சுகுமாரன்
எஸ்.ராமகிருஷ்ணனின் ‘இலைகளை வியக்கும் மரம்’ நூலை வெளியிட்டுப் பேசக்கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.மகிழ்ச்சிக்கு இரண்டு காரணங்கள்.
ஒன்று – சமகாலத் தமிழ் இலக்கியத்தில் நட்சத்திர மதிப்புள்ள ஓர் எழுத்தாளரின் புத்தக வெளியீட்டில் பங்கேற்பதன்மூலம் அந்த நட்சத்திரப் பிரகாசம் என் மீதும் கசியும் என்ற ஆசை.
நண்பர் ராமகிருஷ்ணனும் நானும் சிறிது காலம் சக ஊழியர்களாக ஒரு பிரபல வார இதழில் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தோம்.அலுவலகத் தொடர்புக்கு அப்பாற்பட்டு எங்களை இணைத்த அம்சம் இருவருக்கும் இருந்த இலக்கிய ஆர்வம்.பெரிய அளவில் இலக்கிய விவாதங்களில் ஈடுபட்டதில்லை என்றபோதும் இந்த சகவாசம் சின்ன அளவு பயனளிப்பதாக இருந்தது என்று எண்ணுகிறேன்.குறிப்பாக, என் அளவிலாவது.ராமகிருஷ்ணனின் பரவசமான பேச்சைக் கவனத்தில் கொள்ளாமலிருந்திருந்தால் போர்ஹேஸை,குறிப்பாக அவர் எழுதிய’ஆல்ப்’ என்ற சிறுகதையை அலட்சிய மனப்பான்மையுடன் அணுகியிருப்பேன். இன்றும் போர்ஹேஸ் என்னுடைய ஆதர்ச எழுத்தாளரல்ல.எனினும் மதிப்புக்குரியவர்.ஓரளவு இதற்கு உதவியாக இருந்தது ராமகிருஷ்ணனின் அன்றைய பேச்சு.என்போன்ற ஒரு வாசக ரத்தினத்தைப் பெற்றுத் தந்ததற்காக போர்ஹேசின் ஆவி நண்பர் ராமகிருஷ்ணனை வாழ்த்தும் என்றே கருதுகிறேன். இந்த இலக்கியத் தோழமைதான் மகிழ்ச்சிக்கு இரண்டாவது காரணம்.
இவை இரண்டையும் விட மகிழ்ச்சிக்கான பொதுக் காரணம் ஒன்றும் உண்டு.
முந்நூற்றிப் பதினொன்றரைப் பேர் எழுதி முந்நூற்றிப் பதினோரு பேர் வாசித்துப் போஷித்த சீரிய இலக்கிய முயற்சிகள் இன்று பெரும் வட்டத்தை எட்டியிருக்கின்றன.அவை பொருட்படுத்தப்படுகின்றன.சிற்றேடுகளில் மட்டும் ஒதுங்கியிருந்த சமகால இலக்கியமும் சிறு பதிப்பகங்களால் மட்டும் மேற்கொள்ளப்பட்டிருந்த பதிப்பாக்கமும் இன்று கணிசமான வாசகர் திரளை எட்டும் பரந்த நடவடிக்கைகளாக மாறியுள்ளன.இங்கே வெளியிடப்படும் எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகம் அதன் ஓர் அடையாளம்.இதிலுள்ள பெரும்பான்மையான கட்டுரைகள் அதிக வாசகர்களைக் கொண்ட பத்திரிகைகளில் வெளிவந்திருப்பவை.அவற்றை சீரிய இலக்கியப் பதிப்பகம் நூலாக்கி வெளியிடுகிறது.ஓர் இலக்கிய ஆர்வலனுக்கு இந்த மாற்றம் பெரும் நம்பிக்கையை அளிக்கிறது.அந்த நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளக்கிடைக்கும் வாய்ப்பாகவே இந்த விழாவைக் காண்கிறேன் என்பது மகிழ்ச்சிக்கு முக்கியமான காரணம்.
