ஈழத்துமண்ணும் எங்கள் முகங்களும்- வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதைக் காவியம்

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


சென்னைப் பல்கலையின் பாடநூலாக இருந்த(1987-2002) ஈழத்துமண்ணும் எங்கள் முகங்களும்- என்கிற கவிதைக் காவியத்தைப் படிக்கிற வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. இக்கட்டுரை அதற்கான காலங்கடந்த மதிப்புரை அல்ல. பொதுவாக சிறந்த படைப்புகள் அனைத்துமே, அடர்த்தியான மௌனங்களை தன்னுள் அடக்கியது. அப்படியான மௌனங்களை கலைத்தே தீர்வதென்கிறதென்ற பிடிவாதத்துடனேயே வாசிப்பை நிகழ்த்துகிறோம். வாசிப்பு கணங்களில் பல்வேறு உரையாடல்களை அவை நம்முடன் நிகழ்த்துகின்றன. ஒவ்வொரு வாசிப்பும், ஒருவகையான சங்கேத எண். அது முந்தையப் புரிதலை நிராகரித்து, ஒவ்வொரு முறையும் மாற்று அனுபவங்களுக்கு வழிவகுக்கின்றன. எனினும் அத்தனைக் கதவுகளையும் திறக்கின்ற வல்லமை நமக்கு அமைவதில்லை. நமது பகீரத முயற்சிக்குப் பிறகும் ஏதோ ஒரு புதிர்த் தன்மையைத் தக்க வைத்துக்கொள்ளத்தான் ஒவ்வொரு படைப்பும் முனைகிறது. தவிர, நான் சுவைஞனேயன்றி, காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது, உப்பை குறைத்திருக்கலாமோ, இனிப்பைச்சேர்த்திருக்க வேண்டுமோ என்று சொல்லக்கூடிய வித்வமும் எனக்குப்போதாது. நல்ல ரசிகன், இசையோ, பாடலோ, கவிதையோ, ஓவியமோ, புனைகதையோ எதுவென்றாலும் அழகாயிருந்தால் (தோற்றம், அமைப்பு, ஓசை, உள்ளடக்கம் அத்தனையிலும், கண்ணுக்குக் குளுமையாகத்தானே அழகு இருக்கிறது) பரவசப்படுகிறேன்- உபாசிக்கிறேன்- சௌந்தர்ய உபாசகன். தி.ஜானகிராமன் சொல்வதுப்பொன்று முன்வரிசையில் உட்கார்ந்து தலையை ஆட்டும் ரசிகனல்ல, மூலையில் உட்கார்ந்து கசிந்துருகும் பைத்தியம், கால்கள் சோரும்வரை கொண்டாடுவேன், மனம் உலரும் வரை நெக்குருகுவேன். இங்கேயும் அதுதான் நடந்தது.

