தேவமைந்தன்
இந்துமதம் குறித்து அடிப்படையிலிருந்து கற்பிக்கும் இந்துமத பாலபாடம் 1937ஆம் ஆண்டு மே மாதம் அச்சுக்கு வந்தது. திருக்கயிலாய பரம்பரைத் திருத்தருமபுரவாதீனம் 24-ஆவது மகா சந்நிதானத்தின் ஆதரவில் அவ்வாதீன மகாவித்துவானாகவும் ‘தொண்டன்’ இதழ் ஆசிரியராகவும் பண்டிதபூஷணம் கே. ஆறுமுக நாவலர் என்று அழைக்கப் பட்டவருமாக விளங்கிய நாகர்கோயில் கே.ஆறுமுகம் பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்டது. சென்னையில் அக்காலத்தில் புத்தகங்களைத் திருத்தமாக அச்சிடுவதில் புகழ் பெற்றிருந்த புரோகிரஸிவ் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
இத்தகைய பாலபாடங்கள் வருவதற்கே முன்னோடியாக இருந்தவர் இலங்கை யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர்(1822-1889) அவர்கள். அதே சமயம், பைபிள் தமிழில் முதன்முதல் மொழியாக்கம் ஆவதற்குப் பெருந்துணையாக இருந்து செம்மைப்படுத்தியவரும் அவரே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சமயமும் தமிழும் பலர் கற்கப் பாடசாலைகள் அமைத்ததுடன், அவற்றை நடத்துவதற்கு ஆகும் செலவை ஈடுகட்டுவதற்காக வீடு வீடாகச் சென்று அரிசிப்பிச்சை எடுத்தும் தொண்டு செய்தவர் அவரே. அவர் வரலாறு, செய்யுள் வடிவில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மு.ரா. அருணாசலக் கவிராயரால் இயற்றப்பட்டது.
1901ஆம் ஆண்டு படைக்கப்பட்ட ‘இந்தியா இலங்கை பர்மா தேசங்களிலுள்ள பெரிய ஆலயங்கள்’ என்ற அரிய ஆலயவயண நூல், டாக்டர் போப் பெர்னட் என்பவரால் தொகுக்கப்பட்டு 1909இல் அச்சுக்கு வந்ததாக அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை 1952இல் செய்த பதிவு தெரிவிக்கிறது.
ஆகமங்களைப் பற்றி சமஸ்கிருதத்தில்தான் நூல்கள் இருப்பதாகப் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் ஆகமப் பிரமாண்யம் என்றொரு நூலை பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆளவந்தார் இயற்றியுள்ளார். தவிர, ஆசிரியப்பா என்னும் செய்யுள் வடிவில் பதினெட்டாம் நூற்றாண்டில் குமாரதேவர், சாத்திரம் ஒன்றைச் செய்திருக்கிறார். அதன் பெயர் ஆகம நெறியகவல். இதுதவிர மேலும் பதினைந்து சாத்திர நூல்கள் செய்தவர் குமாரதேவர்.
நமக்கு இன்றும் எளிதாகக் கிடைக்கும், சமயதத்துவ நோக்கில் ஆலயங்களின் உட்பொருளைத் தெளிவாகவும் செறிவாகவும் அதே பொழுது மிக விரிவாகவும் உணர்த்துவதாகவுள்ள பழைய நூல், இலஞ்சி ஏ. சொக்கலிங்கம் அவர்கள் உருவாக்கிய ‘சமய கிண்டர்கார்டன் அல்லது ஆலயங்களின் உட்பொருள் விளக்கம்’ என்பதே. இரண்டு பெரும் பகுதிகளை உடைய இந்த நூல் 1952இல் வெளிவந்தது. என்றால், பல்லாண்டுகளுக்கு முன்பிருந்தே இலஞ்சியார் தம் உழைப்பைத் தொடங்கியிருக்க வேண்டும். முதல் பகுதியில் இந்து சமயமும் அதன் உட்பிரிவுகளும் கொண்ட ஆலயங்களின் உட்பொருள் விளக்கங்களும்; இரண்டாவது பகுதியில் கிறித்துவ தேவாலயங்களின் உட்பொருள் விளக்கங்களும் என ஆழமும் நுட்பமும் கொண்ட செய்திகள் பற்பல இடம் பெற்றுள்ளன. திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் சீரிய உருவாக்கமான இந்நூல் இந்து மறையியல் கல்விக்கு மட்டுமல்லாமல் தனிப்பட்ட சமய/ஆலயத் ‘தேடல்’ கொண்டவர் களுக்கும் கைக்கருவி போன்றது. மனிதனின் உடம்புதான் திருக்கோயில் என்பதைத் தெற்றென விளக்கும்பொருட்டு, பெரிய அளவில் வரையப்பட்ட அரிய விளக்கச் சித்திரம் ஒன்று இதனோடு இணைக்கப்பெற்றிருந்தது. பல பதிப்புகளை இந்நூல் அடைந்து விட்டதாக அறிகிறேன். பிருதுவி கணங்கள் முதலான மனிதக் கண்களுக்குப் புலப்படாத ஐந்து கணங்கள் எப்படி உலக மாந்தரோடு தாமும் இணை உலகங்களில்(parallel worlds) இயங்கிக் கடமையாற்றி வருகின்றன என்பது போலும் அரிய செய்திகள் பலவும் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன. விரிவு அஞ்சி, இதிலுள்ள பொதுவானவும் எளியவுமான கருத்துகள் சிலவற்றை மட்டும் இக்கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறேன்.
உண்மையான பகுத்தறிவு என்பது எது என்று முதலாவதாக இலஞ்சியார் வினாத் தொடுத்துக்கொண்டு, திருவள்ளுவர் மொழிந்த இரு வேறு திருக்குறள்களையும் (மெய்யுணர்தல், 5: அறிவுடைமை, 3) இணைத்து —
“எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் – அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
என்றவாறு ஒரே விதியாகச் செய்தார். இதை- உண்மையான பகுத்தறிவு என்பது எது என்பதை ஆய்வுக்கூட முறையில் சோதனை செய்து அறிவதற்கேற்ற ஓர் அறிவியல் விதியைப் போலவே பயன்படுத்தச் சொன்னார்.
“இந்து மதத்தின் சந்நியாசிகளுக்கு ஆலய வழிபாடு விதிக்கப்படாதது ஏன்?” என்பதற்கு, “அவர்கள் ஞானநெறியில் நிற்பவர்கள் என்பதால்” – என்று மறுமொழி தந்ததுடன், அதற்கு ஆதாரமாக –
“மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை”[துறவு:5]
என்னும் திருக்குறளை முன்வைத்தார்.
சமயங்கள் தேவையா என்று கேட்கப்படுவதற்கு விடையாக, “சமயங்கள் யாவுமே, மனிதனுக்குச் சீவத்தன்மையைப் போக்கிச் சிவத்தன்மையைத் தர அமைந்த வெவ்வேறு முறைகளாம்” என்று கூறினார்.
எல்லா மக்களுக்கும் ஒரே நெறியை வகுக்கும் மேலாண்மை, சமயங்களுக்குச் சரிவராது என்பதற்கு, “இரயில் தண்டவாளம் போல் எல்லா மக்களுக்கும் ஒரே நெறியை வகுப்பவர் உத்தம அநுபூதிமான் ஆகார்” என்றார்.
திருக்குறளை ஆதாரம் காட்டியவர், பரம்பொருளைத் தேடுபவர் மிகச் சிலரே என்பதற்கு “அறுப்பு மிகுதி; வேலையாட்களோ கொஞ்சம்” என்ற இயேசு மொழியை அடிப்படையாக்கினார்.
‘இறைவன் என் கண்களுக்கு முன் தோன்ற வேண்டும்; ஏனைய புலன்கள் மூலம் அவனை நான் உணர வேண்டும்! என்பவர்களுக்கு இறைவனின் உண்மை என்ன என்பதை அப்பர் என்னும் திருநாவுக்கரசரின் சொற்களால்-
“விறகில் தீயினன், பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்(டு) உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே”
என்னும் தேவாரத்தால் நன்கு விளக்கியுள்ளார். “பாலினுள் நெய்யிருப்பது, பாலைப் பார்த்தபோது காண முடிகிறதா? இல்லையே! அதனால் பாலில் நெய் இல்லை என்று கூறுவோர் யாரேனும் உளரோ? ஒருவரும் இலர். நமது கண்ணுக்குக் காண முடியாததும், பாலில் எங்கும் வியாபித்திருப்பதுமாகிய நெய்யைக் காண, பாலைக் காய்ச்சித் தயிராக்கித் தயிரில் மத்தினை ஊன்றி முறுகக் கடைதல் வேண்டும்; கடைந்தால் அதிலிருந்து வெண்ணெயும் பின் நெய்யும்
பெறலாம். அதுபோல, கடவுள் இவ்வுலகத்தில் காண முடியாதபடி மறைந்திருக்கின்றார். அறிவாகிய கயிற்றினால் முறுகக் கடைந்தால் அவரைக் காணமுடியும் என்பது அதன் விளக்கம்.
திருவருட் பிரகாச வள்ளலார் மொழிந்த ‘அருட்பெருஞ்ஜோதி ‘ மெய்ப்பொருளுக்கு மட்டுமல்லாமல், ஐரோப்பாவைச் சார்ந்த ‘பின் இறப்பியல்’ ஆய்வாளர்களான குப்ளர்றாஸ் முதலானோர் சொன்ன ‘ஒளிக்கடவுள்’ செய்திக்கும் ஏலவே நெடுங்காலத்துக்கு முன் கிரேக்கத்தில் நிலவிய எல்லிஸ்/எல்லீசர் என்ற ஒளிக்கடவுள் வழிபாட்டுக்கும் ‘மாமணிச் சோதியான்’ என்பது மிகவும் ஒத்துப் போகிறது.
‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று பிற்கால ஒளவையாரால் ‘கொன்றை வேந்த’னிலும்(1) ”கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று உலகநாதனாரின் ‘உலகநீதி’யிலும் கூறப்பட்டவற்றை உள்ளத்தில் பொதிந்து வைத்திருந்த மக்களிடையே, ஆலயத்துக்குச் செல்வதைக் கொச்சைப்படுத்தியவர்கள் யார்? – என்பதற்கு இலஞ்சியார் மறுமொழி: “இன்று ஆலயஞ் செல்வோரிற் பெரும்பாலர், வியாபார முறையில் இறைவனோடு பேரஞ் செய்யச் செல்கின்றாரே ஒழிய அன்போடோ பகுத்தறிவோடோ இறைவனை வழிபடச் செல்கின்றார் என்று சொல்லல் இயலாது.” அறுபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த இந்த நிலை, இன்றைய ‘மீடியா’க்களின் ‘ஆன்மிகக்கொச்சைப்படுத்த’லுக்குமுன் எவ்வளவோ தேவலாம். இதே நிலையை அக்காலத்தில் இயேசு தேவாலயங்களில் கண்டு ஆத்திரப்பட்டதை ‘மத்தேயு சுவிசேஷ’த்தில் காணலாம்.
இடச்சுருக்கம் கருதி, இலஞ்சியார் மொழிந்தவற்றை அப்படியே தருகிறேன்:
ஆலயத்தின் உயிர் மூலஸ்தான மூர்த்தி
யந்திரப் பிரதிஷ்டை இலாத விக்கிரகம் சக்தியுடைய மூர்த்தியாகாது.
**
மனிதன் உடம்பல்ல ஆன்மா
ஆலயத்தின் முன்கோபுரமும் உள்ளிருக்கும் மூலஸ்தான மூர்த்தியும் ‘மனிதன் உடம்பல்ல; ஆன்மா’ என்ற உண்மையை இடைவிடாமல் நமக்கு ஞாபகமூட்டி நிற்பதே.
அடியார் ஒவ்வொருவரும் ஆலய மதிலையும் கோபுரத்தையும் புறத்தே கண்டவுடனே ”நான் இந்த உடம்பல்ல; உள்ளிருக்கும் ஆன்மா” என்ற உண்மையை அறிவுறுத்திக் கொள்ளுதல் வேண்டும். இவ்வுண்மையைப் பற்றிய இடைவிடாத(நமது நெடுங்கால வாசனைக்கெதிரான) சிந்தனையே பிற உயிர்களிடம் அன்பைப் பெருக்கித் தனக்கும் உயர்ந்த மனநிம்மதி தரும்.
**
ஆவரண மயக்கம்
உடம்பை நான் என்று கொள்ளும் மயக்கம் இயற்கையிலுள்ள ஆவரண சக்தியின் மறைப்பால் ஆகின்றது. இந்த மறைப்பு இறைவனின் ஐந்தொழிலில் திரோபவம் அல்லது மறைத்தல் என்றழைக்கப்படும். இந்த ஆவரண மயக்கம், ‘நான் யார்?’ என்று பகுத்தறிவதனாலும், “நான் அழிவில்லாத ஆன்மா, இந்த உடம்பு நானல்ல” என்று இடைவிடாது சிந்திப்பதாலும் நீக்கப்பட வேண்டும். ஆலய கோபுரத்தை தூரத்தே கண்டவுடன் இவ்வுண்மையை நினைப்பூட்டிக் கொள்ளவேண்டும்.(2)
**
சிவாலயங்களும் ஆன்மாவின் ஆறுநிலைகளும்
1. முன்கோபுரம் – ஸ்தூலலிங்கம் – பூதான்மா
2. மகாபலிபீடம் – பத்திரலிங்கம் – அந்தரான்மா
3. கொடிமரம் – துவஜலிங்கம் – தத்துவான்மா
4. மூலவர் – சதாசிவலிங்கம் – சீவான்மா
5. ஆசாரியர் – ஆன்மலிங்கம் – மந்திரான்மா
6. பரவெளி – அகண்டலிங்கம் – பரமான்மா
**
பூதான்மாக்கள், தேகான்மாக்கள்
(சிற்றின்ப அனுபவங்கள் காரணமாக) ஸ்தூல உடம்பைத் ‘தான்’-ஆக எண்ணும் ஆன்மாக்கள் தேகான்மாக்கள், பூதான்மாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
**
மூலஸ்தான மூர்த்தி>
“நான் இன்ப துன்பங்களின் இருப்பிடமாகிய உடம்பல்ல; இச்சையல்ல; மனமல்ல” “எனக்கு இத்தத்துவங்களை அடக்கவும் ஆளவும் கூடும். ஆகையால் நான் பிரம்மம்” – இந்நிலையே ஜீவான்மா நிலை. அதன் அறிகுறியே மூலஸ்தான மூர்த்தி.
**
ஆகமவிதி ஒன்று
அடியார்கள் ஆலயம் செல்லும்பொழுது வெறுங்கையுடன் போவது முறையல்ல. தேங்காய், பழம், கற்பூரம் இவற்றைக் கொண்டு செல்லுதலே ஆகமவிதி.
தேங்காய் – ஆன்மா
வாழைப்பழம் – நல்வினைப் பலன்கள்
கற்பூரம் – இறைவனோடு இரண்டறக் கலக்கும் பக்குவம் வாய்ந்த ஆன்ம நிலை
**
ஆலயத் தானம் ஒவ்வொன்றிலும் அருட்சக்திகளின் தீவிர நிலைகள்
ஆலயங்களில் ஆகமமுறை வழுவாது பூசை நடைபெறுமானால், அப்போது அங்கு உற்பத்தியாகும் அருட்சக்திகள், கர்ப்பக்கிரகத்தில் மிகக் கொடுந் தீவிரத்துடனும்; அர்த்த மண்டபத்தில் மிகத் தீவிரத்துட னும்; மகாமண்டபத்தில் தீவிரத்துடனும், கொடிமரத்தை அடுத்து மந்தமாகவும்; வெளிவீதியில் மந்ததரமாகவும் வேலைசெய்யும்.
**
ஆலயங்களில் எண்ணெய், நெய் விளக்குகளின் மகத்துவம்
எண்ணெய், நெய் விளக்குகளுடைய உட்பொருளும், சூடும் ஒளியும் ஒருசேரப் பரப்பவல்ல அந்த அக்கினிக்கும் தேவகணங்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பும் அதனாலேற்படும் உத்தம பலனும் இன்றைய ஆலயங்களில் மிகவும் குன்றிப் போயுள்ளன. மின்விளக்குகள், ஆலயங்களில் தியானத்தைக் கெடுக்கின்றன. முன்பு ஆலயங்களில் அடியார்களுக்குக் கிடைத்த ஆழ்மனநிலை(trance) – இப்பொழுதுள்ள மின்விளக்குகளாலும் பக்தர்களின் சளசளப்பாலும் இடம்ப ஆரவாரங்களாலும் சிலருக்கு மட்டும் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தாலும் பொதுவாகக் கோயிலொழுங்கு அத்துமீறப்படுவதாலும் – இப்போதுள்ள பக்தர்களுக்குக் கிடைப்பதில்லை.
**
எல்லாவற்றுக்கும் மேலாக…
“பரம்பொருள் ஒன்றே எச்சிற்படாதது.” பரம்பொருளைப் பற்றி இராமகிருஷ்ணர் மொழிந்தவாறு ‘அது இருக்கின்றது'(that IS – Sri Ramakrishna: there IS – Jiddu Krishnamurti) என்பதையன்றி வேறு சொல்ல வல்லவர் யார்? “கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்” என்ற முதுமொழி அதனாலேயே உண்டாயிற்று.
**
இவ்வாறு நான் இங்கே தந்துள்ள இலஞ்சியாரின் கருத்துத் தொகுப்பு, அவருடைய நூலின் ‘ஆகிருதி’யை நோக்க, பானைசோற்றுக்கு ஒரு பதம்’தான்.