‘இலைகளை வியக்கும் மரம்’ என்ற இந்த நூலில் எஸ்.ராமகிருஷ்ணன் வெவ்வேறு கால அளவில் எழுதிய பத்தொன்பது கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன.வெவ்வேறு பத்திரிகைகளில் வெளியானவை.வெவ்வேறு பொருட்களை மையமாகக் கொண்டவை.இவை அனைத்தையும் இரண்டு உணர்வுகள் ஒன்றாகப் பின்னிய ஒரே மனநிலையில் பிணைக்கலாம். சஞ்சாரியாக அலைவதில் வாய்க்கும் கட்டற்ற சுதந்திர உணர்வு.ஓர் இலக்கிய ஆர்வலனாக வாசிப்பனுவத்தில் கிடைக்கும் கட்டுப்பாட்டு உணர்வு.இந்த இரண்டு உணர்வுகளையும் தன்னை ஒரு கதையாளன் என்று முன்னிலைப் படுத்திக்கொண்டே ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்.’புத்தகங்களும் ஊர்சுற்றுதலும் மட்டுமே சந்தோஷம் கொள்ளவைக்கின்றன.கடந்து செல்லும் பாதைகள் எதிர்ப்படும் மனித முகங்கள் யாவிலும் கதைகள் ஒட்டியிருப்பதைக் காணமுடிகிறது’ என்று அவரது முன்னுரை சாட்சியளிக்கிறது.ஒரு கதையாளனாக எஸ்.ராமகிருஷ்ணனின் அடிப்படை மனவோட்டம் இரக்கமும் கருணையும் சார்ந்தது.சமயங்களில் அவை கழிவிரக்கமாகவும் அசட்டு உருக்கமாகவும் தோற்றம் கொள்ளவும் செய்கின்றன.எனினும் சக மனித உயிர்களுடனான நெகிழ்ச்சியே ராமகிருஷ்ணன் எழுத்துக்களின் நிர்ணய மனப்பாங்கு என்று கருதுகிறேன்.
தொகுப்பிலுள்ள கட்டுரைகளை வாசிப்பனுபவம் சார்ந்தவை,பயண அனுபவங்கள்,சினிமா பற்றியவை,கலைகளின் இருப்பையும் இன்மையையும் பற்றி விசாரம் கொள்பவை,அன்றாட வாழ்வின் சித்திரங்கள்,மரபுகள் பற்றிய தகவல்களை ஆராய்பவை என்று வகைப்படுத்தி விட முடியும். ஆனால் அப்படிச் செய்வது புத்தகத்தை வாசிக்கவிருக்கும் கண்ணுக்குத் தெரியாத வாசகனின் அனுபவத்தின் மீது நான் நடத்தும் அத்துமீறலாக மாறக்கூடும் என்ற அச்சம் எனக்கிருக்கிறது.எனவே இந்தப் புத்தகம் எனக்குள்ளே ஏற்படுத்திய எண்ணங்களை மட்டுமே இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
எழுத்தாளனின் பேராசைகளில் முதன்மையானது வாசகனிடம் ஒரு நினைவாக தான் நிலைபெற்றுவிட வேண்டும் என்பது.வாசகனுக்கும் அது தேவையானதாகவே இருக்கிறது.தன்னுடைய மனப் போக்கு,வாழ்நிலை,பண்பாட்டுச் சூழல் இவை சார்ந்து வாசகன் தன்னைத் தீண்டுகிற எழுத்தாளனுக்கு தன்னுடைய மன சரீரத்தில் பங்கு கொடுக்கிறான். எழுத்தாளனின் அனுபவங்கள் அவனுக்கு நம்பகமானதாக இருக்கும் பட்சத்தில் நினைவுக்கு சருமத்தின் மதிப்பு.அந்த நினைவு என்றும் அவனுடன் தொடர்ந்திருக்கும்.இல்லாத நிலையில் எழுத்தாளன் நிர்ப்பந்திக்கும் நினைவுக்கு சட்டையின் பயன்பாடு.வாசகனின் இனங்காணும் ஆற்றல் பக்குவப்படும்போது அந்த சட்டை கழற்றியெறியப்படும்.இந்த தொகுப்பிலுள்ள ‘இயேசுவிலிருந்து கிறிஸ்துவரை’ என்ற சினிமா ரசனைக் கட்டுரையிலிருந்தே உதாரணத்தைப் பார்க்கலாம்.மெல் கிப்சனின் இயேசு அனுபவம் பார்வையாளனிடம் அல்லது வாசகனிடம் உதாசீன உணர்வை ஏற்படுத்தும்போது பியர் பாவ்லோ பசோலினி (Pier Paolo Pasolini)யின் இயேசு அதே பார்வையாளன் அல்லது வாசகனுக்கு இன்றியமையாதவராக மாறுகிறார்.இது எப்படி என்ற கேள்விக்கு கண்டையும் பதில் எழுத்தாளன் – வாசக உறவு குறித்து புதிய விளக்கங்களைத் தரலாம்.