ஒரு கவிஞனின் வெற்றி எப்படி தீர்மானிக்கப்படுகிறது, விரல்தேய (அல்லது உதடுகள் தேய) உரைத்துப்பார்த்து அவனது கவித்துவத்தைத் தீர்மானிக்கும் உரைகல்தான் எது? காலத்தை வெல்லும் அவற்றின் சூட்ஷமம் எந்தச் சிமிழில் அடைபட்டு கிடைக்கிறது, அதற்கு என்ன பேரு? கம்பனுக்கும், வள்ளுவனுக்கும், பாரதிக்கும் தங்கள் கவிதைபெயரில் தொலைந்துபோன இன்ன பிற சங்ககால மகா மகா மனிதர்களுக்கும், மரணமிலாப் பெருவாழ்வை வரமாகத் தீர்மானிப்பவைகள்தான் எவை எவை? கவிதை என்பதே என்றென்றும் மனதில் நிற்கக்கூடிய வரிகளைப் படைப்பதால் மட்டும் தீர்ந்துபோயிற்றா, அவ்வரிகளில் வரிசைப்படுத்தபட்டுள்ள சொற்கள் முக்கியமில்லையா, அவை நம் மனதிற்கு தரும் உணர்வுகள் முக்கியமில்லையா? “மன்னவனும் நீயோ, வள நாடும் உன்னதோ” என்ற கம்பனும், “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலை” உயர்த்திசொன்ன வள்ளுவனும், ”தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’’ என்ற பாரதியும், “புதியதோர் உலகம் செய்வோம்,” என்ற பாரதிதாசனும், “யாதும் ஊரே யாவரும் கேளீர்”, என்ற கனியன் பூங்குன்றனாரும் அடர்த்தியான இதுபோன்ற ஒருசில சொற்களில் வாழத்தானே செய்கிறார்கள். மாத்யூ அர்னால்டு( Mathew Arnold) இவற்றைத்தானே ”Touchstones’ என்கிறான். அடுத்து என் புத்திக்குத் தோன்றுவது கவிஞர்களுக்கான பயணமும்- காலமும். கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும், இழுத்துபோட்டுக்கொண்டு கற்றாழை முற்கள் கலந்த கானல் நீரில் தாகம் தணித்துகொள்ள அவர்கள் செய்யும் முயற்சி. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது, “பல நேரங்களில், ” மாமழைப் போற்றுதும் மாமழைப் போற்றுதும்” என அதற்கான மாற்று வழியையும் அறிந்திருப்பவனும் நல்ல கவிஞனே. அவன் தொன்மங்களை மறக்காதவன், நவீனத்தை போற்றுபவன். இன்றைய பிரெஞ்சு கவிஞர்கள் அடிக்கடி சொல்வது “Soyez Precis! n’en parlez pas, Montrez!” சுற்றிவளைக்காதே அதாவது சுருங்கச்சொல், வார்த்தையைத்தவிர், காட்சிப்படுத்து. இருபதாம் நூற்றாண்டு தொடங்கி கவிஞர்கள் சொற்களில் சிக்கனம் பார்க்கத்தொடங்கிவிட்டார்கள். Poetry is a language measured and supercharged, என்பதைத்தான் நம்முடைய லா.சா.ரா வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், “நெருப்புண்ணா வாய்ச் சுடணும் அப்படி சுண்டக்காய்ச்சு எழுதணும்”. அடுத்து நல்ல படைப்பிலக்கியங்களுக்கேயுரிய நேர்மையும், உண்மையும், கவிதைகளுக்கும் வேண்டும், வ.ஐ.ச. ஜெயபாலன் கவிதைகளில், இவைகளெல்லாம் உயிர்நாதமாக ஒலிக்கின்றன.

எனது வாழ்வும், கவிதையும் என்று எழுதபட்டுள்ள தமது முன்னுரையில், “கலைஞனில் அந்நியப்பட்ட தன்மை, சமூகப் பொறுப்பின்மை, உலகையும் வாழ்வையும் பற்றிய அவனது பார்வை குறித்த கோளாறுகள், உள்ளடக்கம் பற்றிய பிணி என பலதும் கவிஞனைத் தொற்றிக்கொள்வதாகவும், மரபுகளை ஒட்டவே அறுத்தெறிந்துவிட்டு நாதமில்லாத வசனங்களைப் பற்றிக்கொண்டு உயிர்பெறுகிற ஆகாயத் தாமரை கவிதைகள் பல மக்களிடமிருந்து அந்நியப்படுவற்கு- நான் அந்நியப்படுகிறேன். மண்ணிலிருந்தும் மரபுகளிலிருந்தும் அவற்றை மீறி எழுந்து, செழித்துப் பரந்து படுகிற கவிதைகளோடு மக்களுக்கு என்றுமே சம்மதமுண்டு” என்கிற அவரது வாக்குமூலத்திற்கு ஒப்ப கவிதைகளை எழுதியிருக்கிறார். “வெறும் தோற்றங்களை உடைத்துக்கொண்டு தன்னைச் சுற்றி நிலவுகின்ற இயற்கையையும், உயிரினங்களையும், மனிதர்களையும், இவற்றுக்கிடையிலான பல்வேறு உறவுகளையும் அவற்றின் உண்மைகளையும் கலைஞர்கள் அவர்கள் ஓவியம் தீட்டினாலும் சரி, காவியம் படைத்தாலும் சரி-தமது ஞானக்கண்களால் எப்போது கண்டுகொள்ளப் போகின்றார்கள்? எப்பொழுது அவர்கள் சூரியனையும், பள்ளத்தாக்குகளில் வாழுகிற மனிதரையும், ஒளியைத் தடுக்கிற மலைகளில் இரகசியங்களையும் பற்றி மக்களுக்குக் கூறப் போகின்றார்கள்? என்று கேள்வி எழுப்புகிறார். “வன்னியின் வாழ்வும், இயற்கையும், காலங்களும் வாய்வழிச் சொல்லிவந்த வாழ்வின் கதைகளை நான் காவியமாக்கி இருக்கிறேன்”, என்று கவிஞர் சொல்கிறார்.

ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் என்ற காவியம், ரதிதேவி என்ற பெண்ணொருத்தியின் பிறப்பும், முடிவும் பேசுங்காவியம்- இன்றைய ஈழத்தின், விடுதலை வேள்வியில் தினந்தோறும் தங்களை எரித்துக்கொள்கிற தமிழ்ப் பெண்ணொருத்தியின் காவியம், 1986ல் எழுதப்பட்டு அச்சில் வந்திருக்கும் இந்நூலில் சொல்லப்பட்டவை அனைத்தும் இன்றளவும் தொடரும் உண்மை. காவியத்தில் பெருமூச்சிடுகிற கவிஞனுக்கும், காவியத்தை எழுதியுள்ள கவிஞனுக்கும் தொப்புட்கொடி உறவு. கவிதைகளில் நேற்றைய ஈழமண்ணில் வாழ்வொட்டிய மறுகல் உண்டு, தமிழ்ப்போராளிகளுக்கிடையே ஒற்றுமையின்மை குறித்த வேதனையுண்டு, பெண்விடுதலைக்கு ஆதரவு உண்டு, சமூக விமர்சனப்பார்வையுடனான எரிச்சலுமுண்டு எள்ளலுமுண்டு. ஒரு தேர்ந்த கவிஞனின் உள்ளார்ந்த மனவெழுச்சியை ரசித்து சுவைக்கிற நேரத்திலே, ‘வெடிப்பொலியும், துப்பாக்கி சன்னதமும்’ காவியத்தின் இறுதிப்பகுதிவரை எதிரொலிப்பதையும் கேட்கிறோம், ஆற்றினைத் தாண்டி காட்டினுள் பாய்ந்து ஓரடிப்பாதையில் ஓடிமறைந்தாலும் தவிர்க்க இயலாது. காவியத்துக்கான இலக்கண விதிகளை துவம்சம் செய்த மக்கள் காவியம், இளங்கோவுக்குகோர் கண்ணகி, வ.ஐ.ச. ஜெயபாலனுக்கோர் ரதிதேவி.

காவியம் கடுங்கோடையில் ஆரம்பிக்கிறது, கவிஞரின் கொதிக்கும் மனதையும் அதில் வேகும் கருப்பொருளையும் தகிக்கும் சொற்களூடாக ஸ்பர்சிக்கிறோம் .

“பாலி ஆற்றின் கரையில் இருந்தேன்
மணல் மேடுகளில்
உயிர்வற்றும் நாணல்கள்
காற்றில் பெருமூச்சைக் கலக்கும்
….
கூனிக்குறுகிக் கூசிக் கூசி
ஏழ்மைப் பட்டதோர் நிலக்கிழான்
தனது குலத்தெரு வீதியில் நடைமெலிதல்போல
கோடைதின்ற ஆறு நடந்தது
நாணற் புற்களை நக்கி நனைத்தது.
அல்லிக்கொடிகளின் கிழங்குகளுக்கு
நம்பிக்கைத் தந்தது
தூற்றி அகலும் பறவையைப் பார்த்து
மீண்டும் மாரியில் வருக என்றது
மண்ணுள் பதுங்கி இரு என
புல் பூண்டுகளின் விதைகளுக் குரைத்தது.
ஒப்பாரி வைக்கும் மீன்களை அதட்டி
முட்டைகள் தம்மை மணலுள் புதைத்து
சேற்றுள் தலைமறை வாகி
வாழ்வுக்காகப் போரிடச்சொன்னது.”

