழர்களின் காலம் வரை தமிழக மன்னர்கள் தங்கள் அரசுக்குள் அடங்கிய பல்வேறு வேளிர்கள், கடற்சேர்ப்பர்கள், மலைக்குறத்தலைவர்கள் ஆகியோரை திரட்டி அவர்களின் பொதுச்சம்மதம் மூலமே தங்கள் பதவியை அடைந்திருக்கிறார்கள்.அவர்களால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். வரம்பில்லா முடியாட்சி தமிழ்நாட்டில் மிகவும் பிற்காலத்தில் உருவான ஒன்றேயாகும்.

இவ்வாறு குலங்கள் திரண்டு பேரரசு உருவாகும்போது பேரரசு முழுக்க செல்லுபடியாகக்கூடிய பொது நீதி உருவாகவேண்டியுள்ளது. அது அச்சமூகத்தில் இருந்து நீதிநூல்கள் மூலம் திரட்டி முன்வைக்கப்பட்டு சட்டமாக செயல்முறைப்படுத்தப்படுகிறது.

இரண்டாவது வகை பொதுநீதி வணிகம் மூலம் உருவாவது. இனக்குழுச் சமூகங்கள் ஒன்றுடன் ஒன்று வணிகத்தில் ஏற்படுகையில் அவர்கள் நடுவே பொதுவான நெறிகள் ஏற்கப்பட்டாகவேண்டிய தேவை உள்ளது. வணிகம் பெருகி பற்பல சமூகங்களை உள்ளடக்கி மேலும் மேலும் விரிகையில் அந்நெறிகள் பொதுவான நீதியாக ஏற்கப்படுகின்றன.

இச்சூழலில் நாம் இந்திய மண்ணில் நீதி எவ்வாறு பரிணாமம் கொண்டது என்று தோராயமாகப் பார்க்கலாம். மாபெரும் இதிகாசமான மகாபாரதம் பல்வேறு நீதிகள் விவாதிக்கப்படும் ஒரு பெரும் களம். மகாபாரதம் பழங்குடி நீதியில் இருந்து படிப்படியாக பரிணாமம் பெற்று பேரரசநீதி உருவாகிவரும் பரிணாமத்தின் சித்திரத்தை அளிக்கிறது. பீஷ்மநீதி , விதுர நீதி போன்ற நூல்கள் பேரரசு சார்ந்த நீதியையே முன்வைக்கின்றன.’ராஜநீதி’ என்றே அவை குறிப்பிடவும் படுகின்றன

ஸ்மிருதிகள் என்று சொல்லப்படும் புராதன நீதி நூல்கள் தொடக்கத்தில் பழங்குடிநீதியின் விளிம்பில் நின்றிருக்க வேண்டும். மெல்ல மெல்ல அவை பேரரசு சார்ந்த நீதியை உருவாக்கிக் கொண்டன. யம ஸ்மிருதி போன்ற நூல்கள் காலப்போக்கில் இல்லாமலானது இதனாலேயே. அதன் இறுதிப்படியே மனு ஸ்மிருதி. அது அரசமையத்தை நிறுவுவதையே நோக்கமாகக் கொண்ட நீதிநூல். தர்ம சாஸ்திரங்களை விரிவாக ஆராயும் பி.வி.காணே * 2 அவை அரசமைவுக்குரிய அடிப்படைகளாகச் செயல்பட்டமையை விளக்குகிறார்.

பேரரசுக்குரிய கனகச்சிதமான நீதி நூல் என கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தையே சொல்லவேண்டும். அது ஒரு பேராரசரின் அமைச்சரால் தன் காலத்து தர்ம சாஸ்திரங்களில் இருந்து எடுத்தாளப்பட்டு உருவாக்கப்படுகிறது.

பழந்தமிழகத்தை எடுத்துக் கொண்டால் புறநாநூறின் ‘பொருண்மொழிக்காஞ்சி’ பகுதியில் நாம் நீதிவிளக்கங்களைக் காண்கிறோம். அவற்றை பழங்குடிநீதியும் இனக்குழு நீதியும் சார்ந்தவை என்றே வகுக்க வேண்டியுள்ளது. விதிவிலக்காக மானுடம் சார்ந்த குரலாக ஒலிக்கும் கணியன் பூங்குன்றனின் வரிகளை காலத்தால் பிற்பட்ட சமண-ஆஜீவக மரபின் குரலாகவே நான் காண்கிறேன்.