எழுத்தாளன் வாசகனிடம் நிலைபெற்றுவிட ஆசைப்படுவதும் வாசகன் அவனை தேவையானவனாகக் கருதுவதும் மனிதனின் ஆதார குணத்தைச் சார்ந்தது.பிறரில் தன்னைக் காண்கிற அடிப்படையான குணம். Empathy என்ற ஆங்கிலச் சொல்லை இங்கே பயன்படுத்துகிறேன்.எழுத்தாளனால் இந்த நிலையை எட்ட முடிகிறது என்பதும் வாசகனால் முடிவதில்லை என்பதும்தான் இந்த உறவின் ரகசியம்.கொஞ்சம் ஆழமாக யோசித்தால் வாழ்வின் சகல துறைகளிலும் இந்த நிலையைப் பார்க்கலாம்.இதை இங்கே பேசக் காரணம் தொகுப்பிலுள்ள ஒரு கட்டுரை.ஸ்வீடிஷ் நாவலாசிரியை செல்மா லாகர்லாவின் ‘மதகுரு’ நாவலை வாசித்த அனுபவம் பற்றியது.கட்டுரையின் ஒரு பத்தி Empa thy என்று நான் குறிப்பிடும் நிலையை விளக்குகிறது.’கீயிங்கே வனத்திலிருந்த திருடனுக்கும் எனக்கும் ஏதோ ஒரு அறியா பந்தம் உருவாகியிருக்கிறது அவன் எனது ஊர் மனிதனைப்போலத்தான் இருக்கிறான்.அவனது முகம்கூட எனக்குப் பரிச்சயமானதுபோலவே இருக்கிறது.அவனோடு ஒரு கவளம் சோற்றைப் பகிர்ந்து சாப்பிடவேண்டுமென்றும் அந்தப் பாறையிடுக்கில் தங்கிக்கொள்ள வேண்டும் என்றும் மனது ஆசைப்படுகிறது.இந்த நாவலின் வெற்றியே இதுதானோ?’- இந்தப் பத்தியில் வெளிப்படும் மனநிலைதான் இந்தக் கட்டுரைகளின் சாரம்.
இந்த மனநிலை செறிவாகவும் உண்மையாகவும் இடம்பெறும் மூன்று கட்டுரைகள் தொகுப்பில் உள்ளன.’நகுலனோடு ஒரு நாள்’,’சாலைச் சித்திரங்கள்’,’கீயிங்கே வனத் திருடன்’ஆகியவை.செறிவு குலைந்த கட்டுரைகளும் உள்ளன.அவை பத்திரிகைகளின் கோரிக்கைக்கு இணங்க எழுதப்பட்டவையாக இருக்கலாம்.அவற்றில் தென்படும் அவசரமும் மெல்லிய அலட்சியமும் வாசகனாக என்னை உறுத்துகின்றன.
