நூல் நயம்…. – அன்பு மலர் அன்னை தெரேசா ஆசிரியர் : புலவர் திரு ம. அருள்சாமி அவர்கள்

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

டாக்டர் அ. சையத் இப்ராஹிம்



இலட்சக்கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் வணிக ரீதியான தமிழிதழ்களுக்கு மத்தியில் அரைநூற்றாண்டுக்கும் மேலாக தனித்துவதுடன் இயங்கி முத்திரை பதித்து வரும் “மஞ்சரி ” மாத இதழ், தன் இயல்புக்கொப்பவே மனிதாபிமான உணர்வை – கனிவை – கருணையை தன் உடலின் ஒவ்வோர் அணுவிலும் சுமந்து நம் கண்முன் வாழ்ந்து மறைந்த அன்னை தெரேசா அவர்கள் நினைவாக சில ஆண்டுகளுக்கு முன் ஓராண்டு முழுதும் சிறுகதைகளைப் பிரசுரித்து கண்ணியப்படுத்தியது. அவ்விதழின் ஆசிரியர் திரு லேனா அவர்கள் என்னிடமிருந்தும் ஒரு கதை கேட்டார். அன்னையைப் பற்றி அறியாதார் யாரிருக்க முடியும்? என்றாலும் அக்கோரிக்கை அன்னையின் வரலாறு பற்றிய ஒரு தேடுதல் நெருக்கடியை என்னுள் ஏற்படுத்த, தேடித்தேடிப் படித்தேன். “செமஸ்டர் பீஸ்” சிறுகதை “ஜோதி விநாயகம் நினைவு சிறுகதைப் போட்டி”யில் தேர்வு பெற்று அவ்வருடம் தொகுக்கப் பட்ட சிறந்த சிறுகதைகள் தொகுப்பிலும் இடம்பெற்றது.

இதோ அந்த அன்புத்தாயின் வாழ்வும் சாதனைகளும் அவை ஏற்படுத்திய தாக்கங்களும் 505 வெண்பாக்களாக என் தமிழாசிரியர் புலவர் ம. அருள்சாமி அவர்களால் ஆக்கப்பட்டு எனக்கு விருந்தாகப் படைக்கப் பட்டிருக்கிறது. நான் விருந்துண்பதோடு அதன் சுவை பற்றி உங்களுக்குச் சொல்லவும் வேண்டும் என்பது என் ஆசான் எனக்கிட்டுள்ள அன்புக்கட்டளை.

அறிவார்த்தமான உத்தி

பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்றுவித்த அனுபவமிக்க நல்லாசிரியர் அன்னை அவர்களின் வரலாற்றை எளிய உரைநடையில் நூலின் தொடக்கத்தில் தந்திருக்கிறார். இது வாசகனை இலகுவாக நூலினுள் அழைத்துச் சென்று வழிகாட்டுகிறது.

நூலில் வரும் பெயர்கள் – சம்பவங்கள் – அவை சார்ந்த குறிப்புக்களை நூலின் முடிவில் தந்திருப்பது சிறிதும் பெரிதுமாய் வாசகமனதில் ஏறிக் கொண்டுள்ள மயக்கங்களைக் களைய உதவுகிறது.

இவ்விரண்டுமே ஓர் அறிவுப்பூர்வமான உத்தி.

தாயின் இடம் – ஞானத்தின் மூலம்

ஒரு தாயின் இடத்தை இன்னொரு மனித உறவு சமமாக நிரப்பிட ஒருக்காலும் இயலாது என்பதை ஆசிரியர் விளக்கும் விதம் அருமை.

“தாய்தான் முதல்பார்வை தாய்தான் முதற்பாசம்
தாய்தான் முதல்ஞானம் …” என்று விளக்கும் அவர் ,

“தாய்மடி பள்ளியாய் தாய்சொல்லே பாடமாய் ” என்று உருவகப் படுத்திச் செல்வது முதல் ஞானத்தின் மூலமே முதிர்ச்சிக்கும் வித்தாய் அமையும் விந்தையைப் பேசுகிறது.

அப்படியென்றால் பிற உறவுகள்…?