தமிழகத்தில் சரியான பொருளில் பேரரசுகள் உருவாவது பிற்காலச் சோழர் காலத்திலேயே. அப்போது பேராரசுக்குரிய நீதிநூலாகிய மனுஸ்மிருதியே இங்கே செயல்படுத்தப்பட்டது என்பது வெளிப்படையாகத்தெரிகிறது. பேராரசுக்குரிய நீதி எப்போதும் தண்டனைகளால் அடிக்குறிப்பிடப்பட்டது. வாளால் பரப்பபடுவது, ரத்தத்தால் நிறுவப்படுவது.

வணிகநீதி இந்திய நிலப்பகுதியில் இரு பெரும் மதங்களின் குரலாக ஒலித்தது. பௌத்தம் சமணம் இரண்டுமே அடிப்படையில் வைசியர்களின் மதங்கள். பின்னர் தொழில்செய்யும் சூத்திரர்களின் மதங்களாக அவை வளர்ந்தன. பௌத்தமும் சமணமும் வணிகத்திற்கு இன்றியமையாத அடிப்படை நெறிகளை இந்திய நிலப்பகுதி முழுக்கக் கொண்டு சென்றன. ஆகவே அம்மதங்கள் பரவுவதற்கு வைசியர்கள் பொருளுதவிசெய்தனர்.

இவ்விரு மதங்களுமே பொய்யாமை, கொல்லாமை, கள்ளுண்ணாமை, திருடாமை, பாலியல் ஒழுக்கம் என்னும் ஐந்து நெறிகளையே அடிப்படைகளாக இந்தியாவெங்கும் பரப்பின. அரசியல் கோட்பாட்டு ரீதியாக இம்மதங்கள் இரண்டு கொள்கைகளை முன்வைத்தன என்று ஆய்வாளரான ஆர்.எஸ்.சர்மா * 2 குறிப்பிடுகிறார். ஒன்று, வன்முறை இல்லாமல் சமரசம் மூலமே முரண்பாடுகளை நீக்கிக் கொண்டு வணிக உறவுகளைப் பேணி அரசு நடத்துதல் . இரண்டு, மக்களின் நலம் நாடும் அரசு. [Benevolent nepotism]

இதன் விளைவாக இம்மதங்கள் கிமு மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவெங்கும் ஒரு பொது நீதியுணர்வை உருவாக்கி நிலைநிறுத்தின. முரண்பாடுகள் மண்டிய இந்திய நிலப்பகுதியில் சீரான வணிக பரிமாற்றத்தை இவை உருவாக்கி இந்தியவளர்ச்சிக்கு அளப்பரிய பங்கை ஆற்றின. பல்வேறு இந்திய மொழிகளில் முக்கியமான நீதிநூல்கள் இக்காலகட்டத்தில் பௌத்தர்களாலும் சமணர்களாலும் உருவாக்கப்பட்டன. இவற்றில் உச்சம் திருவள்ளுவர் என்றும் சமண மரபில் ஆச்சாரிய குந்தகுந்தர் என்றும் குறிப்பிடப்படும் சமண முனிவரால் எழுதப்பட்ட ‘திருக்குறள்’

இவர்களில் சமணர்களின் கொடையே மிக மிக முக்கியமானதும் போற்றத்தக்கதுமாகும். சமணர்கள் சம்ஸ்கிருத, பிராகிருத மொழிகளில் அடிப்படையான நீதி நூல்களை உருவாக்கினர். அந்நூல்களை ஒட்டி அவர்கள் இந்திய வட்டார மொழிகளில் ஏராளமான நீதிநூல்களை உருவாக்கினார்கள்.

தமிழ் நாட்டில் சமணர்கள் ஆண்டகாலகட்டம் களப்பிரர் காலம் என்று சொல்லப்படுகிறது. தமிழக வரலாற்றை ஆரம்பத்தில் எழுதிய சைவர்கள் காழ்ப்புணர்வால் இக்காலகட்டத்தை ‘இருண்ட காலம்’ என்று சொன்னார்கள். இக்காலகட்டத்தில்தான் தமிழின் நீதிநூல்களின் முன்னோடித்தொகுதியான பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உருவாக்கப்பட்டன.