தொகுப்பில் எனக்குப் பிடித்த கட்டுரைகளில் ஒன்று, ஹாலிவுட் சாகசப் படங்களுக்கு இசையமைப்பாளராகப் பணியாற்றிய இத்தாலிய இசையமைப்பாளர் எனியோ மோரிகோனைப் பற்றியது.மதுரை புதுமண்டபம் பகுதியில் பழைய இசைத் தட்டுகள் விற்பனையாளரிடம் பார்த்த இசைத் தட்டின் உறையிலிருந்து தெரிந்துகொண்ட மோரிகோனைப் பரவசத்துடன் அறிமுகப்படுத்துகிறார் ராமகிருஷ்ணன். மோரிகோனின் சாதனைகளையும் அவர் புறக்கணிக்கப்பட்ட விதத்தையும் பேசும் ராமகிருஷ்ணன் அவருடைய இசை பற்றிய முக்கியமான அணுகுமுறையைக் குறிப்பிடாமல் போவது வியப்பைத் தருகிறது.ஹாலிவுட் படங்கள்,இத்தாலியப் படங்கள், பிற படங்ககள் உட்பட நானூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர்
மோரிகோன்.தன்னுடைய இசையை இரண்டு அணுகுமுறைகளில் வெளிப்படுத்தியவர். சினிமாவுக்கு உருவாக்கிய இசையை ‘செயல் இசை’ (applied music) என்றும் ஆபரா,கான்சர்டோ போன்ற மரபான வடிவங்களில் அமைத்த இசையை ‘அசலான இசை'(absolute music) என்றும் வகைப்படுதியிருந்தார் என்பதும் 2001 செப்டம்பர் 11 ஆக்கிரமிப்பை மையமாக வைத்து Response to Sept 11 என்ற இசைக்கோர்வையை உருவாக்கியிருந்தார் என்பதும் கவனத்துக்குரிய விடுபடல்களாகத் தோன்றுகின்றன.
வாசிப்புக்கு இதமான இந்தக் கட்டுரைகளில் ஈடுபட்டிருக்கும்போது உறுத்திய சில குறைகளையும் எடுத்துக்காட்டலாம் என்று கருதுகிறேன்.ராமகிருஷ்ணனின் உவமையொன்றை மாற்றிச் சொல்லி நியாயம் கற்பிக்கலாம்.மழை வெறித்த பின் தேங்கியிருக்கும் நீர்ப்பரப்பில் தெரியும் காட்சிகளில் விழுந்து பிம்பங்களை இந்தக் குறைகள் கலைக்கின்றன.வேடர்குல வள்ளி கட்டுரையில் இடம்பெறும்
பாரதியின் பாடல்வரி ‘என் நேரமும் நின்மையல் கிறங்குதடி குறவள்ளி’ என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.இது ராமகிருஷ்ணன் எழுதிய ‘வள்ளிப்பாட்டு’ என்று கொள்ளவேண்டும்.ஏனெனில் பாரதி ‘எந்த நேரமும் நின் மையல் ஏறுதடி’ என்றுதான் எழுதியிருக்கிறார்.’காலமும் குழந்தைகளும்’ கட்டுரையில் குழந்தைகளின் உலகைச் சித்தரிப்பவையாக குறிப்பிடப்படும் கதைகளில் ஒன்றான விமலாதித்த மாமல்லன் கதையின் தலைப்பு ‘கறிவேப்பிலை’ என்று இருக்கிறது. அது வெறும் ‘இலை’.மதகுரு நாவலை மொழிபெயர்த்த க.நா.சு.தான் ‘தேவமலரை’யும் மொழிபெயர்த்தவர்.இவை பிழைகள் என்று புகார் செய்வதல்ல என் நோக்கம்.புத்தகமாக்கத்துக்கு முன்னர் இவை களையப்படும் சாத்தியம் பயன்படுத்தப்படவில்லை என்ற வருத்தம்தான்.ஏனெனில் புத்தகங்களின் மீதும் இலக்கியத்தின் மீதும் காதலுடன் ஒரு புதிய தலைமுறை உருவாகி வளர்ந்து வருகிறது.அவர்களுக்கு நெருடல் இல்லாத ஒரு வாசிப்பனுபவத்தை உத்தரவாதமளிக்க இந்தக் குறை களைதல் தேவை என்று கருதுகிறேன்.