என்கிற தொடக்க வரிகளிலேயே இன்றைய ஈழத்தின் நிலையையும், ஏக்கத்தையும், விடிவுபிறக்குமென்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார். கோடை தின்ற ஆற்றை, ஏழ்மைபட்டதோர் நிலக்கிழான் தனது குலத்தெரு வீதியில் நடைமெலிதல்போல என்ற உவமானத்தைப் படிக்கிறபோது, காட்சியை கண்முன்னே உலவவிட்டு, உயிர்வற்றும் நாணலைப்போல பெருமூச்சினை காற்றில் கலக்கத்தான் நமக்கும் முடிகிறது. கவிதை என்றால் என்ன என்பதற்கு தமது முன்னுரையில் “நமது வாழ்வோடு கவிதைகள் ஒட்டி உறவாடுகின்றன: அவை சொல், உருவம், உள்ளடக்கம் கொண்டதொரு ஆரோக்கியமான குழந்தை” என்று கூறியிருப்பதற்கொப்ப சொற்களை இழைத்திருக்கிறார். காவியமெங்கும் உவமை, உவமானங்கள், படிமங்களென்று பார்க்கிறோம்.

“காட்டுப் பகுதியில் யானை புகுந்த நெல் வயல்போல (பக்கம்- 49)

“வீடு, பசுமையில்லா கல்மரம்”(பக்கம்- 50)

“வானில் விண்மீன்கள் வேட்டையாட, மின்னல் பாம்புகள் நெளியும் (பக்கம்-83)

“செவ்விள நீரின் சிறுசிறு பிஞ்சுகளாக திரண்ட மார்பு(பக்கம்-92)

“நமது கோட்டைத் தீவு மட்டும் புத்தகம் தின்று அமைதியாய் இருந்தது(பக்கம்-100)

“தேவர்கள் வானில் சோளம் வறுத்த ஓர் இரவு ( பக்கம்-120)

இன்றைய யாழ்பாணத்தின் அவலநிலைகண்டு இருப்புக்கொள்ளவியலாத தனது மனநிலையை கவிஞர், காவியமெங்கும் வெளிப்படுத்தியுள்ளார் கவிஞரின் ஆழ்ந்த இலக்கிய பயிற்சியினையும், தேர்ந்த கவித்துவத்தையும் எதிரொலிப்பவை அவை.

தெருத்தெருவாக புதைக்கப்பட்ட
இளைஞர்களையும் யுவதிகளையும் சூல்கொண்டிருந்த
எம் யாழ்ப்பாணம் (பக்கம் 82)

கனவில் எனது தாயார்
கர்ப்பம் தரித்து அவஸ்தைப்பட்டாள்
ஊரெல்லாம் கிழவிகள் கர்ப்பங்கள் தரித்தார்
ஊரெல்லாம் குண்டுகாயங்களோடு
பிள்ளைகள் பிறந்தன (பக்கம்-84)

ஈழநாட்டின் வழித் தெருவெங்கும்
போர்விளையாடும் வீரக்குழந்தைகள் (பக்கம் 87)

“போராடுகிற எங்கள் வாழ்வில்
மரணம்மட்டுமே நிச்சயமானது
வடக்கிலிருந்து கிழக்குவரைக்கும்
நீண்டஎம் ஈழ தேசத்து மண்ணில்
தினம்தினம் எம்முள் ஒருவனையேனும்
விடுதலைக்காகக் களப்பலி தருகிறோம்.”

“ஊரெல்லாம் சாவீடும், ஒப்பாரிபாட்டும்
கறுப்பிக்கு கலியாணவீடும் தெம்மாங்கு பாட்டுமா”
அடுக்களைக்குள்ளே உறியைப்போல
அவளும் இருக்கிறாள்”

“யாரே அறிவர்
ஒடுக்கபட்ட ஒரு தேசத்து
இளைஞரின் திசைகளும்
நதிகளின் மூலமும். “

கவிதை படைத்தலில் அவருக்குள்ள நேர்மைக்கும், துணிச்சலுக்கும் கீழ்க்கண்ட வரிகள் உதாரணம்..