சமணர்களின் மதச்செயல்பாட்டை பொதுவாக நோக்கினால் இந்நூல்களுக்கான தேவையை நாம் உணர முடியும். சமண முனிவர்கள் தங்குமிடம் பள்ளி எனப்பட்டது. பள்ளி கொள்ளுதல் என்பதில் இருந்து வந்த சொல். அங்கே கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. அவை பள்ளிக்கூடங்கள் ஆயின. மருத்துவமும் செய்யப்பட்டது. ஆகவே கல்விக்கும் மருத்துவத்திற்கும் அவர்கள் நூல்களை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இவ்வாறு பள்ளிக்கூடங்களின் கற்பிக்கும் பொருட்டு இயற்றப்பட்ட நூல்கள் என்று சொல்லலாம்.

சமணர்களால் உருவாக்கப்பட்ட நீதி அதுவரை இந்திய சமூகத்தில் இல்லாதிருந்த பல முக்கியமான அம்சங்களைக் கொண்டிருந்தது. ஒன்று அதற்கு மானுடமளாவிய ஒரு நோக்கு இருந்தது. அடிப்படை விழுமியங்களையாவது அனைத்துமானுடருக்கும் சமமாக வைக்க அதனால் இயன்றது. இரண்டு, வன்முறை சாராமல் மனிதனின் கருணையையும் அகச்சான்றையும் நம்பியே பேசும் நீதியை அவை முன்வைத்தன.

இந்த அடிப்படைகள் மேல் நூலில் மணிகளைக் கோர்ப்பதுபோல அந்தந்த பகுதியின் நெறிகளையும் விவேகங்களையும் இணைத்துக் கொண்டு தன் நீதி அடிப்படையை உருவாக்கிக் கொண்டது சமண நீதி மரபு.

தமிழ்நாட்டில் களப்பிரர் காலத்துக்குப் பிறகு பேராரசுகள் உருவாயின. அதற்குரிய பெருமதங்களையும் பேராரசு நீதிகளையும் அவை உருவாக்கிக் கொண்டன. அவற்றை வாளால் நிலைநாட்டின. ஆனாலும் சமணர்கள் உருவாக்கிய அடிப்படை நீதி போதம் தமிழர் வாழ்க்கையில் உள்ளுறையாக நீடித்தது. ‘கொன்றைவேந்தன்’ ‘ஆத்திச்சூடி’ முதலிய பிற்காலத்து நீதி நூல்களிலும் நாம் காண்பது சமணநீதியின் எதிரொலிகளையே.

இரண்டு

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய ‘பழமொழி நாநூறு’ முன்றுறையனார் என்ற சமண முனிவரால் பாடப்பட்டது. பல சமணமுனிவர்களுக்கும் அவர்கள் இருந்து பின் அடங்கிய இடமே பெயராக அமைதல் போல இவருக்கும் அமைந்திருக்கலாம். இந்நூல் பதிப்பிக்கப்பட்ட வரலாற்றைப் பற்றி பேசும்போது ஆய்வாளர் பொ.வேல்சாமி ஆரம்பகாலம் முதலே இந்நூல் பல்வேறு பாடபேதங்களுடன் பாடல்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைந்துதான் வெளிவந்துள்ளது என்று குறிப்பிட்டார். இந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் எஸ்.வையாபுரிப்பிள்ளையும் இந்நூலின் பதிப்பு வரலாற்றில் உள்ள பல சிக்கல்களை சுட்டிக்காட்டுகிறார். இந்நூலுக்கு மூலச்சுவடிகள் கிடைத்ததில்லை. ஆகவே சரியான பாடபேதமும் இல்லை.

நீதிநூல் என்ற முறையில் இது மிக எளியதுதான். பொதுவாக சமணநீதிநூல்களில் காணப்படும் பொதுநீதிகளே இதிலும் காணப்படுகின்றன. சமணசமயத்திற்குரிய மதநெறிகள் இதில் பேசப்படவில்லை. பொதுவாக இல்லறத்தாருக்குரியனவாக சமணம் வகுத்த நெறிகளைப்பற்றியே பேசப்படுகின்றது. சமணம் 12 நெறிகளைப்பற்றிப் பேசுகிறது. முதல் ஐந்தும் அனுவிரதங்கள். அவை அவைவருக்கும் உரியவை. மூன்று குணவிரதங்களும் நான்கு சிக்ஷா விரதங்களும் உள்ளன. அவை துறவிகளுக்குரியவை. பொறுமை, வாய்மை, ஈகை, ஆன்றோரை வழிபட்டு அவர் வழி நடத்தல் போன்றவையே பழமொழி நூல் முன்வைக்கும் நீதிகள்.

பழமொழியின் இயல்பில் ஒரு சிறப்பு உள்ளது. இந்நூல் ஏற்கனவே வழங்கிவந்த ஒரு பழமொழியை தன் ஈற்றடியாகக் கொண்டு அமைந்த வெண்பா வடிவில் உள்ளது. இவற்றில் பல வரிகள் பழமொழிகள் அல்ல. ‘நாய் பெற்ற தெங்கம்பழம்’ ‘தூங்கும் புலியை இடறியவாறு’ போன்ற பழமொழிகளும் , ‘குலவித்தை கல்லாமல் பாகம் படும்’ ‘கற்றலில் கேட்டலே நன்று’. போன்ற மூதுரைகள், அல்லது வழக்காறுகளும் இவற்றில் ஈரடியாக அமைந்துள்ளன.

இந்நூலை திருக்குறளுடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம். பொதுவாக பதினெண்கீழ்க்கணக்குநூல்களை குறளுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது விரிவாகவே நடந்துள்ளது. குறளில் உள்ள நீதிகளே இந்நூலிலும் பெரும்பாலும் பயின்று வந்துள்ளன எனலாம். அது இயல்பே. இந்நூல்களில் உள்ள சமண நீதி நோக்கின் உச்சம் குறளில் வெளிப்படுவதுதான்.

ஒரு சமணக்கருத்து மூல சமண சூத்திரத்தில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் இவ்வுலகில் தீயதை உணர்ந்துஅகற்றி ஒழுகுபவன் விண்ணவர்க்குரியவனாகிய முனிவன் ஆவான்[ He who, in the world, comprehends and renounces these causes of sin, is called a reward-knowing sage (muni). *3 ] இதை குறளில் ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்பது போல காணலாம். சமண சூத்திரங்களுக்கும் குறளுக்கும் உள்ள வியப்பூட்டும் நெருக்கமான உறவை விரிவாகவே நாம் ஆராய வேண்டியிருக்கிறது

‘கறுத்தாற்றி நம்மை கடிய செய்தாரை பொறுத்தாற்றி சேறல் புகழால்’ என்று பழமொழி சொல்லும் வரியானது ‘ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்கு பொன்றும்துணையும் புகழ்’ என்ற குறள் வரியே. இக்கருத்து சமணநீதிநூல்களின் மைய ஊற்றான ஜைன சூத்ரங்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருப்பதுதான்.

சமண மதத்தின் நீதியின் இயல்பை இதில் நாம் காணலாம். போரே வாழ்க்கை நெறியாக, மறமே பேரறமாக விளங்கிய அன்றைய இந்தியச்சூழலை நோக்கி இந்த வரி பேசப்படுகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சமணம் மீண்டும் மீண்டும் முன்வைத்த இரு அரசநீதிகளில் இது முதலாவது. பொறுமை மற்றும் கருணை மூலம் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருதல். எளியோர்க்கு நன்மைசெய்யும் நோக்கமுடைய வலிமையான அரசு என்பது அடுத்த கருத்து

ஆயினும் குறள் ஆழமான கவித்துவத்துடன் இருக்கிறது. ஒரு நீதி நூலின் கவித்துவம் இரு வகையில் அனுபவப்படுகிறது. ஆழமான நீதிசார்ந்த உத்வேகம் நேரடியாகவே வெளிப்படும் இடம் கவித்துவமாக அமைகிறது ‘ இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றியான்’ என்பது போன்ற அறச்சீற்றமானாலும் சரி ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்’ என்ற கருணையானாலும் சரி அந்த மனஎழுச்சி கவித்துவமாகிறது. அதேபோல அருமையான அணிகள் கவித்துவத்தை உருவாக்குகின்றன. ‘அறத்தாறிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தானிடை’ போல. ஆம், குறள் கவிதையின் நீதி

பழமொழியைப்பற்றி அப்படிக் கூறமுடிவதில்லை. அதன் வடிவமே அப்படி அமைந்துள்ளது. இறுதி வரியின் விளக்கமாக முதல் மூன்று வரிகள் அமைகின்றன. ஆகவே அம்மூன்று வரிகளும் சாதாரணமான மனநிலையில் நின்று விளக்கிச் சொல்வனவாக உள்ளன. கடைசி வரி ஏற்கனவே மரபில் இருந்துவந்துள்ள ஒன்றாகையால் அதன் கவித்துவம் இந்நூலுக்கு உரியதாகவும் இல்லை. ஆக இது ஒரு எளிய பாடநூலாகவே இருந்திருக்கிறது. குறிப்பிடத்தக்க மூலநூல் என இதை சொல முடியாது. இதற்கு தெளிவான நடைமுறைப்பயன்பாடு இருந்திருக்க வேண்டும்.

எடுத்துச் சொல்லவேண்டிய ஒரு சிறப்பே இந்நூலுக்கு உள்ளது என்று படுகிறது. இது தமிழகத்தில் சமண நீதி வந்த பரிணாமத்தின் பாதையை தெளிவாகக் காட்டும் ஒரு நூல்

நீதியை ஒரு படிப்படியான பரிணாம வளர்ச்சி என்றேன். நீதி ஒரு சமூகத்தில் எந்நிலையிலும் ஓயாது விவாதிக்கப்பட்டபடித்தான் இருக்கும். இன்றைய நம் சமூகத்தில் ஒருநாளில் ஒரு கணத்தில் எத்தனை ஆயிரம் நீதிமன்ற அறைகளில் நீதி விவாதிக்கப்படுகிறது என்று பாருங்கள். அவ்விவாதங்கள் வழியாக நீதி ஒவ்வொரு கணமும் வளர்கிறது, உருமாறுகிறது. தராசின் முள்போல நீதி குறித்த சமூகஉருவகம் எப்போதும் ஆடிக் கொண்டே இருக்கிறது.

சங்ககாலத்தைய பழங்குடி நீதி அப்படி பலநூறு விவாதங்கள் வழியாகவே இனக்குழு நீதியாக உருமாறியிருக்கவேண்டும். அவ்விவாதங்களில் புலவர்கள் ஆற்றிய பெரும் பங்கை நாம் புறநாநூறில் காண்கிறோம். சகமன்னனைக் கொன்று அவன் பற்களை கோட்டைச்சுவரில் பதித்துவைப்பதற்கும் சிறைப்பிடிக்கப்பட்டவனுக்கு நீர் கொடுக்காமல் சாகவிட்டமைக்கும் எதிராக புலவர்கள் பாடிய பாடல்கள் கிடைக்கின்றன. அதேசமயம் சக சிற்றரசுகள் மீது படையெடுத்துச் சென்று அவர்களை அழிப்பதும் கொன்றுகுவிப்பதும் எரிபரந்தெடுத்தல் என்ற பேரில் அவர்கள் ஊர்களை எரிப்பதும் நீர்நிலைகளை யானைகளை விட்டு கலக்குவதும் புலவர்களால் வீரம் என அங்கீகரிக்கப்பட்டு புகழப்படுவதையும் காண்கிறோம். அதேசமயம் பெண்கொலை புரிந்தான் [நன்னன்] என ஒருவன் மீண்டும் மீண்டும் பழிக்கட்டுவதையும் காண்கிறோம்.

அதாவது நாம் சங்ககாலத்தில் காண்பது சிறிய குடிமைச்சமூக அரசுகளை அழித்துத் தின்று இன்னும்பெரிய அரசுகள் உருவாகி வரும் காட்சியையே. அதை நிகழ்த்துவதற்குரிய குறைந்தபட்ச நீதிகளையே ‘பொருண்மொழிக்காஞ்சி’ பாடல்களில் பலவாறாக காண்கிறோம். இதை பேரா.ராஜ்கௌதமனின் முக்கியமான ஆய்வுநூலான ‘பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்’ என்றநூலில் *4 காண்கிறோம். அதை இனக்குழுச்சமன்பாட்டுக்கான போர் என்று இன்னொருவகையில் சொல்லலாம். அந்த நீதி இனக்குழுச்சமூக நீதியமைப்பு ஒன்றுக்கான போராட்டத்தின் ஒரு விளைவு.

அந்தச் சூழலில்தான் சமணம் வந்தது.தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் பேரரசுகள் உருவாக ஆரம்பித்து கடும் போர்கள் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் சமண மதம் இங்குவந்ததும் சமரசம் மற்றும் கொல்லாமை சார்ந்த ஒரு நீதியை நிலைநாட்டியதும் தமிழகத்தின் நல்லூழ் என்றே கொள்ளவேண்டும். அவ்வகையில் நோக்கினால் தமிழகத்தின் ஒளிமிக்க இறந்தகாலம் களப்பிரர் காலமே. அக்காலகட்டத்தின் அழிவில் உடனே பேரரசுகள் தோன்றி பெருமதங்களும் பெரும் சுரண்டலும் பெரும் வன்முறையும் நிலைநாட்டப்பட்டன.

சமணம் கொல்லாமையையும் கருணையையும் வலியுறுத்தியது. நலம்நாடும் சமரச அரசாங்கம் குறித்த கருத்தை முன்வைத்தது. சமணத்தின் அந்த தரப்புக்கும் ஏற்கனவே இங்கிருந்த இனக்குழுச்சமூகத்து நீதிக்கும் இடையே நீண்ட ,தீர்க்கமான விவாதங்கள் நிகழ்ந்திருக்கவேண்டும். அவ்விவாதங்களின் விளைகனிகளே நீதிநூல்கள். [சமணர்காலம் இருண்டகாலம் என வாதிடும் சைவ அற்பர்கள் அக்காலத்தில் தமிழ்சமூகத்தில் ஏற்கனவே இருந்துவந்த ‘நீதி ‘ அழிந்து அநீதி ஓங்கியதனால்தான் இந்நீதிநூல்கள் உருவாயின என்று வாதிடுகிறார்கள். மூடத்தனத்தின் எல்லை!] அவ்வாறு உருவான நீதிநூல்களில் எஞ்சியவை நீண்டகாலம் கழித்து பதினெண் கீழ்க்கணக்கு என்ற பேரில் தொகுக்கப்பட்டன.

இவ்விவாதங்களின் தடங்கள் நீதிநூல்களில் உள்ளன. அவற்றில் உள்ள நீதி ஒருபக்கம் சமண மெய்ஞானத்தில் வேரூன்றியிருக்கிறது. இன்னொருபக்கம் இங்கு ஏற்கனவே புழங்கும் நீதிகள் பலவற்றை தனக்குள் உள்வாங்கிக் கொண்டதாக இருக்கிறது. திருக்குறளே சிறந்த உருவகம். பொருண்மொழிக்காஞ்சி திணையில் வரும் பல வரிகளை திருக்குறளில் காணமுடியும் என்பதை அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அத்தகைய உரையாடல் அல்லது சமரசம் இன்னும் வெளிப்படையாகத் தெரியும் நூல் என்பதே பழமொழிநாநூறு நூலின் சிறப்பாகும். இதில் உள்ள பழமொழி என்பது தமிழகத்தில் விளங்கிய தொன்மையான விவேகத்தின் விளைவு. அதை தனது சமண நீதியுடன் கொண்டு சென்று இணைப்பதையே முன்றுறையார் செய்கிறார். விளைவாக ஒரு சமரசத்தை அல்லது முரணியக்கத்தை நிகழ்த்துகிறார். ஏற்கனவே இங்கு வேரூன்றியிருந்த நீதியின் சிறந்த கூறுகளுடன் சமணநீதியைக் கலக்கிறார்.

நெறியால் உணராது நீர்மையும் இன்றி
சிறியார் எளியாரால் என்று பெரியாரை
தங்கள் நேர்வைத்து தகவு அல கூறுதல்
திங்களை நாய்குரைத்தற்று.

நிலவை நாய் குரைப்பது போல என்ற பழமொழியானது உயர்ந்த விஷயங்களைக் கண்டு சிறியோர் கொள்ளும் சிறிய செயல்களைச் சொல்ல சுட்டப்பட்டு வந்திருக்கலாம். பழந்தமிழ் மரபைவைத்து பார்த்தால் ஒரு பெருவீரனை அல்லது செல்வனை எளிய சிலர் அலர் சொல்வதைச் சுட்டும் வரியாகக் கூட இருக்கலாம். ஆனால் இந்தப்பாடலில் அதை நுட்பமாக அடுத்த கட்டத்துக் கொண்டுசெல்கிறார் ஆசிரியர். சமணர் காலகட்டம் முற்றும் துறந்த சமண முனிவரை மண்ணில் பெரியவர்களாக முன்வைத்தது என நாம் அறிவோம். செங்கோல் ஏந்திய மன்னர்களை விட பலமடங்கு மதிப்பை உடலெங்கும் தூசு மூடி நிர்வாணமாக அலைந்து தெருக்களிலும் காடுகளிலும் வாழ்ந்த பெரியோர்களுக்கு அளித்தது. அறத்தின் சக்கரத்தை அவர்களே உருட்டுகிறார்கள் என்ற கருத்தை முன்வைத்தது.

சென்றகாலத்தில் தமிழ்நாட்டில் முடிமன்னர்களுக்குமட்டுமே முதன்மை மதிப்பு இருந்தது. அவர்களை நயந்தும் பயந்தும் நந்னெறி சொல்பவர்களாகவே புலவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் சமணமரபு அவர்களுக்கும் மேலாக ‘நீத்தாரை’ முன்வைத்தது. ‘பெரியோரை’ மதித்தல் , அவர்சொல் கேட்டல் என்ற பொருளில் குறிப்பிடுவதெல்லாமே இந்த முனிவர்களுக்கு அளிக்கப்பட்ட முத்ன்மை மரியாதையைத்தான். சமண மத நூல்களில் இந்த கருத்து மிகமிக விரிவாக முன்வைக்கப்பட்டிருக்கக் காணலாம். சமணத்தின் அடிப்படையே இதுதான். பற்ற்யும் சினமும் இல்லாத அறவோர் சமூகத்தை வழிநடத்துதல்.

இந்தப்பாடலில் மரபான தமிழ் விவேகத்தை சமணர்களின் பெரியோர் நெறிசேரும் அறத்துடன் இணைத்துவிடுகிறார் முன்றிறையார். பெரியோர் எளியோர் போலவே இருப்பார்கள். அவர்களை நெறியாலேயே உணர இயலும். ஒன்று நம் நெறியால். அதைவிட அவர்களின் நெறியால். சிறியோர் அவர்களை அறியும் நீர்மை இல்லாமல் அவர்களையும் தங்களுக்கு நிகராக வைத்து தகுதியற்ற சொற்களைச் சொல்லிவிடுவார்கள் என்று எச்சரித்து அது நிலவை நாய்குரைப்பதுபோல என முடிக்கிறார் முன்றிறையார்.

‘கற்றலில் கேட்டல் நன்று’ என்பது தமிழ் மூதுரை. பொதுவாக நூல்கற்கும் அமைப்புகள் அதிகம் இல்லாதிருந்த இனக்குழுச் சமூகம் என பண்டைத்தமிழகத்தைச் சொல்லலாம். பள்ளிச்சாலைகள் போன்ற அமைப்புகளைப்பற்றி சங்கப்பாடல்களில் நாம் கேள்விப்படுவதில்லை. ஆகவே பெரும்பாலும் ஆசிரியரைச் சார்ந்து வாழ்ந்து அவர்வாயால் கல்விகற்கும் குருகுல முறையே அதிகம் இருந்திருக்கலாம். ஆகவே சான்றோர் வாயால் நல்லவற்றை கேட்பதை முக்கியப்படுத்தி உருவாக்கிக் கொண்ட சொற்றொடர் இது.

ஆனால் சமணர்கள் நூல்கல்வியை வலியுறுத்தி பரப்பியவர்கள். ஆகவே அதே பழமொழியை முன்றிறையார் முற்றிலும் தலைகீழாக பொருள்கொண்டு பாடலில் பொருத்துகிறார்.

‘உணற்குஇனிய இந்நீர்பிறிதுழி இல் என்னும்
கிணற்றகத்து தேரைபோல் ஆகார்- கணக்கினை
முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக்
கற்றலில் கேட்டல் நன்று

ஒரேநூலை மட்டுமே பயின்று அதுவே சிறந்தது என்றிருப்பவர்கள் கிணற்றுத்தவளையைப்போன்றவர்கள். பலநூல்களைப்பற்றி பலர் சொல்லும் சொற்களைக் கேட்டு அந்நூல்களைக் கற்றல் நல்லது என்று முன்றிறையார் சொல்லும்போது நூல்கல்வியை மேலும் பரந்துபடச் செய்யவேண்டும், அதற்கு செவிவழிக்கல்வியை பயன்படுத்த வேண்டும் என்றே சொல்கிறார்

தமிழ்மக்களின் வாழ்க்கையில் உள்ள சடங்குகள் ஆசாரங்கள் நம்பிக்கைகள் போன்றவற்றை சமணநீதியுடன் பொருத்துவதற்கு பழமொழி பலவகையிலும் முயல்வதைக் காணலாம். இந்நூலின் இலக்கே அதுதான். அத்துடன் தமிழ்நாட்டு வரலாற்று கதைகளையும் அது மறு ஆக்கம்செய்து முன்வைக்கிறது. குறிப்பாக கரிகால் பெருவளத்தான் குறித்த பழமொழி பாடல்கள் பெரும்புகழ்பெற்றவை. இந்நூல் சோழமண்ணில் உருவாகியிருக்கலாம் என்பது ஒரு காரணம். அதற்கு அப்பால் ஒரு காரணம் உண்டு

சமணமதம் மக்களின் நலம் நாடும் அரசை முன்வைத்தது என்று சொன்னோம். பெரும் போர்க்கள வெற்றிகளை அடைந்த மன்னனை போற்றுதலுக்குப் பதிலாக அறம்சார்ந்து செயல்பட்ட மன்னனை போறி முன்வைத்தல் அதன் இயல்பு. கரிகாள் பெருவளத்தானின் நீதியுணர்வை போற்றும் பழமொழி பாடல்கள் சமண அரசநீதிக்கு தமிழின் தொல்மரபில் இருந்து ஓர் உதாரணத்தைக் கண்டு பிடித்து மக்கள் முன் நிறுத்துகின்றன.

உரைமுடிவு காணான் இளமையோன் என்று
நரைமுது மக்கள் உவப்ப -நரைமுடித்து
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவித்தை
கல்லாமல் பாகம் படும்

இப்பாடலிலும் பழமொழி ஆசிரியரின் நுட்பமான மாற்றி அமைக்கும் திறன் தொழில் பட்டுள்ளது. குலங்களை அடிப்படையாகக் கொண்ட அச்சமூகத்தில் குலத்தொழில் கல்லாமலேயே வரும் என்ற எளிய பழங்குடி விவேகத்தை எடுத்துக் கொண்டு நலம்நாடும் அரசனைச் சித்தரிக்கும் ஒன்றாக மாற்றியமைத்திருக்கிறார் ஆசிரியர்.

பழமொழிநாநூறின் அடிப்படை இயல்பே இதுதான். மக்களிடையே வழங்கிவந்த எளிமையான நாட்டார் விவேகங்களை எடுத்துக் கொண்டு அவற்றின் மீது சமண நீதியை பொருத்திக் காட்டுதல். பெரும்பாலான நேரங்களில் அந்தச் சமணநீதிக்கும் அந்த அப்பழமொழிக்கும் நேரடியான உறவேதும் இல்லை என்பதைக் காணலாம். இருந்தாலும் மகக்ளுக்கு ‘இது ஒன்றும் புதிய விஷயமில்லை நம் முன்னோர் சொன்ன பழைய நீதியே’ என்ற எண்ணத்தை இதன் மூலம் உருவாக்கி நீதியை மனத்தில் நிறுத்த உதவுகிறது இந்த உத்தி

சமணநீதிஎன்பது ஒரு செவ்வியல் நீதி. பலகாலம் பல நூல்கள் வழியாக திரண்டுவந்தது அது. உலகளாவிய, மானுடமளாவிய கற்பனை கொண்டது. பழமொழிகள் அதிகமும் பழங்குடிச் சமூகங்கள் சார்ந்தவை. இனக்குழு எல்லைகளை மீறாதவை. ஆகவே அவை அடிப்படையில் நாட்டார்த்தன்மை கொண்டவை. இவ்விரு எல்லைகளையும் இணைக்கிறது பழமொழி நாநூறு. இந்நூலின் சிறப்பே இதுதான். அக்காலகட்டத்தில் நடந்த மாபெரும் நீதிசார் உரையாடலின் இரு தரப்புகள் இவை. இருதரப்பினருமே இந்நூலுக்குள் ஒன்றாக இணைக்கபட்டிருக்கிறார்கள். இது ஒரு சாதனைதான்

======================================
ஆர்.எஸ்.சர்மா, R.S.Sharma Perspectives in Social and Economic History of Early India

பி.வி.காணே. P.V.Kane .History of Dharma Sastras

ஹெர்மான் ஜெகோபியின் மொழியாக்கம். ஜைன சூத்திரங்கள் [Hermann Jacobi] முற்றிலும் இணையத்தில் கிடைக்கின்றன

பேரா.ராஜ்கௌதமன். ‘பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்’. தமிழினி பிரசுரம்.

[27-12-07 அன்று நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் மைசூர் செம்மொழி உயராய்வு மையம் இணைந்து நடத்திய பதினெண் கீழ்கணக்கு நூல்கள் கருத்தரங்கில் பேசியது]

Writer – Jeyamohan

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்

1 Comment

Comments are closed.