‘கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது ஆழ்ந்த நிசப்தமும் அறியாத வலியும் தோன்றுவதை மறைக்க முடிவதில்லை.இந்தக் கட்டுரைகளில் பல மிக அந்தரங்கமான வலியைக் கொண்டவை.இவை உங்களில் பலரைப் போலவே எனக்கும் நேர்ந்திருக்கின்றன்’ என்று எஸ்.ராமகிருஷ்ணன் முன்னுரையில் சொல்லுகிறார்.நெகிழ்ச்சியும் இதமுமான மொழியில் ராமகிருஷ்ணன் தன்னுடைய அந்தரங்கத்தை திறந்து காட்டும்போது நம்முடைய அடைபட்ட மனக் கதவுகளும் திறந்து கொள்ளுகின்றன.வாசிப்பின் அந்தத் தருணம் விலைமதிக்க முடியாதது; சுதந்திரமானது; மகிழ்ச்சி தருவது.அதற்காக அச்சுக்கோத்தவரையும் பிழை திருத்தியவரையும் தாண்டி,இந்தப் புத்தகத்தின் முதல் வாசகன் நான் என்று உரிமை பாராட்டிக்கொள்ளலாம்.அந்தத் தகுதியில் நூலசிரியருக்கும் பதிப்பாளருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.நன்றி.வணக்கம்.
( மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 12.08.2007 அன்று ‘உயிர்மை பதிப்பகம்’ நடத்திய எஸ்.ராமகிருஷ்ணனின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழாவில் ‘இலைகளை வியக்கும் மரம்’ நூலை வெளியிட்டு நிகழ்த்திய பேச்சு )
n_sukumaran@rediffmail.com
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 4
- காதல் நாற்பது – 35 காதல் என்பது மனக்குடைவு !
- பூம்பூம் காளை!!
- ஸூபி முஹம்மதிற்கு…..
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 20
- சீனக்கவிதைகள்
- எஸ்.ராமகிருஷ்ணனின் ‘இலைகளை வியக்கும் மரம்’
- கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஆவணப்படம் தொடக்கவிழா
- எனி இந்தியன் பதிப்பகம் நடத்தும் கருத்தரங்கு
- ஊர்விலக்கத்தினூடே தொடரும் பயணங்கள்
- குடியேற்றம் முத்தமிழ்ச்சுவைச்சுற்றம் பதினொன்றாம் ஆண்டு பைந்தமிழ்த்திருவிழா
- அரிமா விருதுகள் 2006
- பத்துப் பைசா பெறாத ஃபத்வாக்கள்
- ‘நாங்கோரி என்ற உறுப்பினர்’ கதையை பற்றி
- மும்பையனுக்கு மும்பாதேவி
- திரு அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்திநான்கு: அனிஸ்மானின் ஆலோசனை!
- மழை என்னும் மாபெரும் சக்தி – சரவணன் கவிதைத்தொகுப்பு
- பிழைதிருத்தம் 13 : வாய்பாடு – வாய்ப்பாடு
- ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2 (ஜூலை 17, 2007)
- அறிவுநிதி கவிதைகள்
- உருக்கியில் (HIV) உருகும் சிறார்!!
- விமர்சனக்குருவிகள்
- ஒரு புயலும் சில பூக்களும்
- என் வெளி…..
- தஸ்லிமாவின் முன்னோடி : இஸ்மத் சுக்தாய் எதிர்கொண்ட ஆபாச எழுத்து வழக்கு
- ஹெச்.ஜி.ரசூல் மீதான ஊர்விலக்கமும் எழுத்துக்களின் உடனான உரையாடலும்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்)
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 24