இந்த நூல், சென்ற நூற்றாண்டில் ஐம்பதுகளின் ஆகத் தொடக்கத்தில் வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த நூலுக்குப் பின்பு எத்தனையோ நூல்கள் இதை அடியொற்றி வந்துவிட்டன, ஏன்! சென்ற எண்பதுகளில் ‘அமோக’மாகக் காசுபார்த்த இது சம்பந்தமான புத்தகங்களில் இந்த நூலின் கருத்துகள் ஏராளமாக இடம்பெற்றன. என்ன.. இலஞ்சியாரின் பெயரோ நூலின் பெயரோ அவற்றில் ஓரிடத்தும் வரவில்லை. என்ன செய்வது? அவர்தான் போய்ச் சேர்ந்து விட்டாரே! அப்படிக் குறிப்பிடுவதால் இவர்களுக்கு ஆதாயம் ஏதேனும் உண்டா!
****
அடிக்குறிப்புகள்:
(1) திருநெல்வேலியிலிருந்து கிடைத்த ஓலைச்சுவடியொன்றில் கொன்றை வேந்தனுக்கு ‘அன்னையும் பிதா’ என்று பெயர் காணப்பட்டதாகத் ‘தமிழ்க் கடல்’ பேராசிரியர் கா.நச்சிவாய முதலியார் தெரிவித்துள்ளார். [மைக்ரோசோஃட் வொர்ட் தானாகச் சேமிப்புத் தலைப்பு கொடுக்கும் பாணி இது என்பது கணினியறிவு உள்ளவர்களுக்குத் தெரியும்.]
(2) மூலத்தானத்தைப் புறத்திலிருந்து காணவொட்டாமல் மறைக்கும் கோயில் திருமதிலுக்கு ‘ஆவரணச் சுவர்’ என்று பெயர்.
****
annan_pasupathy@hotmail.com
http://360.yahoo.com/pasu2tamil
http://kalapathy.blogspot.com
- 20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு
- இழுக்காதே எனக்குரியவனை !
- அன்புள்ள திரு சிவகுமார்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சம் எத்தனை பெரியது ? (கட்டுரை: 2)
- இறந்தவன் குறிப்புகள் – 1
- பி.கே.சிவகுமார் கண்ணோட்டம்
- திரு பி.கே.சிவக்குமார் கடிதம் பற்றி
- நாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2
- நான்தான் சட்டுவம் பேசுகிறேன்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 6 மூங்கில் காடுகளில் நடந்த மூர்க்கம்
- படித்ததும் புரிந்ததும்..(9) பாகிஸ்தான் நெருக்கடியும் : இந்தியாவின் செருப்புக்கடியும்;
- பாட்டு வாத்தியார் – ஜெ. ராம்கியின் பாகவதர்
- தீபாவளி பற்றி ஒரு கடிதம்
- தமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு!
- இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த நவம்பர் 1ம் நாளில் வரவேற்பு
- பெண்ணியத்தின் மூன்றாம இதிகாசத்தின் அமானுஷ்ய பக்கங்கள்
- சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்
- உதயகுமரன் கதை
- திரு.பிகே.சிவகுமார் கருத்தைப் படிக்கும்போது
- லா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 1 – அம்பாளின் தொப்புள்கொடி
- நினைவுகளின் தடத்தில்
- கடிதங்கள் குறித்த கடிதங்கள் குறித்த ஒரு கடிதம்
- கல்லறைக் கவிதை
- கடிதம்
- பி.கே. சிவகுமாரின் கடிதம்…
- த.கோவேந்தனின் ‘வானம்பாடி’ இதழ் அறிமுகம்
- அமெரிக்காவும் விழுமியங்களும்
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 35
- வேரற்றுப் போகிறவர்கள்
- பண்பாட்டிற்கு எதிரானது
- சுநாதர்
- இருபது ரூபாய் நோட்டு
- யார் அகதிகள்?
- “பயன்பாடு”
- குறிப்பேட்டுப் பதிவுகள் சில……
- சிந்தாநதி சகாப்தம்
- நாவடிமை (கண்ணிகள்)
- தாகூரின் கீதங்கள் -2 கண்ணுக்குப் பின்னே அமர்ந்துள்ளாய் !
- இல்லாமல் போனவர்கள்
- தீபாவளித் திருநாளில்
- கிளி ஜோசியம்!
- இலை போட்டாச்சு 37 – ரவா லாடு
- லா.ச.ரா
- இலஞ்சி சொக்கலிங்கனார் கண்ட ‘சமய கிண்டர்கார்டன்(அ) ஆலயங்களின் உட்பொருள் விளக்கம்’