“வலது காலால் எங்கள் எதிரியை
உதைக்கிறீர் என்பதனாலே
இடதுகாலால் எங்களை மிதிக்க
உரிமை தந்தது யார்?” (பக்கம் -63)

மனதை உலுக்கும் கேள்வி, சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும்.

கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் பார்வை விசாலமானது, காவியம் பாடவந்த நேரத்தில்கூட காலங்காலமாய், நமது சமுதாயத்தில் பெண்ணுக்கு இழைக்கப்படும் அநியாயங்களை அவர் மறந்தவரல்லர், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்பதை அவதானித்து எழுதவேண்டிய கடன்பாட்டிலிருந்தும் அவர் தவறியவரல்லர்:

“ஆண் வதை பட்டால் தியாகம் என்பதும்
பெண் வதைபட்டால் கற்பிழப்பென்பதும்
ஆண்தலைபட்ட சமூக நியாயம்” (பக்கம் -29)

“மன்னித்துடுக
காலம் காலமாய்
பாட்டன் தந்தை நான் எனது நண்பர்கள்…
பெண்களுக்கு ஆண்கள் இழைத்த
பொல்லாப்புகளின் புராணம் அறிந்தேன்'”

தமது மனதையும் நிஜ வாழ்க்கையையும் சமன் படுத்த நினைத்த கவிஞர், ஒட்டுமொத்த ஆண்குலத்தின் சார்பாகவும் பெண்களிடத்தில் மன்னிப்பு கோருகிறார்.

மாப்பணனுக்கும், சிறுமி ரதிக்கும் நடக்கும் சிறுபிராயத்தினருக்கே உரிய கேலியும் கிண்டலும் கலந்த எளிய உரையாடல்கள் காதில் ரீங்காரமிடக்கூடியவை:

“என்னடி தெரியும் எங்கள் சிரமம்
நாளைக்கு நீயே வயலை உழுதுபார்”
என்று மாப்பாணன் எரிந்து விழுவதும்

“ஏலுமென்றால்
வீட்டு வேலையை ஒருக்கால் செய்துபார்
நீ சமைத்தால் நாயும் தின்னாதே”
என்று நான் சபிப்பதும்…” (பக்கம் -54)

கவிதைகளிலிருந்து கவிஞனா அல்லது கவிஞனிடமிருந்துருந்து கவிதைகளா என்ற கேள்விக்கு அநேகமாக விடைகிடைப்பதில்லை. இது பொதுவாக எல்லா கவிஞருக்கும் நிகழ்வது. வாழ்க்கையிலுள்ள முரண்களுக்கெதிராகக் குரல்கொடுக்கையில், தானொரு பார்வையாளான் என்ற நிலை பிறழ்ந்து, தன்னையும் சமுதாயக்கேடுகளில் சூத்ரதாரியாக எண்ணிக்கொள்வதால் கவிஞன் நெருக்கடிக்குக் ஆளாகிறான். கடந்தகாலத்தைப்போலவே ஈழத்தில் நிலவிவரும் சாதீயக்கொடுமைகளையும் கவிஞர் விட்டுவைக்கவில்லை, சமூகப் பிரக்ஞையின்றி கவிஞன் இருக்க முடியுமா என்ன?

“ஈழத்தமிழர் ஒற்றுமை முழங்குவர்
மாடுமேய்க்கும் வன்னிப் பயலுக்கு
கல்வி எதற்கெனக் கிண்டலும் பண்ணுவர்” (பக்கம்-57)

“ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்”, தலைப்பிற்கேற்ப இப்பனுவல், ஈழமண் குறித்த ஏக்கத்தையும் அதன் கடந்தகால பெருமைகளையும் பேசுவதோடு, பண்பாடு, அரசியல், மனித நேயம் என பல்துறைகளிலும் தமிழினத்தின் முகங்களை அறிமுகம் செய்கிறது, அவற்றின் அவலங்களை விண்டுரைப்பதோடு, அவற்றின் விடியலுக்காகவும் பெருமூச்சிடுகிறது.

http://noolaham.net/library/books/03/278/278.pdf

ஈழத்துமண்ணும் எங்கள் முகங்களும்
வ.ஐ.ச. ஜெயபாலன்
வெளியீடு: காந்தளகம் சென்னை-2


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா