சிந்தாநதி சகாப்தம்

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

அசோகமித்திரன்



செவ்வாய்க்கிழமை 30ம்தேதி மறைந்த லா.ச.ராமாமிர்தம் 1916-ல் பிறந்தார். அன்று கீழ்மத்திய வகுப்பினருக்குக் கிடைத்த எளிய படிப்பை வைத்துக்கொண்டே அவர் ஆங்கிலத்தில் எழுத முயன்றார். அன்று அவருடைய பெரிய ஆதர்சம் இளம் அமெரிக்க எழுத்தாளர் ஹெமிங்வே. ஆனால் விரைவில் அவருடைய உண்மையான சாதனம் தமிழ் என்று தெரிந்துவிட்டது. அதன்பின் 50 ஆண்டு காலம் லா.ச.ரா., வியந்து ஆராதிக்கத்தக்க தமிழ் எழுத்தாளராக விளங்கினார்.

சிறுகதைகள் எழுதிவந்த அவரை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் ‘புத்ர’ என்ற நாவல் எழுதவைத்தது. அதன்பின் அவர் இரு நாவல்கள் எழுதினாலும் அவருடைய இலக்கியச் செல்வாக்கு சிறுகதை வடிவத்தில் இருந்தது.

அவருக்கு 1989-ல் சாகித்ய அகாதெமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை ‘சிந்தாநதி’ தினமணி கதிரில் தொடராக வந்தது.

ஒருவிதத்தில் லா.ச.ரா. அவர்கள் ஆயுள் முழுக்க ஓர் அம்பாள் உபாசகராக இருந்திருக்கிறார். தன் அன்னைமீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி அவருடைய பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அன்பு, சாந்தம், பரிவு, தியாகம் ஆகியவற்றுடன் கோபம், சாபம், ரெளத்திரம் எனப் பல அம்சங்கள் உள்ளடக்கியது அவருடைய தாய் உபாசனை. தமிழ் வரையில் இந்துமத தெய்வங்களை அவர்போல இலக்கியக் குறியீடாகப் பயன்படுத்தியவர் எவருமே இல்லை எனலாம். அதேபோல இந்தியத் தத்துவச் சொற்களையும் அவர்போலக் கையாண்டவர் தமிழில் கூறமுடியாது. இக்குறியீடுகள் தவிர அவருடைய படைப்புகளில் இறுக்கமான கதையம்சமும் இருக்கும். ஒரு முற்போக்கு விமரிசகர் இவரையும், இன்னொரு எழுத்தாளரான மெளனியையும் இணைத்து மேலோட்டமாகக் குறிப்பிட்டதைப் பலர் திருப்பி எழுத நவீன தமிழ் இலக்கிய உலகில் ஒரு விசித்திரமான பிரிவு ஏற்பட்டது. அது இரு எழுத்தாளர்களுக்கும் நியாயம் இழைக்காததுடன் அத்தகைய விமரிசகர்களுக்குப் படைப்புகளின் நேரிடைப் பரிச்சயம் இல்லை என்றும் தெரியப்படுத்திவிடும்.

லா.ச.ரா.வின் சிறுகதைகளைப் பத்திரிகைகளில் படித்து அவரைத் தேடிப்போய் அவரை நூல்வடிவத்தில் வாசகர்களுக்கு அளித்த பெருமை கலைஞன் மாசிலாமணி அவர்களைச் சேரும். சுமார் 7 ஆண்டுகள் முன்பு லா.ச.ரா.வைக் கெளரவிக்கும் விதத்தில் அவருடய ஆயுட்காலப் படைப்பிலிருந்து தேர்ந்தெடுத்து ஒரு ரீடர் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது.

லா.ச.ரா.வுக்கு இருந்த இலக்கியச் செல்வாக்குக்கு இணையாக அவருக்குப் பரிசுகள், விருதுகள் அளிக்கப்படவில்லை. ‘சிந்தாநதி’ என்ற படைப்புக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருதுகூட மிகவும் காலம் கடந்து அளிக்கப்பட்ட ஆறுதல் பரிசு. லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய மற்றும் அயல் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘மஹ·பில்’, பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட ‘நியூ ரைட்டிங் இன் இந்தியா’. செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார்.

நூற்றுக்கு மேற்பட்ட சிறந்த சிறுகதைகள் லா.ச.ரா. எழுதியிருந்தாலும் அவருடைய ‘பாற்கடல்’ என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய ‘புத்ர’ மற்றும் அபிதா’ நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரைநூல் ‘சிந்தாநதி’ அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டிருக்கும். லா.ச.ரா. எழுதிய காலத்தில் உயரிய நவீனத் தமிழ்ப் படைப்பிலக்கியம் புதுமைப்பித்தன், க.நா.சுப்ரமணியன், கு.ப.ராஜகோபாலன் என்று ஒரு அணியும், கல்கி, ஜெயகாந்தன், விந்தன் என்றொரு அணியுமாக இருந்தது. இரண்டிலும் அடங்காது லா.ச.ரா. ஒரு தனிப்பாதையில் எழுதினார். அவருடன் ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது.

(அஞ்சலிக் கட்டுரை. தினமணி அக்டோபர் 31, 2007 புதன்கிழமை.)


Series Navigation

அசோகமித்திரன்

அசோகமித்திரன்