“தந்தை உடல்தர தாயின் உயிர்பெற
சிந்தை சுடரொடு சீர்பெற – பந்தங்கள்
வந்தங்கு பக்குவ வாழ்வமைய” என்பது அவர் தரும் விளக்கம்.

இங்கேயே ஒரு முடிச்சிட்டு அவர் நமக்கு ஒரு மயக்கத்தையும் ஏற்படுத்துகிறார்.

ஆக்னசுவின் முதல்பார்வை, முதற்பாசம், முதல் ஞானம் அவரது தாய் திராணா மூலம்! அவர் மடியே பள்ளி ; சொல்லே பாடம் ; பன்னிரண்டு வயதில் கன்னிகைக் கனவை முன் வைத்த போது “சின்னவள் நீ ; பக்குவமற்றவள்” என்று தாய் வழிகாட்டியதும் “அக்கணம் அங்கொரு தாழ்” விழுகிறது; இவை அனைத்தும் சரியே! ஆனால் இந்த ஆக்னசு பின்னாளில் தாமும் தம் தாயைப்போல இன்னொரு உயிரியல் தாயகவில்லையே ? இருந்தும் அவர் எப்படி உலக மக்கள் அனைவருக்கும் அன்னையானார்? முதல் பார்வை, முதற்பாசம், முதல் ஞானம் , பள்ளி , பாடம் அனைத்துக்கும் மூலம் அவர்தானென்று அடித்துச் சொல்லும் இலட்சோபலட்ச மக்களுக்கு அவர் எப்படித் தாயானார்?

அந்த விந்தையைத்தான் நூல் முழுக்க விளக்குகின்றன வெண்பா வரிகள்.

திருப்புமுனை

1929 -ல் அவர் இந்தியா வந்தார்; 1931-ல் கன்னியராகி மேற்படிப்பு; தெரேசா என பெயர் மாற்றம்; புனித மரியன்னைப் பள்ளியில் ஆசிரியப் பணி ; 1946-ல் ஒரு ரயில் பயணத்தின் போது நிகழ்ந்தது “இரண்டாம் அழைப்பு ” என்னும் திருப்புமுனை.

அது ஆசிரியை தெரேசாவை அனைவருக்கும் அன்னையாக்கிய அற்புதத் திருப்புமுனை. அது அவரை சேரிகள் செரிந்த கல்கத்தாவின் வீதிகளில் வீசி எறிந்தது.

“எலியின் வளைபோ லிருக்கும் தெருவில் , நெளியும் நெடும்பாம்பாய் நேராய் -வழிகின்ற சந்துகளில்” நிறுத்தியது.

முரட்டுக் கதர்ச்சேலை உடையானது; மரத்தடிதான் பள்ளி – ஏழை மக்களின் குடிசைதான் மருத்துவமனை! எவராலும் அரவணைக்கப்படாமல் இருட்டிலும் வெம்மையிலும் வெந்துகொண்டிருந்த எழைகளின் வாழ்க்கையில் ‘எங்கிருந்தோ’ வந்த அந்த இனிய தென்றல் இலவசமாகவே தன் இதயத்தைத் தந்து இதம் கொடுத்தது; ஆசுவாசப் படுத்தியது.

அதுமுதல் அந்தக்கன்னி அன்னையானார் அம்மக்களுக்கு.

கிறித்துவர் கோமஸ் வீட்டைக் கொடுத்து அன்னையின் பணித்தளமாக்கினார் ; அது இயல்பான நிகழ்ச்சி ! ஆனால் முஸ்லிம் இஸ்லாமோ தன் வீட்டைக் கொடுத்தது வித்தியாசமான நிகழ்ச்சி. அதை ஆசிரியர் இப்படி விவரிக்கிறார்.

“கடவுள் கொடுத்தார் கருணையாம் வீடு
கடவுள் எடுத்தார் கருணை -நடக்க
உணர்ச்சிப் பிழம்பில் உரைத்தார் இசுலாம்
உணர்ச்சிப் பெருக்கே உலகு ”

“நான் சம்பாதித்தேன்; இது என்னுடையது ; இது என்னால் ஆனது” என நினைப்பவன் முஸ்லிம் அல்ல ; “இது இறைவனுடையது ; இது என் இறைவனால் எனக்கு வழங்கப்பட்டது; இது என் இறைவனால் சாத்தியமானது” என்பதே இஸ்லாமிய நம்பிக்கையின் மூல மந்திரம். அதனால்தான் மௌலா மசூதியில் தொழுதுவிட்டு வந்த இஸ்லாம் ‘கடவுள் கிருபையால் கிடைத்த இவ்வீட்டை உலகெலாம் கருணை மேவும் பொருட்டு கடவுளே எடுத்து அன்னையிடம் கொடுத்திருக்கிறார்’ என உரைப்பதாகப் பதிவுசெய்கிறார் ஆசிரியர்.

இங்கே ஈற்றடியாக ஆசிரியர் தந்திருக்கும் வரி “உணர்ச்சிப் பெருக்கே உலகு” என்கிறது. உணர்வுகளின் மொத்தமே மனிதன்; ஒரு மனிதனின் கண்ணீரைக் கண்டால் சக மனிதனுக்குக் கண்ணீர் வரவேண்டும் என்பதுதான் இயல்பு; இறையாக்கத்தின் நியதி ; பிற வெளிப்பாடுகள் இயல்புக்கு ஒவ்வாதவை -அந்நியமானவை என்பதை என்னமாய் ஆசிரியர் மூன்றே வார்த்தைகளில் முழக்கி விடுகிறார்!

திருப்புமுனை கண்ட அன்னையின் வாழ்வு , பிறகு
“துன்பத்தில் நோயில் துடிப்பவர் எல்லார்க்கும்
துன்பத்தில் வந்து துணையாவார் -அன்பாளர்
அஞ்சலில் நேரில் அருமை செபதவத்தில்…” என்றானது.

இறப்பில் உயிர்ப்பு

அன்னை ஒரு வீதியில் நடக்கிறார். அங்கே ஓர் மனித உடல், உயிருடன்!

ஆனால் அவ்வுடலை “மொய்த்தது ஈயெறும்பு பிய்த்தது பேயெலி ; பொய்த்தது பூவுலகு பூவினார் -மெய்தானும்; எய்த்துக் கிடந்தது ஈனவுடல் ….” .

பதறிப்போகிறார் அன்னை.

இப்படி ஈனமாய்க் கிடக்கும் இம்மனித உடம்பு,

“உள்ளேதான் மெய்த்தவர் ஏசு உயிர் ” அன்றோ? என இரங்கி,

“… எடுத்து இருகையில் ஏந்தினார்”.

பொன்று மவளுயிர் பூரிக்க -நன்றே; தனிமையில் நானில்லை தாயின் மடியில் இனிமையில் செல்வேன் இனி ” என நினைக்கிறாள் அவ்வபலை.

உதவிநாடி அலைகிறார் அன்னை; கிடைக்கவில்லை; “கெஞ்சினார் அன்னை; கொடுமை! மறுப்பிலே மிஞ்சினார் அங்குள்ளோர்”.

மாண்டாள் அம்மாது அன்னையின் மலர் மடியில் ; மனநிறைவுடன்!

‘இறைவன் அளித்த இன்னுயிர் இனிதே பிரியவும் ஓரிடம் வேண்டும்’ என்ற வைராக்கியம்! உதவிக்கு வந்தார் மாநகர அதிகாரி டாக்டர் அகமது.

“தனிமை மரணம் தளிருக்கும் வேண்டாம்
மனித உறவின் மதிப்பை -இனிய
சிறிய உயிரும் சிறந்தே சிறக்கும்
அரிய பணி……….” யாகிப்போனது அன்னையின் வாழ்வு. அதனால்

” ………………………
இறப்போர்தான் அன்னைக்குச் சொன்னார் -பிறப்பு முதல்
நாயாய்த் திரிந்தேன், இறக்கிறேன் மாந்தனாய்
தாயின் மடியிலே தாழ்ந்து”
என்ற வரிகளில் அன்னையின் சாதனை பொறிக்கப் படுகிறது.

எவர்க்கும் மதிப்பளிக்கும் அன்னை

“நோயால் மெலிந்திருக்கும் ஒவ்வொரு மெய்தானும்
நோயால் நலிந்திருக்கும் தெய்வமெய்தான் -பாயில்
விடப்பட்ட ஆன்மாவும் ஆண்டவரே அன்பால்
தொடப்பட்ட ஆன்மாவும் ஏசு!” -இது அன்னையின் நெஞ்சில் நிலைத்துவிட்ட நினைப்பென்பதால் அவரது நற்பணிக்கு சாதி சமயமில்லை; இனத்தின் பிணக்கில்லை; மொழியால் – தேசத்தால் பிரித்தறியும் பேதமில்லை. அதனால்தான்

” …………………………………. இந்துநான்,
என்றன் சுகத்தை எடுத்ததை -அன்னைக்குத்
தந்துவிடு மாகாளி அன்னையின் நோயதைத்
தந்துவிடு மாற்றித் தனக்கு” என்று ஒரு இந்துப் பெண்மணி அஞ்சல் வரைந்தார்.

“இல்லாத மூதாட்டி இஸ்லாம் சமயத்தாள்
‘அல்லாதான் என்னை அரவணைத்தார் -நல்லாராம்
அன்னை திரேசாள் அகத்தில்’ ” என்பதாக ஒரு முஸ்லிம் பெண்ணின் உள்ளன்பை ஆசிரியர் வரைந்து காட்டுகிறார்.

“பூக்களாய் வந்தவர்கள் பிள்ளைகள் வீதியில்
ஈக்களாய் மொய்த்தார்கள் ஈனமாய் -பாக்களாய்
வந்தவர்கள் பாலகர் பண்ணிழந்த பாடலாய்
நொந்தார்கள் நோதலில் நொந்து” எனும்பாடல் சிறுவர் இல்லம் கண்ட சீர்மையை விளக்குகிறது.

கல்கத்தாவில் செத்துக் கொண்டிருக்கும் குழந்தையைக் காப்பாற்ற உயிர்காக்கும் மருந்துடன் தில்லியிலிருந்து செபத்தின் தவத்தால் விமானத்தில் கடைசி விநாடியில் இடம் கிடைத்து கல்கத்தா பறந்துவந்த உயிர்ப்பை -துடிப்பை ஆசிரியர் பாடுமிடம் மனதில் நிலைத்து விடுகிறது.

“தொழுநோய் உலகெல்லாம் அஞ்சி நடுங்கித்
தொழுநோய் சிதைந்த உடலால் -அழுநோய்
உழும்நோய் உடல்புண் உறுப்புகள் எல்லாம்
விழும் நோய் விழுப்பெலாம் வீழ்ந்து ”

என அழுத்தமான சொற்களால் பதிவுபெறும் பாடல் இந்நோயின் தன்மையை உள்ளது உள்ளபடி உருக்கமாய்ச் சொல்வதுடன் இந்நோயாளிகளுக்கு என் மருத்துவ வாழ்வின் ஆரம்பகாலத்தில் சிகிச்சையளித்த நினைவுகளை மறுபடியும் கொண்டுவந்து மருக வைக்கிறது.

பொறுமையின் உச்சம்

இமாம் அபுஹனிபா என்ற ஓர் மார்க்க அறிஞர் உரைநிகழ்த்திக் கொண்டிருந்த போது பலர் முன்னிலையில் அவரை ஆத்திரப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஒருவன் எழுந்து “அபுஹனிபாவே! விதவையான உமது தாயை நான் மணந்து கொள்ள விரும்புகிறேன்” என்றான். கோபம் வரவில்லை அந்த மகானுக்கு. “என் தாயாரிடம் கேட்டு உமக்கு பதில் சொல்கிறேன் ” என்றார். பொறுமையின் உச்சியை உணர்த்தும் இந்நிகழ்ச்சிக் கிணையாக , ஏழையின் உதவிக்காகக் ஒரு முறை அன்னை கைநீட்டியபோது அதில் எச்சில் துப்பிய மனிதரிடம் “இதை நான் எனக்காக வைத்துக் கொள்கிறேன், சகோதரா, அந்த ஏழைக்காக ஏதாவது கொடு ” என்று மீண்டும் அவனிடமே கைநீட்டிய வரலாறு அன்னையின் வாழ்வில் ஓர் அழியாச் சித்திரம்; அதனை ஆசிரியர் தேர்ந்த சொற்களால் செதுக்கியிருக்கிறார்.

தொண்டூழியம்…… அது தொடுவானம்

அன்னையின் தொண்டூழியம் அனைத்து எல்லைகளையும் கடந்து செரிந்தது ; சிறந்தது. அதனால் அவர் உலகப் பிரஜையாக உன்னத ரதத்தில் பவனி வந்தார். அவரைப் பாராட்டாத நாடுகளில்லை; தலைவர்கள் இல்லை. அவர் பெறாத விருதுகளில்லை ! இந்தியாவில் அவர் பிறக்கவில்லை; ஆனால் அவர் முழுமையான ஓர் இந்தியராக வாழ்ந்ததால் அந்த மண்ணின் மிக உச்ச விருதான “பாரதரத்னா” அவருக்கு வழங்கப்பட்டது. உலகின் உச்ச விருதான நோபல் பரிசினை அவர் இந்தியக்குடிமகளாகப் பெற்று நம்மையெல்லாம் பூரிக்க வைத்தார். ‘எனக்கு நல்ல வேலை தராத இந்தியனாக தான் நோபல் பரிசைப் பெற விரும்பவில்லை ; என் ஆய்வுக்குக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்த அமெரிக்காவின் பிரஜையாகவே பெறுகிறேன்’ என்று ஓங்கி முழங்கிய டாக்டர் கொரானா இவ்விடத்தில் நம் நினைவுக்கு வருகிறார்.

தனித்துவமான கவித்துவம்

வெண்பா, மரபில் பாடும் எந்தக் கவிஞனுக்கும் சவால்தான்! ஆனால் ஐயா அருள்சாமி அவர்களுக்கு அது இலகுவாக வருவதில் அவரது மாணவனான எனக்கு சிறிதும் வியப்பில்லை.

“ஆருயிரின் தாயே அறத்தின் பெருந்தவமே
பேரருளின் கண்ணே பெருமானே – பாரிடத்தை
யார்காக்க போவதுநீ யாங்கென்றார் தம்கண்ணில்
நீர்வார்த்துக் கால்கழுவா நின்று ”

என்ற புகழேந்திப் புலவனின் வெண்பா வரிகளை 42 வருடங்களுக்கு முன் தேவகோட்டை தே பிரித்தோ பள்ளியின் 10-ம் வகுப்பு ‘பி ‘ பிரிவு வகுப்பறையில் அவர் பாடம் எடுத்த கம்பீரமும் கலையழகும் இன்றும் கூட என் மனக் காதுகளில் ஒலிக்கின்றன.

அன்னையின் வாழ்வியல் விழுமியங்கள் முடிந்தவரை முழுமையாக அருள்சாமி ஐயா அவர்களின் கவனமான வெண்பா வரிகளில் பிசிறில்லாமல் பிரசவித்திருக்கின்றன.

தேர்ந்த இப்படைப்பாளி அன்னையின் வரலாற்றைச் சொல்ல வந்த அதே நேரத்தில் தன் பல பரிமாணங்களையும் வாசகப் பார்வைக்கு வைக்கத் தவறவில்லை.

“தாய்தான் முதல்பார்வை தாய்தான் முதற்பாசம்
தாய்தான் முதல்ஞானம் …”
“தாய்மடி பள்ளியாய் தாய்சொல்லே பாடமாய்”
“அக்கணம் அங்கொரு தாழ்!”
“சொந்தமொடு வந்தாள் சுடர்ந்து”
“பிரிகின்றாள் கண்ணீர்தான் பேச்சு”
“வெருண்டது கல்கத்தா வெந்து”
“அடையாளம் ஆவது அன்பு நமது நடையாளம் காண்பது நட்பு”
“விழும்நோய் விழுப்பெலாம் வீழ்ந்து”
“வெள்ளைப் புடவையில் வெண்பனித் தேர்வலம்”
“மனமாற்றம் செய்வேன் மதமாற்றமல்ல”

“மழைகழுவும் புல்நுனி பூத்த முகையாய் ; தழைதழுவும் தண்ணீர்த் தளிராய் -மலைதழுவும் மஞ்சின் மடிஒழுகும் பிஞ்சாம் கொழுந்துகள் ”

நெருப்பாற்றில் நீச்சல்; நிலவோடு பேச்சு” – என்ற கவித்துவ சொற்பிரயோகங்கள் எந்த வாசகனையும் வீழ்த்திவிடும் தன்மையன.

“உண்ண உணவில்லார் உண்டு ஒருவேளை
என்ன நியாயமாம் இங்குடைமை -பண்ணியே
தேவைக்கு மேலேயும் தேடிக் குவித்தல்தான்
தேவைக்குத் தாயின் தவிப்பு”

“தள்ளுங்கள் மேட்டிமை தாழ்மைதான் கொள்ளுங்கள்”

என்ற வரிகளில் அன்று நான் மாணவனாய்க் கண்ட ஐயா அவர்களின் பொதுவுடைமைத் தத்துவார்த்தம் வெகு நளினமாய் வந்து விழுந்திருப்பதைச் சுட்டிக்காட்டும் கடமை எனக்கிருக்கிறது.

“போரின் கொடுமையால் பெய்ரூத்தில் வாழ்ந்தவர்
யாரும் துணையின்றி மாய்ந்தனர் -சீறிடும்
குண்டுகள் மத்தியில் அன்னை சகோதரிகள்
குண்டுதான் சீறுமோ கூறு”

“குண்டு பொழிகின்ற பாக்தாத் நகரிலே
மண்டு அழிவின் மடுவிலே”

வரிகளில் இன்று லெபனான், பாலஸ்தீனம், பாக்தாத்தில் நடக்கும் வன்முறைகள் நம் கண்முன் கொண்டு வரப்படுவதைப் பார்க்கிறோம். அன்னை இப்போது இல்லையே என்ற ஆதங்கம் நம்முள் எழுவதை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இப்படித்தான் …. எத்தனை காட்சிகள்! எத்தனை மாட்சிகள் நூல் முழுக்க!

எல்லாவற்றையும் நானே சொல்லிவிட்டால்…. ?

இந்த எனது வரிகளை அணிந்துரை -வாழ்த்துரை என்ற கட்டமைப்புக்குள் கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடில்லை.

என்னுள் தமிழை ஆழமாக எழுதிய ஆசான் அருள்சாமி ஐயா அவர்கள்.
என்னை பொதுவுடைமைக் கருத்துக்களைப் படிக்கச் செய்தவர் அருள்சாமி ஐயா அவர்கள்.
நாரண துரைக்கண்ணனின் “உயிரோவியம்” நாவலை ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போதே தந்து படிக்கச் செய்து, உயிர்ப்பூட்டி , இன்று என்னுடைய சிறுகதைகள்/புதினங்கள் பல்கலைப் பாடத்திட்டத்தில் இடம்பெறவும் , எனது ஆக்கங்களில் பத்துக்கும் மேற்பட்ட பல்கலை மாணவர்கள் ஆய்வுப் பட்டங்கள் பெறுவதற்கும் அன்றே வித்திட்டவர் அருள்சாமி ஐயா அவர்கள்.

எனது முதல் சிறுகதைத்தொகுதியான “விருந்து ” நூலை இராமனாதபுரம் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட போது விழாவுக்கு வந்து ஆசி கூறியவர் அருள்சாமி ஐயா அவர்கள்.
இது ஒரு வகையில் “மகன் தந்தைக் காற்றும் உதவியை ” ஒத்தது. அதற்குதவிய இறைவனுக்கு நன்றி.

இவ்வரிய வாய்ப்பினை எனக்களித்தமைக்காக என் ஆசானுக்கு நான் என்றும் கடமைப் பட்டிருக்கிறேன்.


himanasyed@yahoo.com

Series Navigation

டாக்டர் அ. சையத் இப்ராஹிம்

டாக்டர் அ. சையத் இப்ராஹிம்